பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
நமது காயல்பட்டணம் ஆயிரம் வருடங்களுக்கு மேல் சரித்திரம் படைத்த பழமையான , பண்பாடான ,சிறப்புகள் பல பெற்று சிறந்து விளங்கும் ஊர் என்பது யாவரும் அறிந்ததே!.
பொதுவாக ஒவ்வொரு ஊருக்கும் ஒரு, சில தனிச்சிறப்புகள் , ஒரு சில பழக்க வழக்கங்கள் இருக்கும், அது ஊருக்கு ஊர் வேறுபடும். அதே போல்தான் நம்ம ஊருக்கும் சில அல்ல பல தனிச் சிறப்புகளும் , பழக்க வழக்கங்களும் , பண்பாடுகளும் , பிரத்தியேகமான ஊரின் அமைப்பும் தொன்றுத் தொட்டு இருந்து வருகிறது.
அந்த பண்பாடுமிக்க பழக்க வழக்கங்களுக்கும் , தனி சிறப்பு மிக்க ஊர் அமைப்புக்கும் , மனித நேயமிக்க மக்களின் குணங்களுக்கும் குந்தகம் ஏற்படாத வகையில் நமது நகர் மன்றம் அமைய வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் வாயிலான வேண்டுகோள்.
நகர்மன்றம் செயல்பாடு விளக்கம்:
நகர் மன்றத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் முன்பு நகர் மன்றம் என்ற உள்ளாட்சி அமைப்பைப் பற்றி தெரிந்துக் கொள்வது அவசியமாகிறது.
மத்திய அரசு, மாநில அரசு , மாவட்ட ஆட்சியாளர் மற்றும் வட்ட ஆட்சியாளர் என்று படிப்படியாக இறங்கி கடைசியாக வருவதுதான் நகர்மன்றம் என்பது. இங்கேதான் அந்த நகரில் உள்ள எந்த ஒரு தனி மனிதரும் - ஏழையோ , பணக்காரரோ - படித்தவரோ, படிக்காதவரோ எந்த தரப்பினரும் நேரிடையாக சென்று தங்கள் குறைகளை முறையிடவோ - தேவைகளை பூர்த்தி செய்யவோ முடியும்.
ஆனால் மத்திய, மாநில அரசுகளையோ அதன் உறுப்பினர்களான M.P. , M.L.A. க்களையோ அல்லது மாவட்ட ஆட்சியரையோ ஒரு தனிப்பட்ட மனிதர் எந்த தடையுமின்றி நேரிடையாக சென்று அவர் தேவைகளை நிறைவேற்ற முடியுமா ? இல்லை அவர்களை சந்திக்கத்தான் முடியுமா? ஒருகாலமும் முடியாது!!.
ஆனால் உள்ளாட்சி அமைப்பான நகர் மன்றத்திற்கு எந்த தரப்பினரும் செல்லலாம் - தலைவரையோ உறுப்பினர்களையோ நேரிடையாக சந்தித்து தமது தேவைகளை முறையிடலாம். இது உள்ளூர் மக்களுக்கான மக்கள் மன்றம் - உள்ளூர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்படுவது. இதன் காரணமாகத்தான் இதை அரசியலாக்கக்கூடாது என்பது.
உள்ளாட்சி நிர்வாகத்திற்கு அரசியல் கட்சிகள் அவசியமே இல்லை. உள்ளாட்சி நிர்வாகத்திலே அரசியல் நுழைந்தால் ஒரு காலமும் அந்த ஊர் முன்னேற்றம் அடையாது - அமைதியும் பெறாது. இது நம்ம ஊருக்கு என்று இல்லை , உலகம் முழுவதுக்குமே அதுதான் நியதி. ஆகவே இதை அனைத்து தரப்பு மக்களும் விளங்கிக் கொண்டு நம் நகர்மன்றத்திற்கு அரசியல் கலப்பற்றவர்களையே தேர்வு செய்ய வேண்டும்.
உள்ளாட்சி நிர்வாகம் :
மக்கள் மற்றும் அரசு இரண்டு வகையினரும் சேர்ந்து செயல்படும் கூட்டு நிர்வாகம்:
1. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் : இவர்கள் ஊரின் ஒட்டுமொத்த மக்களின் பிரதி நிதியாக இருந்து - தன்னலமற்று - மக்களின் சேவைகளையே குறிக்கோளாக கொண்டு செயல்படுபவர்கள்.
2. கமிஷனர் மற்றும் அரசு அலுவலர்கள் : இவர்கள் அரசாங்கத்தின் பிரதிநிதியாக இருந்து மக்கள் மன்றத்தின் தீர்மானத்தை செயல் திட்டமாக்க உதவிடவும், சட்டப்படி நிர்வாகங்கள் செயல்பட ஒத்துழைப்பவர்கள்.
இந்த இரண்டு வகையினரும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நட்புடன் கூடிய மரியாதையுடன் செயல்பட வேண்டும். அதுவல்லாது யாரும் எவருக்கும் பயந்தார்களானால் - அங்கே ஊழல் நிழலாடுகிறது அல்லது நிர்வாக திறமையின்மை என்று அர்த்தம். மேலும் அந்த நகர்மன்றம் சுமூகமாக மக்களுக்கு சேவை செய்யாது ஊழல் நிறைந்து , பணிகள் முடங்கி விடும்.
எனவே இவைகளை மனதில் கொண்டு பொது மக்களாகிய நாம் நல்லதொரு நகர்மன்ற அமைப்பை தேர்ந்தெடுக்க வேண்டும்.
தலைவர் பதவி :
இந்த பதவி ரொம்பவும் பொறுப்பு வாய்ந்த மிக, மிக முக்கியமான பதவி - இது ஏதோ ஒரு விழாவுக்கோ , மாநாட்டுக்கோ தலைமை தாங்கக் கூடிய தலைவர் பதவி அல்ல, அந்த விழாவோடு அல்லது மாநாட்டோடு சில தினங்களிலே பொறுப்பை விட்டு வெளியேற!.
நகரமன்ற தலைவர் என்பது அந்த நகரின் ஒட்டு மொத்த மக்களின் தேவைகளை நிறைவேற்றப் பாடுபடவும் , குறைகளை களையவும் , கலாச்சாரத்திற்கு குந்தகம் வராமல் பாதுகாக்கவும் வேண்டும் மற்றும் பல தரப்பு மக்களையும் அனுசரித்து பாகுபாடில்லாமல் செயல் படக்கூடியவராகவும் இருத்தல் வேண்டும்.
தலைவராக வரக்கூடியவருக்கு தகுதி பணம் அல்ல நல்ல குணமும், நல்ல மனமும் , சுறு சுறுப்பும் , ஞாபக சக்தியும் , யாரையும், எவரையும் சார்ந்திராமல் சுயமாக செயல்படக்கூடிய அறிவுத்திறனும் எல்லாவற்றிருக்கும் மேலாக இறைவனின் பயமும் இருப்பதுதான்.
மேலும் தலைவர் பதவிக்கு வயதிலே விதிவிலக்கு வேண்டும் - இளைஞர்கள் என்பது சாத்தியப்படாது. காரணம் ஊரில் பல பிரச்சினைகளும் தீர்வுக்காக வரும் அவைகளை களைந்து , நிவர்த்தி செய்ய வேண்டும் என்றால் கண்டிப்பாக வயது கூடியவர்களால்தான் முடியும்.
அதனால் அந்த தலைவர் பதவிக்கு அனுபவமிக்க பொறுத்தமான பெரியோரை தேர்ந்தெடுப்பதே வெற்றியைத் தரும்.
உறுப்பினர்கள் :
உறப்பினர் என்பதும் சாதாரணமானது அல்ல மக்களோடு மக்களாக இருந்து அவர்களுக்கு நாள் முழுவதும் சேவையாற்றக் கூடியவர்களே.
வார்டு உறுப்பினர் என்றால் அந்த வார்டுடைய அத்தனை தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுக்க பாடுபடுபவராக இருக்க வேண்டும்.
இன்றுள்ள சில உறுப்பினர்கள் போல் அல்லாது - வார்டுகளில் உள்ள கலாச்சார சீரழிவுகள் , அன்னியர் குடியேற்றம் போன்றவைகளையும் தலைவரின் கவனத்திற்கு கொண்டு வந்து ஊரின் பழக்க வழக்கத்திற்கு இடையூறு ஏற்படாது செயலாற்ற முயன்றிட வேண்டும்.
நகர்மன்றத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு தவறாது போய் கலந்துக் கொள்ளக்கூடியவராகவும் , அதில் அவர்களின் வார்டுகளுக்கு தேவையானவைகளை பற்றி எடுத்துக் கூறி நிவர்த்தி செய்ய கூடியவராகவும் இருப்பதோடு , உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவராகவும் இருக்க வேண்டும்.
உறுப்பினர்களுக்கு பெரும்பாலும் இளைஞர்களையே - நடுத்தர வயதினரையே தேர்ந்தெடுப்பது சிறந்தது.
உறுப்பினர்களை தேர்வு செய்யும்போது அவர்களின் நன் நடத்தையை அவசியம் கவனிக்கப்படுதல் வேண்டும்.
பெண் உறுப்பினர்கள் :
பெண் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும்போது நமது சமுதாயத்தைச் சார்ந்த ஒய்வு பெற்ற ஆசிரியைகளை தேர்ந்தெடுப்பதே சிறந்தது.
அவர்கள் பேச்சாற்றல் மிக்கவர்களாகவும் , சேவை மனப்பான்மை கொண்டவர்களாகவும் செயல்படுவார்கள் என்பது என் கருத்து.
நகர மக்களின் எதிர்பார்ப்புகள் :-
01. நேர்த்தியாக நேர்மையாக மக்கள் மன்றம் செயல்படுதல்.
02. தலைவர் மற்றும் உறுப்பினர்களின் முழுநேர தன்னலமற்ற சேவை.
03. நல்ல பல திட்டங்களை தொலை நோக்குப் பார்வையில் தீட்டி செயல்படுவது.
04. தலைவர் அவர்கள் உறுப்பினர்களுடன் 6 மாதத்திற்கொரு முறை ஊர் முழுக்க நகர்வலம் வந்து ஊரின் நிலையை நேரில் கண்டுத் தெரிவது.
05. நகர்மன்றத்தில் 6 மாதத்திற்கொரு முறை " குறைக் கேட்கும் நாள் " என்பதை ஏற்படுத்தி - பொது மக்களின் குறைகளை நேரிடையாக கேட்டுத் தெரிந்து நடவடிக்கை எடுத்து நிவர்த்தி செய்வது.
06. வார்டுகளில் 2 அல்லது 3 மாதத்திற்கொரு முறை அந்தந்த வார்டுகளில் உள்ள பொது இடங்களில் " குறை கேட்கும் நாள் " ஏற்படுத்தி மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை களையச் செய்வது.
07. குடிநீர் பற்றாக்குறையைப் போக்க அதற்குத் தேவையான அத்தனை முயற்சிகளையும் எடுத்து மக்களுக்கு தினமும் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வது.
08. மின் மோட்டார் வைத்து (ஹராமான) தண்ணீர் எடுத்து பிறருக்கு துன்பம் தருபவர்களின் செயல்களை முற்றிலுமாக ஒழுங்குப்படுத்துவது
09. குடிநீர் இணைப்புகளை தேவையானவர்களுக்கு முறையான வழியில் எந்த தடையுமின்றி கிடைக்கச் செய்வது.
10. அரசாங்க மருத்துவ மனையை எல்லா தரப்பு மக்களும் உபயோகிக்க தோதுவாக வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கச் செய்வது.
11. நகரில் தேவையான இடங்களில் சுகாதார மையங்களை அமைத்துக்கொடுத்து மக்களின் சுகாதாரம் பேணவும் - இரத்தகொதிப்பு , சர்க்கரை நோய் போன்றவற்றுக்கு தொடராக சோதனை செய்து நலம் பெற்றிடவும் ஏற்பாடு செய்வது.
12. போக்குவரத்து நெரிசலால் மெயின் ரோட்டில் ஏற்படும் அசெளகரியங்களை களைந்து போக்குவரத்தை சீராக்குவது.
13. ரோட்டோர திறந்த வெளி (ஹோட்டல்) கடைகளை சுகாதார முறைப்படி செயல்பட செய்வது.
14. கடைகளில் விற்பனையாகும் உணவுப் பொருட்களின் கலப்படங்களை கண்டறிந்து களைவது.
15. இறைச்சிக்கடைகள் மற்றும் ஆடு அறுக்கும் இடங்களில் உள்ள சுகாதாரம் மற்றும் முறைக்கேடுகளை கண்டறிந்து களைதல்.
16. மீன் மார்க்கெட் மற்றும் காய்கறி மார்க்கெட்டுகளில் உள்ள அசெளகரியங்களை சீர் செய்வதுடன் , தேவையான இடத்தில் புதிய மார்க்கெட்டுகளை ஏற்படுத்த ஏற்பாடு செய்வது.
17. ரேஷன் கடைகளில் உள்ள அசெளகரியங்களை நிரந்தரமான தீர்வுகள் மூலம் நிவர்த்தி செய்வது.
18. பள்ளிக்கூடங்களுக்கு சென்று அங்குள்ள கழிப்பிடங்கள் மற்றும் சுகாதாரங்களை பார்வையிட்டு நிவர்த்தி செய்து கொடுப்பது.
19. பள்ளிக்கூடங்களை சுற்றியும் மற்றும் நகரில் விசாலமாக இருக்கும் பொது இடங்களிலும் மரங்களை நட்டச் செய்து சுகாதாரத்தை மேம்படச் செய்தல்.
20. கடற்கரையை சுகாதாரமாக வைக்க ஏற்பாடு செய்வதுடன் , நமது கலாச்சாரம் சீர்குலையாமல் பாதுகாப்படையச் செய்வது.
21. ஊரில் நிலவி வரும் புற்று நோய் மற்றும் சில கொடிய நோய் ஏற்படக் காரணமாக இருக்கும் பல சுகாதாரக் கேடுகளையும் களைய நடவடிக்கை எடுப்பதுடன், அதற்கு முக்கிய காரணியாக இருக்கும் D.C.W. கழிவுகள் மற்றும் செல்போன் டவர்களின் தாக்கம் இவைகளை பற்றிய நமது ஊர் பொது சேவையாளர்களின் செய்தி சேகரிப்பு மற்றும் CFFC யின் முயற்சியால் அரசாங்க சோதனைக்கூடம் மற்றும் தனியார் சோதனைக்கூடங்களின் மூலம் பரிசோதிக்கப் பட்டதின் அறிக்கையையும் , மேலும் பல பரிசோதனையையும் மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து நமது ஊர் மற்றும் சுற்றுவட்டார மக்களை காப்பாற்ற பாடுபடுவது.
22. புதிய ரோடு போடும்போதோ அல்லது பழுது பார்க்கும்போதோ அவைகளில் கவனம் செலுத்தி அவைகளால் ஏற்படும் அசெளகரியங்களிலிருந்து மக்களை பாதுகாப்பது.
23. வீடு கட்டுமானப்பணிகளுக்காக தெருவில் கொட்டப்படும் மண் , ஜல்லி கற்கள் மற்றும் இறக்கி வைக்கப்படும் செங்கற்கள் போன்றவற்றுக்கும் மற்றும் கட்டிடம் இடித்து கொட்டுவதற்கு - கட்டுபவர்களுக்கும் , போக்கு வரத்திற்கும் என்றுமே பாதிப்பு ஏற்படாத வகையில் ஒழுங்குமுறையை ஏற்படுத்துவது.
24. திருமணம் மற்றும் பொது விழா போன்ற விஷேசங்களுக்கு தெருக்களை தோண்டி பந்தல் போடுதல் / தெருக்களை அடைத்தல் போன்றவற்றை கண்காணித்து ஊரின் பாரம்பரியக் கலாச்சார பழக்க, வழக்கங்களுக்கு தடை இல்லாமலும் - அதே நேரத்தில் பொது மக்களுக்கு இடையூராகவோ - நகர்மன்றத்திற்கு நஷ்டமோ ஏற்படா வண்ணம் அவைகளை ஒழுங்குப் படுத்துதல்.
25. தெருக்களிலும் - முடுக்குகளிலும் காலாகாலமாக அமைக்கப்பட்டிருக்கும் கழிவு நீர் தொட்டிகளின் மூலம் ஏதும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படின் நடவடிக்கை எடுத்து நிவர்த்தி செய்தல்.
26. நகரினுள் குடியிருப்பு பகுதிகளில் காலியாக கிடக்கும் சில வீட்டு மனைகளில் மலை போல் குப்பைகளை கொட்டி வருவதை நடவடிக்கையின் மூலம் தடுத்து , பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய கொடும் நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்க செய்வது.
27. ஊரின் பாரம்பரியக் கலாச்சாரத்திற்கு குந்தகம் விளைவிக்கக் கூடியவைகளை களைந்தெரிவது.
28. ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களின் கட்டுபாடற்றப் போக்கினால் ஏற்படும் இடையூறுகளை கட்டுக்குள் கொண்டு வருவது.
29. நகருக்குள் அன்னியர் குடியேற்றத்தை தடுப்பது ( எந்த ஊரானாலும் அன்னியர் குடியேறினால் அதன் தனித்துவம் மாறிவிடும் - இது உலகம் முழுமைக்கும் பொருந்தும்).
30. ஊர் மக்களின் கல்வியை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொள்வது.
31. நகராட்சியிலும் , பள்ளிக்கூடங்களிலும் மற்றும் அரசு சார்ந்த துறைகளிலும் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க பாடுபடுவது.
32. ஊர் மக்கள் தேவைக்கு அவசியமில்லாத எந்த ஒரு திட்டத்தையும் அவசரப்படாமல் , தூர நோக்கு சிந்தனையோடு ஆலோசித்து செயலாற்றுவது.
33. நகர்மன்றத்தின் வருமானத்தை எந்த வகையிலும் மக்களை பாதிக்காதவாறு அதிகரிக்கச் செய்து - நகரில் பல முன்னேற்றங்களை உண்டாக்க உதவுவது.
34. நகரில் மத நல்லிணக்கத்திற்கு இடையூறு விளைவிப்பவர்களையும் - அட்டூழியம் செய்பவர்களையும் வேருடன் களைந்து மக்களை அவர்களின் தீங்கிலிருந்து பாதுகாப்பது.
எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியுமா ?
மேலே குறிப்பிடப்பட்ட அத்தனை தேவைகளையும் மக்கள் மன்றம் செய்து தரவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். எதிர் பார்க்கும் கோரிக்கைகளில் சிலவைகள் (வரிசை எண் : 7,10,11,12 & 31) தவிர மற்ற எல்லாத் தேவைகளையும் ஒரு நேர்மையான , ஊழலற்ற நகர்மன்றத்தால் (உள்ளாட்சியால்) கண்டிப்பாக செய்து தர இயலும் என்பதை அறியத்தருகிறேன்.
இவைகளை செய்து தர மத்திய அரசையோ, மாநில அரசையோ நாட வேண்டிய அவசியமில்லை. எந்த அரசியல் வாதியும் இதற்கு தேவை இல்லை.
தேவையெல்லாம் திறமையான , நேர்மையான , சுறு சுறுப்புள்ள தலைவர் , உறுப்பினர்கள் மற்றும் ஊழலற்ற நகராட்சி அதிகாரி மற்றும் ஊழியர்களே.
மக்கள் பிரதிநிதிகள் எல்லாம் நேர்மையான, திறமையானவர்களாக வந்து விட்டால் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எல்லாம் நேர்மையானவர்களாக ஆகிவிடுவார்கள் / ஆக்கப்படுவார்கள்.
இவர்களுடன் நமது ஊரின் பொதுத் தொண்டு நிறுவனங்கள் , சங்கங்கள் மற்றும் ஜமாஅத்'தார்களின் ஒத்துழைப்பும் சேரும்போது நகர்மன்றம் மிகச் சிறப்பாக இயங்கும் என்பதில் ஐயமில்லை.
நல்ல தலைவர் + நல்ல உறுப்பினர்கள் = சிறந்த நகர்மன்றம்
தலைவர் மட்டும் நல்லவராக இருந்து உறுப்பினர்கள் சரியில்லை என்றால் பயனில்லை. உதாரணமாக, உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு மூளை நன்றாக இயங்குகிறது , பார்வையும் நன்றாக உள்ளது , கேட்கும் திறன், பேச்சுத் திறன் எல்லாம் நன்றாக இருக்கிறது அதாவது சுருக்கமாக சொன்னால் தலை பகுதி மட்டும் நன்றாக இருக்கிறது.
ஆனால் மற்ற உறுப்புக்கள்தான் பிரச்சினை கால் நொண்டி , கை வீக்கம் , ஒரு கிட்னி இயங்கவில்லை , அல்சர், மூலம் , நுரையீரலில் வீக்கம், இதயத்தில் ஓட்டை இப்படியாக பல நோய்களை பெற்றிருக்கும் ஒரு உடம்பில் தலை பகுதி மட்டும் நன்றாக இருந்தால் அதில் என்ன பிரயோசனம் ?
அதைபோல்தான் தலை மோசமாக இருந்து உடம்பின் மற்றப் பகுதியெல்லாம் நன்றாக இருந்தாலும் அந்த மனிதன் நன்றாக இயங்க இயலாது.
நாம் என்ன செய்ய வேண்டும் ?
நமக்கு ஒரு சிறந்த நகர்மன்றம் அமைய வேண்டும் என்றால் நாம் செய்ய வேண்டியதெல்லாம் முறையாக தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்வதில்தான் இருக்கிறது.
எவர் ஒருவர் தன்னுடைய மகள், மகனுக்கு நல்ல மாப்பிள்ளை , பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று திட்டம் தீட்டி - மார்க்கம், ஒழுக்கம் , படிப்பு , நேர்மை என்று - எதையெல்லாம் கவனிப்பார்களோ? அதைபோல் இதற்கும் கவனித்து , எல்லா வகையிலும் தேர்ச்சிப் பெற்றவர்களை உங்கள் வார்டுகளிலேயே , உங்களுக்கு அறிமுகமானவர்களையே! தேர்ந்தெடுத்து அனுப்புங்கள் இன்ஷா அல்லாஹ்! வெற்றிப் பெறுவோம்.
இன்று ஊரின் நடைமுறைகள் இக்கட்டான சூழலில் இருப்பதால் தயவு செய்து நம் மக்கள் விருப்பு வெறுப்புகளை மறந்து ஓன்றுபட்டு அவரவர் பகுதிகளில் உள்ள நல்லவர்களை தேர்ந்தெடுத்து அனுப்புங்கள். அதற்காக எல்லா ஜமாஅத்'தினர்களும் , சங்கங்களும், பொதுத்தொண்டு நிறுவனங்களும் , முஸ்லிம் ஐக்கியப் பேரவையும், தொழில் அதிபர்களும், வள்ளல்களும், வியாபாரிகளும் மற்றும் சமூக ஆர்வலர்களும் ஓன்று கூடி ஒருமித்தக் கருத்துடன் தேர்ந்தெடுங்கள். தயவு செய்து நம்மில் பிரிவினை வேண்டாம் - விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை கையாளுங்கள்.
கூட்டத்தை (மந்தையை) விட்டு பிரிந்த ஆடுகள்தான் ஓநாயிடம் சிக்கும் - அதே போல் நாமும் பலவாறாக பிரிந்து சென்று சீர்குலைந்து சென்றிடாமல் ஒற்றுமையாக ஓரணியில் நிற்போமாக.
அன்று நம் முன்னோர்கள் இரண்டு பிரிவாக ஆனாலும் , அந்தப் பிரிவை நமக்குள்ளேதான் வைத்துக் கொண்டார்களே தவிர அன்னியரை அனுமதிக்க வில்லை - கலாச்சாரத்தை சீரழிக்கவில்லை. ஆனால் இன்றோ ? ஊரின் நிலை வேறுவிதம்.
ஆகையால் தயவு செய்து இந்த முறை சிதறிப்போகாமல் - அல்லாஹ்வை பயந்தவர்களாக - நமது மக்களும், வருங்கால சந்ததிகளும் சந்தோசமாக இந்த காயல்பட்டணத்திலே பயமற்ற நேர்மையான நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியவர்களாக , ஒற்றுமையுடன் செயல்பட்டு ஒரு குடையின் கீழ் இருந்து நல்லதொரு நகர்மன்றத்தை தேர்ந்தெடுப்போம். எல்லாம் வல்ல அல்லாஹ்! அதற்கு துணை புரிவான்.
வேண்டுகோள் !
உறுப்பினர்கள் அனைவரையும் நல்லவர்களாக தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் - இன்று இருக்கும் தலைவர் அவர்களையே தலைவராக தேர்ந்தெடுத்தால் சிறப்பான நகர்மன்றம் இன்ஷா அல்லாஹ்! அமையும்.
தலைவர் அவர்கள் விரும்பவில்லையெனில் - வெள்ளை உள்ளம் படைத்த பெரியோரை தலைவராகவும் - தம்பி'களாய் நல்ல பல இளைஞர்கள் அவரை சூழ்ந்திருந்து சிறப்பான ஒரு நகர்மன்றம் அமைந்து செயல்பட்டிட ஐக்கியப் பேரவையும், அனைத்து ஜமாஅத்'துகளும், சங்கங்களும், தொழில் அதிபர்களும் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைய வேண்டுகிறேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ்! நம் நகர்மன்றத்தை சிறந்த மக்கள் மன்றமாக அமையச்செய்து நாம் அனைவரும் மார்க்கம் - கலாச்சாரம் பேணி நடப்பவர்களாக - ஒற்றுமையாக வாழச் செய்வானாக ஆமீன்.
வஸ்ஸலாம். |