செப்டம்பர் 5 இன்று ஆசிரியர் தினம்...
"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்" என்ற முது மொழியை தமிழர்கள் எவ்வாறு உள்வாங்கிக் கொண்டுள்ளனர் என்ற சர்ச்சைக்குள் நாம் போக வேண்டாம். ஆனால், "அவனே எழுதுகோலைக் கொண்டு (எழுத) கற்றுக்கொடுத்தான்" (96:4) என்கிறது இறை வசனம்... இப்போது சொல்லுங்கள்..! எழுத்தறிவித்தவன் இறைவன் என்பது உண்மைதானே...!
அவன்தான் தனது பிரதிநிதிகளாய்... கற்பித்தல் பணி செய்பவர்களாய்... இறைத்தூதர்களை அனுப்பினான். அதனால்தான் ஆசிரியப்பணியை அறப்பணி (noble profession) என்கிறோம்.
கற்றலின் முழுமையான நோக்கமே கற்பித்தலில்தான் என அழுத்தமாக கூறுகிறது இஸ்லாம்.
கற்றோருக்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு என்று கூறுவார்கள். ஆனால் கற்பிப்பவர்களுக்கோ சென்ற இடமெல்லாம் பிள்ளைகள்... என்பதை சொன்னால் புரியாது... உணர்ந்தால் மட்டுமே அந்த உன்னதத் தருணங்களைக் கொண்டாட முடியும். எங்கு சென்றாலும் எங்கிருந்தேனும் ஓரிரண்டு பேர் ' உஸ்தாதா' என்று ஓடி வந்து உரையாடும் போது, " எனது மாணவர்கள்தான் நான் சேர்த்து வைத்த சொத்து" எனப் பெருமிதம் கொள்ளும் நேரம் ஈன்ற பொழுதினும் பெரிதுவந்த தருணங்கள். வாழும் காலம் முழுவதும் ஆயிரக்கணக்கான பிள்ளைகளை தன் பிள்ளைகளென சொந்தம் கொண்டாட உரிமைப் பெற்ற ஆசிரியர்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள்தான்.
ஏறத்தாழ பதினேழு வருடங்கள் ஆசிரியப்பணியில்.... கண்டிப்பும், கறாருமான ஓர் ஆசிரியையாக இருந்ததை விட ஒரு சகோதரியாகவும், ஒரு தாயாகவும் இருப்பதையே மிகவும் விரும்பியதுண்டு... பிள்ளைகள் மனதில் எப்படியாவது புகுந்து விட வேண்டும் அப்போதுதான் நமது பாடங்களை அவர்கள் விரும்பிப் பயிலுவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில்... ஹேண்ட் பேக் முழுவதும் குட்டிக் குட்டி பரிசுப் பொருட்களுடனேயே வகுப்பறைக்குள் நுழைவதுண்டு.
ஒரு சிறந்த ஆசிரியையாக (ideal teacher) இருக்க வேண்டும் என்ற உந்துதலில் விளைந்த எதிர்பார்ப்புகள் பல சமயங்களில் ஏமாற்றங்களாகி விடும்போது ஏற்படும் மன உளைச்சல்களை ஓர் ஆசிரியையாக பல சமயங்களில் அனுபவித்ததும் உண்டு... ஆனால் நான் மாணவியாக இருந்த காலங்களில் எனது ஆசிரியைகளுக்கும் அதே மனோநிலைதானே இருந்திருக்கும் என்பதை உணர்த்திய அனுபங்கள் அவை.
பெற்றோருக்கடுத்து குழந்தைகளின் ரோல் மாடல் ஆசிரியர்கள்தான்... அப்படி ஆசிரியப்பணி மீது எனக்கு அளவு கடந்த ஆசையையும், அர்ப்பணிப்பையும் ஊட்டிய எனது ஆசிரியைகளைப் பற்றிய என் இதயத்துப் பதிவுகளை இந்த இணையத்தில் ஏற்றி அவர்கள் வாழும் காலத்திலேயே அவர்களுக்கு உரித்தாக்கும் நன்றியாகவே இந்த ஆக்கம்.
அப்போது அது சுபைதா நடுநிலைப் பள்ளி... இரண்டரை வயதில் நர்ஸரியில் காலடி வைத்தது முதல் பத்தாம் வகுப்பு முடியும் வரையிலான பன்னிரண்டு வருட காலங்களும் சிறகு முளைத்த சிறு பறவைகளாய் கவலையற்றுத் திரிந்த காலங்கள்.... துள்ளி ஓடும் புள்ளி மான்களாய் சுறுசுறுப்பாய்ச் சுற்றிச் சுழன்ற நாட்கள்... நினைத்து நினைத்துப் பார்த்தாலும் சோகத்தின் நிழல் கூட காண முடியாத பட்டாம்பூச்சி பருவங்கள்... அப்போது வேதனையாய்த் தெரிந்த சில நிகழ்வுகளும் கூட இப்போது வேடிக்கையாய்த்தான் தெரிகிறது.
எல்லோருடைய ஆரம்பப்பள்ளி நாட்களிலும் ஒரு மல்லிகா டீச்சர் கண்டிப்பாக இருப்பார்கள் போலும்... எனக்கும் இருந்தார்கள்... சிரிக்கும் கண்களும்... கணீர் குரலுமாய் எனக்கு எழுத்தறிவித்த மல்லிகா டீச்சரின் பாசம் இன்றும் தொடர்கிறது.
பெய்ட் பைப்பர் ஆஃப் ஹேம்லின் (peid piper of Hamelin) ரைம்ஸுக்காக ஆளுக்கொரு பீப்பியை கையில் வைத்துக் கொண்டு மரியம் பீவி டீச்சர் பின்னால் ஸ்கூல் கிரவுண்டை சுற்றிச் சுற்றி வந்த குட்டீஸ்களாய் இருந்ததும்...
வெள்ளை முடியும், கோடாரிக் கொண்டையும், வட்ட முகமும், அதில் திருநீறு மட்டுமாய் என கண்ணாடி அம்மா ஒன்றாம் வகுப்பு எடுத்ததும்...
அ...ஆ... என்று பள்ளிக்கு வெளியேவும் கம்பீரமாய் ஒலிக்கும் நங்கையார் டீச்சரின் குரலும்..
அமைதியாக ஆங்கிலப் பாடம் எடுக்கும் விக்டோரியா டீச்சரின் முகமும்...
பள்ளி நேரம் முடிந்தப் பிறகும் தினமும் ஒரு மணி நேரம் எல்லோரையும் எக்ஸ்ட்ராவாக இருக்க வைத்து வாய்ப்பாடு மனப்பாடம் பண்ண வைத்த நாலாம் வகுப்பின் ரோஸரி டீச்சரும்...
என்னை தன் பிள்ளை போலவே நினைத்து பாசம் காட்டிய ஐந்தாம் வகுப்பின் மஹ்மூதா டீச்சர்...
என்று அனைவருடனும் இப்போதும் நான் கைகோர்த்து நடப்பது போன்றதொரு பிரம்மையாய்... என் மனதில் ஆழப்பதிந்த ஆளுமைகள்.... இது பிரைமரி ஸ்கூல்...
ஹைஸ்கூலில் நடந்ததோ நேற்று நடந்தது போலவே இன்றும் பசுமையாய் நெஞ்சில் நிறைந்திருக்கிறது...
"தலைவி...! அலுவலகத்தில் இருந்து அழிப்பான் எடுத்து வா...!" என்று அரச தோரணையில் ஒலிக்கும் பீவி டீச்சரின் குரலுக்கும் தோற்றத்திற்கும் சம்பந்தமே இருக்காது. அட்சர சுத்தமான அவர்களின் தமிழுக்குச் சமமாக ஆங்கிலமும் பொளந்துக் கட்டி பேசக் கூடியவர்கள்... தமிழ் ஆசிரியையான பீவி டீச்சர் மிகவும் கண்டிப்பானவர்கள்... கோபம் வந்தால் அடி பின்னியெடுப்பார்கள் என்றாலும்... "கயல் போன்ற கண்கள்" என்ற வர்ணனைகளில் அவர்கள் காட்டும் அழகும், அபிநயமும் தமிழ் வகுப்புகளில் எங்களைக் கட்டிப்போட்டது உண்மை. இருந்தாலும் மதிப்பெண்கள் வழங்குவதில் டீச்சர் ரொம்பவே கஞ்சம்...
" நீங்கள் ஒருவருக்கொருவர் பட்டப் பெயர் கூறி அழைக்க வேண்டாம்." என்ற வசனத்தை அறிந்த போது நினைவில் வந்தது அந்த அறியாத வயதில் பீவி டீச்சருக்கு நாங்கள் வைத்த பட்டப் பெயர்தான்... அதற்காக இறைவனிடம் மன்னிப்புக் கேட்க இன்றளவும் கடமைப்பட்டவர்கள் நாங்கள்... ஏனென்றால் மன்னிப்பளிக்க வேண்டிய பீவி டீச்சர் இன்று எங்களுடன் இல்லை... இன்னாலிலாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எவ்வளவுதான் சேட்டைகள் செய்தாலும், மூக்கைத் தேய்த்துக் கொண்டே, "நாத்தக் கழுதைகளா...!" என்று செல்லமாகத் திட்டுவதைத் தாண்டி வேறெதுவும் செய்யத் தெரியாத ஆறாம் வகுப்பின் ரஹ்மா பீவி டீச்சர்... இப்போது பார்த்தாலும் வாஞ்சையோடு கையைப் பிடித்து நலம் விசாரிப்பார்கள்.
"ஒன்றுமில்லை" என்ற சொல்லை யார் வாயிலிருந்து கேட்க நேர்ந்தாலும்... மனதில் வந்து போகிறது... ஏழாம் வகுப்பில் காருண்யா டீச்சர் நடத்திய ஆங்கிலக் கதையொன்றும், அதில் வரும் "Nothing... Will come of Nothing " என்ற வாசகமும்.
எங்க உம்மாக்களுக்கும் டீச்சராக இருந்த எலிசபத் டீச்சரும், கே.நூர்ஜஹான் டீச்சரும்... ஒரு நாள் கூட எங்களை எங்களுடைய பெயர்கள் சொல்லி கூப்பிட்டதில்லை... எப்போதுமே எங்கள் உம்மாக்களின் பெயர்தான் எங்களுக்கும்...
எட்டாப்பம்மாவின் அல்ஜீப்ராவும், ஜவ்வு மிட்டாயும், லாங் செயினும், பன் கொண்டையும், நிரந்தரமாய் மனதில் ஒட்டிக் கொண்டவைகள்...
மெஹர்பானு டீச்சர் என்றாலே மறக்காமல் நினைவுக்கு வருவது அவங்க சொன்ன ஒரு விஷயம்... "ஏண்டி...! காலங்கார்த்தால எழுந்து அவசர... அவசரமாய் சமையல் பண்ணி, பிள்ளைகளை ஸ்கூலுக்கு ரெடி பண்ணி, வீட்டுக்காரரை வேலைக்கு அனுப்பிட்டு, வெந்தத தின்னுப்புட்டு வேக வேகமா ஸ்கூலுக்கு நா ஓடியாறேன்... உங்க ஊர் பொம்பளைங்க அப்பத்தான் சாவகாசமா வீட்டுப் படிகள்ல உக்காந்துட்டு... பேசி... பேசி... கீர ஆஞ்சிகிட்டும், வெங்காயம் உரிச்சிகிட்டும் இருக்காங்க... சோம்பேறிங்கடி நீங்க..." என்று சொன்னது கீரையையும், வெங்காயத்தையும் பார்க்கும் போதெல்லாம் மனதில் ஓடுகிறது.
"எப்பூ... இந்தக் கணக்க கொஞ்சம் போர்டுல எழுதிப் போட்டுடா...! ராசாத்தி...! என்று கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சிப் பேசும் பத்மா டீச்சருக்கு வெள்ளக் கலர்னா அவ்வளவு இஷ்டம்... அவங்களுக்கு என்னோட சீனியர்ஸ் வச்சிருந்த செல்லப் பெயர் Black Beauty...
வாயத் தொறந்தாலே தஸ்...புஸ்ன்னு ஆங்கிலம்தான் T.V.கண்ணாடி நூர்ஜஹான் டீச்சரின் டிரேட் மார்க்... (பெரிய பிரேம் கண்ணாடி போட்டிருப்பாங்க... இரண்டு நூர்ஜஹான் டீச்சர் இருந்ததாலே... இவங்களுக்கு இந்த அடையாளம்) எனது ஆறாம் வகுப்பிலிருந்தே டீச்சர் கிட்டே டியூஷன் படிச்ச எனக்கு... அப்போதே ஆங்கில இலக்கணத்தை அக்கு வேறு ஆணி வேறாய் மண்டைக்குள் ஏற்றியவர்கள்... ஆங்கிலத்தின் மீது பெரிதான ஈர்ப்பும், கான்ஃபிடன்ஸும் ஏற்பட டீச்சர்தான் முக்கியக் காரணம்... இன்றளவும் ஆங்கிலப் புத்தகங்களை சிரமமின்றி வாசிக்கவும்... இந்த நகர வாழ்க்கையில் திருவிழாவில் தொலைந்த குழந்தை போல் பக்.. பக்...குன்னு முழிக்காம ஓரளவு சமாளித்து நன்றாகப் பேசத் தெரிந்தது போல நடிக்கவும் முடியுதுன்னா அதுக்குக் காரணம் நூர்ஜஹான் டீச்சர்தான்...
அவங்க மட்டுமில்ல... என்னோட மோஸ்ட் ஃபவரிட் ஜெஸிமா டீச்சரும்தான்... பப்ளிக் எக்ஸாம்ல ஆங்கிலத்துல நான் ஸ்டேட் லெவல் மார்க் வாங்க வேண்டுமென்று என் தகுதிக்கு மீறி என் மீது நம்பிக்கை வைத்தவர்கள்.... ஸாரி மேம்...! உங்க ஆசையை நிறைவேற்ற நான் இன்னும் அதிகமா உழைச்சிருக்கனும்...
நீண்ட பின்னல்... ஒற்றை ரோஜா... கண்ணாடி... வாய் நிறைய சிரிப்பு... ஸ்டைல்... என்று டிபிகல் டீச்சர் தோற்றத்தில் இருப்பார்கள். தூத்துக்குடியில் இருந்து தினமும் காலைல எட்டரை மணிக்கே ஸ்பெஷல் கிளாஸுக்காக டாண்...ணு தினமும் வந்துடுவாங்க... ஸ்கூல் பெல் அடிச்சா வீட்டில் கேட்கும் தூரத்தில் நாங்க இருந்தாலும்... ஆடி அசைஞ்சு லேட்டா போய் நின்னு திட்டு வாங்குவோம்...
திட்டெல்லாம் கிளாஸ் ரூமுக்குள்ளேதான்.... வெளியிலே வந்துட்டா ஃபிரண்ட் போலத்தான் பழகுவாங்க... அவர்களின் முதுகுக்குப் பின்னால் நாங்கள் செய்யும் சேட்டைகள் அனைத்தையும் கண்டும் காணாதது போல ஓர் ஒற்றைப் புன்னகையுடன் கடந்து சென்று விடுவார்கள். என்னுடைய ஆக்கங்கள் வெளி வந்த உடனே தொலைபேசியில் அழைத்து பேசிவிடுவது என்று என்னில் அக்கறைக் கொண்டவர்கள்...
அடுத்து...எங்க தமிழ் அம்மா... சரஸ்வதி டீச்சர்... எப்பவுமே எங்களுக்கு ஸ்பெஷல்... சிரிப்பும், சினேகமுமாய் தமிழ் வகுப்பு என்றாலே எங்களுக்கு கொண்டாட்டம்தான்... அவர்கள் அடித்தாலும் சிரிப்போம்... தமிழ் இலக்கணத்துல மார்க் குறையும் போதெல்லாம் கண்டிக்கும் அவர்களிடம், "இலக்கணம் படிக்கவில்ல... தலக்கனமும் எனக்கு இல்ல..." என்று கலாய்க்கும் அளவுக்கு அவங்களோட அவ்வளவு நெருக்கம்... சிரித்துக் கொண்டே மண்டையிலே நங்...ண்டு குட்டு விழும்.
2007-2008ஆம் வருடங்களில் ஜெஸிமா டீச்சர், பத்மா டீச்சர், சரஸ்வதி டீச்சர், நூர்ஜஹான் டீச்சர்... இவங்களோடல்லாம் நானும் ஓர் ஆசிரியையாக எனது பள்ளியிலேயே பணியாற்றியது என் வாழ்நாளின் பொக்கிஷத் தருணங்கள்.
எனக்கு பாடம் எடுக்கவில்லையென்றாலும் எப்போதுமே அன்புடன் பழகும் பீர் ஃபாத்திமா டீச்சர் (தற்போது அவங்கதான் எச்.எம்) டிபிகல் நம்ம ஊர் தமிழே பேசுவாங்க.... கம்பீரத்தை உடல் மொழியில் கையாளத் தெரியாத எளிய மனுஷி... பக்கத்து வீட்டு சாச்சி, பெரிமா போல ஒரு தோற்றமும், பேச்சும் அவங்க ஸ்பெஷல்.
லேட்டா ஸ்கூலுக்கு வரும் பிள்ளைகளை பட்டும் படாமலும் அடித்து உள்ளே அனுப்பும் கேம்ஸ் டீச்சர்... விளையாடி முடித்தவுடன் தண்ணீர் குடிக்கவே விட மாட்டாங்க... "மூச்சு வாங்கி இளைக்கும் போது தண்ணீ குடிக்கக் கூடாது புள்ள...." என்பார்கள்.
எங்க எச்.எம். மெஹ்பூபுன்னிஸா மேம் பத்தி சொல்லலன்னா இந்த ஆக்கம் நிறைவு பெறாது... சென்ற வருட ஹஜ்ஜுப் பெருநாளின் போது சென்னையில் ஒரு திடலில் தொழ சென்றிருந்த போது, தொழுகை முடிந்ததும் ஓடி வந்து கட்டிப் பிடித்து நலம் விசாரித்த அவர்களது பாசம்... என்னை தன் உறவினர்களிடம் ' என்னோட ஸ்டூடண்ட்" என்று அறிமுகப்படுத்தியது நெகிழ வைத்தது.
ஸ்டிரிக்ட் டீச்சர் என்று பேர் பெற்ற எச்.எம்.தான்... நாங்கள் ஸ்கூல் கிரவுண்டில் வெயில்ல உட்கார்ந்திருந்தா... "ஏய்...! வெயில்ல உக்காராதே...! நீர் கடுப்பு வரும் என்று அக்கறையாய் சத்தம் போடுவாங்க....
ஸ்டிரிக்ட் ஆன எச்.எம்.க்குள்ளே இப்படி ஒரு தாயன்பா என்பது இப்போதுதான் புரிகிறது.
வரலாறுகள் புரட்டிச் சொல்லித் தந்த ஒளரங்கசீப்பின் வாழ்க்கையை உண்மையாக இனம் காட்டியது எச்.எம்.தான்!
பர்சனலாக எனக்கும் அவர்களுக்குமான அனுபவம் ஒன்று உண்டு... என் மீது கோபமாக இருக்கும் நேரங்களில் " லீடர்...! என்றழைத்து வேலை ஏவுவார்கள்... கோபமற்ற நேரங்களில் பெயர் சொல்லி அழைப்பார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் நபியின் மீது சற்று வருத்தமாக இருக்கும் நேரங்களில்
"இப்ராகீமின் இறைவன் மீது ஆணையாக...!" என்றும் சந்தோஷமான நேரங்களில்... "முஹம்மதின் இறைவன் மீது ஆணையாக...!" என்றும் கூறுவார்கள் என்ற ஹதீஸை படிக்கும் போதெல்லாம் எனக்கு இந்தச் சம்பவம் மறக்காமல் நினைவுக்கு வந்து விடும்.
இப்படி அடுக்கிக் கொண்டே போனால் பசுமை நிறைந்த அந்த நினைவுகளைக் கொண்டு சுவாரஸ்யமாய் ஒரு புத்தகமும் எழுதி முடித்து விடலாம்.
ஸ்கூல் டீச்சர்ஸ் மட்டும்தான் என்றில்லை... குர்ஆன் ஓதக் கற்றுத் தந்த உம்மு ஹபீபா லெப்பை, செய்து லெப்பை... மத்ரஸாவின் ஆசிரியப் பெருமக்கள்... மற்றும் ஆசிரியைகள்.. என மறுமையின் கல்வியை வழங்கிய அவர்களும் காலம் முழுதும் நன்றிக்குரித்தானவர்கள்.
உறவுகளைச் சொல்லித் தந்தவள் என் அன்னை எனில், உலகத்தை உணர்த்திய கண்ணாடி என் ஆசிரிய அன்னையர்கள்... அவர்களது கண்களின் வழியேதான் நாங்கள் உலகை உணர்ந்தோம்... அவர்கள் எண்ணங்களின் உயர்வில்தான் நாங்கள் உருவாக்கப்பட்டோம்...
எங்கள் அன்னையருடன் நாங்கள் இருந்ததோ உண்ணும் நேரமும், உறங்கும் நேரமும் மட்டுமே...
நாங்கள் விழித்திருக்கும் நேரமெல்லாம் எங்களை விழிப்புணர்வுடன் வைத்தவர்கள் எம் ஆசிரியர்கள்... ஒட்டு மொத்தமாய் நாங்கள் படுத்திய பாடுகளை சகித்துக் கொண்டவர்கள்...
ஏணியாய் நின்று எங்களை உயரத்தில் ஏற்றி அழகு பார்த்த அவர்கள் எங்கள் எதிர்காலத்தின் வருமானத்தை என்றுமே எதிர்பார்த்ததில்லை...
தோணியாய் இருந்து எம்மை கரை சேர்த்திட கடுமையாய் உழைத்த அவர்கள் தங்கள் உழைப்பின் பலனை ஒருபோதும் கணக்குப் பார்த்ததில்லை.. அவர்களின் அன்புக் கரங்களால் உருவாக்கப்பட்ட சிற்பங்கள் நாங்கள்...
எங்கள் பிரார்த்தனைகளில் எம் பெற்றோர்களுக்கிணையாய் அவர்கள் அனைவருக்கும் ஓரிடம் நிரந்தரமாய் உண்டு... இன்ஷா அல்லாஹ்.
|