அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும் பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும், உம்முடைய இறைவன் விதித்திருக்கிறான். அவ்விருவரில் ஒருவரோ, அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப் (சீ) என்று சடைந்தும் சொல்ல வேண்டாம். அவ்விருவரையும் (உம்மிடமிருந்து) விரட்ட வேண்டாம். இன்னும் அவ்விருவரிடமும் கனிவான, கண்ணியமான பேச்சையே பேசுவீராக.
அல்குர்ஆன் : 17 : 23
காயல்பட்டணத்தில் திருமணம் செய்யும் பெண்ணுக்கு நபிவழிக்கு மாறாக வீடு கட்டாயமாக கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்காக தந்தை, சகோதரர்கள் உற்றார் உறவினர்கள் பல லட்சங்களை தேட குடும்ப வாழ்க்கையை ஒதுக்கி விட்டு ஊர் ஊராக நாடாக அலைகிறார்கள். கக்கூஸ் கழுவியோ, ஒட்டகத்தை மேய்த்தோ, கடைகளிலே ஊழியராகவோ வேலை பார்த்து ஒழுங்காக உண்ணாமல் உறங்காமல் இருந்து கிடைக்கும் ஊதியத்தை கொண்டு மகளுக்கு வீடு கட்டி திருமணம் செய்கிறார்கள். சிலர் வெட்கத்தை விட்டு நோட்டுப் போட்டு வசூல் செய்து குமரை கரையேற்றுகிறார்கள்.
இந்த அவல நிலையை நிறைவேற்றும் பொறுப்பு தந்தைக்கு அதிகம். புல லட்சங்களை சம்பாதிக்கும் ஆண்கள் தன்பெயருக்கு என்று ஒரு அடி கூட நிலம் வாங்காமல் அனைத்தையும் மனைவிக்கோ மகளுக்கோ கொடுத்து விடுகிறார்கள். ஆண்மகனுக்கு பெரும்பாலான இடங்களில் சொத்துகளை பதிவு செய்வதில்லை. வீடு இருந்தால் தான் திருமணம் என்பதால் பல குமர்கள் வீடு வசதியில்லாமல் தேங்கி கிடக்கிறது. வீடு, நகை, கல்யாண செலவுக்கு பல லட்சங்களை கடன் வாங்கி செலவழிக்கும் தந்தை கடன் தந்தவர்களை கண்டு ஒழிந்து ஓட வேண்டும் என்ற நிலை உள்ளது.
இத்தகைய தந்தை வயது முதிர்வு காரணமாகவும், நோயின் காரணமாகவும் உழைக்க முடியாமல் வீட்டின் ஓரத்தில் ஒதுங்கி கிடக்க வேண்டிய நிலை இன்று நம் ஊரில் பல இடங்களில் காண முடிகிறது. சில தந்தைகள் பள்ளி வாசல்களில் பாயும் தலையணையும் போட இடம் பிடிப்பதற்காக அலைகிறார்கள். அம்மா உணவகத்தில் அரைவயிற்றுக்காக தட்டை ஏந்துகிறார்கள். சொல்லி வராத இடத்தில் சொந்தங்கள் போல் காட்டிக் கொள்கிறார்கள். வயிறை நிரப்புகிறார்கள்.
தனது குழந்தைகள் நன்றாக படித்து நல்ல நிலையில் வாழ வேண்டும் என்பதற்காக தியாகம் செய்து தனக்கென்று சேர்த்து வைக்காமல் மிஸ்கீனாகிறார் தந்தை. தனது கணவனிடமிருந்து கை நிறைய காசு வருகிறது என்ற மமதையில் தந்தையை வீட்டை விட்டு விரட்டும் நிலை ஒரு சில இடங்களில் அரங்கேறுகிறது. இங்கு பணம் தலை நிமிர்கிறது பாசம் தலை குணிகிறது.
திருமணம் நடந்து விட்டது. குழந்தை பெற்று தாயாக தானும் வாழ வேண்டும் என்ற ஆசையில் பலஹீனமான பெண்கள் கூட தனது ஆசைகளை ஒதுக்கிவிட்டு கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை நல்ல நிலையில் பிறக்க வேண்டும் என்பதற்காக படாதபாடுபடுகிறார்கள். பெற்ற குழந்தைக்கு இருமல், தும்மல் வந்துவிட்டால் தான் தூங்காது மருத்துவம் செய்வதுடன் மேல் சிகிச்சைக்காக வெளியூர் மருத்துவரிடம் செல்லவும் தயங்கமாட்டார்கள். கையில் காசில்லவிடில் அடுத்தவரிடம் கடன் வாங்கியோ, வெட்கத்தை விட்டு பைத்துல்மால்களிடம் அணுகியோ குழந்தைக்கு சிகிச்சை அளிப்பார்கள். தான் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை, குழந்தைக்கு உணவு ஊட்டுவார்கள். முடியாத பட்சத்தில் பிச்சை எடுத்தாவது குழந்தையின் பசியை தீர்ப்பார்கள். படிக்கும் குழந்தைகளுக்கு வீட்டில் உணவு இல்லாத நிலையில் சத்துணவு வழங்கும் பள்ளிக்கூடத்திற்காவது அனுப்பி கல்வி புகுட்டுவார்கள் ஒழுக்கத்துடன் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பு பெரும்பாலும் தாய்க்கே உரியது. கோழி குஞ்சுகளை பாதுகாப்பது போன்று 24 மணி நேரமும் குறிப்பாக பெண்மக்களிடம் கவனம் செலுத்துவார்கள். தந்தை தொழில் நிமித்தம் வெளியில் செல்வதில் தாய்தான் குழந்தைகளின் முக்கிய பாதுகாவலர் ஆவார்.
இத்தகையை தாய் உயிருடன் இருக்கும் பொழுதே அவள் பெயரில் இருக்கும் வீட்டை மகளின் திருமணத்திற்காக கட்டாயப் படுத்தி பறிக்கப்படுகிறது. சிறிது காலத்தில் குடும்பத்தில் ஏற்படும் சில்லறை சச்சரவுக்காக தாயை வீட்டை விட்டு வெளியேற்றும் சம்பவங்கள் சர்வசாதரமாக நடக்கிறது. மகனோ மனைவியின் கைப்பொம்மையாக இருந்து தாயையும் தந்தையையும் நடுரோட்டில் அலைய விடும் நிலை நம் ஊரில் பரவலாக உள்ளது. நாளை நாமும் தாய், தந்தையாக ஆகுவோம் என்பதை மறந்துவிடுகிறார்கள்.
தனது இரத்தத்தை பாலாக்கி குழந்தைக்கு உணவளிக்கும் தாய், அல்லும் பகலும் தனது குழந்தைகள் நல்ல நிலையில் வாழவேண்டும் என்று வேர்வை சிந்தும்தந்தை ஆகியோரை வயதான காலத்தில் வீட்டை விட்டு விரட்டும் நிலை நம்மிடத்தில் பரவி வருகிறது. இது அல்குர்ஆன் 17:23க்கு எதிரானது.
“காசில்லாதவன் கடவுள் ஆனாலும் கதவை சாத்தடி,” “காசேதான் கடவுளப்பா” என்ற தவறான சித்தாந்தம் நம்மிடையே இருப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
பணத்தின் மீது பாசத்தை செலுத்துவதை விட பெற்ற தாய் தந்தையிடம் என்ன தவறுகள் இருந்தாலும் மன்னித்து பாசம் செலுத்த அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
பணம் கைக்கு கை மாறும். பாசம் நிலைத்துநிற்கும். |