நோக்கம் நன்றாகவே உள்ளது! posted byS,K.Salih (Kayalpatnam)[19 March 2015] IP: 180.*.*.* India | Comment Reference Number: 39692
சில நாட்களுக்கு முன் ஒருநாள் கட்டுரையாளர் கடற்கரையில் எங்களுடன் அமர்ந்து கதைத்துக்கொண்டிருக்கையில் இந்த விஷயத்தைச் சொன்னார். உடன் அமர்ந்திருந்த நாங்கள் யாவரும் எமது ஒத்த - மாற்றுக் கருத்துக்களையும் அவரிடம் சொன்னோம். நிறைவில், “இதை ஒரு கட்டுரையாக எழுதுங்கள்... உங்கள் ஆதங்கம் நியாயமானது... அது பொது தளத்தில் விவாதிக்கப்பட வேண்டும்” என்று அவரிடம் நான் கேட்டுக்கொண்டதையடுத்து இக்கட்டுரை அவரால் தரப்பட்டுள்ளது.
ஸஹன் சாப்பாட்டு முறையையே அவர் குறை சொல்வதாகக் கருத முடியவில்லை. நமதூரில் ஸஹன் சாப்பாடு பரிமாறப்படும் முறையைத்தான் குறை சொல்வதாகக் கருதுகிறேன். (‘தொற்று நோய்’ போன்ற விளக்கங்களைத் தவிர்த்திருக்கலாம்.)
சிறு பிள்ளைகளை வீட்டில் சாப்பிட வைக்கும்போதே, அது ஏதாவது வேண்டாத செயலைச் செய்துவிட்டால், “வாப்பா... இப்டியெல்லாம் செஞ்சா உன்னை யாரும் ஸஹனில் சேர்க்க மாட்டாங்க...” என்று சொல்லும் பழக்கம் நம் முன்னோர்கள் நமக்குக் கற்றுத் தந்தது. ஆனால் நாம் நல்ல முன்னோராக இருந்து நம் மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதேயில்லை. ஏனெனில், நாம் அவசர உலகத்திலல்லவா வாழ்கிறோம்...?
அடுத்து, நமதூரில் அனைவருமே ஆள் பார்த்து ஸஹனில் அமர்வதாகக் கூறுகிறார். இதுகுறித்து சற்று விரிவாகக் கூறுவதே பொருத்தமாக இருக்கும்.
வெளியூர்களிலிருந்து காயல்பட்டினம் வந்து இங்கு நடைபெறும் திருமண விருந்துகளில் பங்கேற்போர் முதலில் வியப்புற்று, “அது எப்படிங்க ரெண்டு பேரு ஒரே தட்டுல சாப்பிடுறீங்க...?” என்று கேட்காமல் இருப்பதில்லை. அவர்களைப் பொருத்த வரை ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஒரே தட்டில் சாப்பிடுவதே வியப்பிற்குரிய அம்சம்தான்.
அடுத்தது, கட்டுரையாளர் கூறியிருப்பது போல, ஆள் பார்த்து ஒரே தட்டில் உட்காரும் பழக்கம் எல்லோரிடமும் இருக்கிறது என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. அதற்கு நானே நடமாடும் சாட்சி.
குறித்த நேரத்தில் உணவுக்குச் செல்ல வேண்டும். அந்த நல்ல பழக்கம் எனக்கு இன்னும் சரியாக வரவில்லை. சற்று தாமதமாகப் போகும் நான், அங்கு யாரோடு அமரச் சொன்னாலும் அமர்வேன். இது நான் மட்டுமல்ல! என்னைப் போல தாமதமாகச் செல்லும் பெரும்பாலோர் அவ்வாறே செய்வதை நான் தொடர்ந்து அவதானித்திருக்கிறேன்.
அவ்வாறு ஒருமுறை, இங்கிதம் தெரியாத ஒருவருடன் ஒரே தட்டில் என்னை அமர வைத்துவிட்டனர். நானும் பெருந்தன்மையுடன் அமர்ந்தேன். எங்கே நான் நுரையீரலை இஸ்த்தி விடுவேனோ என்று கருதிய அவர், சுமார் ஐம்பது கிராம் கொண்ட நுரையீரல் துண்டை முழூசா லபக்கிட்டார். இரண்டு நிமிடம் கூட சென்றிருக்காது. அப்படியே தட்டில் திரும்ப அதை கக்கிவிட்டார். (இப்போது சொல்லுங்கள்! எல்லோருடனும் உட்கார இயலுமா? சற்று நாகரிகம் பார்க்க வேண்டிய நிலை இருக்கத்தான் செய்கிறது.)
ஸஹனுக்கு தனக்கொரு துணையுடன் வருவோரெல்லாம் அப்படி வரக்கூடாது, அங்கங்கு யாரைக் காண்கின்றனரோ அவரோடுதான் அமர வேண்டும் என்று சட்டமா இயற்ற முடியும்?
ஒரு விருந்தில் தவிர்க்கப்பட வேண்டியவை:
(1) ப்ளாஸ்டிக் கோப்பைகள்
(2) பயன்படுத்தப்பட்ட பாய்களையே மீண்டும் பக்கம் மாற்றிப் பயன்படுத்தல். (அதற்குப் பகரமாக, டேபிள் முறையில் ஸஹன் வைக்கலாம். ஆனால், நாற்காலி வைப்பது உடல் நலனுக்கு நல்லதல்ல. ஒரு பெஞ்ச், டேபிள் வைத்து, அனைவரும் சம்மணமிட்டு அமரச் செய்யலாம். எதிரெதிர் திசைகளில் அமரச் செய்து, ஸஹன் தட்டைப் பரிமாறலாம்.
(3) அனைவருக்கும் ஸஹன் பரிமாறப்பட்ட பின், உரத்த குரலில் ‘பிஸ்மி’ சொல்லும் பழக்கம் மீண்டும் வர வேண்டும். (பல ஆண்டுகள் கழித்து, அண்மையில் என் மாமா கத்தீப் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் ஆலிம் மக்களின் திருமண விருந்து மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபில் நடைபெற்றபோது, அந்த முறை பேணப்பட்டது குறிப்பிடத்தக்கது.) இது விருந்து ஏற்பாட்டாளர்கள் கைகளில்தான் உள்ளது.
(4) பாக்கெட் தண்ணீர் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். Hygene என்ற பெயரில் நாம் கடுமையாக மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளோம் என்பதை நம்மில் பெரும்பாலோர் உணரும் வரை இதுபற்றி விரிவாகப் பேசுவதில் பயனில்லை.
(5) கறிக்கு கிண்ணம், கத்திரிக்காய்க்கு கிண்ணம், சோற்றுக்கு தட்டெல்லாம் வைக்கும் நாம், கை துடைக்க ஒரு நியூஸ் பேப்பரையாவது கிழித்துக் கொடுக்க வேண்டும்.
மொத்தத்தில், ஒரே தட்டில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறோம் என்ற ஒன்றைத் தவிர எந்த நாகரிகமும் நமதூர் விருந்தில் இல்லை என்றே நான் கூறுவேன். கட்டுரை ஆசிரியருடன் 95 சதவிகிதம் ஒத்துப் போகிறேன்.
மக்கீ நூஹுத்தம்பி மாமா கூறியுள்ளது போல, பிரச்சினைகளை மட்டும் முன்வைக்காமல், அவற்றுக்கான தீர்வுகளையும் கட்டுரை சொல்லுமானால், அது முழுமையானதாக இருக்கும். (வருங்காலங்களில் அவ்வாறு எதிர்பார்க்கலாம்.)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross