காயல்பட்டணம் கொச்சியார் தெருவைச் சார்ந்த அப்துர்ரஷீத் என்பவரின் மகன் முஹம்மத். திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்த ஹாஃபிழான இவர், உள்ளுரிலுள்ள ஒரு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறு வயதிலிருந்தே ஐந்தறிவு பிராணிகள் மீது அலாதி பிரியம் கொண்டுள்ள இவர், அவ்வப்போது கருந்தேள், பச்சைப் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களையும் தனது செல்லப்பிராணியாக வளர்த்து வருவது வழமை.
சில தினங்களுக்கு முன் தன் நண்பர்களுடன் சென்றுகொண்டிருந்த இவர், சாலையோரம் சென்றுகொண்டிருந்த ஓரடி நீளமுள்ள கட்டுவிரியன் வகை பாம்பு ஒன்றை ஷவழமை போலஷ கையில் பிடித்துள்ளார். தலையைத் திருப்பிய பாம்பு, இவரது வலது கை நடுவிரலில் கடித்துவிட்டது.
ஆபத்தை உடனடியாக உணர்ந்துகொண்ட அவரது நண்பர்கள் அவரை உடனடியாக காயல்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, தலைமை மருத்துவர் பாபநாசகுமார் தலைமையிலான மருத்துவக் குழு, அவருக்கு விஷமுறிவுக்கான தீவிர சிகிச்சையளித்தனர். ஒரு வார கால சிகிச்சைக்குப் பின் அவர் வீடு திரும்பினார்.
கடித்த பாம்பை, உயிரோடு அதே கையில் பிடித்து வந்த அவர், மருத்துவமனையில் மருத்துவர்களிடம் காண்பித்த பின்பு கீழே விட்டுள்ளார். அருகிலிருந்த நண்பர்கள் அப்பாம்பின் தலையை நசுக்கிக் கொன்று விட்டனர்.
பாம்பு கடித்த வாலிபர் பிழைத்துக் கொண்டார். வாலிபரைக் கடித்த பாம்பு பிழைக்கவில்லை...(?!) |