தி.மு.க. தலைவர் மு.கருணாநிதிக்கும், தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவிற்கும், தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெறவுள்ள மே 16 தேர்தல்கள்
- வாழ்வா, சாவா போராட்டமாகும்.
கருணாநிதியின் வயது 90 தாண்டியுள்ளது; நாற்காலியில் அமர்ந்தே வலம் வருகிறார். நடக்க முடியா நிலையில் அவர் இருந்தாலும், அவரின் சிந்தனை சுறுசுறுப்பாகவே உள்ளது. அவர் மீண்டும் முதல்வராக இதுவே அவருக்கு இறுதி வாய்ப்பாக இருக்கலாம்.
ஜெயாவின் வயது 60களில் தான் உள்ளது. இருந்தாலும், செப்டம்பர் 2014 இல், அறியப்பட்ட வருமான காரணிகளோடு ஒப்பிட்டுபார்க்கும் போது
அவரிடம் கூடுதல் சொத்து (Wealth disproportionate to her known sources of income) இருந்த வழக்கில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் -
ஜெயலலிதாவிற்கு எதிராக வழங்கிய தீர்ப்பில் இருந்து, அவர் இன்னும் மீளவில்லை.
அதன் விளைவாக, அவர் உடனடியாக சட்டமன்ற உறுப்பினர் பதவி மற்றும் முதல்வர் பொறுப்பையும் இழந்தார்; சிறையிலும் உடனடியாக
அடைக்கப்பட்டார். அவர் பிணையில் பின்னர் விடப்பட்டதும், கர்நாடகா உயர் நீதிமன்றத்தை நாடி - நீதிபதி குமாரசாமி வாயிலாக, மார்ச் 2015இல் -
அவர் விடுதலை அடைந்ததும் வேறு சமாச்சாரங்கள் ஆகும்.
அதன் பிறகு, அவர் இடைத் தேர்தல் மூலமாக மீண்டும் (முதல்வர்) பொறுப்பிற்கு வந்தாலும், முன்பு போல் அவர் இல்லை. அவரின் உடல்நலன்
கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. புதிய அமைச்சரவை பதவி ஏற்பு நிகழ்வில் கூட, ஆளுநர் முன்மொழிய - ஒவ்வொரு அமைச்சரும், தனியாக பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ளும் நடைமுறைக்கு மாற்றமாக, கூட்டாக அமைச்சர்கள் பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ள வைக்கப்பட்டார்கள்.
அதன் பிறகு, அவர் தன்னை ஒரு கூண்டுக்குள் அடைத்துக் கொண்டார். எவ்வளவு தூரம் என்றால், டிசம்பர் 2015இல் சென்னையில் பெய்த பலத்த
மழை, வெள்ளத்தின் போது கூட அவர் வெளியில் வரவில்லை.
இருப்பினும், தேர்தல் காலமான தற்போது, மீண்டும் உத்வேகத்துடன் களத்தில் அவர் குதித்துள்ளார்; ஆனாலும், அவர் முன்பு உள்ள சவால்கள்
இன்னும் மறையவில்லை.
தி.மு.க.வின் பொது செயலாளர் ஜெ.அன்பழகன் கோரிக்கை அடிப்படையில் கர்நாடகா மாநிலத்திற்கு மாற்றப்பட்ட (சொத்து குவிப்பு) வழக்கில் - நீதிபதி குமாரசாமியினால் வழங்கப்பட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து, நீதிக்கு முரணான தீர்ப்பு எனக்கூறி கர்நாடகா மாநிலம் - உச்ச
நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
விசாரணைகள் முடிந்து, இவ்வழக்கில் தீர்ப்பு எப்போது வேண்டும் வரலாம்; ஆனால் - தேர்தல் தேதியான மே 16 க்கு முன்னர், தீர்ப்பு வராது என்றே
தெரிகிறது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ற கத்தி தன் தலையில் தொங்கும் நிலையில், மக்கள் தீர்ப்பினையும் - அவருக்கு எதிராக வர வாய்ப்புள்ள உச்ச நீதிமன்ற
தீர்ப்பினையும் ஜெயலலிதா எதிர் நோக்கியுள்ளார். இந்த பின்னணியில், இரு பிரதான அணிகளின் வியூகங்கள் தெளிவாக தெரிகிறது.
தனது வெற்றி வாய்ப்பினை முடிந்த அளவு உயர்த்திக்கொள்ள, 234 தொகுதியையும் ஜெயா தன் முழு கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டுள்ளார்.
கூட்டணி கட்சிகளுக்கு அவர் வழங்கிய 7 இடங்களிலும் கூட, அந்த வேட்பாளர்களை - தனது இரட்டை இல்லை சின்னத்தில் நிற்க வைத்துள்ளார்
ஜெயலலிதா.
2014 பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை வென்றதை நினைவில் கொண்டு, ஜெயலலிதா - இந்த தேர்தலிலும் (எந்த
முகாந்தாரமும் இன்றி) நம்பிக்கையுடன் உள்ளார். பாராளுமன்ற தேர்தலில், தொங்கு நிலை ஏற்பட்டால், ஜெயாலலிதா, பா.ஜ.க.விற்கு ஆதரவு
வழங்குவார் என்ற நம்பிக்கையில், மோடி ஆதாரவாளர்கள் கூட - அந்த தேர்தலில் அவருக்கு வாக்களித்திருந்தனர். ஜெயலிதாவிற்கு ஏமாற்றம் வழங்கும் விதத்தில், மோடி தனி பெரும்பான்மை பெற்றார் என்பது தனி கதை.
மற்றொரு பக்கம், தனக்கு 170 இடங்கள் எடுத்துக்கொண்டு, கூட்டணி கட்சிகளுக்கு 64 தொகுதிகள் வழங்கி - கருணாநிதி, ஒரு அகண்ட
கூட்டணியை உருவாக்கியுள்ளார். ஆரம்பத்தில், காங்கிரஸ் மட்டுமே இவருடன் கூட்டு சேர்ந்தது. கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி கூட, இதனை வெட்கமில்லாத கூட்டணி என - ஜனவரி 2014இல் இரு கட்சிகளுக்கிடையே நிகழ்ந்த கடுமையான வார்த்தை பரிமாற்றங்களை நினைவூட்டி - விமர்சித்தார்.
ராஜதந்திரமாக சிந்திக்கும் கருணாநிதி - காங்கிரஸ் கட்சியை, 2001 போல், அ.தி.மு.க.விற்கு இழக்க தயாரில்லை. 2001இல் - காங்கிரஸ் கட்சி,
ஜெயா பக்கம் சென்றதால், ஊழல் சம்பந்தமான இரு வழக்குகளில் அவர் தண்டிக்கப்பட்டிருந்தாலும், மீண்டும் ஜெயா ஆட்சியை பிடிக்க அது உதவியது.
மாநில தேர்தலில் பெரிதாக தாக்கம் ஏற்படுத்த முடியாத பாரதிய ஜனதா குறித்து, கருணாநிதி அலட்டிக்கொள்ளவில்லை.
தேர்தல் வெற்றி என்பது, எத்தனை தொகுதிகளில் நிற்கிறோம் என்ற அடிப்படையில் கிடைப்பது கிடையாது என முந்தைய தேர்தல்கள் தெளிவுபடுத்தியுள்ளன.
2001 தேர்தலில் - தி.மு.க. 183 தொகுதிகளில் நின்றும் தோல்வியுற்றது; அப்போது அது ஆளும் கட்சி. 2006 தேர்தலில் அது 132 தொகுதிகளில்
மட்டும் நின்றாலும், வெற்றிப்பெற்றது; ஏன் எனில் மக்கள், ஜெயலலிதாவை ஆட்சியில் இருந்து அகற்ற முடிவு செய்திருந்தனர்.
2011 தேர்தலில், தி.மு.க. - 124 தொகுதிகளில் நின்று, படுதோல்வி அடைந்தது. ஜெயா மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.
தி.மு.க.வின் 2006 - 2011 ஆட்சி காலம், ஊழலையும், (கருணாநிதியின்) குடும்ப தலையீடையும் - கடுமையான் அளவில் கண்டது; இந்த
காலகட்டத்திற்கு எடுத்துகாட்டாக இருந்தது தான் 2G ஊழல். இதில் - கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் அமைச்சர் ஏ.ராஜா ஆகியோரே பிரதானமான குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள்.
ஜெயலலிதா - தனது பிரசாரங்களில், அந்த காலகட்டத்தையே, மீண்டும், மீண்டும் நினைவுபடுத்துகிறார். ஆனாலும், ஜெயலலிதாவின், ஐந்து ஆண்டு ஆட்சியும், பிரமாதமானதும் அல்ல; 40 சதவீதம் கமிசன் ஆட்சி என்ற பெயரையே இந்த ஆட்சி பெற்றுள்ளது.
அம்மா உணவகம், அம்மா சிமெண்ட், அம்மா குடிநீர், அம்மா உப்பு உட்பட பல்வேறு இலவசங்கள் தவிர, நிர்வாக ரீதியாக சொல்லும் விதத்தில், அவரின்
ஆட்சி அமையவில்லை.
இந்த தேர்தலின் முக்கியமான அம்சம், நிலைக்ககூடிய மூன்றாவது அணி உருவாகியது தான்.
விஜயகாந்தின் தே.மு.தி.க. - வைகோவின் ம.தி.மு.க., வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், திருமாவளவனின் விடுதலை சிறுத்தை கட்சி, இரு
கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளடிக்கிய 6 கட்சிகள் கூட்டணியை உருவாக்கியுள்ளது.
தனக்கு 104 தொகுதிகளை எடுத்துக்கொண்டு, எஞ்சிய 5 கட்சிகளுடன், மீதி தொகுதிகளை, சரிசமமாக அவர் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
விஜயகாந்தின் கூட்டணி, ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் கடுமையாக தாக்கி பிரச்சாரங்கள் செய்து வருகிறது.
பெரிய கட்சிகள் - விஜயகாந்த், பெரிதாக வளர்ந்து வருவதை, ரசிக்கவில்லை. 2011இல், விஜயகாந்தின் தே.மு.தி.க, 29 சீட்டுகள் பெற,
ஜெயலலிதா உதவினர். ஆனால் பின்னர் - அக்கட்சியின் 9 சட்டமன்ற உறுப்பினர்களை தன் வசம் இழுத்தார்.
இந்த தேர்தலில், விஜயகாந்தை தன் பக்கம் இழுக்க, கருணாநிதி கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் - விஜயகாந்த், அந்த
வலையில் விழவில்லை. அதன் விளைவாக, தே.மு.தி.காவில் விஜயாகாந்திற்கு எதிராக ஒரு சிலர் போர்க்கொடிதூக்க - வியூகங்கள்
அமைக்கப்பட்டது. தே.மு.தி.க. கட்சியை விட்டு வெளியில் வந்த மூவரை, தி.மு.க. அரவணைத்து, அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் அளித்தது.
தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிலைபடுத்த தயாராக இருந்த மூன்றாவது அணியுடன், அது போதிய பலம் இல்லாமல் இருந்தாலும், கூட்டணி
அமைத்துக்கொள்ள முடிவு செய்தார் - இரு கழங்களுக்கும் மாற்றாக தன்னை விளம்பரப்படுத்தி வந்த விஜயகாந்த்.
பிரச்சார களம், மூன்றாவது அணியின் அங்கத்தினற்கு இடையில், பெரிய அளவில் இணக்கத்தை காண்பிக்கவில்லை. உதாரணமாக, இறுதி
நேரத்தில், கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதில் இருந்து, வைகோ வாபஸ் பெற்றார்; கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் விமர்சிக்க
அவர் பயன்படும் வார்த்தைகள், மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
விஜயகாந்த், அந்த கூட்டணியில் இணையும் வரை, அந்த அணி மீது அ.தி.மு.க.வின் 'பி அணி' என்ற விமர்சனம் இருந்து வந்தது. அதுவே,
இரு கழகங்களையும் வைகோ கடுமையான வார்த்தைகளினால் தாக்குவதற்கான முக்கிய காரணம்.
களத்தில் உள்ள மற்றொருவர், பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ். இரு கழகங்களுடனும் ஒப்பிடும் போது, மத்திய சுகாதார
அமைச்சராக பணியாற்றியுள்ள இவர் மட்டும் தான் - நிர்வாக அனுபவம் உள்ளவர். 50 - 60 இடங்களை கொண்டுள்ள வன்னியர் பகுதிகளில்,
இவருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது.
இந்த சூழலில், அ.தி.மு.க.வை விட தி.மு.க.விற்கு கூடுதல் இடங்களுடன், தொங்கு சட்டமன்றத்தை - இந்த தேர்தல்கள் வழங்க வாய்ப்புள்ளது.
ஏன் என்றால் - தனக்கு 93 வயது என்றாலும், தன்னிடம் உள்ள முழு சக்தியையும், இந்த தேர்தலுக்காக கருணாநிதி செலவிடுகிறார். இது - இப்படியும், அப்படியும் - பயன் அளிக்க வாய்ப்புள்ளது.
கருணாநிதியை பிடிக்காதவர்கள், நமக்கு நாமே திட்டம் மூலம் - கடந்த ஓர் ஆண்டாக, பல்வேறு மக்களை சந்தித்த - ஸ்டாலினை விரும்புகிறார்கள்.
நடப்பு ஆட்சியின் மீது உள்ள அதிருப்தி, தி.மு.க.விற்கு கூடுதல் வாய்ப்பு வழங்குகிறது; இருப்பினும் - 2006 போல, பெரும்பான்மை - அக்கட்சிக்கு
கிடைக்காது என்றே தெரிகிறது.
எந்த கட்சியும் மீண்டும் ஒரு தேர்தலை எதிர்கொள்ள விரும்பமாட்டார்கள் என்ற காரணத்தால், கூட்டணிகளுக்குள் சில மாற்றங்களை இது
ஏற்படுத்தலாம்.
தற்போது அதனை தான் விரும்பாவிட்டாலும், 2006 சூழல்போல் அல்லாமல், இந்த முடிவுகளினால் - அதிகாரத்தை பகிர்ந்துக்கொள்ள கருணாநிதி தள்ளப்படலாம். அதுவும், ஒரு வகையில் நன்மையே; அப்போது தான், தி.மு.க.வின் ஏறுமாறான போக்கிற்கு கடிவாளம் போடமுடியும்.
----------------------------------------------------------------
சு.முராரி - தமிழகத்தின் மூத்த பத்திரிக்கையாளர்களுள் ஒருவர். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் தனது அனுபவத்தைத் துவக்கிய இவர், 1984
ஆம் ஆண்டு DECCAN HERALD நாளிதழின் தமிழக செய்தியாளராக சென்னையில் இருந்து சேவை புரியத்துவங்கினார்.
இக்காலக்கட்டத்தில் இலங்கைக்கு பல பயணங்கள் மேற்கொண்ட இவர், தனது பயணங்களின்போது - தமிழ் மற்றும் சிங்கள தலைவர்கள் பலரை
சந்தித்தார். ஈழப் போராட்டம், தாய்லாந்து நாட்டில் நடந்த விடுதலை புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கிடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை,
1987 முதல் 2010ஆம் ஆண்டு வரை இலங்கையில் நடந்த அனைத்து தேர்தல்கள் ஆகியவற்றை இவர் நேரடியாக செய்திகளை சேகரித்து
ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார்.
மேலும் DECCAN HERALD பத்திரிகையில் பணிபுரியும்போது பல சர்வதேச நிகழ்ச்சிகள், சார்க் மாநாடுகள் ஆகியவற்றில் கலந்துகொண்டுள்ள இவர்,
கஷ்மீர் மாநிலத்தில் போராட்டங்கள் தீவிரமாக இருந்த 1994ஆம் ஆண்டு காலகட்டத்தில், JKLF அமைப்பின் தலைவர் யாஸீன் மாலிக்கை நேர்காணல்
செய்ய கஷ்மீர் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 2009ஆம் ஆண்டு DECCAN HERALD நாளிதழில் இருந்து இவர் ஓய்வுபெற்றார்.
2013ம் ஆண்டு தனது இலங்கை அனுபவத்தை, "The Prabhakaran Saga: The Rise and Fall of an Eelam Warrior" எனும் தலைப்பில்
புத்தகமாக முராரி எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை Sage Publications நிறுவனம் வெளியிட்டது.
|