தினசரி காலை 6 மணி...
என் தற்காலிக வீட்டு சன்னலை திறக்கும்போதெல்லாம் - இனி குடிபெயர இருக்கும் வீட்டின் எண்ணமும் சேர்ந்தே மனதில் திறந்து விடும். நமக்கு முன்னே நம்மிடம் விடைபெற்றுச் சென்ற நமது சகோதர சகோதரிகளின் இல்லங்கள் (மையவாடி) தான் என் வீட்டின் எதிரே இருப்பது!
சில நிமிடங்கள் அங்கு பார்த்தவாறே நம் முஸ்லிமான, முஃமினான நம் சகோதர சகோதரிகளுக்காகவும், குறிப்பாக என் அன்புத் தந்தைக்காகவும் (இலங்கை புத்தளத்தில் அடங்கியுள்ளார்கள்), நம் நபி கற்றுத் தந்த துஆவை இறைஞ்சுவதோடு - நாளை நமக்கும் ஒரு நாள் இதே நிலைதானே என்ற உறுத்தலான உணர்வோடு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவேன்.
அன்று நம்மோடு பாசத்தோடும், பரிவோடும் பழகியோர் பலர் இன்று நம் எதிரே அங்கு வீற்றிருப்பதை நோக்கும்போது - மனம் சற்று சஞ்சலம் அடைந்தாலும், நாளை ஒரு நாள் நம் நிலையும் இதுபோல்தான்; இறைவனின் நியதியும் இதுதானே என்ற எண்ணம் எனக்குள்ளே பதில் தந்துவிடும்.
சில நேரம் “ஜனாஸா” இப்பள்ளியில் அடக்கப்படுகிறது என்ற செய்தியறிந்தால், அந்த ஜனாஸாவிற்காகத் தோண்டப்படும் குழி முதல் அதற்காக நடக்கும் வேலைகள் மற்றும் ஜனாஸா அடக்கப்பட்டு மௌலவியின் உருக்கமான உரை நிறைவுற்ற பின் சொந்தங்களும், பந்தங்களும் திரும்பிச் செல்லும் காட்சியான கண்களில் நீர் தழும்ப பார்க்கும்போது.....
ஓ மனமே! நாளை ஒரு நாள் உன் நிலையும் இதுதான்! நீதான் இந்த ஜனாஸாவாக நினைத்துக் கொள்! இதோ இவர்கள் உன் சொந்தங்கள்! உன்னோடு துணையாக அங்கு வரும் நல் அமல்களைச் செய்து கொள்! உனக்குக் கொடுத்த அவகாசத்தை பயன்படுத்திக் கொள்! என்ற உள்ளத்தை தட்டியெழுப்பும் ஓர் மரண எச்சரிக்கை மனதில் உதிக்க.....
ஓ! நாம் இதுவரை என்ன செய்திருக்கிறோம் என்று எண்ண நினைத்தபோது பதில் சொல்ல உள்ளம் மறுத்து, விழி பிதுங்கி நின்றபோது “ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும். நீங்கள் உறுதியாக கெட்டப்பட்ட கோட்டைக்குள் இருந்தாலும் சரியே! என்ற இறைமறை அத்தியாயம் இன்னும் என்னை எச்சரித்தது.
இங்கோ, மாடி வீட்டை அலங்கரித்துக் கொண்டிருக்கும் நாம் - கப்ருடைய வீட்டையும், நாளை மறுமையிலே நிரந்தரமாக இருக்க வேண்டுமே என ஆசையூட்டும் சுவர்க்கத்து வீட்டையும் எவ்வாறு அலங்கரிப்பது என்ற வினாவிற்கு விடையளித்தது இறைமறை வசனங்கள் பல.
எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராதபடி இருக்கும் சுவர்க்கச் சோலையைப் பற்றிய இறை தூதரின் கூற்றும் இதயத்தில் அசைபோட, நடுநடுங்க வைக்கும் நரகத்தின் வேதனைகளும் நெஞ்சத்தை நெருட வைத்தவாறு - வீடு, குடும்பம், குழந்தைகள், வேலை என இயல்பு வாழ்க்கை தொடர்ந்துவிடும்.
மீண்டும் மாலை 6 மணி...
கொசுத் தொல்லைக்காக சன்னலை மூடும்போது, இன்று கொசுத் தொல்லைக்காக சன்னலை மூடும் - நீ நாளை அங்கு ஏற்படும் விச ஜந்துக்களின் தொல்லைகளை நினைத்தாயா? என யாரோ எச்சரிப்பது போல இருக்க “இறந்து போனவர்களை அல்லாஹ் எழுப்பியே தீருவான், பிறகு அவர்கள் அவனிடமே கொண்டு வரப்படுவார்கள்” என்ற இறை வசனமும் இதயத்தில் அசை போட்டவாறு இரவை அடைந்து மீண்டும் பகலை நோக்கி என படிப்படியாக மெல்ல உருகிக் கொண்டிருக்கும் பணிகட்டி போல் நம் வாழ்க்கை பயணத்தின் எண்ணிக்கையும் கரைத்துக் கொண்டிருப்பதே ஓர் நிதர்சன உண்மை.
மறுமையை நோக்கிப் பயணிக்கும் நாம் இறைவனின் கருணையைப் பெற்று இருலோக வெற்றியைப் பெற இறைவனிடம் இறைஞ்சுவோமாக!
என் நெஞ்சம் என்னும் மஞ்சத்தில் நினைவுகளாய் அசைபோடும் இன்னும் பிற எண்ணங்களை இனி தொடரும் ஆசையுடன் (இன்ஷா அல்லாஹ்) முடிவடையும் இக்கட்டுரை! |