டிசம்பர் வானம் குளிர்ச்சியானது. ஒரு குழப்பமுற்ற மனிதனின் மனதினைப் போன்று, நித்தம் நித்தம் ஒரு நிலையில்லாத் தன்மையுடன், அந்த குளிர்ந்த வானின் காட்சிகள் - பற்பல மாற்றங்களைப் பெறுவதுண்டு.
மந்தமான மெல்லொளியைப் பரவச்செய்யும் விடிகாலை வானம்; உற்சாக மிகுதியில் பிரகாசமாக காணக்கிடைக்கும் நடுப்பகல் வானம்; சிறுகுழந்தையின் சிவந்த கன்னத்தின் அழகினைக்கொண்ட அரையிருள் செவ்வானம்; விண்மீன்களை ஒவ்வொன்றாக தின்று தீர்த்து - அரைக்கோள நிலவினை மட்டும் மீதம் வைக்கும் இரவு வானம்…
பெரும் மணற்காற்றுப் போர்வைக்குள் அடைப்பட்டுக் கிடக்கும் புழுதி வானம்; வண்ணமிழந்த பெரிய-அளவு பஞ்சுமிட்டாயாகத் தோன்றும் மேக வானம்; இரவில் கண் சிமிட்டி மிதக்கும் வானூர்திகளை தாளாட்டுகின்ற மையிருட்டு வானம்…
நீல ஆழியையும், பாலை வெண்மணலையும் காண இயலாதவாறு – தனது எல்லை நெடுகிலும் மூடுபனியால் சூழ்ந்திருக்கும் தொடுவானம்…… என தோற்றங்கள் பல கொண்டிருந்த போதிலும், தம்மாம் நகரின் டிசம்பர் வானம் மிகவும் குளிர்ச்சியானது!
குளிர்ந்த வானமும் & முக்கிய நிகழ்வுகளும்...
அந்த வானம் ஒரு அகல்விரிவான ஏட்டுத்தாளைப் போன்றது. அதன் தோற்றத்தையும் நிறத்தையும் அவ்வப்போது மாற்றும் - அந்த பிரபஞ்சப் பேராற்றலின் வண்ணத் தூரிகைதான் எத்தனை எத்தனை கலைத்தன்மைக் கொண்டது?!!
‘இறைவன் அழகானவன். அவன் அழகை விரும்புகிறான்,’ என்பது நபிமொழி! ஆம், அவன் கலைநயமிக்கவன்! தனது படைப்புகள் அனைத்தையும், நுட்பமான கலையம்சத்தின் மூலம் - மிக அழகுற அவன் வடிவமைக்கிறான்.
வறண்ட பாலை நிலத்தின் மேலுள்ள – குளிர்ந்த வானின் பற்பல தோற்றங்களும் கூட, அவனது அத்தாட்சிகளுள் உள்ளவைதான்! அந்த மகா கலைஞனை நினைவுக்கூறச் செய்யும் கலை வடிவங்களினூடே - நாம் அவனை அணுகுவது, எத்தனை எத்தனை சுவைமிக்கது?
இதோ, நான் தொடர்ச்சியாக இரண்டு டிசம்பர் மாதங்களை தம்மாம் நகரில் சந்தித்துவிட்டேன். இப்பாலைவன மணல்வெளியில், குளிர்காலங்களுக்கும் & முக்கிய நிகழ்வுகளுக்கும் இடையே - ஓர் இயல்பான பிணைப்பு இருக்கத்தான் செய்கிறது.
இவ்விரண்டு திங்கள்களில், நான் கலந்துகொண்ட இருவேறு நிகழ்வுகளின் பேசுபொருட்களும் கூட, டிசம்பரின் குளிர்ந்த வானத்தைப் போன்று – பல்வேறு தோற்றங்களில் விரிவடைபவையே!
அரபிய்யர்களின் பண்பாட்டு வெளிப்பாடாகத் துவங்கி, அகிலம் எங்கிலும் பரவிய இறையியல்-சார்ந்த கலைத்துறைகளின் கூறுகளை விளக்கும் தனித்துவமான நிகழ்வுகள் அவை!!
முதலாம் டிசம்பர்...
2016-ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற ஓர் கருத்தரங்கம் தான், தம்மாம் நகரில் நான் கலந்துகொண்ட முதன்முதல் பொது நிகழ்வு. ‘பள்ளிவாயில் கட்டிடவியல் குறித்த முதலாவது பன்னாட்டு கருத்தரங்கம்’ (The First International Conference on Mosque Architecture)! - என்பதே அதன் வசீகரத் தலைப்பு!
‘அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி - பள்ளிவாயில் ஒன்றைக் கட்டியவருக்கு, அது போன்ற ஒரு வீட்டை அவருக்காக அல்லாஹ் சுவர்க்கத்தில் கட்டுகிறான்,’ என இறுதித்தூதர் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மொழிந்துள்ளார்கள்!
சராசரி மனித வாழ்வின் ஏதேனும் ஓர் தருணத்தில், கட்டிடவியல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிடுகிறது. எனினும், பள்ளிவாயில் கட்டுமானம் அப்படியானது அல்ல. இஸ்லாமியர்களிலுமே, ஒரு குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கிடைக்கும் அரிய வாய்ப்பு அது!
ஓர் பகுதியில் புதிதாக வரவிருக்கும் பள்ளிவாயிலின் கட்டுமானத்திற்கோ அல்லது அவ்விடத்தில் ஏற்கனவே இருக்கும் பள்ளிவாயிலின் மறுசீரமைப்பிற்கோ, அதனருகில் வசிக்கும் மக்களின் பொருளாதார உதவியும் & பிரார்த்தனைகளும்தான் (இறைநாட்டத்திற்குப் பின்னர்) பெரும் பங்களிப்பாக இருக்கிறது.
அவ்விரண்டையும் தாண்டி, அதன் கட்டிடவியல் வடிவமைப்பிலோ அல்லது அதற்கான திட்டமிடலிலோ ஈடுபடுபவர்கள், மிகவும் சொற்பமாகவே இருப்பர். அத்தகைய சொற்பமானவர்களுக்கான நிகழ்வாகத்தான் இக்கருத்தரங்கு அமையும் என்பதில் - எவ்வித சந்தேகமும் எனக்கு முதலில் இருக்கவில்லை; இருப்பினும், அதன் தலைப்பு என்னை வெகுவாக கவர்ந்திழுத்தமையால், உடன் பணிபுரியும் மும்பைக்கார நண்பர் அன்சாஃப் ஹாலித்துடன் நிகழ்வில் பங்கேற்றேன்.
பேசும் படங்கள்
அழகிய கண்காட்சியோடு தொடங்கியது கருத்தரங்கு! துவக்க விழாவிற்கு, சஊதி அரபிய்யாவின் இளவரசர் ஒருவர் அழைக்கப்பட்டிருந்தார்.
பல வரலாற்றுச் சிறப்புமிக்க வழிபாட்டுத்தலங்களை சுமந்திருக்கும் அரபிய்ய தீபகற்பத்தின் - ஒருசில தொன்மையான பள்ளிவாயில்களின் ஒளிப்படங்களை காட்சிப்படுத்தியிருந்தனர். அவை ஒவ்வொன்றின் வடிவமைப்பிலுள்ள நுட்பமான வேறுபாடுகளை அறிந்திட, ஒரு பாமரனின் பார்வை போதாது போலும்; அக்கலையின் மீதான ஆர்வமும் & அதனை இரசிக்கும் மனநிலையும் இன்றியமையாதவை என்பதை - முதல் படமே எனக்கு உணர்த்தியது.
ஒவ்வொரு ஒளிப்படமும், தான் தாங்கி நிற்கும் பள்ளிவாயில்களைப் பற்றி அழகாகப் பேசின. ரியாத், தாயிஃப், ஹஸ்ஸா, கஸீம் & ஜிஸான் போன்ற சஊதி அரபிய்யாவின் முக்கிய பகுதிகளில் அமைந்துள்ள பழமையான பள்ளிவாயில்களின் உட்புற-வெளிப்புற படங்கள் பலவும், நிதானமாக ஆனால் ஆழமாக தத்தம் தலங்களைப் பற்றி எடுத்துக்கூறின.
களிமண், சுண்ணாம்பு, கல், பாறை & உத்திரங்களால் ஆன அவை, பற்பல வரலாற்றுச் சுவடுகளை தம்முள் பொதிந்துள்ளன. அருகாமையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, சூழலுக்கேற்ப இக்கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதே கோட்பாட்டைத் தான், பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர், லாரி பேக்கரின் சூழலுக்குகந்த கட்டிடவியல் முறையும் வலியுறுத்தியது.
பண்டைய பள்ளிவாயில்களின் ஒளிப்படங்களை நான் கடந்து செல்கையில், ‘நீ என்னை நேரில் வந்து பார்க்கமாட்டாயா?’ என அவை ஒவ்வொன்றும் பிரியத்தோடு அழைப்பதைப் போன்று உணர்ந்தேன்.
எண்ணெய் சந்தையின் அசுர வீழ்ச்சி, சஊதி அரபிய்யாவை மாற்றுப் பொருளாதார வழிகளை தேடச் செய்துள்ளது. வரலாறு & பண்பாட்டு ரீதியான சுற்றுலாத்துறையின் வளர்ச்சியினைக் கொண்டு, வேலைவாய்ப்பினைப் பெருக்கி - நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்திட முனைவது, ‘சஊதி 2030’ தொலைநோக்கு திட்டத்தின் ஓர் முக்கிய அம்சமாகும்.
மக்கா-மதீனா நகரங்களை நோக்கி நிகழ்த்தப்படும் புனித யாத்திரைகளுக்குப் பின்னர், அந்த நாட்டின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க - இப்பள்ளிவாயில்கள் ஆயத்தமாக்கப்படுவதையே, இக்கண்காட்சி எனக்கு பறைசாற்றியது.
பண்டைய வழிபாட்டுத்தலங்களின் காட்சிப்பிரிவைப் போல, புதிய பள்ளிவாயில்களின் பிரமிப்பூட்டும் ஒளிப்படங்களும் மெய்சிலிர்க்கச் செய்தன. கட்டுமான வரைபடங்கள் & வடிவியல் நுணுக்கங்களுடன், அவை விரிவாகப் பேசின!
ஒழுங்குற அமைக்கப்பட்ட பிரதான பிரார்த்தனைக் கூடம், போதுமான அறைகள், நிமிர்ந்த தூபிகள் (மினாராக்கள்), வசதியான சுத்தம் (உளூ) செய்யும் இடங்கள், பெண்களுக்கான தனி இட வசதி, ‘பெரிய-அளவு காளான் குடைகளைப்’ போன்று காட்சிதரும் குவிமாடங்கள், விசாலமான நடைபாதைகள் & மரங்களுக்கான இடங்கள் என நேர்த்தியான வடிவமைப்பில் – ஒன்றோடு மற்றொன்று போட்டிபோட்டுக் கொண்டிருந்தன.
சிறப்புப் பிரிவு!
இஸ்லாத்தின் இரு முக்கிய பள்ளிவாயில்களுக்கான தனிக் காட்சிப்பிரிவு ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. கண்காட்சியின் முத்தாய்ப்பாக அமைந்த அதில், புனித மஸ்ஜிதுல் ஹராம் & மஸ்ஜிதுன் நபவியின் முந்தைய தோற்றங்களையும், அண்மை விரிவாக்கங்களையும் பிரதிபலிக்கும் ஒளிப்படங்கள், அப்பள்ளிவாயில் வளாகங்களின் சிறிய-அளவு மாதிரி அமைப்புகள் (miniature models) & ஜம் ஜம் கிணற்றின் மாதிரி ஆகியன இடம்பெற்றிருந்தன.
இந்த சிறப்புப் பிரிவு, புனித மக்கா நகரில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தையே (Exhibition of the Two Holy Mosque Architecture Museum) எனக்கு நினைவுப்படுத்தியது. அகன்று விரிந்த அக்கூடத்தின் குறுகிய வடிவமாகவே இதனைக் கண்டேன்.
நிகழ்கால படங்களுக்குச் சமமாக, முந்தைய கால ஒளிப்படங்களும் தரமான அச்சில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றோடு, இறை இல்லம் புனித கஃபாவின் மேல் போர்த்தப்படும் கிஸ்வா துணியை உருவாக்கும் செய்முறை விளக்கமும் வழங்கப்பட்டது.
கிஸ்வா துணியைப் பற்றி கூடுதலாக அறிந்துக்கொண்டேன். 670 கிலோ பட்டுத் துணியால் ஆயத்தமாக்கப்படுகிறது. அதன் பூத்தையல் (embroidery) மாத்திரம் 150 கிலோ தங்க இழைகளால் ஆனது. கைகளினால் மட்டுமே முன்னர் வடிவமைக்கப்பட்டு வந்த அதன் திருக்குர்ஆன் வசனங்கள், இன்று கணினியின் துணையினைக் கொண்டு துரிதமாக உருவாக்கப்படுகிறது.
ஒருங்கிணைந்த கூடமே பள்ளிவாயில்!
கண்காட்சியைத் தொடர்ந்து, கருத்தரங்கு நடைபெற்றது. அதில், பல்வேறு தேசங்களைச் சார்ந்த பள்ளிவாயில் கட்டுமான வல்லுநர்களின் உரைகளும் கலந்துரையாடல்களும் முக்கியத்துவம் பெற்றிருந்தன.
‘பள்ளிவாயில் என்பது ஒரு வழிபாட்டுத்தலம் மாத்திரம் அல்ல; அது ஓர் ஒருங்கிணைந்த சமுதாயக் கூடம்,’ எனும் அடிப்படைப் புரிதலை வலியுறுத்தியதோடு - அந்த அரங்கு துவங்கிற்று!
தொழுமிடம் எனும் ஒற்றை வார்த்தைக்குள் அடங்குவதல்ல பள்ளிவாயில்! இந்த கூற்றானது, மஸ்ஜித்துன் நபவி உருவான காலத்தில் இருந்தே தொடங்கியது.
அன்சாரிகளின் சமூக மையமாகவும், பல இக்கட்டான சூழல்களில் முக்கிய முடிவுகளை கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிறப்பித்த அரசியல் மையமாகவும், நற்கல்வியை வழங்கிய திண்ணைப் பல்கலைக்கழகமாகவும், பரிவர்த்தனைகள் நடத்தப்பட்ட பொருளாதார மையமாகவும், குடும்பங்களில் நிகழும் குழப்பங்களுக்கு தீர்வு கண்ட நீதிமன்றமாகவும் & வறியவர்களுக்கான தொண்டுகளை வழங்கும் சேவை மையமாகவும், அப்புனித பள்ளிவாயில் விளங்கியது.
வழமையான இன்ன பிற கட்டிடங்களை வடிவமைப்பதைப் போன்று, பள்ளிவாயில் எனும் ஓர் ஒருங்கிணைந்த கூடத்தின் கட்டிடவியலை – இலகுவான ஒன்றாக கருதிடல் கூடாது எனும் ஒழுங்கு, அக்கருத்தரங்கில் எனக்கு புலப்பட்ட இரண்டாவது படிப்பினை.
வரலாறு, பண்பாட்டு மரபுகள், தோன்றிய காலம், அமைவிடம் & மக்களின் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைக் கொண்டே, ஓர் பள்ளிவாயிலின் கட்டிடவியல் வடிவமைப்பை - நாம் புரிந்துகொள்ள முடிகிறது. தமிழகத்தின் பண்டைய பள்ளிவாயில்கள் திராவிட கட்டுமான வடிவமைப்பைக் கொண்டுள்ளமையே, நம் விழிகளின் எதிரேயுள்ள எடுத்துக்காட்டாகும்.
இதனை நான் எழுதுகையில், வரலாற்று ஆர்வலர் கோம்பை அன்வரின் யாதும் ஆவணப்படமும், அது அழகுற விளக்கும் மேற்கோள்களும், என் கண்களின் முன்னால் வராமல் இல்லை.
இன்றைய பன்முகத்தன்மைக் கொண்ட இந்திய சமூகங்களில், சகோதர சமூகத்தாரையும் அரவணைக்கும் இடமாகவும், மதநல்லிணக்கத்தைப் போற்றும் தளமாகவும் பள்ளிவாயில்கள் இருக்க வேண்டியதின் அவசியத்தையும், இக்கருத்தாக்கத்தின் நீட்சியாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.
அண்மையில் ஏற்பட்ட மழை-வெள்ளம் & பேரிடர் காலங்களில், நமது தமிழக பள்ளிவாயில்கள் - அனைத்து மக்களுக்குமான புகழிடமாக விளங்கியது, இத்தாற்பரியத்தை வலுப்படுத்தும் விதமாக உள்ளது.
ஆய்வுகளும் அறிக்கைகளும்...
சில அடிப்படை தகவல்களோடு, ஆழமான துறை-சார்ந்த செய்திகள் பலவும், அக்கருத்தரங்கில் பரிமாறப்பட்டன. துனிசியா, எகிப்து, அமீரகம், கத்தர் & அல்ஜீரியா போன்ற நாடுகளிலும் & சஊதி அரபிய்யாவின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்திருக்கும் பள்ளிவாயில்களின் தோற்றங்கள், வடிவமைப்பு & தன்மைகள் குறித்தும்; அவற்றை மேம்படுத்துவதற்கான வழிகள் & எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
மரியோ ரோஸ்ஸி கட்டிடக்கலை (Mario Rossi Architeture) குறித்து, ஓர் அறிக்கை விரிவாக விளக்கியது. மேற்கத்திய நாகரிகத்திற்கு எகிப்தின் நுழைவாயிலாக விளங்கிய அலெக்சாந்திரியா (Alexandria) நகரில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் - மம்லூக் (Mamluk) & மேற்கத்திய பாணிகளை இணைத்து, இத்தாலிய கட்டிட கலைஞர் மரியோ ரோஸ்ஸி வடிவமைத்த பள்ளிவாயில்கள், இன்றளவும் இஸ்லாமிய உலகில் பெரிதாகப் பேசப்படுகின்றன. ‘அபு அல்-அப்பாஸ் அல் முர்ஸி பள்ளிவாயில்’, இக்கட்டிடவியல் தந்த ஓர் ஒப்பற்ற பரிசாகும்.
வறண்ட பாலை நிலத்தில் இருக்கும் பள்ளிவாயில்களின் தன்மைகள், வரலாற்றுப் புகழ்பெற்ற பண்டைய பள்ளிவாயில்களின் புனரமைப்பு & மறுசீரமைப்பு, புதிய தொழில்நுட்பத்தில் மணல் கட்டுமானங்கள், கணினியின் மூலம் கட்டமைப்பின் அளவீடு, நெரிசல் மிக்க நகரப் பகுதிகளிலுள்ள பள்ளிவாயில்களின் மேம்பாட்டுக்கான வழிகள், இன்றைய பள்ளிவாயில்களின் மீது நவீன கட்டிடவியலின் தாக்கம், நிலைத்தன்மை மதிப்பீடு, நீர் மேலாண்மை & பள்ளிவாயில்களின் தட்பவெட்ப சூழலியல் என பல்வேறு தலைப்புகளில் ஆய்வறிக்கைகளும் கருத்தியல் ஆக்கங்களும் பரிமாறப்பட்டன.
தூபிகளை குளிரச் செய்வதின் மூலம் (cooling of minaret), ஒட்டுமொத்த பள்ளிவாயிலையும் குளிர்ந்த நிலையில் வைக்கலாம் என ஓர் ஆய்வறிக்கை விளக்கியது. ‘நீராவியினால் உண்டாகும் குளிர்ச்சியானது’ (evaporative cooling), இயற்கைச் சூழலின் தாக்கத்தை வெகுவாக குறைக்கிறது. இந்த தொழில்நுட்பத்தில், காற்றுப் பிடிப்பான் & நுண் துளைகளுள்ள பீங்கான் பொருட்களை (wind catcher & porous ceramic materials) தூபிகளில் பயன்படுத்துகின்றனர்.
மற்றொரு அறிக்கையில், உளூ செய்த பின்னர் வெளியேறும் தண்ணீரை, நவீன பொறியியல் நுட்பத்தின் மூலம் சுத்திகரித்து - மறுசுழற்சி முறையில் பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
ஒலியும்... ஒளியும்...
கட்டுமானச் செவிப்புலனியல் (building acoustics) துறைக்கு, குவிமாடம் & மிஹ்ராபின் வடிவியல் (Geometry of Dome and Mihrab) பெரும் பங்காற்றுகின்றன. இவை, சீரான ஒலியை கட்டிடம் முழுவதும் பரப்புகின்றன.
பல்வேறு இஸ்லாமிய ஆட்சிக்காலங்களில், இவற்றின் வடிவமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் & பரிணாம வளர்ச்சி குறித்து மற்றொரு ஆய்வறிக்கை ஆழமாக விவாதித்தது; எனினும், இத்துறையில் பிரசித்திப் பெற்ற ஓர் முக்கிய பள்ளிவாயில் குறித்து, வல்லுநர்கள் எவரும் பேசியதாக எனக்கு தெரியவில்லை (வல்லோனுக்கே வெளிச்சம்!).
இந்தியாவின் ஒரு தொன்மையான பள்ளிவாயில், ஒலியியல் துறையில் முன்மாதிரியாக விளங்கியது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த - ஆங்கில கட்டிடவியலாளர் ‘கிரஹாம் பிக்போர்ட்’ (Graham Pickford), “Historic Structures of Oudh” எனும் தனது நூலில், அப்பள்ளிவாயிலின் ஒலியியல் சிறப்பினை இவ்வாறு கூறுகிறார்:
“மஸ்ஜிதின் மிஹ்ராபிலிருந்து பேசப்படும் முணுமுணுப்பை, 200 அடி தள்ளியுள்ள அதன் அடுத்த முனையில் தெளிவாக கேட்க முடியும். இத்தகைய ஒலியியல் கட்டமைப்பானது, பதினாறாம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு பள்ளிவாயிலுக்கு, மிகவும் மேம்பட்ட ஒன்றாகவே கருதப்படுகிறது. இந்த அமைப்பில் ஒலியின் தனித்துவமான நிலைப்பாடு, நம்மை வியக்கச் செய்கிறது.”
அவத் (Oudh or Awadh) என்பது முந்தைய உத்திர பிரதேசத்தினை உள்ளடக்கிய ஓர் பகுதியாகும்! இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தகர்க்கப்பட்ட பாபர் பள்ளிவாயிலை குறித்தே - அவர் இவ்வாறு சிலாகிக்கிறார்!
பள்ளிவாயில்களின் கட்டுமானம் குறித்து - பன்னாட்டு வல்லுநர்கள் ஒன்றுகூடி விவாதித்த அதே சமயம் (5-7 டிசம்பர்), இடிக்கப்பட்ட பாபர் பள்ளிவாயிலை என் மனம் நினைவுகூர்ந்தது.
ஒலியியலைப் போல, ஒளியியல் குறித்த பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளும் அக்கருத்தரங்கில் பகிரப்பட்டன. பள்ளிவாயில்களைப் பொருத்தமட்டில், சீரான ஒளியை கட்டிடம் முழுவதும் பரப்புதல் என்னும் நிலையோடு - ஒளியியல் துறையின் பங்கு முற்றுப்பெறுவதில்லை; மாறாக, அது ஓர் விசாலமான அழகியல் கோட்பாடாகவே பயன்படுத்தப்படுகிறது! மத்திய கிழக்கு & மேற்கு ஆஃப்ரிக்காவின் பள்ளிவாயில்கள் பலவும், இக்கூற்றுக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றன.
இதிலும், ஓர் முக்கிய பள்ளிவாயில் குறித்து - அவர்கள் விவாதித்ததாக தெரியவில்லை (அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்).
ஈரான் நாட்டின் ஷிராஸ் நகரில் உள்ள ‘மஸ்ஜித் நசீர் அல்-முல்க்’ தான் அந்த பள்ளிவாயில்! இணையத்தில் கண்டெடுத்த அதன் வசீகரிக்கும் ஒளிப்படங்களைக் காண்கையில், ‘பல்வண்ணக் காட்சிக் கருவியினுள் (kaleidoscope)’ பிரவேசிக்கும் குழந்தையாகவே, நம் மனம் மாறுகிறது!
ஷிராஸ் நகரின் பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பள்ளிவாயிலைப் போன்று - ஒளியியல் துறையில் சிறப்புப் பெற்றிருக்கவில்லை என்றாலும், தம்மாம் நகரின் வானூர்தி நிலையத்தில் அமைந்திருக்கும் பிரதான பள்ளிவாயில், இதற்கு ஓர் துணை-எடுத்துக்காட்டாகவே எனக்கு தோன்றுகிறது! அதன் அழகிய சித்திரக் கண்ணாடி வடிவங்கள், வண்ணப்பூக்களினால் ஆன மகுடங்களைப் போன்று - மரக் கதவுகளின் தலைகளை அலங்கரிக்கின்றன.
எது நவீனம்?
உடலைச் சூடாக்கி சுற்றுப்புறத்தை வெப்பமாக்கும் குளிரூட்டிகளைப் பொருத்துவதும், குளுமையான மண் தரைகளை அகற்றி – குதிகால் வலியினைத் தரும் பகட்டான பளிங்கு கற்களை பதிப்பதையும் தான், பள்ளிவாயில்களின் நவீன வடிவமாக - இதுகாலம் வரை நான் கண்டு வந்தேன்.
இந்நிகழ்வானது எனது இப்பார்வையை சுக்குநூறாகத் தகர்ந்தெரிந்து விட்டது.
தமிழகத்தின் மூத்த இஸ்லாமிய குடியிருப்புகளில் ஒன்று, நமது காயல்பதி! தெருவுக்கு பத்து பொறியாளர்களைக் கொண்ட நமதூரில், பள்ளிவாயில் கட்டிடவியல் குறித்த ஆர்வம் இன்று எத்தகையதாக இருக்கிறது?
கட்டிட அபிவிருத்தி (real estate boom) மிகுதியாக காணப்படும் இங்கு, கட்டிடவியலின் ஓர் சிறப்பு வாய்ந்த துறையின் மீதான ஆர்வமானது, இந்நகரின் தொன்மையை பாதிக்காத தொழில்நுட்ப வளர்ச்சியினை பள்ளிவாயில்களில் முன்னெடுத்து -
-- முறையான ஆற்றல் பயன்பாடு (energy utilization),
-- உளூ செய்து வெளியேறும் தண்ணீரை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தும் தொழில்நுட்பம்,
-- இயற்கை வளங்களின் சீரான பயன்பாடு (சூரிய மின் உற்பத்தி, சிக்கனமான நீர் பயன்பாடு, கழிவு மேலாண்மை & மண்பாண்டங்களையே தொடர்ந்து பயன்படுத்தும் யுக்தி)
-- பொறியியல் நுட்பங்களின் துணையோடு பள்ளிவாயில் வளாகங்களில் சமுதாயத் தோட்டங்களை வடிவமைத்தல் (அதன் மூலம் மக்களின் சுகாதாரம் பேணுதல்),
-- பழமையான பள்ளிவாயில்களை, நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு (தொன்மை மாறாத வண்ணம்) சீரமைத்தல்,
-- வட்டாரப் பள்ளிவாயில்களின் கட்டிடவியல் வடிவமைப்பிலுள்ள படிப்பினைகளை – பள்ளிக்கூட & மத்ரஸா மாணவர்களுக்கு கள-ஆய்வுக் கல்வியாக வழங்கிடல் &
-- கூடவே, அவற்றின் வரலாற்றையும் அவர்களுக்கு எளிமையாக அறிமுகப்படுத்துதல்......
என பல்வேறு விடயங்களில் தமிழகத்திற்கே முன்னுதாரணமாக அல்லவா விளங்க வேண்டும்??
அக்கருத்தரங்கின் தாக்கத்தினால், என் மனம் இக்கேள்விகளால் நிறைந்திருந்தது!
வேடிக்கைப் பார்க்கச் சென்றவன்…
கருத்தரங்கில் பகிரப்பட்ட அறிக்கைகள் பலவும், தம்மாம் நகரின் டிசம்பர் வானத்தைப் போன்று, பல்வேறுத் தோற்றங்களை தன்னகத்தே கொண்டிருந்தன. அவற்றுள் பெரும்பாலானவைகளின் பெயர்களைத் தவிர, பெரிதாக ஒன்றும் எனக்கு விளங்கவில்லை என்பதே நிதர்சனம்.
அறிவளவில், எனக்கும் இத்துறைக்குமான உறவானது, விலையுயர்ந்த பொருட்களை தன்னுள்கொண்ட ஒரு மிடுக்கான அங்காடியின் கண்ணாடி-நிலைப்பேழைக்கும், தெருவோரமாக அதனை ஏக்கத்தோடு கடந்து செல்லும் ஓர் ஏழைச் சிறுவனின் வெற்று சட்டைப் பையிக்குமான தொடர்பினைப் போன்றதே!
வேடிக்கைப் பார்க்கச் சென்ற ஒரு பாமரன், தான் பார்த்து ரசித்தவற்றை இங்கே பகிர்ந்துள்ளான் என்றே – இதனை நீங்கள் கருதிக்கொள்ளுங்கள்.
நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் - துணிப் பை, காகிதக் கோப்பு, எழுதுகோல், கையடக்க தகவல் சேமிப்புக் கருவி (pen drive), சிறு தலையணை அளவிலான ஒரு (கருத்தரங்க) புத்தகம், பீங்கான் குவளை & ஜம் ஜம் நீர்புட்டி ஆகியன அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
மனதோடு சேர்த்து கைகளும் நிறைந்தவாறு வீடு திரும்பினேன்! கட்டிடவியல் அறியாத எனக்கே, இந்நிகழ்வு பெருவிருந்தாக அமைந்ததென்றால், துறையறிவு உள்ளவர்களுக்கு கேட்கவா வேண்டும்??
டிசம்பர் 2017...
தம்மாம் நகரின் டிசம்பர் வானம் குளிர்ச்சியானது! குளிர்ந்த அந்த வானம் பல தோற்றங்களை தன்னுள் கொண்டது. இப்பாலைவன மணல்வெளியில், குளிர்காலங்களுக்கும் & முக்கிய நிகழ்வுகளுக்கும் இடையே – ஓர் இயல்பான பிணைப்பு இருக்கத்தான் செய்கிறது!
நான் சந்தித்த இரண்டாம் டிசம்பரைப் பற்றியும், அது எனக்கு அறிமுகம் செய்த இறையியல்-சார்ந்த கலைவடிங்களைப் பற்றியும், இக்கட்டுரையின் அடுத்த பாகத்தில் தருகிறேன் (இறைவன் சித்தம்)……
முக்கிய மேற்கோள்கள்
1> The First International Conference on Mosque Architecture – Dammam University
https://www.iau.edu.sa/en/The-First-International-Conference-on-Mosques-Architecture/about
2> Behind the Scenes: The First International Conference on Mosque Architecture
https://www.youtube.com/watch?v=0mqf2aj3tIA
3> Historic Structures of Oudhe: Graham Pickford
https://www.speakingtree.in/blog/babri-mosque-acoustic-and-cooling-system
4> யாதும் – கோம்பை அன்வர்
http://yaadhum.com
http://www.kayalpatnam.com/shownews.asp?id=17312
5> Mosque of Whirling Colours: A Mixture of Architecture and Art in Nasīr al-Mulk Mosque in Shiraz, Iran
http://www.muslimheritage.com/article/mosque-of-whirling-colours
6> லாரி பேக்கர் (Laurie Baker): சூழலுக்குகந்த வீடுகள்
http://www.kayalpatnam.com/shownews.asp?id=17587
http://www.kayalpatnam.com/columns.asp?id=219
http://www.lauriebaker.net
7> கிஸ்வா துணி
http://www.islamicvoice.com/february.2000/child.htm
8> Saudi Vision 2030 – Tourism
http://www.arabianbusiness.com/travel-hospitality/387984-tourism-key-to-saudi-arabias-vision-2030-plans
9> Searching for The Identity In The Mario Rossi's Architecture Of Mosques In Alexandria - ResearchGate
http://bit.ly/2EHSaVM
10> நபிமொழிகள்: ஸஹீஹ் புஹாரி (நூல் 8; பாடம் 65; எண் 450)
http://www.tamililquran.com/bukharidisp.php?start=439
குறிப்பு: மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ள அனைத்து இணையதள முகவரிகளும், இக்கட்டுரை பதிவிடப்பட்ட அன்று பயன்பாட்டில் இருந்தன. |