“போதும் என்ற மனம்”! எவ்வளவோ தேவைகள் இருக்கும் போது என்ன இப்படியொரு தலைப்பு? வேறு தலைப்பே எழுதுவதற்க்கு கிடைக்கவில்லையா என சற்று சஞ்சலத்தோடு சிலர் இக்கட்டுரையை படிக்கலாம். ஆதமுடைய மகனுக்கு ஓர் தங்க ஓடையைக் கொடுத்தாலும் இன்னொரு தங்க ஓடையைக் கேட்பான்” என்ற நபிமொழியை மறுக்க முடியாது. எனினும் இலக்கில்லா நம் வாழ்கையை சற்று அவதானித்து, இறைதூதரின் வழிநடந்து, இறையன்யை பெற்று இனிதுற வாழ்வதற்க்கு இக்கட்டுரை நம்மில் சில மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தில் தேர்ந்தெடுத்தேன் இத்தலைப்பை! இத்தலைப்பிற்க்கொப்ப முழுமையான மாறமுடியாவிடிலும் முயற்ச்சிக்க முற்;படுவோம் இறைவன் உதவியோடு.
நம் உறவினர்களும், சிநேகிதர்களும் நண்பர்களும் எவ்வளவு பெரிய உத்தியோகத்துடனும், ஆடம்பர வாழ்க்கையோடும், உயரிய இடங்களில் இருப்பதை பார்த்து நாம் பொறாமைக் கொள்ள அவசியமேயில்லை. ஏனெனில் அது இறைவன் அவர்களுக்கு கொடுத்தது. (நமக்கு கிடைத்ததை எண்ணி இறைவனுக்கு நன்றியுரைத்து நம்பிக்கையுடன் பொறுமை காக்கும் பட்சத்தில்) அதை விட சிறந்த ஒன்றை நாளை மறுமையிலே இறைவன் நமக்கு தர நாடியிருக்கலாமல்லவா? அதுவல்லவா நிரந்தர தங்குமிடம்! நம்மில் பலரது நிலை தனக்குமேல் உள்ளவர்களை நினைத்து நமக்கு இப்படி கிடைக்கவில்லையே என்று அங்கலாயித்து நிம்மதியிழந்து இறைவனை நிந்தித்துக் கொண்டிருப்பதே வேலையாயிற்று!
உண்ண உணவின்றி கடும் பஞ்சத்தினாலும், பட்டினியினாலும் தினம் தினம் தவித்து வரும் நம் சோமாலிய நாட்டு இனத்தவரையும், இருக்க இடமின்றி அகதிகளாய் அங்கலாயித்துக் கொண்டிருக்கும் நம் பர்மா ஸிரியா, பாலஸ்தீன முஸ்லிம்கள் ஒரு நிமிடம் கூட நிம்மதியின்றி எந்த நேரம் குண்டு வெடிக்குமோ? என்ற மன சஞ்சலத்தோடு, உயிர் பயத்துடனும் பாதுகாப்பற்று பயத்துடனேயே அன்றாடம் வாழும் நிலையை நம் வாழ்வோடு ஒரு நிமிடம் ஒப்பிட்டு பார்த்தால் இறைவன் நமக்கிந்த நிஃமத்” களையும், நிம்மதியையும் நினைத்து நம் நாவு நம்மையறியாது இறைவனுக்கு நன்றி சொல்லிவிடுகிறேன். இம்மக்களின் அவல நிலைகளை நாம் நேரில் சென்று பார்த்தால் தான் தெரியும் என்ற நிலை இப்போதில்லை. விரல்; நுனியிலே வலைகள் வாயிலாக உலகையே இருந்த இடத்திலிருந்துக் கொண்டு உலா வந்துக் கொண்டிருக்கும். நாம் சற்று அதிலே தட்டிப் பார்த்தால் அவர்கள் படும் அல்லல்கள் தெரியும் நமக்கு.
நமதூரிலிருந்து சில மணிநேரத்திலோ சென்றடையக்கூடிய திருநெல்வேலி நகரத்தில் முஸ்லிம் அனாதை நிலையம் சென்று பார்த்தால் தாய்தந்தையற்ற இளவல்கள் பாசத்திற்க்காக ஏங்கும் கண்களுடன் நம்மை பார்க்கும் போது நாம் உணரலாம் நல்ல தாய், தந்தையின் வயிற்றிலே பிறந்து பாசத்துடனும், பிரிவுடனும் வளர்க்கப்பட்டது. அந்த “ரஹ்மா” னின் கிருபையால்தான் என்று நம் உள்ளம் நன்றியுரைக்க முயற்ச்சிக்கும். (எவ்வளவோ நம் சொந்த தேவைக்காக அந்நகரம் அடிக்கடி செல்லும் நாம் அந்த நிலையம் சென்று பார்ப்பதற்கு சில மணித்துளிகள் ஒதுக்கலாமோ அன்பர்களோ!
சில மாதங்களுக்கு முன் என் கணவருடன் ஓர் தேவைக்காக அருகிலுள்ள “திருச்செந்தூர்” நகர் சென்றபோது கோயில் அருகில் வரை வந்துவிட்டோம், சற்று கிட்டே போய்த்தான் பார்ப்போமே என்று பார்த்தபோது, அங்கு பலர் அவர்களது வணக்க வழிபாட்டிலே மிகவும் மும்முரமாகவும், சிலர் சில சுலோங்களை உச்சரித்த வண்ணம் இணைவைப்பிலே மும்முரமாக ஈடுபட்டிருப்பதை கண்ணுற்ற எண்ணுள், சில மைல்களுக்கு அருகிலேயே, அத்தகையபெரும் கூட்டத்திற்கிடையில் நம்மை இறைவன் நேர்வழியில் வைத்திருப்பதை எண்ணி என்னையறியாது என் நாவு இறைவனுக்கு நன்றி நவிழ்ந்தது அல்ஹம்துலில்லாஹ் என்று (இறைவா!) இந்த ஊரிலுள்ள அனைவருக்கும் நேர்வழியை கொடுத்துவிடு. எங்களையும் ஈமானோடு வாழ்ந்து ஈமானோடு மரணிக்கச் செய் என்ற பிரார்த்தனையும் திருப்பினேன்.) கோடான கோடி நன்றியுரைத்;தாலும் ஈடாகாத ஈமானையல்லவா இறைவன் நமக்கு தந்திருக்கறான்.
ஒரு முறை எனது உம்ரா பயணத்தின் போது நபியவர்கள் பேருரை நிகழ்த்திய ஜபலுர் ரஹ்மா என்ற மலை மீதேற எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது மலைமீது ஏறும்போது வழியிலே சிறார்கள், பெரியவர்கள், முதிவர்கள், குழந்தைகள் எனபலதரப்பட்ட நம் இஸ்லாமிய சொந்தங்கள் தனது வறுமை நிலையினால் அந்த கொடூரமான வெயிலிலே (அஸ்கிருப்பவர்களுக்கு) சென்றவர்களுக்கும் தெரியும் அங்குள்ள தட்பவெப்ப நிலை) மலையான் மீது ஓர் அட்டையை சூடு தாக்காமலிருக்க வைத்து அதன் மீது உட்கார்ந்து சப்தமில்லா யாசகம் கேட்பதை பார்த்ததும் என் நெஞ்சம் வெடித்துவிடுவது போலாகிவிட்டது. மிகவும் வேதனைக்குரிய விசயம் என்னவெனில் அதில் சிலருக்கு இரு கைகலில்லாமலும், சிலருக்கு ஒரு கை, ஒரு கால்களில்லாமலும், மேலும் சிலருக்கு இரு கால்களிலிருந்தும் கை இல்லாமல், வாய் கூட பேசாது கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடிய நிலையில் நம்மை (சில ரியால்களுக்காக ) பார்த்த போது என் உள்ளம் உடைந்து விட்டது போலாகி விட்டது. இச்சம்பவத்தை நம்மோடு ஒப்பிட்டு பார்க்கும் போது குறையின்றி ஒவ்வொரு உறுப்புக்களையும் படைத்த அந்த ரப் பின் கிருபையை எண்ணி நாம் எவ்வளவு நன்றியுரைத்தாலும் ஈடாகாது. அவர்களுக்கு மறுமையில் இறைவன் சிறந்த உடல் உறுப்புக்களையும், உயரிய உணவுகளையும், மிகச் சிறந்த வாழ்க்கையையும் கொடுத்தருள்வானாக என்ற துஆவுடன் அங்கிருந்து விடைப்பெற்றேன். (அங்கு இப்பொதுள்ள நிலை என்னவென்று தெரியவில்லை. நான் சென்றது சில வருடங்களுக்கு முன்.)
நாம் எவ்வளவு தூரம் பயணித்திருக்கிறோம், பயணிக்கப் போகிறோம் என்பது மட்டும் நமது இலக்கா இல்லாது, மிக குறைவான இடங்களுக்கு நாம் சுற்றுலாவாக, சுய தேவைக்காக இடங்களுக்கு நாம் பயணிக்கும் ஒவ்வோர் இடங்களிலும் சில, பல படிப்பினைகளைப் பெற்று இறைவன் நமக்கேத்த உடற் சுகத்தை எண்ணி, உடையை எண்ணி, உணவை எண்ணி, இருப்பிடத்தை எண்ணி, பொருட்செல்வத்தை எண்ணி, மக்கட்செல்வத்தை எண்ணி, ஆரோக்கியத்தை எண்ணி, நினைவாற்றலை எண்ணி, குறையற்ற உறுப்புக்களை எண்ணி, பார்வை, செவிப்புலன்களை எண்ணி, இன்னும் பல நற்கிரியைகளை எண்ணி அல்லாஹ்விற்கு நன்றியுரைக்க நாம் முன் வர வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அவன் நமக்கிந்த ஈமானை எண்ணி நன்றியுரைக்க நம் வாழ்நாள் முழுவதும் செலவிட்டாலும் போதாத சூழலில் நாம் வாழ்ந்துக் கொண்டு அவன் அதை தரவில்லை, இதை தரவில்லை எனக் குறைக் கூற நமக்கென்ன அருகதை இருக்கிறது அன்பர்களே!
அவன் வீட்டில் அது இருக்கிறது, இவள் வீட்டில் இது இருக்கிறது, அவளுக்கு நான் சளைத்தவலல்ல. ஆகவே எனக்கும் அதே மாதிரி பொருட்களும், நகைகளும் வேண்டும் என்ற பிடிவாத குணத்துடன் நம்மில் சில பெண்கள் தனது கணவனை அவரது சக்திக்கு மீறி, வருமானத்திற்கு மீறி அவர்களை பணித்து தள்ளாத வயது வருமுன்னே அம்மனிதரை தள்ளாட வைத்துவிடுகிறார்கள். கொடுத்தால் நல்லவன், கொடுக்காவிட்டால் தீயவன் என்ற நிலைக்கு தள்ளப்படுவதால் அம்மனிதர் வேறு வழியின்றி ஹராமின் பக்கம் திசை திரும்பிவிடுகிறார்கள் அவனது தேவையை பூர்த்திசெய்ய. நபியவர்கள் சொன்னார்கள் “எனக்கு நரகம் காட்டப்ட்டது, அதில் அதிகமான பெண்களையே பார்த்தேன், அதற்கு காரணம் அப்பெண்கள் கணவனுக்கு சரியாக கடடுப்படாத காரணத்தினால் ” என்றுரைத்தார்கள். சகோதரிகளே அதில் ஒருவராக நாம் இல்லாதிருக்க இக்கட்டுரையின் தலைப்பிற்கொப்ப வாழ நாம் முயற்ச்சிக்க வேண்டும். எந்த ஒரு பெண் தனது கணவனுக்கு கட்டுப்பட்டு நடப்பவளாக இருக்கின்ற நிலையில் மரணிக்கின்றாளோ அவள் விரும்பிய வாயில் வழியாக சுவனம் செல்லலாம் என்ற நபிமொழி நமக்கு கிடைத்த பொக்கிஷமல்லவா? நமது வாழ்க்கைப்பாதையில் பல இடர்களும், சில இன்னல்களும் எதிர்பட்டாலும் அதை எதிர்நோக்கி சற்று அவதானித்து செயல்பட்டு விரும்பிய வாயில் வழியாக சுவனம் செல்ல நாம் முயற்ச்சிப்போம்.
அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே! நம் ஹாத்தமுன் நபி (ஸல்) அவர்களைவிடவா நாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம்? இப்ராஹிம் நபியைப் போன்றா யாரும் நம்மை நெருப்புக் குன்றத்தில் தள்ளுகிறார்கள்? இஸ்மாயில் நபியைப் போன்றா நம் கழுத்திற்கு கத்தி வருகிறது? மூஸா நபிக்குத் தொல்லைக் கொடுத்த ஃபிர்அவ்னைப் போன்றா இங்கு நமக்கு யாரும் தொல்லைக் கொடுக்கிறார்கள்? அருமைச் சஹாபி பிலால் (ரலி) அவர்களைப் போலவர் நம்மை யாரும் சுடுமணலில் கிடத்தி சித்திரவதைச் செய்கிறார்கள்? அன்னை ஆசியாவைப் போலவா நாம் இங்கு துன்பத்தை அனுபவிக்கிறோம்? கண்மணி கதீஜா (ரலி) அவர்களைப் போலவா மலையேறி நம் கணவனுக்கு உணவு கொண்டு செல்கிறோம். (வீட்டில் கணவருக்கு உணவு எடுத்து வைப்பதே சிலருக்கு கஷ்டமாக உள்ளதே.) ஷஹீதான சுமையா (ரலி) அவர்களைப் போலவா நம்மை யாரும் ஷஹீதாக்க முயற்ச்சிக்கிறார்கள்? அன்பரசி ஆயிஷா (ரலி) அவர்களைப் போன்றா நமது வீட்டில் மூனறு மாதம் அடுப்பெறியாமல் பசியால் வாடுகிறோம்? பண்பரசி பாத்திமா (ரலி) அவர்களைப் போன்றா நாம் நம் வீட்டு வேலைகளை கஷ்டப்பட்டு பார்க்கிறோம்? இன்னும் பிற துன்பங்களை எதிர் கொண்ட இறை தூதர்களும், சத்திய சஹாபாக்களும் எதிர் கொண்ட இன்னல்களை ஒரு கணமேனும் நாம் சிந்திக்க முயற்சிக்க வேண்டாமா?
இந்த உலகம் என்பது சற்று இளைப்பாற வந்த இடம் தானே தவிர நிரந்தரமல்ல. உலகில் ஓர் வழிப்போக்கனைப் போல் வாழ் என்ற நபி டிமாழியைச் சிந்திக்க நாம் தவறிவிடுவதால்தான் பேராசைகளும், போட்டி பொறாமைகளும், மேலும் மேலும் தேவை என்ற எண்ணமும் நமக்குள்ளே மேலாங்குகிறது! தவறு செய்ய தூண்டுகிறது! உறவுகளின் பங்குகளை அபகரிக்க பணிக்கிறது! விரோதத்தை வளர்க்கிறது! துவேசத்தை தூண்டுகிறது! “ஹராம், ஹலா லை வேறுபடுத்தி நடத்திட உள்ளம் மறுக்கிறது.
(2 : 200 ம் வசனத்தில்) ரப்பே! உலகிலேயே எங்களுக்குரியவற்றை தந்துவிடு" என்று கேட்பவர்களும் மனிதர்களில் சிலர் இருக்கிறார்கள், எனினும் இத்தகையோருக்கு மறுமையில் எந்த நற்பேறும் (பாக்கியமும்) இல்லை என்ற வசனத்திற் கொப்ப நாம் வாழாது, (2 : 201 ல் மேலும் சிலர் எங்கள் ரப்பே! எங்களுக்கு இவ்வுலகில் அழகிய வாழ்க்கையையும்? மறுமையில் அழகிய வாழ்வையும் வழங்கி நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களைக் காப்பாற்றுவாயாக! என்ற இவ்வசனத்தின் படி இறைஞ்சி வாழ நாம் முயற்ச்சிக்க வேண்டும்.
மரணம் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. ஆனால் அது எப்போது வரும் என்பது மட்டுமே நமக்கு தெரியாதே தவிர வருவது என்பது உறுதியே! அப்போது நாம் ஒவ்வொருவரும் எடுத்துச் செல்வது நாம் பேராசைப்பட்டு சேர்நத்த பணமல்ல! பொறாமை, போட்டியிட்டு ஹராம் ஹலா இன்றி நாம் தேடியவையல்ல! நாம் உடுத்திய பட்டாடையோ அணிந்திருந்த பொற்குவியல்களோ அல்ல! உடன் பிறந்தவர்களின் பங்குகளை திட்டமிடு, சதி செய்து தனதாக்கிக் கொண்ட சொத்துக்களும் அல்ல! அதற்கு உறுதுணையாக இருந்து உறவுகளை துண்டாகச் செய்த செயல்களுமல்ல! கபன் துணியுடன் நாம் செல்லும்போது அழகிய உருவில் நம்முடன் வருவது நாம் செய்த நல்அமல்களும்) நாம் கற்றுக் கொடுத்த நற்கல்வியும், நம் ஸாலிஹான பிள்ளைகளின் துஆக்களும் தான். ஆம்! மேற் சொன்ன அனைத்து தீய செயல்களும் வரும் அருவருப்பான தோற்றத்தில் மறுமை வரை கூடவே துணையாக இருப்பதற்கு கூடவே வரக் கூடியதுதான். யாரை நம்முடன் வைத்துக் கொள்வது என தீர்மானிப்பது நம் கையில்தான். சுவர்க்கத்து சோலையிலே சோபனமாக வாழ வேண்டும் என்ற ஆசை நம்மில் எவருக்குமே இல்லாமல் இல்லை. அதை அடைவதற்கு நமக்கு போதும் என்ற மனமும் நன்றியுரைக்கும் உள்ளமும் வேண்டும் அன்பர்களே!
“ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்றும் நமக்கு கீழ் உள்ளவர்களை"
ஒப்பிட வேண்டாம் என்றும் நமக்கு மேலுள்ளவர்களை
“நமக்குரியது நமக்குரியதே
அவர்களுக்குரியது அவர்களுக்குரியதே"
“இறைவன் தான் நாடியவர்களுக்கு வாழ்வாதாரத்தை விசாலப்படுத்துகிறான், தாக் நாடியவர்களுக்கு குறைத்துக் கொடுக்கிறான் என்ற இறை வசனத்தையும், இறைவன் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது, அவன் தடுக்க நினைனப்பதை யாராலும் கொடுக்க முடியாது" என்ற இறைத்தூதரின் துஆவையும் ஆழமாக சிந்தித்தால் நம் சிந்தனை சிதறாது செவ்வனே அமையும், சீரான வாழ்க்கையும் அiயும்.
இக்கட்டுரை படித்து விட்டு செல்வதற்கு மட்டுமல்ல, நம் அனைவரது வாழ்க்கையிலும் எடுத்து நடக்கவே! முயற்ச்சிப்போம் முடிந்த வரை இன்ஷா அல்லாஹ்!
|