மதியம் பிஸ்மி சொல்லி சாப்பிடும்போதே ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு, அஸர் தொழுகைக்குப் பின் மேட்ச் பார்க்க போகணும்ங்கிற ஆவல் உள்ளத்தில் எங்கோ ஒரு மூலையில் உதிக்கும். அலமாரியைத் திறக்கும் போதெல்லாம் அயன் பண்ணி அடுக்கி வைக்கப்பட்ட சட்டைகளுக்கு அடியில் லாமினேஷன் செய்து வைத்திருக்கும் பாஸைத் தொட்டுப் பார்த்து மகிழ்வதுண்டு. கத்திரி வெயிலின் தாக்கம் சற்றே தணியும் அந்த மாலைப் பொழுதினில், நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடி கண்டு மகிழும் ஒரு மே மாத கொண்டாட்டம் அல்லது கோடைகாலத் திருவிழா என்பது நமதூரில் நாற்பத்தெட்டு ஆண்டு காலமாக நடைபெற்று வரும் மௌலானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு அகில இந்திய கால்பந்தாட்டப் போட்டி ஒன்றேதான். வெளிநாடுகளில் உள்ள காயலர்கள் பலர் இப்போட்டியைக் கண்டுகளிப்பதற்காகவே தங்களது விடுமுறையை மே மாதத்தில் தெரிவு செய்து ஊருக்கு வருகின்றனர்.
வயது வரம்புகளைத் தாண்டி அறுபது வயதுள்ள வயோதிகர் முதல் ஐந்து வயது சிறார்கள் வரை ஆர்ப்பரித்து அகமகிழும் ஒரேயொரு விளையாட்டு இக்கால்பந்தாட்டம்தான். போட்டி முடிந்து செய்கு ஹுஸைன் பள்ளியில் மஃரிப் தொழுது விட்டு திரும்பும் வேளையில், வீதிகளில் தென்படும் சில பெரிசுகள், “தம்பி இன்னைக்கு யார் விளையாடினாங்க? எத்தனை கோல் போட்டாங்க?” என ஆவலோடு கேட்டு, தான் வரமுடியாமல் போன காரணத்தைக் கூறி ஆதங்கப்படுக் கொள்வது வழக்கம். கடற்கரையில் கூடி பேசும் நண்பர்கள்கூட “ச்சே...! அநியாயமா அந்த கோலை விட்டுட்டானே? நல்ல டீம்ப்பா! இப்படி டை பிரேக்கரில் வீணா வெளியே அடிச்சுட்டானே...? ரெஃப்ரி தேவையில்லாமெ பெனால்ட்டி கிக் கொடுத்துட்டாரு! சூப்பர் கீப்பர்ப்பா அவன் மட்டும் இல்லைன்னா இன்னைக்கு தோற்றுப் போயிருப்பாங்க” இப்படி கால்பந்தாட்டத்தின் சுவரஸ்யமான நிகழ்வுகளைப் பற்றியே தான் பேசிக் கொள்வார்கள்.
நமது சுற்று வட்டார மாவட்டங்களில் கூட இதுபோன்று தொடர்ந்து அகில இந்திய அளவில் கால்பந்தாட்டப் போட்டி நடப்பதாக எனக்குத் தெரியவில்லை. அரை நூற்றாண்டுகளுக்கு முன் விளையாட்டுத் துறையில் ஆர்வமுள்ள சில பெரியவர்கள் துவங்கி வைத்த போட்டி இன்றளவும் அதன் வீரியம் குறையாமல் மூன்று தலைமுறையினரை ஒன்றுகூடச் செய்து வருவது வியப்பிற்குரியதே! நமதூரைப் பொருத்த வரை, காலங்காலமாக கால்பந்தாட்டத்தின் மீதுள்ள ஆர்வம் கிஞ்சிற்றும் குறைந்து விடவில்லை என்பதை, கிரிக்கெட் விளையாட்டின் மோகமும், வெறியும் அதில் அநேக ஆங்கில சொற்கள் கலந்திருப்பதால் அதை அறிந்து கொண்டவனே புத்திசாலி எனும் மனோபாவமும் சிறியவர், பெரியவர் மனதில் ஆட்கொண்டு ஆட்டிப்படைத்து வரும் இக்காலத்தில் கூட இக்கால்பந்து விளையாட்டைக் காண வரும் ரசிகர்களின் எண்ணிக்கையை வைத்தே சொல்லி விடலாம். காலரியில் அமர்ந்து கைகளை உயர்த்தி ஆரவாரம் செய்யும் அசத்தலான நிகழ்வுகளைச் சொல்வதற்கு முன் இப்போட்டியை ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தினர் எப்படி நடத்தி வருகின்றனர் என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.
1958ஆம் ஆண்டு துவக்கம் முதல் அதைத் தொடர்ந்து இன்றும் கூட இந்தியாவின் தலைசிறந்த அணிகள் இந்த மைதானத்தில் விளையாடியிருக்கின்றன. வட இந்தியாவிலிருந்து கோஷியார்பூர், பஞ்சாப் போலீஸ், ஜலந்தர், உத்திரபிரதேசம் மிலிட்டரி டீமான மீரட், மஹாரஷ்ட்ரா நாசிக், அகமதாபாத், மற்றும் தென்னிந்தியாவின் முன்னணியிலுள்ள கேரளாவின் டைட்டானியம், கெல்ட்ரான், திருவனந்தபுரம், கொச்சின், யுனிவர்ஸல் காலிகட், ரோடியர் மில்ஸ் பாண்டிசேரி, பெங்களூருவிலிருந்து MEG, IGM, EME, BEML, கோலார் மேலும் கோவா, ஹைதராபாத், விசாகப்பட்டினம் அட்லி சூரிபாபு மெமோரியல் க்ளப், மற்றும் தமிழ்நாட்டிலிருந்து மெஜுராகோட்ஸ், திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை, தூத்துக்குடி போர்ட்டரஸ், கோவை டெக்ஸ்டூல்ஸ், லெட்சுமி மில்ஸ், நேசமணி, சென்னை கஸ்டம்ஸ், தமிழ்நாடு போலீஸ், என பல அணிகளை அடுக்கிக் கொண்டே போலாம்.
பள்ளிக்கூட விடுமுறை வரும் மே மாதத்தில் துவங்க இருக்கும் போட்டிக்கான செயல்பாடுகள் பிப்ரவரி மாதத்திலிருந்தே ஆரம்பித்து விடும். அகில இந்திய அளவிலான அணிகளைத் தொடர்பு கொண்டு போட்டியில் கலந்து கொள்ள அவர்கள்தம் விருப்பத்தைக் கேட்டறிந்து, மாவட்ட கால்பந்து கழகத்திற்கு மனு அளித்து, அது மாநில கால்பந்து கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் முறையான அனுமதி கிடைத்தவுடன் அதன் படிவத்தையும், இரயில்வே கன்செஷன் படிவத்தையும், போட்டிக்கான விதிமுறைகளையும், கலந்துகொள்ள விருப்பமுள்ள அணிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். அதன் பின்னர் போட்டிகள் ஒருங்கிணைக்கப்பட்டு நான்கு பிரிவுகளாக குழு அமைக்கப்பட்டு, போட்டிகளை நடத்துகின்றனர். அதில் கால் இறுதிக்குத் ததியான அணிகள், அரையிறுதிக்குத் தகுதியான அணிகள் என மோதி, அதில் வென்ற அணிகள் இறுதிப் போட்டிக்குத் தயாராகுகின்றனர். அணிகளுக்கான போக்குவரத்து செலவு, தங்குமிட வசதிகள், உணவு மற்றும் செலவுக்கான படிகள் முறையாக வழங்கப்பட்டு வருகின்றன.
சரித்திர சிறப்பு வாய்ந்த இந்த ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் பல அரசியல் தலைவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் மாநாடுகளில் கலந்து கொண்டுள்ளனர். அதில் குறிப்பாக எம்,ஜி.ஆர். ராஜிவ் காந்தி, சோனியா காந்தி, மற்றும் நடிகர் முத்துராமன் ஆகியோரைக் குறிப்பிடலாம். இறுதியில் வென்ற அணிக்கான சுழற்கோப்பை சுமார் மூன்று கிலோ எடையுள்ள பளபளக்கும் வெள்ளிக்கோப்பையை 1974-ஆம் ஆண்டு PSK பல்லாக்கு லெப்பை கம்பெனியினராலும், இரண்டாம் பரிசான ஒன்றரை கிலோ எடையிலான வெள்ளிக்கோப்பையை 1986-ஆம் ஆண்டு LKS ஜுவல்லர்ஸ் ஸ்தாபனத்தினராலும் வழங்கப்பட்டது. அரையிறுதிப் போட்டி நடக்கும்போதே அந்த வெள்ளிக் கோப்பைகளை பொலிவுறச் செய்து ரிப்பனால் அலங்கரித்து புது மணப் பெண்ணைப்போன்று அரங்கத்தில் பார்வையாளர்களுக்காக வைக்கப்படுவது வழக்கம்.
போட்டி துவங்கும் முன் ஒலிபெருக்கியில் ஒரு வகை இசை நம் காதுகளில் வந்தடையும். டட டடடைன்...டண்டைன்...டடடைன். இது பிரபல ஆங்கில இசையமைப்பாளரான பாபி டாரின் என்பவரது கம் செப்டம்பர் எனும் ஆல்பத்திலிருந்து எடுக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் ரிக்கர்ட் ப்ளேயரில் பதிவு செய்யப்பட்டு இருந்ததை இப்போது மெமரி கார்டுகள் மற்றும் சிடிகளில் பதியப்பட்டு போட்டியின் போது சுமார் நாற்பது வருடங்களாக இசைக்கப்பட்டு வருகின்றன. அதைக் கேட்டதும் மைதானத்தை நோக்கி பல்வேறு திசைகளிலிருந்தும் பார்வையாளர்கள் சாரை சாரையாக அரங்கத்திற்குள் வருவதைக் காணலாம்.
“இன்றைய போட்டிக்கான கட்டண விபரம்... விறுவிறுப்பான ஆட்டத்தின் நடுவில் என அறிவிப்பாளர்கள் சொல்லும் விதமே தனி! மைதானத்தைச் சுற்றியுள்ள வீடுகளின் மாடிகளில் பெண்டிரும், பிள்ளைகளும் குழுமியிருப்பதுமுண்டு. நான் சிறு பிள்ளையாக இருக்கும்போது கிழக்குத்திசையிலிருக்கும் பனை மரத்தில் ஏறி அமர்ந்து மகாலிங்க நாடார் என்பவர் இரண்டு மணிநேரம் சளைக்காமல் போட்டியை பார்த்து ரசிப்பார் அதைப் பார்த்து ஒரு கூட்டமே ரசிக்கும். அந்தக் காலத்தில் சிப்ஸ், கிட்கட், டயரி மில்க், லேஸ் போன்றவைகள் இல்லை! மைதானத்தில் படு ஜோராக விற்பனையாகும் தின்பண்டங்கள் சவ்வு மிட்டாய், தேங்காய் மிட்டாய், சுண்டல், வேர்க்கடலை மட்டுமே. இன்றளவும் அது விற்பனையாகி வருவது காயலின் கலாச்சாரத்தில் ஊறிய ஒன்றாகவே கருதுகின்றேன். என் நீண்ட நாள் ஆசையை சவ்வு மிட்டாய் வாங்கி தீர்த்துக் கொண்டேன்.
ஆட்ட ரசிகர்களுக்கென தனி வழக்கங்கள் உள்ளன. முதல் நாள் எந்த இடத்திலிருந்தார்களோ அதே இடம்தான் இறுதி ஆட்டம் வரை. மேல்புறம் கீழ் புறம், கீழ்த்தட்டு, நடு மற்றும் மேல் தட்டு என தமக்கென தனி இடங்களைத் தேர்வு செய்துகொள்வர். ஒரு வேளை அந்த இடம் பறிபோய் விட்டால் கூட அதை கூச்சப்படாமல் கேட்டு வாங்கி அமர்ந்து கொள்வார்கள். இன்னும் சில பெரியவர்கள் காலரிக்கு பாஸ் வாங்கியிருந்த போதிலும் வட புறத்திலுள்ள மண் தரையில் பாய் அல்லது ஜமுக்காள விரிப்புக்களில் அமர்ந்து வீட்டிலிருந்து கொண்டு வந்த தேநீர் மற்றும் தின்பண்டங்களைப் பகிர்ந்து கொண்டு ஆட்டத்தை கண்டுகளிப்பதை இன்றும் காணலாம்.
இரு அணிகளுக்கான போட்டியில் காலரியிலிருக்கும் ஒரு சாரார் ஒரு அணிக்கும் இன்னொரு சாரார் மறு அணிக்கும் ஆதரவு கோஷங்கள் எழுப்புவது வாடிக்கை. தமது அணிக்கெதிராக மஞ்சள், சிவப்பு அட்டை அல்லது ஃபவுல், ஃப்ரீ கிக் கொடுத்து விட்டால் ரெஃப்ரி அவ்வளவுதான். ரசிகர்கள் வார்த்தைகளால் அவரைக் கொட்டி திட்டித் தீர்த்து விடுவார்கள். ஒரே கோரஸாக ரெஃப்ரி ஒன் சைட், ரெஃப்ரி டவுன்.. டவுன்... என கோஷமிடுவது விளையாட்டு வீரர்களை இன்னும் உசுப்பேற்றும். வீரர்களுக்கிடையில் மோதல் ஏற்படும் போது விசில் ஊதிக் கொண்டு ஓடிச் செல்லும் ரெஃப்ரி, ஆவேசத்தோடு எழுந்து அலறும் ரசிகர்கள், பார்க்க படுசுவாரஸ்யமாகவே இருக்கும். இன்னும் சில வேளைகளில் மோசமாக விளையாடும் அணிகளின் பயிற்சியாளர் அருகில் சென்று அவரது அணியின் பெயரைச் சொல்லி இன்னைக்கு 06:40 பஸ் இருக்கு! நேரா ஊர் போய் சேர்ந்திடலாம் என வெறுபேற்றுவதும், அணியின் வீரர்களை ஐஸ்காரன், திருவல் குத்தி தலையான், பறக்கும் ஜெட்டு, என இப்படி பல பட்டப் பெயர்கள் சூட்டி அழைப்பதும், ஆட்டம் வலுவிழக்கும்போது, “என்னப்பா இவனுங்க கபடி விளையாடுறானுங்க?” என கலாய்ப்பதும், டை பிரேக் வந்தால் பந்தை அடிக்கும் முன் “உள்ளே, வெளியே” என சிறுவர்கள் ஓலமிடுவதும் ரசிக்கக் கூடியதே!
ஆட்டம் முடிந்ததும் தோற்றவர்களாக இருந்தாலும் சரி! வென்றவர்களாக இருந்தாலும் சரி! கிரவுண்டுக்குள் சப்தமிட்டுக்கொண்டு ஓடி அணி வீரர்களுடன் கை குலுக்குவதும், அவர்களைத் தொட்டுப் பார்த்து ரசிப்பதும் வேடிக்கையே! முன்பெல்லாம் பால் பாய்ஸ் இசைக்கு ஏற்ப வரிசையாக மைதானத்தில் இறங்க, அவர்களைத் தொடர்ந்து ஆட்ட வீரர்கள் களத்தில் இறங்கி பார்வையாளர்களை நோக்கி சல்யூட் அடிப்பது, கை அசைப்பது என களைகட்டும். போட்டி துவங்கும் முன் அணி வீரர்கள் வெவ்வேறு நிறத்திலான உடைகளில் உடற்பயிற்ச்சி செய்வதை உற்று நோக்கும் கூட்டம் அவர்களின் சாகசத்தைப் பார்த்து இவர்கள் வெல்வார்கள் இவர்கள் தோற்பார்கள் என மிகத் துல்லியமாக வெற்றி தோல்வியை நிச்சயிப்பார்கள்.
இடைவேளையின்போது சிட்டெனப் பறக்கும் சிறார்கள் தமது இரண்டு கைகளிலும் தின்பண்டங்களை அள்ளிக்கொண்டு வருவார்கள். காரணம் ஆட்டம் நடக்கும்போது வாங்கச் சென்றால் இடம் போய் விடக்கூடும் எனும் அச்சம் அவர்களுக்கு உண்டு. கால் இறுதி, அரையிறுதி, மற்றும் இறுதிப் போட்டிகளில் கூட்டம் அலைமோதுவதைக் காணலாம். கடைசி நாளில் கொடி மற்றும் பேண்டு வாத்தியங்கள் மேளதாளங்கள் முழங்க கிரவுண்டைச் சுற்றி வருவது கண்கொள்ளாக் காட்சி எனலாம்.
ரசிகர்களின் தரப்பிலிருந்து ஆறுமுகநேரி உருமி மேலக்காரரை அழைத்து வந்து அவருக்கு பூமாலை போட்டு உலா வரச்செய்து கொட்டடித்தும் தமது அணி கோல் போட்டுவிட்டால் வானவெடிகள் விட்டும் தமது ஆதரவை வெளிப்படுத்தும் தீவிர ரசிகர்கள் சிலர் இன்றும் இருக்கின்றனர். ஃபைனல் அன்று இரவு பரிசு வழங்கிய பின்னர், வான வேடிக்கைகள் விண்ணை அலங்கரிக்கும். மொத்தத்தில் கால்பந்தாட்டம் என்பது காயலர்களின் இரத்த நாளங்களில் ஊறிப்போன ஒன்று என்றால் மிகையாகாது.
இன்னும் பல மறக்க முடியாத நிகழ்வுகளை எழுதிக் கொண்டு, போனால் பல பாகங்கள் எழுத வேண்டி வரும். எனவே என் மனதில் இவ்விளையாட்டுக்கான மதிப்பும், மரியாதையும், ஆர்வமும், ஆவலும், வீரியமும், வேகமும் சற்றும் குறையாமல் இருப்பதால்தான் என் எண்ணங்களின் வெளிப்பாட்டை இக்கட்டுரை மூலம் காலத்தின் பார்வைக்கு இதோ அர்ப்பணித்து விட்டேன்.
என்னைப் போன்று ஆர்வமுள்ள அனைவரும் தங்கள் அனுபவங்களை இக்கட்டுரையின் கருத்துப் பகுதியில் பதிவு செய்தால் காயலின் கால்பந்தாட்ட ரசனை பற்றிய ஏராளமான விஷயங்களை நாம் அறிந்து கொள்ளலாம். எனவே இந்தக் கட்டுரைக் கால்பந்தாட்டத்திற்கு இப்போதைக்கு லாங் விசில் ஊதி விடை பெறுகின்றேன்.
|