Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர... posted byMohamed Buhary (Chennai)[29 October 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 12471
நகர்மன்றத்திற்குத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதர் எஸ். எம். முகைதீன் எனும் மும்பை மைதீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
கடந்த ஒரு மாத காலமாக நடந்துவந்த நம் நகர்மன்றத் தேர்தல் திருவிழா இன்றுடன் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
இன்ன நபர் துணைத் தலைவர் ஆவார் என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டவர், நாகரிகம் கருதி ஒதுங்கிக்கொண்டார். வல்லோன் அல்லாஹ்வின் எண்ணப்படியும் திட்டப்படியும் எல்லாம் நடந்தேறியுள்ளது.
இந்தச் சந்தர்ப்பத்தில் துணைத் தலைவர் அவர்களுக்காகச் சில கருத்துகளை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
துணைத் தலைவர் சகோதரர் முகைதீன் அவர்களே...!
முன்னெப்பேதும் இல்லாத அளவுக்கு இப்போதெல்லாம் மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் உள்ளனர். பொதுமக்களாகிய நாங்கள் இப்போது எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்பு ஒளிந்துள்ளது என்பதைத் தெளிவாக கண்டறிந்து வைத்துள்ளோம். தீங்கிழைக்கும் பாம்பை யாரும் விட்டுவைக்க மாட்டார்கள்.
பொதுவாக, உள்ளுர் மற்றும் வெளியூர், வெளிநாடுகளில் வசிக்கும் நம் காயல் நகர மக்கள் உள்ளூரில் நடக்கின்ற ஒவ்வொன்றையும் மிகவும் நுணுக்கமாகக் கவனித்துவருகின்றனர். அதை நடந்து முடிந்த நகர்மன்றத் தேர்தல் முடிவுகளின் வாயிலாக அறிந்திருப்பீர்கள்.
நீங்கள் இப்போது காயல் நகர்மன்றத்திற்குத் துணைத் தலைவர். மக்கள் பணியாற்றுவதற்காகவே நீங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளீர்கள். ‘துணைத் தலைவர்’ எனும் பதவி உங்களை அலங்கரித்தாலும், தனிநபர் சார்ந்தோ அமைப்பு சார்ந்தோ உங்கள் நடவடிக்கைகள் நகர்மன்றத்தில் பிரதிபலிக்காது என நாங்கள் நம்புகிறோம்.
பொதுவாக, இந்தியாவில் ஆட்சிக்கு யார் வர வேண்டும், எந்தக் கட்சி ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதை கட்சிகள் முடிவு செய்வதில்லை. அதிகாரவர்க்கம்தான் அதைத் தீர்மானிக்கிறது. இந்தியாவில் ஆட்சி புரிவது காங்கிரஸோ, பா.ஜ.க.வோ அல்ல. மாறாக, பணம் படைத்த முதலைகளான டாட்டா, ரிலையன்ஸ் அம்பானி குரூப், லட்சுமி மிட்டல்… போன்றவர்களே. இதுதான் நாட்டிலும், மாநிலத்திலும் உள்ள நிலை.
இதன்மூலம், நாட்டின் கனிம வளங்கள், சுரங்கங்களை சுரண்டி அந்நிய நாடுகளுக்கு விற்றுவிடுகின்றனர். இதை சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் சமூக சேவகி அருந்ததி ராய் குறிப்பிட்டார்.
தற்போது இந்நிலைதான் நகரங்களிலும், கிராமங்களிலும் நடைபெற்றுவருகிறது. இதிலிருந்து நமதூர் விதிவிலக்கு எனக் குறிப்பிடலாமா எனத் தெரியவில்லை.
நாட்டு நடப்பு என்னவோ அதுதான் நகரிலும் நடப்பு என்றாகிவிடக் கூடாது. நகர்மன்றத் தலைவர் தேர்தலின்போது நடைபெற்ற கசப்பான நிகழ்வுகளிலிருந்து நிறைய பாடம் கற்க வேண்டியுள்ளது. கையூட்டளிக்கும் பணக்கார முதலாளிகளை இனம் கண்டு அவர்களை மக்கள் மன்றத்தில் நிறுத்த வேண்டும். கையூட்டு (இலஞ்சம்) வாங்குவதும் ஹராம்; கொடுப்பது ஹராம். ஹராமான பொருள் உடலில் ஒட்டாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கடந்த ஐந்தாண்டுகால நகர்மன்றத்தில் இலஞ்சம் தலைவிரித்தாடியுள்ளதை, முன்னாள் வார்ட் உறுப்பினர் ஐயா, திருத்துவராஜ் தெளிவாகக் கூறியுள்ளார். தற்போதுள்ள நகர்மன்றம் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
கடந்த முறை நகர்மன்ற துணைத் தலைவராகச் செயல்பட்டவர் பல இலட்சம் காசோலை மோசடியில் சிக்கிக் கைதானார். இவற்றிலிருந்தும் படிப்பினை பெற்று தூய்மையான நேர்மையான நிர்வாக முறை நகர்மன்றத்தில் நடைபெற வேண்டும்.
அண்மையில் நகர்மன்றத் தலைவர் அண்மையில் துளிர் கேளரங்கில் பேசிய கருத்துகளுக்கு என் கருத்தை நான் பதிவு செய்துள்ளேன் (12258). அதை நீங்களும் படியுங்கள்.
வாழ்வில் பதவி, புகழ், மரியாதை எல்லாம் வந்தடையும்போது, அவற்றை முறையாகவும் சரியாகவும் பயன்படுத்தினால் அது முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்லும். தவறாக அது பிரயோகிக்கப்பட்டால் இன்றைய அரபுலகில் ஆட்சியாளர்கள் சந்திக்கும் நெருக்கடிகளைத் தான் பரிசாக பெற வேண்டும்.
படிப்பினைகளிலிருந்து பாடம் கற்போம்!
நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே. உங்கள் பொறுப்புகள் குறித்து நாளை மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள். (ஹதீஸ்)
திறம்பட நகர்மன்றப் பணிகள் ஆற்றிட வாழ்த்துகளுடன்…
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross