93 வயது இளைஞர்... posted byS.K.Salih (Kayalpatnam)[17 June 2014] IP: 59.*.*.* India | Comment Reference Number: 35406
அப்பா அவர்களுக்கு வயதுதான் 93 ஆகியுள்ளதே தவிர, அதற்காக அவர்களை, “தள்ளாத வயதினர்” குழுமத்தில் சேர்த்து விட இயலாது.
மாஷாஅல்லாஹ்! பேச்சிலும், செயலிலும் அத்தனை உற்சாகத்தை எப்போதும் காணலாம். அவர்களுடன் நின்று சிறிது நேரம் பேசினால் போதும்! நாமெல்லாம் நம்மை இளைஞர் என்று சொல்வதற்கு வெட்கம்தான் பட வேண்டும்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் என்னை நான் இணைத்துக்கொண்ட 2006ஆம் ஆண்டு காலகட்டத்தில், அப்பா அவர்கள்தான் அதன் நகர தலைவர். அவர்களின் மேலான தலைமை மற்றும் வழிகாட்டலில் பணியாற்றியதை பெரும் பேறாகக் கருதுகிறேன்.
அழைத்து, அழைத்துப் பேசி உற்சாகமூட்டியவர். இத்தனை வயதிலும் ஒவ்வொருவரின் குடும்ப விவரங்கள், தனிநபர் பிரச்சினைகள் உட்பட அனைத்தையும் நன்கறிந்து வைத்திருந்தவர்கள்.
நல்ல காரியங்களுக்கு அள்ளிக்கொடுத்தவர்கள்.
தன் குடும்பத்தாருக்கு மட்டுமின்றி, நமதூரின் பல நூற்றுக்கணக்கான குடும்பத்தினருக்கும் குடும்பத் தலைவர் போலவே இருந்து வழிகாட்டியவர்கள்.
நகரில் நிலவிய கருத்து வேறுபாடு காலகட்டங்களின்போது, இணக்கத்தை ஏற்படுத்திட அனைத்து வழிகளிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் களப்பணியாற்றியவர்கள்.
காந்தி தாத்தா பிறந்த காலத்தில் பிறந்தவர்கள். நான்கு தலைமுறைகளைக் கண்டவர்கள்.
நாட்டின் பெரும்பரும் தலைவர்களுடன் நேரில் உரையாடியவர்கள்.
நம் நகரில், இவர்களைத் தவிர்த்து ஒரு பொதுப்பணி இல்லை என்று கூறுமளவுக்கு அனைத்திலும் அங்கம் வகித்தவர்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் நமதூர் தாயிம்பள்ளி அருகில் அப்பா அவர்கள் பயணித்த கார் பெரும் விபத்தைச் சந்தித்தது. அந்த விபத்து வாகன படத்தைப் பார்க்கும் யாரும் “இதில் யாரும் பிழைத்திருக்க மாட்டார்கள்” என்றுதான் கருதியிருப்பர். ஆனால், அல்லாஹ் அவர்களை - காலில் காயத்துடன் காப்பாற்றினான்.
இந்த சகாப்தம் எப்படியும் செஞ்சுரி அடித்துவிடும் என்ற எனது மனக்கனவு தகர்ந்துவிட்டது.
ஆனாலும் ஒரு அல்ப சந்தோஷம்... அப்பா அவர்கள் நோயில் படுத்து வாழ்வை முடிக்கவில்லை...
வயது முதிர்ந்த ஒரு குடும்பத் தலைவரை எப்படி கவனித்துக்கொள்வது என்பதற்கு அப்பா அவர்களின் குடும்பத்தினர் மிகப்பெரிய எடுத்துக்காட்டு. தமக்கிருக்கும் பல்வேறு பணிகளுக்கிடையிலும் கூட - அவர்கள் அப்பாவைக் கவனிக்க தனியாக பணியாட்களை வைக்காமல், மகன்களும், பேரன்களும், கொள்ளுப் பேரன்களும், வீட்டில் மகளிரும் என பார்த்துப் பார்த்துக் கவனித்துள்ளதை நான் நன்கறிவேன்.
கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அப்பா அவர்களின் மண்ணறையை சுவனப் பூஞ்சோலையாக்கி அருள்வானாக... அவர்கள்தம் வாழ்வில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப் பிழைகளைப் பொறுத்தருளி, அவர்களின் நற்கருமங்கள் அனைத்தையும் அவனது அளப்பெருங்கிருபையால் கபூல் செய்து, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் யாவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக...
அப்பா அவர்களின் நினைவாக, அன்னாரது வாரிசுகள் நமதூரில் பரம்பரை பரம்பரையாக பெயர் சொல்லும் வகையில் - ஸதக்கத்துன் ஜாரியா எனும் நிலையான நற்கூலிகளைப் பெற்றுத் தரும் நற்காரியங்களை தங்குதடையின்றி செய்ய வல்ல நாயன் அருள் புரிவானாக, ஆமீன்.
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...
துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross