இன்று திரும்பும் திசையெல்லாம் `கூடங்குளம்’
இந்தியாவின் தென் கோடியில் அமைந்த கடற்கரை கிராமமான இந்த ஊர் இந்த அளவு பிரபலமடைய காரணம் இங்கு அமைக்கப்பட் டுள்ள அணுமின் நிலையம்.
`வேண்டாம்`-`வேண்டும்’ என்ற போராட்டங்களும், `ஆபத்து`-`ஆபத்தில்லை’ என்ற வாதப்- பிரதிவாதங்களும் இதில் ஈடுபட்டுள்ளவர்களிடையே பிளவை ஏற்படுத்தியுள்ளது.
இது மதரீதியாகவும் மனங்களை காயப்படுத்தி வருவது வேதனைக்குரியது.
இந்த விவாதம் முடிவுக்குக் கொண்டு வர முடியாததா? அல்லது இன்னமும் ஆர்ப்பரிக்குமா? என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும் முன் இதைப்பற்றி நாமும் கொஞ்சம் அலசுவோம்.
இந்தியாவின் தற்போதைய மின்தேவை 1 இலட்சத்து 80 ஆயிரம் மெகா வாட். ஆனால் உற்பத்தியோ 1 இலட்சத்து 34 ஆயிரம் மெகா வாட். எனவே பற்றாக்குறை 46 ஆயிரம் மெகா வாட். ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் இது இரட்டிப் பாகும்.
இன்னும் 40 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 150 கோடியைத் தாண்டும்போது அனைவருக்கும் மின்சாரம் வழங்க 7,50,000 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட வேண்டும்.
நமது நாட்டின் மின் உற்பத்தியில் 70 சதவிகி தம் அனல் மின்சாரத்திலிருந்தும், 26 சதவிகிதம் புனல் மின்சாரத்திலிருந்தும், 1.5 சதவிகிதம் காற்றாலைகள் மூலமும் 2.5 சதவிகிதம் அணு மின்சார மூலமும் கிடைக்கிறது.
அனல் மின் நிலைய உற்பத்திக்கான நிலக்கரி பற்றாக்குறை நடப்பு ஆண்டில் 14 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. சில தினங்களுக்கு முன்னால் வெளிவந்த செய்திகளின் படி கடுமையான நிலக்கரி பற்றாக்குறையால் இந்தியாவில் அனல் மின் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்படும், இந்தியா இருளில் மூழ்கும் என்ற அபாய அறிவிப்பாகும். ஏனெனில் நாட்டில் அனல் மின் நிலைய உற்பத்தி 86 ஆயிரத்து 717 மெகா வாட்டாகும்.
நாட்டில் உள்ள 86 பெரிய அனல் மின் நிலையங்கள் 44-ல் ஒரு வாரத்திற்கும் குறைவான நிலக்கரியே இருப்பில் உள்ளது. 29-ல் 4 நாட்களுக்கு மட்டுமே உள்ளது.
தெலுங்கானா போராட்டம், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் மழை என்பதால் இந்த தட்டுப்பாடு. இதனால் நாள் தோறும் பல மணி நேரம் மின் வெட்டு அமல் செய்யப்படுகிறது.
நிலக்கரி நிலை இப்படி! மின்சாரம் தயாரிப்பதற்கு தேவைப்படும் மரபு சார்ந்த ஆதாரங்களான பெட்ரோலியம், இயற்கை எரிவாயு இந்தி யாவில் பெருமளவில் இல்லை. சூரிய ஒளியின் மூலம் தாயரிக்கப்படும் மின் சாரம் உடனுக்குடன் பயன்படுத்தப்பட வேண்டும். சேமிக்க அதிக செலவாகும். காற்றாலை மின் உற்பத்தியும் பல மாதங் கள் தடைபட்டு நிற்கும். புனல் மின்சார உற்பத் தியை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் இல்லை,
எனவேதான் அணு சக்தி மூலம் மின் உற்பத்தியில் இந்தியா தடம் பதித்தது. 1958 மார்ச் 14-ல் இந்தியாவில் அணு சக்தி ஆணையம் தொடங்கப் பட்டது. தாராப்பூர், ராஜஸ்தானின் ராவட்பாட்டா, சென்னை கல்பாக்கம் ஆகிய இடங் களில் அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இவற்றுக்குத் தேவையான யுரேனியம் மற்றும் அணுவியல் சாதனங்கள் அமெரிக்கா, கனடா இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து பெறப் பட்டது.
1974-ம் ஆண்டு மே-18ம் நாள் பொக்ரான் அணு குண்டு சோதனைக்குப் பிறகு இந்த நாடுகள் அணுவியல் சாதனங்களை இந்தியா விற்கு தர மறுத்தன. அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தை ஏற்று கையெழுத்திட இந்தியாவை நிர்ப்பந்தித் தன. ஆனால் இந்தியா அணுசக்தி தொழில் நுட்பங்களில் தன்னிறைவு பெற்றது. சொந்தமாக வடிவமைத்து நிறுவப்பட்ட 12 அணுமின் நிலையங்கள் உட்பட 20 நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவை பெரும்பாலும் 220 மெகா வாட் திறன் கொண்டவையே. தாராப்பூரின் 3 மற்றும் 4-ஆவது அணு மின் உலைகள் 540 மெகா வாட் ஆகும். கல்பாக்கத்தில் 500 மெகா வாட் திறன் கொண்ட அதிவேக ஈணுலை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.
இந்தியாவிலுள்ள 20 அணுமின் நிலையங்களிலிருந்து 4780 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது மொத்த மின் உற்பத்தியில் 2.85 சதவீதமே!
சர்வதேச அணுசக்தி முகமையின் விவரப்படி உலகின் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் 529 அணுமின் நிலையங்கள் உள்ளன. இவை 3 இலட்சத்து 78 ஆயிரத்து 910 மெகா வாட் மின் சாரத்தை உற்பத்தி செய்கின்றன.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1000 மெகா வாட் திறன் கொண்ட இரண்டு அணு மின் உலைகளை அமைப்பதற்கு 1988ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா ஒப்பந்தம் செய்தது. ஆனால் அந்நாடு பல நாடுகளாக சிதறுண்டு போனதால் அது தடைப்பட்டது.
பின்னர் 1998-ம் ஆண்டு மீண்டும் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டு இரு நாடுகளும் மேற் கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஒப்பந்தம் 2001-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளன.
13 ஆயிரத்து 615 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்த அணுமின் நிலையத்திலிருந்து அடுத்த மாதம் மின் உற்பத்தி தொடங் கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடங் கியதும் தமிழ்நாட்டிற்கு 925 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும், தமிழகத்திற்கு தினமும் தேவைப் படும் மின்சாரம் 11500 மெகாவாட். இதில் மத்திய தொகுப்பு, தனியார் மின்சாரம், மரபு சாரா மின்சாரம் என 10,237 மெகா வாட் கிடைக்கிறது. இதில் மத்திய தொகுப்பிலிருந்து கிடைப்பது மட்டும் 2861 மெகா வாட். தினமும் மின் வெட்டு மூலம் 1500 மெகா வாட் சரி செய்யப்படுகிறது.
53 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கும் தமிழக மின் வாரியத்திற்கு கூடங் குளத்திலிருந்து குறைந்த விலையிலான ரூ.2.51 யூனிட் கட்டணத்தில் மின்சாரம் கிடைக்கும் போது தினமும் 10 கோடி ரூபாய் மிச்சமாகும். இப்போது யூனிட் ரூ.5.31 செலவாவதாக தமிழக மின்துறை நிதி நிலை அறிக்கை குறிப்பிடுகிறது.
கூடங்குளம் அணுமின் நிலையத் திற்கு எதிராக கடந்த இரண்டரை மாதங்களாக இப்பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினர் உதயகுமார் என்பவர் தலைமையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூடங்குளம் அருகிலுள்ள இடிந்த கரை லூர்து மாதா ஆலய வளாகத்தில் பந்தல் அமைத்து நடைபெற்ற இப்போராட்டம் அணு விஞ்ஞானி களின் குடியிருப்பு அமைந்துள்ள செட்டிகுளம் பகுதிக்கு மாறியது.
அணுமின் நிலைய பணிக்குச் சென்ற அலுவலர்கள், விஞ்ஞானிகள் வழிமறிக்கப் பட்டதாகவும், வாகனங்கள் தடுக்கப்பட்டதாகவும், குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டதாகவும் இது தொடர்பாக இது வரை 66 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூடங்குளம் பகுதி மக்களின் அச்சம் போக்கவும், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவும் மத்திய அரசு அமைத்துள்ள குழு தமிழக அரசு அமைத்துள்ள குழுவுடன் பேச்சு நடத்தியது.
இதனிடையே முன்னாள் குடியரசுத் தலைவரும் அணு விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் கூடங்குளம் அணு மின் நிலை யத்தை பார்வையிட்டார்.
``இந்த அணுமின் நிலையம் மூன்றாம் தலை முறைக்கான அதி நவீன பாதுகாப்பு வசதிகளைக் கொண்டுள்ளது. இங்கு மின்தடை ஏற்பட்டாலோ அல்லது குளிர்விப்பானில் தடை ஏற்பட்டாலோ நீராவி மூலம் வெப்பம் குளிர்விக்கப்படும் தானியங்கி வசதி உள்ளது.
அணு உலையின் எரி பொருள் உருகி கீnழு விழுந்தால் அதன் அடிப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள தொட்டி போன்ற அமைப்பு அதன் கதிரியக்கத்தைச் செயலிழக்கச் செய்துவிடும்.
கூடங்குளம் அணுமின் நிலையம் கடல் மட்டத்திலிருந்து 13.5 மீட்டர் உயரம் உள்ளது. பூகம்பம் ஏற்படாத பாதுகாப்பான இடத்தில் உள்ளது. புயல், சூராவளி, சுனாமி வந்தாலும் பாதிக்காது`` எனக் குறிப்பிட்டார்.
கூடங்குளம் அணுமின் நிலைய திட்ட இயக்குநர் பாலாஜி, நிலைய இயக்குநர் சுந்தர் தலைமைப் பொறியாளர் ஜின்னா என சம்பந்தப் பட்டவர்கள் விளக்கங்களை தந்து கொண்டேயிருக்கின்றனர்.
அணுமின் நிலையத்தில் தொடர்ந்து பணிகள் நடைபெறாவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என எச்சரித்துள்ளார் தேசிய அணுசக்தி ஆணைய தலைவர் குமார் பானர்ஜி. என்றாலும் போராட்டம் நிற்கவில்லை.
மதகுருமார்களே போராட்டத்தைத் தூண்டி விடுவதாகவும், பல பகுதிகளிலிருந்து போராட்டத் திற்கு மக்கள் அழைத்து வரப்படுவதாகவும் அவர்களுக்கு உணவு,பணம் கொடுக்கப்படுவதா கவும் அணு உலைக்கு ஆதரவான போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்ட குழுவினருக்கு எங்கிருந்து நிதி வருகிறது என்று விசாரணை நடத்தப்படும் என மத்திய அமைச்சர் நாராயண சாமி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் பற்றிய விவாதங்கள், 2006 முதல் 2008 வரை, இந்தியா முழுவதும் நடைபெற்று வந்தன. அப்போது, ரஷ்ய உதவியுடன், கூடங்குளம் அணு உலைகளின் கட்டுமான வேலைகள், பெரிய அளவில் நடை பெற்று வந்தன. அப்போதெல்லாம்,`அணு உலைகள் அமைக்கப்பட்டால், அவை வெடிக்கும்; லட்சக்கணக்கான மக்கள் மாண்டு விடுவர்` என, போராட்டங்கள் வெடிக்க வில்லை ஏன்?
அமெரிக்காவுடன் ஏற்பட்ட, 1 2 3 அணு ஒப்பந்தம் அமலுக்கு வர, பல சிக்கல்கள் ஏற்பட்டு விட்டன. இழப்பீடு சம்பந்தமான இந்திய சட்டத்தை, இங்கு உலைகள் கட்டவிருந்த, அமெரிக்க ஜெனரல் எலக்ட்ரிக் கம்பெனி போன்ற தனியார் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், இந்திய மண்ணில் அமெரிக்கா கால் வைக்க முடியவில்லை.கூடங்குளம் அணு உலைகள், வெற்றிகரமாகச் செயல்படத் துவங் கினால், ரஷ்யாவே இந்தியாவில் கட்டப்படவுள்ள மற்ற உலைகளைக் கட்டத் துவங்கும். பெரிய இந்திய மார்க்கெட்டை, அமெரிக்கா இழக்கும்; அமெரிக்க ஆசை, நிராசையாகப் போய்விடும் என்ற தூண்டுதலே இப்போராட்டம் என கூறப் படுகிறது.
என்ன இருந்தாலும் தமிழக முதல்வர் மனது வைத்தால் இப்போராட்டம் நொடியில் முடிந்து விடும். தமிழக அரசு மவுனம் சாதிப்பது ஏன்? என்பதே அரசியல் நோக்கர்களின் கேள்வி.
|