ஸ்வீட் சிக்ஸ்டீன் க்குள் நுழைந்துள்ள KOTW க்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் !!
வெறும் செய்திகளை அள்ளித்தரும் ஊடங்களுக்கு மாறுபட்டு, சமூக விடயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு நில்லாமல் அதற்கான தீர்வை தன்னால் முடிந்த அளவு களப்பணியாற்றி (இவ்வூடக நிர்வாகத்தினர் மற்றும் இவ்வூடக நண்பர்களுடன் பழகி அவதானித்ததை வைத்து) நிறைவு செய்வதன் மூலம் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் ஊடகமாக KOTW விளங்குவதாக நான் உணருகின்றேன்.
பொதுவாக ஊடகங்களுக்கு முழுச்சுதந்திரம் அளித்திருப்பதற்கு காரணம், அவர்கள் உண்மைகளை மக்கள் பார்வைக்கு எடுத்துச் செல்வார்கள், சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி சமூக முன்னேற்றதிற்கும் வளர்ச்சிக்கும் பங்களிப்பார்கள் என்பதற்காகத்தான் ! இதனை இவ்விணைய தளம் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து செய்து வருவதை நாம் யாவரும் அவதானித்து வருவதே.
இடைக்காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக பல ஊடகங்கள் தோன்றினாலும் மேற்கூறிய தனிச்சிறப்புகளை இவ்வூடகம் கொண்டிருப்பதினால் புது வரவுகள் எவ்வித அதிர்வையும் சலனத்தையும் போட்டியையும் இவ்வூடகத்தினருக்குள் ஏற்படுத்த வில்லை என்பதனை என்னால் மிக நன்றாக உணர முடிந்தது. அது தான் KOTW வின் தனிச்சிறப்பு அதன் சாதனை வெற்றி என்று நினைக்கத் தோன்றுகின்றது.
கடந்த சில வருடங்களில், கடல் கடந்து வாழும் நம்மில் பலருக்கு 'ஊர் பற்று' உதயமாகி அதிகமாகி உள்ளதாக நான் உணர்கின்றேன். அதற்கான சாட்சியே... நமதூரில் பல சமூக ஆர்வலர்கள் அதிலும் குறிப்பாக இளைஞர்கள் கலியுக (Materialistic) காலத்திலும் உருவாகி இருக்கின்றார்கள்; புதிய சமூக சேவை அமைப்புகள், எண்ணிப்பார்க்க முடியாத நகரங்களிலும் தேசங்களிலும் புதிய காயல் நலமன்றங்கள் தோன்றி சேவை செய்து கொண்டிருக்கின்றது. அவைகளுக்கு இவ்விணைய தளம் ஒரு மூலக் காரணம் என்றால் அது மிகையாகாது.
கடல் கடந்து பிரிந்து வாழும் காயலர்களிடையே 'சமூக சிந்தனை' விதைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு மாறுதல்களை உருவாக்கி அவர்களை ஒன்றிணைக்கும் பாலமாக, வாசகர்களிடையே நல்லதொரு நட்பு வட்டாரரம் உருவாக இவ்விணைய தளம் காரணமாகி இருக்கின்றது. விடுமுறையில் ஊர் வரும்போது கூட, நாட்கள்/நேரங்கள் பயனுள்ளதாக... வயது ஏற்ற தாழ்வுகளுக்கு, மார்க்க கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு இவ்விணைய தளம் மூலம் இணைந்த பலதர பட்ட மக்களுடன் நமதூர் கடற்கரையில் சங்கமித்து சமூக விடயங்கள், பயனுள்ள தகவல் பரிமாற்றங்கள், ஆகுமாக்கப்பட்ட பொழுது போக்கு சமாச்சாரங்கள் என கழிகின்றது.
ஆங்கிலத்திலும் தங்க்லீசிலும் (ஆங்கில எழுத்துருவு) எழுதி வந்த நம்மில் பலர் இன்று ஆணித்தரமான தனது உணர்வுகளை செந்தமிழில் கருத்துக்களாக கட்டுரைகளாக கவிதையாக வடிப்பதற்கு வழிவகுத்ததும் இவ்விணைய தளமே ! இன்டெர்நெட் வாசனையற்ற ஆர்வமற்ற (குறிப்பாக நமதூரில் இருப்பவர்கள்) பலரும் இன்று வெளியூர் / வெளிநாட்டு காயலர்களின் நடப்புகளை அறிவதற்காக, இணைய தளத்தில் தான் / தன் அமைப்பு சார்ந்த செய்திகளுக்கான அதற்கான வாசகர் கருத்துக்களை காண்பதற்காகவே வந்து போவதும் நடக்காமல் இல்லை. இவையெல்லாம் மாற்றத்தின் அடையாளமே !!
ஊடங்கங்கள் காலச் சூழலுக்கு அல்லது நன்மையை நாடி ஒரு சார்பு நிலையை எடுப்பது தவிர்க்க முடியாதது என்றாலும், அது ஒரேயடியாக ஒரு சார்பு நிலையை எடுக்கவேண்டிய அவசியமும் இல்லை. இதனை நகராட்சி விடயத்தில் 'Us Vs Them' (ஊடகம், கவுன்சிலர்கள்) போன்ற மனநிலையை (Mindset) உருவாக காரணமாக விட்டதாக நினைக்க தோன்றுகின்றது. சம்பந்த பட்டவர்களுக்கு அழைப்பு விடுத்து சுமூகமாக பேசி ஊடகத்தின் நிலைபாட்டை புரிய வைத்து சந்தேகங்களை நிவர்த்தி செய்திருந்தால், ஊடகம் நகராட்சிக்கு ஒரு முட்டுக்கட்டை என்ற எண்ணத்தை மாயையை தவிர்த்திருக்கலாம்.
நமதூருக்கு பொதுவான அதேநேரத்தில் பலராலும் அங்கீகரிக்கப்பட்ட அதிகப்படியான வாசகர்களை இவ்வூடகம் கொண்டிருப்பதினால், தள்ளி நிற்கும் மாற்று மத சகோதரர்களையும் அரவணைத்து அவர்களையும் நமது ஊடக வட்டதிற்க்குள் கொண்டு வர முயற்சிக்கலாம். மத வணக்க வழிபாடு தொடர்பான விவகாரங்களை தவிர்த்து, அவர்கள் சமூகம் சார்ந்த பொதுவான செய்திகள், அவர்களின் கருத்துக்கள், ஆக்கங்கள், மத நல்லிணக்கத்தை மேம்படுத்த இது உதவும். காயல் ஊடகங்கள் என்றால் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டும் தான் என்ற எண்ணத்தையும் மாற்றும்.
'நிகழ்காலம்' ஒரு கடந்த காலமாகி போனது எமாற்றமே. ஆங்கிலத்திலும் தமிழிலும் பெறப்பட்ட செய்திகள், இவ்வூடகத்தினர் மொழியாக்கம் செய்து திருத்தி அமைத்து அதனை மெருகூற்றி வெளியிட்டாலும் அதனை ஒரு குறுப்பிட்ட காலத்திற்குள் வெளியிடாவிட்டால் அச்செய்தியை படிப்பதன் ரசனை (ஆறிப்போன பழங்கஞ்சி போல) போய்விடுகின்றது. பெறப்பட்ட செய்திகளை ஓரிரு நாட்களுக்குள் வெளியிடுவது நல்லது.
பெண்களுக்கு பயனுள்ள தகவல்கள் அவர்களின் ஆக்கங்கள் போன்றவற்றிலும் கவனம் செலுத்தலாம். அதேநேரத்தில் தேவைப்பட்டால் அவர்களுடைய தனிநபர் விபரங்களை (ஈமெயில், புகைப்படங்கள்) ஊடகத்தில் பகிர்வதை தவிர்க்கலாம். தனிநபர் தரும் செய்திகளை வெளியிடுவதிலும் & சாதாரண நிகழ்வுகள் (உதாரணத்திற்கு ABC கல்லூரி பட்டமளிப்பு (Convocation) விழாவில் XYZ மாணவர் பொறியியல் பட்டம் பெற்றார்) செய்தியாக வருவது சில நேரங்களில் வியப்பை தந்துள்ளது. இதற்கென்று அளவுகோல்கள் இருந்தால் நலம்.
இணைய தளங்களை விட சமூக வலைதளங்களில் பலர் (குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள்) அதிகம் பயன்படுத்துவதால், இணைய தளத்திற்கு இணையாக இத்தளத்தை சமூக வலை தளங்களிலும் நடத்தலாம் அல்லது இணைய தளத்தில் வரும் செய்திகள் சமூக வலைதளங்களில் வரும் போது அதில் பதிவாகும் கருத்துக்களையும் (இணையதள விதிகளுக்கு உட்பட்ட) இணைய தள கமெண்ட் செக்ஸனில் அல்லது Facebook / Twitter தனிப்பகுதியில் வெளியிடலாம்.
முதன்முறையாக பதிவு செய்யும் கருத்தாளர்களின் (விவகாரமற்ற) கமெண்ட்களை நிராகரிக்காமல் பதிவு செய்து அதன் பின்னர் அவர்களின் சுய விபரங்களை ஈமெயில் மூலம் தர சொல்லலாம். பொதுவாக ஒரு சில கருத்தாளர்கள் இவ்விணைய தளத்தில் அதிருப்தியாக கூறுவது, தங்களுடைய கமெண்ட்கள் கட் அல்லது நிராகரிக்கபடுகின்றது என்று. அவர்களின் வேண்டுகோள்களில் நியாயம் இருந்தால் அதில் கவனத்தில் கொள்ளலாம். தேவைப்பட்டால் கமெண்ட் விடயத்தில் விதிமுறைகளை சற்று தளர்த்தலாம். கமெண்ட்கள் கலர்புல்லாக பதிவு செய்ய 'formatting' ஆப்சனை வழங்கலாம்.
என்னுடைய பார்வையில் இவ்விணைய தளம் மிகச் சிறப்பாக இயங்கி கொண்டிருக்கின்றதென்றே உணருகின்றேன். கடல் கடந்து வாழும் காயலர்களை மக்கள் சக்தியை ஒருங்கிணைத்துள்ள சமூக அக்கறையுள்ள இவ்விணைய தளம், தொடர்ந்து இது போன்ற நல்ல பல விடயங்களை செய்து வந்தால் நமதூர் நல்ல பல மாறுதல்களை சமூக வளர்ச்சியை காணும் என்பதில் எவ்வித ஐய்யமும் இல்லை. வல்ல இறைவன் அதற்கு அருள் புரிவானாக!! |