வரலாற்றுப் புகழ்மிக்க நமதூர் காயல்பட்டினம் - சமய நல்லிணக்கத்திற்கும், சகோதரத்துவத்திற்கும் எடுத்துக்காட்டாய்த் திகழும் பேரூராகும். இங்கு
முஸ்லிம்கள் செறிவாகவும், இந்துக்களும், கிறிஸ்துவர்களும் குறிப்பிடத்தக்க அளவிலும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதை நாமறிவோம்.
இங்குள்ள முஸ்லிம் மக்களுக்கு ஏதேனும் ஒன்று என்றால், அவர்களைக் காக்க தன்னைப் பணயம் வைக்கத் துணிந்த இந்துக்களும்,
கிறிஸ்துவர்களும் ஏராளம். அதுபோல, இங்குள்ள முஸ்லிமல்லாதோருக்கு ஏற்படும் சோதனையான காலகட்டங்களில், முஸ்லிம்களின்
அரவணைப்பும், அன்பும் என்றென்றும் நிறைவாக வழங்கப்பட்டு வருகிறது.
ஜாதி அடிப்படையில் பல பிரிவுகள் நம் நாட்டில் உண்டு. அந்தப் பாகுபாடு பெரும்பாலும் எல்லாப் பகுதிகளிலும் இன்றளவும் நடைமுறையில் உள்ள
நிலையிலும், நமதூர் காயல்பட்டினத்தில் தாழ்த்தப்பட்டவர் என்று காரணங்காட்டி யாரும் தனிமைப்படுத்தப்பட்டதாகவோ, தான் உயர்ந்தவர் என்ற
மிடுக்கில் யாரும் செயல்பட்டதாகவோ நானறிந்ததில்லை (விதிவிலக்குகள் இருக்கலாம்).
இத்தனை நற்குணங்களும் நம்மிடையே நிறைந்திருப்பதால்தான், நம் நாட்டின் பல பகுதிகளிலும் - ஏன், அமைதிப்பூங்கா என்று கருதப்படும் நம்
தமிழகத்தில் கூட வன்முறைகளும், மதங்களின் பெயரால் கலவரங்களும் நடைபெற்ற காலகட்டங்களிலெல்லாம் நமதூர் அமைதியாகவே இருந்து
வந்திருக்கிறது.
அப்படியான காலகட்டங்களில், இந்த ஊரின் முஸ்லிம் காக்கா, லாத்தாமாருக்கு எதுவும் வந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு நாம்
சொல்லாமலேயே முஸ்லிமல்லாதோருக்கும், அவ்வாறான இக்கட்டான காலகட்டங்களை அவர்கள் சந்திக்கையில், அவர்கள் சொல்லாமலேயே
நமக்கும் இயற்கையாகவே எழும். இந்த எண்ணம் நாம் பிறக்கும்போதே நம் உடலுடன் ஒட்டாமல் சேர்ந்த உறுப்பு போன்றது.
அப்பேர்பட்ட நமதூரிலும், சமூக நல்லிணக்கத்தை விரும்பாத சிலரின் தவறான செயல்பாடுகளால் அவ்வப்போது ஒற்றுமை கேள்விக்குறியாக்கப்பட்டு
விடுகிறது. ஆனாலும், இதே போன்றதொரு நிலை பிற இடங்களில் நடந்திருக்குமானால், சில உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கும்... குறைந்தபட்சம்
சிறிதளவு இரத்தமேனும் சிந்தப்பட்டிருக்கும். நமதூரிலோ வாய்ச்சவடால்களோடு நின்று போவதை, வருத்தத்திலும் ஒரு மகிழ்ச்சியாக
எடுத்துக்கொள்ளலாம்.
நமதூர் காயல்பட்டினம் - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில், கே.எம்.டி. மருத்துவமனைக்கு அருகில், முன்னாள் நகர்மன்றத் தலைவர் வாவு செய்யித்
அப்துர்ரஹ்மான் ஹாஜியாருக்குச் சொந்தமான நிலம். அந்த நிலத்தின் சாலை முகப்பில், சில ஆண்டுகளுக்கு முன்னர், திடீரென சிறிய அளவில்
கோவில் ஒன்று உருவானது. காலப்போக்கில் - பூஜைகள் செய்யப்பட துவங்கின. ஓலைக்கூரை வந்தது. ஆண்டுக்கு ஒருமுறை கொடை
விழாக்களும் நடக்கத் துவங்கியது. அந்த நிலத்தில் வீடுகள் கட்டப்பட்ட பின், கோட்டைச் சுவரும் சாலையோரமாக திடீரென உருவான கோவிலை
அணைத்தாற்போல் எழுந்தது.
சர்ச்சைக்குரிய இடம் தனியாரின் இடமா, புறம்போக்கா என இது குறித்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது ஒரு புறமிருக்க, இப்பிரச்சனைக்கு வேறு
வழிகளில் தீர்வு காணவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக விவரம் அறிந்தவர்கள் கூறுவதுண்டு. பரிந்துரைக்கப்பட்ட தீர்வுகளில் சில
சட்டப்பூர்வமானவை. சில - கேள்விக்குரியவை. அவற்றை ஒவ்வொன்றாக ஆய்வு செய்ய பொருத்தமான தருணம் இதுவல்ல.
என்றாலும், இதுபோன்ற நிகழ்வுகள் இனியேனும் நடைபெறாமலிருக்க, சிறிது காலம் கழித்தேனும் இவை குறித்து மீளாய்வு செய்ய வேண்டியது
அவசியம் என்பது எனது பணிவான கருத்து.
இப்பிரச்சனை நீடித்த - நீண்ட காலத்தில், இந்த கோவிலில் தீ எரிப்பு நிகழ்வுகள் அவ்வப்போது நடந்ததுண்டு. ஆனால் இறையருளால் அவை பெரிய
பதட்டங்களை ஏற்படுத்தவில்லை.
மத்தியில் புதிய ஆட்சி. அதனை தொடர்ந்து காயல்பட்டினத்தில் அண்மையில் நடந்த வெளிவந்த / வெளிவராத சில நிகழ்வுகள் குறித்த தகவல்களைப்
பார்க்கையில், யார் என்று இதுவரை அறியப்படாத ஒரு சிலர் (அவர்கள் எந்த சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்று இதுவரை எந்த நிரூபணமும்
இல்லை) நகரில் அமைதியைச் சீர்குலைக்க திட்டமிட்டு செயல்புரிந்து வருகின்றனர் என்பதை ஊடகத்துறையில் இருப்பதால், காதில் விழும் செய்திகள்
மூலம் கணிக்க முடிகிறது.
இந்தப் பின்னணியில் - ஆகஸ்ட் 23 அதிகாலை ஏற்பட்ட தீ எரிப்பு நகரில் மிகப்பெரிய பதட்டத்தை ஏற்படுத்தியது உண்மை. இதுகுறித்து உடனடியாக
காவல்துறைக்கு தெரிவித்திருந்தால், காவல்துறை வழக்குப் பதிவு செய்து, தடயங்களை சேகரித்து, விசாரணை செய்திருக்கும். அத்தீய செயலுக்கு
காரணமானவர்களை அடையாளங்காண வாய்ப்பும் கிடைத்திருக்கும்.
ஆனால் அவ்வாறு வாய்ப்பு வழங்கப்படவில்லை. உடனடியாக ஹிந்து முன்னணியினர், ஹாலோ ப்ளாக் கற்கள் கொண்டு சுவர்களை எழுப்பத்
துவங்கியது - முந்தைய நிகழ்வுகளில் இருந்து மாறுபட்ட புதிய நிகழ்வு. இதுவே பதட்டத்திற்கு முக்கிய காரணம் எனலாம்.
இவ்விசயம் கேள்விப்பட்டவுடன் - செய்தி சேகரிப்பதற்காக அங்கு சென்றேன்... கையில் நிழற்படக் கருவியுடன் கண்ணில் பட்டவற்றையெல்லாம்
படப்பதிவு செய்தேன்.
ஓலைக் கூரையால் அமைக்கப்பட்ட கோயில் கல்லால் கட்டப்படுவது அறிந்து நமதூரின் முஸ்லிம் மக்கள் திரண்டு வந்துவிட்டனர். கே.எம்.டி.
மருத்துவமனை வாயில் அருகில் ஓடக்கரையைச் சேர்ந்த நமதூர் மக்களும், திடீர் கோயிலில் துவங்கி, தாயிம்பள்ளி வரை நமதூரின் முஸ்லிம்
மக்களும் திரண்டு விட்டனர்... காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். என்ன நடக்குமோ என்ற அச்சம் எல்லோர் உள்ளத்திலும்
இருந்தது.
இவ்வளவு நாள் கட்டிக்காத்து வந்த சமய நல்லிணக்கமெல்லாம் சுக்குநூறாகிவிடக் கூடாதே என்ற கவலை சமூக அக்கறை உள்ளவர்களுக்கு
இருந்தது.
எல்லா தரப்பிலும் சில புல்லுருவிகள் இருக்கத்தான் செய்வர்; அதற்கு நாமும் விதிவிலக்கில்லை என்பது போல, பக்குவமற்ற சிலரின் விரும்பத்தகாத
பேச்சுக்களை இரு தரப்பிலும் கேட்க முடிந்தது.
ஒரு கட்டத்தில், ஓடக்கரை சார்பில் வந்திருந்த ஹிந்து முன்னணி மாநில நிர்வாகி ஒருவர், முஸ்லிம்கள் நின்ற பகுதியில் நின்றுகொண்டிருந்த
காவல்துறையினரிடம் தன் தரப்பு வாதங்களை முன்வைத்து வேகமாகப் பேசிக்கொண்டிருந்தார். அதையும் படமாக்கியபோது, அவர் ஏதோ என்னை
நோக்கிக் கூறிவிட்டதாகக் கூறி, அருகிலிருந்தவர்கள் அவரை எதிர்க்க முனைந்தனர். இறைவன் மீது ஆணையாகக் கூறுகிறேன்... அவர் என்னைப்
பார்த்து என்ன சொன்னார் என ஒரு சொல் கூட என் காதில் விழவில்லை. என் கவனமெல்லாம், நிகழ்வுகளைப் பதிவு செய்வதிலேயே இருந்தது.
எனக்காக எதிர்க்க முனைந்தவர்களை நான் தடுத்து, “விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வர முனையுங்கள்... பெரிதாக்க வேண்டாம்...!” என்று
நான் கூற, அவர்களும் அதை ஏற்றுக்கொண்டனர். அவரும் கண்ணியமாகத் திரும்பிச் சென்றுவிட்டார்.
சரி, ஒரு செய்தியாளராக நாம் ஒரு தரப்பில் மட்டுமே நின்றுகொண்டிருப்பது சரியில்லை என்று கருதிய நான், ஓடக்கரையைச் சேர்ந்த நமதூர் மக்கள்
அருகில் சென்று, எனக்கு அறிமுகமான சிலரை அழைத்துப் பேசினேன். உணர்வு பொங்க நின்று கொண்டிருந்த அவ்வேளையிலும், என் அழைப்புக்கு
மதிப்பளித்து அவர்கள் என்னை நெருங்கி வந்தனர்.
“என்னண்ணே பிரச்சினை...? உங்கள் கோரிக்கைதான் என்ன?”
“பிரச்சினைன்னு என்ன...? ஆக்கிரமிப்பு இடத்தில் கோட்டைச் சுவர் உள்ளது... எனவே கோயிலும் இருக்கும்...”
“சரிண்ணே... கோட்டைச் சுவரை இடிக்க அவர்கள் இசைந்தால், உங்கள் முடிவு என்ன...?”
“அது மட்டும் தீர்வாகாது... ஊரிலுள்ள எல்லா ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட வேண்டும்... அது வரை கோயில் இருக்கும்...”
“அது தனிப்பிரச்சினை அண்ணே... ஊரிலுள்ள எல்லா ஆக்கிரமிப்புகளும் முறைப்படி அகற்றப்படத்தான் வேண்டும்... அதற்கான கோரிக்கையை நாம்
யாவரும் இணைந்தே முன்வைப்போம்... இப்போதைய பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரலாமே...? இன்று நமக்குள் தேவையற்ற சில
உணர்வுகள் மேலோங்கியிருப்பது உண்மைதான்! இதுவே எப்போதும் இருக்கப் போவதில்லையே...? நாளை உங்கள் முகத்தில் நாங்களும், எங்கள்
முகத்தில் நீங்களும் எதிர்படாமலா இருந்து விடப் போகிறோம்...? இத்தனை நாள் நாம் பேணிக்காத்து வரும் நல்லிணக்கம் ஒரு நொடிப்பொழுதில்
இல்லாமலாவது உங்களுக்கு விருப்பமானதுதானா...?”
“.......(மவுனம்!).......”
“இப்போதைக்கு இந்த இடத்திலுள்ள ஆக்கிரமிப்பு பற்றி மட்டும் பேசுவோம்ணே... அது கோயிலாக இருக்கட்டும்! அல்லது கோட்டைச் சுவராக
இருக்கட்டும்!! அரசு அளவீட்டின் படி எது ஆக்கிரமிப்பிற்குள் இருந்தாலும், அதை அகற்ற நாம் இணைந்து முன்வரலாம்தானே...?
ஆக்கிரமிப்பில் கோட்டைச் சுவர் இருந்தால், அதை அகற்றக் கூறுங்கள்... அவர்கள் இணங்கத்தான் செய்வார்கள்... ஒருவேளை மறுத்தால் உங்கள்
குரலோடு நானும் இணைந்து குரல் கொடுக்கிறேன்...
ஒருவேளை ஆக்கிரமிப்பில் கோயில் இருந்தால் உங்கள் கருத்து என்ன?”
“ஆக்கிரமிப்பு என்று வந்தால் எல்லாவற்றையும் அவர்கள் அகற்றும்போது, நாங்களும் கோயிலை அகற்றுவதை எதிர்க்க மாட்டோம்...”
இப்படி அவர்கள் சொன்னதும், அவர்களது உள்ளுணர்வுகளை அறிந்ததால் எனது உள்ளத்தில் அந்நேரத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை அளவிட
முடியாது.
சிறிது நேரத்தில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. மா.துரை அவர்களது
தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருந்தது. வெளியிலிருந்து அவர்களின் குரல்களை மட்டும் என்னால் அவதானிக்க
முடிந்தது. துவக்கத்தில் இரு தரப்பினரின் குரல்களும் ஓங்கி ஒலிக்கத்தான் செய்தன. தத்தம் தரப்பு நியாயங்களை அவர்கள் முன்வைக்கையில்,
உணர்வுகள் மேலோங்கி நின்றதை உணர முடிந்தது.
ஆனால், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் அறிவுக் கூர்மையான வழிநடத்தல், கோட்டாட்சியர் - வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு
அதிகாரிகளின் பொறுப்புணர்ந்த செயல்பாடுகளால் அவர்களின் குரல்களில் இருந்த வேகம் கொஞ்சங்கொஞ்சமாகக் குறைந்து, நிறைவில் மறைந்தே
போனது.
பிரச்சினைக்குரிய இடத்தில், ஆக்கிரமிப்பிலிருக்கும் கோட்டைச் சுவரையும், கோயிலையும் நெடுஞ்சாலைத் துறை உதவியுடன் இடித்தகற்ற இரு
தரப்பினரும் சுமுகமாக ஒப்புக்கொண்டு, கைச்சான்றிட்டது புண்பட்ட நெஞ்சில் மயில் தோகையால் தடவிக்கொடுத்த அனுபவத்தைத் தந்தது.
கோயிலோ, கோட்டைச் சுவரோ... அவற்றைக் கட்டியது சரியோ, தவறோ... அதற்குள் நாம் செல்லத் தேவையில்லை. ஓடக்கரை மக்களுக்கு அது
வழிபாட்டுத்தலம். கட்டிட உரிமையாளருக்கு அது தன் உரிமைக்குட்பட்ட இடம்.
இவ்வளவு வலிமையான எண்ணங்களை தன்னகத்தே கொண்டிருந்தும், இரு தரப்பு நல்லுறவுகளுக்கு எவ்வித பங்கமும் வந்து விடக்கூடாது என்று அந்த சில நிமிடங்களில் அவர்கள் கருதியதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஆம்! இந்நிகழ்வு நிச்சயம் நமதூர் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்பட
வேண்டியது என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.
இப்படியாக, இரு தரப்பினரின் செய்கைகள் இருந்துகொண்டிருக்க, நேற்றிலிருந்து முகநூலிலும், மொபைல் ஃபோனில் வாட்ஸ் அப், புதிதாக
முளைத்திருக்கும் டெலிக்ராம் உள்ளிட்ட அப்ளிகேஷன்களிலும் - விவரமற்ற மக்கள் சிலர் வெளியிட்டு வரும் கருத்துக்களைப் பார்க்கும்போது நம்
நெஞ்சம் கணக்கிறது...
எவ்வளவு பாடுபட்டு - இறையருளால் பல்லாண்டு கால பிரச்சினை ஒன்று சுமுகமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இரு தரப்பினரின்
உள்ளங்களையும் காயப்படுத்தும் வகையிலான இவர்களின் பக்குவமற்ற சொற்கள் - எங்கே இந்த அமைதியைக் குலைத்துவிடுமோ... என்ற அச்சம்
இப்போது நிலவிக் கொண்டிருக்கிறது.
வெற்றி – தோல்வியை அளப்பதற்கு இங்கே பலப்பரீட்சை ஒன்றும் நடந்துவிடவில்லை. எதிர்பாரா நிலையில் கொதித்தெழுந்த இரு தரப்பு மனங்கள்,
எப்போதும் போல இணக்கத்தைக் கண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை.
இருந்த இடத்தில் எதையும் எழுதிவிடலாம். ஆனால், இங்கே ஊரில் அதனால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அது ஊரிலிருப்பவர்களுக்கு
மட்டுமல்ல; அவ்வாறு எழுதியவர்களுக்கும் சேர்த்துதான் என்பதை அது தொடர்பானவர்கள் மனதிற்கொள்ள வேண்டும்.
“அல்லாஹ்வையும், மறுமை நாளையும் யார் நம்பியிருக்கிறாரோ அவர் பேசினால் நல்லதைப் பேசட்டும்! அல்லது வாய் மூடி இருக்கட்டும்!!”
“கோபம் வரும்போது எதிரியை சாய்ப்பவன் சிறந்த வீரனல்ல; மாறாக, தன் மனதைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே சிறந்த வீரன்!”
என்றெல்லாம் நம் உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிகள் இருப்பது நான் சொல்லித்
தெரிய வேண்டிய நிலையில் நமதூரில் யாரும் இல்லை. இப்பொன்மொழிகளை இத்தனை காலம் நாம் கண்களால் படித்தும், வாயால் மொழிந்தும்,
காதுகளால் பிறர் கூறக் கேட்டும் இருக்கிறோம். உள்ளத்தால் ஏற்று செயல்படுத்த இதுவே சரியான தருணம். இத்தருணத்தை சரியாகப் பயன்படுத்தாது
விட்டுவிட்டால், அதன் பிறகு இந்த நபிமொழிகளைப் படித்தால் என்ன, படிக்காவிட்டால் என்ன?
பொறுப்புணர்ந்து செயல்படுவோம்! நம் பொறுப்பற்ற செயல்பாடுகளால் ஏதேனும் வேண்டாத விளைவுகள் ஏற்பட்டால், அதற்கு இவ்வுலகிலும்,
மறுவுலகிலும் விடை சொல்லியே ஆக வேண்டும்!!!
இறைவன் நம் யாவரையும் பாதுகாப்பானாக... |