Re:...ஒரு சகாப்தத்தின் முடிவு.. posted bymackie noohuthambi (chennai)[16 June 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 35360
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
உழைப்பால் உயர்ந்தவர். உழைப்பின் உயர்வை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்தவர். தொழில் அதிபராக அவர்கள் ஆவதற்கு செய்த தியாகங்கள் சிந்திய வியர்வைகள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் எல்லாம் வியப்புக்கு உரியவை.
MARAICAR INDUSTRIES - அது ஒரு சரித்திர பேழை.அதில் இருக்கும் செய்திகள், அது நமக்கு கற்று தரும் பாடங்கள் அதிகம். யாரிடமும் யாரும் கையேந்தி நிற்கக் கூடாது, சுயமாக உழைத்து முன்னேற வேண்டும். அப்படி முன்னேற துடிப்பவர்களுக்கு உதவிக் கரம் நீட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் அந்த நிறுவனம் அமைக்கப்பட்டு இன்றும் அந்த நிறுவனம் அவர்கள் பெயர் சொல்லிக் கொண்டிருக்கிறது.அவர்கள் நிறைவாக வாழ்ந்து இந்த சமுதாயத்துக்கு ஆற்ற வேண்டிய பணிகளையும் தொய்வுறாமல் செய்து ஒரு முழு வாழ்க்கை வாழ்ந்து நம்மிடம் இருந்து விடை பெற்று சென்றிருக்கிறார்கள்.
"பாதுல் அஸ்ஹாப் ஹாஜி" என்று எத்தனை பேர் தங்களுக்கு அந்த பேரை சூட்டிக் கொண்டாலும், நமக்கு இவர்களைத்தான் நினைக்க தோன்றும். முஸ்லிம் லீக் இயக்கத்தின் தலைவராக இருந்தாலும் மற்ற இயக்கங்களுடன் அவர்களுக்கு விதர்ப்பம் இருந்ததில்லை. ஊரில் நடக்கும் எல்லா நல்ல காரியத்துக்கும் தலைமை தாங்க சொன்னாலும் என்னால் முடியவில்லை என்று சோர்ந்து சொல்லிவிடாமல் தன் தள்ளாத வயதிலும் அங்கு ஆஜராகி விடுவார்கள். அது அவர்களின் "உன்னால் முடியும் தம்பி" என்று இளைஞர்களை உசுப்பி விடும் கிரியா உக்கியாக - CATALYST டாக இருந்தது. ஒரு அற்புதமான TONIC .ஹாஜியார் அவர்களே துண்டை தூக்கி போட்டு விட்டு வந்து விட்டார்களே, நாம் போவதற்கு சுனங்கலாமா என்று நம்மை எழுப்பி விடும்.
"காலம் தவறாமை ரயிலுக்கும் பேருந்துக்கும் மட்டுமல்ல -நமக்கும்தான்" என்ற உண்மையை ஒரு காலக் கண்ணாடியாக சரியான நேரம்காட்டும் கைக் கடிகாரமாக - வழிகாட்டியாக அவர்கள் இருந்து நமக்கு ஊக்கமூட்டினார்கள்..
அவர்கள் அணிந்து வரும் வெண்ணிற ஆடை - அவர்களின் அங்கவஸ்திரம் - அவர்கள் தலையை மறைக்கும் கிரீடம் - அவர்களின் ஆஜானுபாகுவான நடை -இவை எல்லாம் அவர்களை ஒரு வித்தியாசமான மனிதராக நம்மிடையே வேறுபடுத்திக் காட்டும் என்பதை அவர்களது அன்றாட வாழ்க்கை நடைமுறைகளை அவதானித்தவர்களுக்கு நன்கு விளங்கும்.
அவர்கள் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு. அவர்கள் விட்டு சென்றுள்ள வாரிசுகள் அவர்களின் மக்கள் மருமக்கள் எல்லோருமே போற்றுதற்கு உரியவர்கள். "பாதுல் அஸ்ஹபு ஹாஜி அவர்களின் சந்ததிகள் நாங்கள்" என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அல்ஹம்து லில்லாஹ்.
மர்ஹூம் அவர்களின் பாவங்களை அல்லாஹ் பொறுத்தருள்வானாக. அவர்களின் நல அமல்களை பொருந்திக் கொள்வானாக. அவர்களின் மண்ணறையை வெளிச்சமாக்கி வைப்பானாக அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக.அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் எல்லோருக்கும் அல்லாஹ் நல்ல பொறுமையை கொடுத்து அருள் புரிவானாக. ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross