புனித ரமழானின் முதல் வெள்ளிக்கிழமையான நோன்பு மூன்றின்போது மக்காவின் பெரிய பள்ளிவாயிலான மஸ்ஜிதுல் ஹரம்மில் ஜும்ஆ தொழுகையை நடத் திய இப்பள்ளியின் இமாமும், கத்தீபு மாகிய ஷேக் அப்துல் ரஹ்மான் அல்-சுதைஸ் அவர்கள் தனது பிரசங்கத்தில், சிரியாவில் போர் புரிபவர்கள், மனிதா பிமான முறையில் பொதுமக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்றார்.
மேலும் கூறுகையில், எகிப்தின் பிரச்சினையை மதிநுட்பத்துடனும் தூரநோக்குடனும் அணுக வேண்டும், இரத்தம் சிந்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்றார். முஸ்லிம் உம்மா - சமூகம் இன்னும் பிளவுபட்டே இருக்கிறது. புனித ரமழான் மாதத்தில் எமது சகோதரர்களின் இரத்தம், ஆணவம் மிக்க இஸ்ரேலியர்களால் பாலஸ்தீனத்தில் சிந்தப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
முஸ்லிம்கள் ரமழானின் நோன்பு நோற்பதோடு இரவு தொழுகைகளையும் தொழுது வரவேண்டும் என்ற அவர் அதோடு கஃபாவை சுற்றி நடக்கும் கட்டுமான பணிகளுக்கு இடைஞ்சல் இல்லாது அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தருமாறு தொழுகைக்கு வருபவர்களைக் கேட்டுக் கொண்டதோடு உம்ரா பயணிகளுக்கும் உதவியாக இருக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
மதீனாவின் மஸ்ஜிதுல் நபவியில் ஜும்ஆ தொழுகையை நடாத்திய ஷேக் அலி அல்-ஹுதைஃபி அவர்கள் தனது பிரசங்கத்தில், ரமழான் நற்செயல்கள் செய்வதற்கு அருளப்பட்ட மாதம். அத்தகையோர் சென்ற வருடம் செய்த பாவங்களை அல்லாஹ் மன்னித்து அருள்வான் என்று குறிப்பிட்டார்.
சக்கர நாற்காலிக்கு கட்டுப்பாடு
கஃபாவைச் சுற்றி தவாபு செய்ப வர்கள், கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் சக்கர நாற்காலியில் செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட் டுள்ளது. அவர்களுக்கு கூட்டம் குறை வாக உள்ள நேரத்தில் கஃபாவின் ஓரமாக செல்வதற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக பெரிய பள்ளியின் பாது காப்பிற்கு பொறுப்பாக இருக்கும் லெப் டினன்ட் யஹ்யாபின் முசயிட் அல்-ஸஹ் ரானி கூறினர்.
புனித ரமழானிற்காக விசேஷ பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளதாகக் கூறிய அவர் அதனை விளக்கினார். அதன்படி, ஜனங்கள் வெளியேறும் நேரத்தில் மேலதிகமாக நான்கு கதவுகள் திறக்கப்படும். அவைகள் அல்-சபா, அல்-மர்வா பகுதிக்கு செல்லும் வழியிலேயே இருக்கும். கிங் அப்துல் அசீஸ், கிங் பஹ்த் வாசல்கள் இரவு பகலாக திறந்தே இருக்கும் என்றார் ஸஹ்ரானி.
பள்ளிவாயிலின் உட்பகுதியை 700 கெமராக்கள் மூலம் கண்காணிப்பதா கவும் அதனால் சமீபத்தில் ஏற்பட இருந்த பெரிய ஜன நெரிசலை தாங்கள் நெறிப்படுத்தியதாகவும் அவர் சொன்னார். நோன்பாளிகள் கட்டிட பணி நடக்கும் இடங்களில் நோன்பு திறக்க அனுமதிக்கப்படுவதில்லை எனவும் அவர்கள் மேல்மாடிக்கு செல்லுமாறு கேட்கப்படுவர் என்றார் அவர்.
ரமழானின் இறுதி 10 தினங்களின்போதும் 27 இரவின் போதும் விசேஷமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். அதனை பல குழுக்கள் இணைந்து செயலாற்றுவார்கள் என்றார் அவர். மஸ்ஜிதும் அதனை ஓட்டிய பகுதியும் தொழுகையாளர்களால் நிரம்பிவிட்டது என்றால் மேலதிகமாக மக்கள் அங்கு வருவது தடுக்கப் படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எந்த அசம்பாவிதமோ, நோன்பாளிகளுக்கு அசெளகரியமோ இல்லாது இருக்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய ஏற்பாடுகளில் கவனம் செலுத்துகிறோம் என்று அவர் கூறத் தவறவில்லை.
மக்காவின் பாதுகாப்பு
இதேவேளையில் மக்காநகரின் குறிப்பாக கஃபதுல்லா பகுதியின் பாதுகாப்பை சவூதி அரசாங்கம் பல மடங்கு பலப்படுத்தி உள்ளது.
“நாங்கள் மஸ்ஜிதுல் ஹரம் பெரிய பள்ளி வாயலின் உள்ளேயும் அதனை சுற்றி உள்ள வெளிப் பகுதியிலும் சுமார் 31,000 காவல் துறையினரைப் பணியில் அமர்த்தி உள்ளோம். எங்களது பிரதான நோக்கம் இறைவனின் விருந்தாளியாக வரும் பல லட்சக் கணக்கானவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகும்” என்று விசேஷ படையின் துணை கமாண்டர் பிரிகேடியர் மயிட் பின் முஸ்லே அல்ஜொயெட் கூறினார். அப்போதுதான் அவர்கள் மன நிம்மதியோடு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த பாதுகாப்பு குழுவிலுள்ள அதிகாரிகள் பல மொழிகள் பேசக் கூடியவர்கள். ஆங்கிலம், பிரெஞ்ச், உருது, பாரசீகம் உட்பட சிலர் சைகை மொழியிலும் உரையாட வல்லவர்கள். கெர்னல் தலால் அல்-மொதைரி, நகர போக்குவரத்து துணை இயக்குனர், கூறும்போது அவரது குழுவினர் வாகனங்கள் மக்கா நகருக்கு வரும் வழியில் அவர்கள் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதாகவும், மேலும் வாகனங்களுக்கு எங்கெங்கு தரிப்பிட வசதி உண்டு என்பதை விளக்குவதாகவும், அதற்கு உதவுவதாகவும் கூறினார்.
உஷ்ணமான நோன்பு
சவூதி அரேபியாவில் இந்த வருட ரமழான் நோன்பானது சுமார் 15 மணித்தியாலயத்திற்கு சற்று கூடுதலாக ஆரம்ப நாட்களிலும் பின்பு 14 மணி 40 நிமிடங்கள் என்ற அளவிலும் குறையும்.
காலநிலை மிகவும் உஷ்ணமாகவே இருக்கும். மக்கா, மதீனா ஆகிய புனித நகரங்கள் 43 டிகிரிக்கு மேலேயே உஷ்ணமாக இருக்கும். யன்பு, ரியாத் பகுதிகளும் விலக்காகாது.
முதல் நோன்பன்று ஜித்தவின் உஷ்ண நிலை அதிகமாக இருந்தது. கடற்கரை நகரான இந்நகரத்தில் வெளியில் இருந்தவர்கள் கூட வியர்வையில் நனைந்தது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில் நோன்பிற்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக ரியாத் நகரை அச்சுறுத்திய தூசி சூழல் குறைந்து விட்டாலும் அது முற்றாக நீங்கிவிட வில்லை என்றும் இன்னும் ஒரு சில தினங்களில் மீண்டும் வரலாம் என்றும் காலநிலை அவதான நிலையம் அறிவிக்கிறது.
ஹுசைன் அல்-கண்டானி அவர்கள் கூறும்போது இப்போதைய நிலவரப்படி சவூதியிலும், மத்திய கிழக்கு நாடுகளி லும் வெப்பநிலை அதிகமாகவே இருக்கும் என்றார். மக்காவில் 43-48 டிகிரி வரையும், மதீனாவில் 42-47 வரையிலும், ரியாதில் 44-48 அளவிலும் இருக்கும் என்ற அவர் மேலும் கூறுகையில், மக்காவில் ஜுலை 1, 1989இல், 49.8 டிகிரியும், மதீனாவில் ஜுலை 20, 2005 இல் 49 டிகிரியும், ரியாதில் 48 டிகிரி ஜுலை 25,1987லும், தம்மாவில் 50 டிகிரி ஜுலை 28, 2007லும் பதிவாகியுள்ளன என்று தெரிவித்தார். வெப்பமில்லாத ரமழானை 2017இல் தான் இனி சந்திக்க முடியும்.
உஷ்ணமான ரமழானில் உணவு விடயங்களில் விசேட கவனம் செலுத்த வேண்டுமென மருத்துவர்கள் கூறுகிறார்கள். நமது உடலின் வெட்பதட்ப நிலைக்கு ஏற்பவே நமது உணவு பழக்கமும் இக்காலத்தில் இருக்க வேண்டும். ஸஹர் நோன்பு பிடிக்கும் நேரத்தில் அதிகமாக காரமான, உவர்ப்பான உணவுகளை குறைக்கவேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும் என்றே மருத்துவ ஆலோசனை கூறுகிறது. Fibre நார் சத்துள்ள உணவுகளை உட்கொண்டால் அவை சீரணிப்பதற்கும் நேரம் ஆகும். உடலுக்கும் பாதிப்பில்லை என்பதே. 40 டிகிரி அளவு உஷ்ண பிரதேசத்தில் இருந்து நோன்பு நோற்பவருக்குரிய அறிவுரையாகும். |