குப்பையைத் தூக்கி எறிய மாட்டேன் - வீதியிலும், கழிவுநீர் ஓடையிலும்...
இது என்னால் முடியும் - மனிதம்
நகர்நலமே நாட்டுநலம்!
நாம் வாழ்க்கையில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தையும் ஒருநாள் கழிவுகளாக அகற்றி வருகிறோம். தினந்தோறும் சேகரமாகும் கழிவுகளை குப்பைத் தொட்டியிலோ, வீதிகளிலோ, சாக்கடையிலோ நாம் வீசி வருகின்றோம். சில சமயங்களில் மாதம் ஒருமுறை, வருடம் ஒருமுறை என வீட்டை சுத்தப்படுத்தி வருகிறோம். இதற்காகவே போகி பண்டிகை என்று ஒரு பண்டிகையாகவே கொண்டாடி வருடம் முழுவதும் வீட்டில் சேகரமாகும் சில வகைக் கழிவுகளை அப்புறப்படுத்தி, நாம் சுகாதாரத்தைப் பேணி வருகிறோம். இப்படி எதற்குமே பயன்படாத கழிவுகளிலிருந்து களஞ்சியத்தைப் பெற வைப்பதுதான் இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பொதுவாக குப்பைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை,
1. மட்காத குப்பை
2. மட்கும் குப்பை
இந்த இரண்டு வகைக் குப்பைகளையும் நாம் தனித்தனியாகப் பிரித்துப் பயன்படுத்தினால் வருமானத்தைப் பெறலாம்.
மட்காத குப்பைகள்:
பெருகிவரும் விலைவாசி உயர்வு போல் நாம் அன்றாடம் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் ப்ளாஸ்டிக் சாமான்களுக்கும், சின்னச்சின்ன இரும்புத் துண்டுகளுக்கும், சின்னச்சின்ன அலுமினிய பொருட்களுக்கும், பித்தளை பொருட்களுக்கும் விலை உயர்ந்துதான் காணப்படுகிறது. ஆனால் நாம் அதையெல்லாம் பல்பில் உள்ள சின்ன அலுமினிய தகடுதானே என்றும், சின்ன பாட்டில் மூடிதானே என்றும் கருதி, குப்பையுடன் சேர்த்து கொட்டி விடுகிறோம். இப்படி வீட்டின் எத்தனையோ கழிவுகளை நாம் அன்றாட வாழ்வில் குப்பையாகக் கொட்டி வருகிறோம்.
இப்படி குப்பையாகக் கொட்டி வரும் கழிவுகளை நாம் முறையாக - தனித்தனியாக சேகரித்து, அருகிலுள்ள ஆக்கர் கடைக்கு - காயலான் கடைக்கு (பழைய பொருட்கள் வாங்கும் கடை) மாதம் ஒருமுறை எடுத்துச் சென்றால், நம் வீட்டிற்குத் தேவையான இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குத் தேவையான காய்கறிகள், மளிகைச் சாமான்கள் வாங்கிக் கொள்ளலாம். ஆரம்ப காலத்தில் இந்தப் பயிற்சி அல்லது பழக்கம் கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். இதையும் நாம் செய்யும் பணிகளில் ஒன்றாகக் கருதி, காரியம் மேற்கொண்டால் கை மேல் பலன் நிச்சயம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இப்படி நாம் வேண்டாத பொருட்களையும் வேண்டிய பொருட்களாக்கிக் கொண்டால், வீதியும் சுத்தமாகும்; மணிபர்சும் மிச்சமாகும்.
மட்கும் குப்பைகள்:
இதேபோல், மட்கும் குப்பையாலும் நாம் மகத்தான வருமானத்தைப் பெற முடியும். நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் காய்கறிகளின் கழிவுகள், பழங்களின் கழிவுகள், உண்ணும் உணவில் எஞ்சும் கழிவுகள் - இப்படி நாம் பயன்படுத்தும் பல பொருட்களின் கழிவுகளிலிருந்து கரன்சியைப் பெற முடியும். ஆனால் நாம் யாரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டது கிடையாது. நாம் அனைவரும் தொலைக்காட்சி பார்ப்பதிலேயே பொழுதைக் கழித்து வருகிறோம். அதை விட்டுவிட்டு, இப்படியாக பொழுதைப் பயனாக்கிக் கொண்டால் அதனால் விளையும் பலன்களோ பலப் பல...
இன்றைய காலகட்டத்தில் நாம் உண்ணும் உணவுகள் கூட நமக்கு ஆபத்தை விளைவிக்கின்றன. பொதுவாக சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், வாந்தி, வயிற்றுப்போக்கு - இப்படி பல நோய்களை உணவுகள் உண்டாக்குகின்றன. ஆனால் நாம் உண்ணக்கூடிய உணவை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களிலிருந்து ஏற்படும் கழிவுகளை நமக்கு வருமானம் கிடைக்கும் வகையில் ஏற்படுத்திக் கொண்டால் நமக்கு மகிழ்ச்சிதானே...?
இதற்காக நாம் செலவு செய்ய வேண்டியதோ வெறும் 10 முதல் 15 பூந்தொட்டிகள் மட்டுமே! ஒரு பூந்தொட்டியை முதலில் எடுத்துக்கொண்டு, தினந்தோறும் வீட்டில் சேகரமாகும் ப்ளாஸ்டிக்கைத் தவிரவுள்ள குப்பைகளை அதில் இட்டு, கொஞ்சம் மண்ணும் இட வேண்டும். இப்படி பூந்தொட்டி நிறைந்தவுடன், அடுத்த தொட்டியில் சேகரிக்க வேண்டும். நிறைந்த முதல் தொட்டியில் உங்களுக்குப் பிடித்த பூ வகை செடிகளையோ அல்லது காய்கறி வகை செடிகளான கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, மிளகாய், அவரைக்காய், பாகற்காய் - இப்படி ஏதோ உங்களுக்குப் பிடித்த செடிகளை வளர்த்து, வளமான வருமானத்தைப் பெருக்கலாம். இப்படி செடிகளை வளர்க்க தனியாக இடம் ஏதும் தேவையில்லை. வீட்டின் முன்புறம், குளியலறை பகுதி, ஏன் - மாடி, மொட்டை மாடியில் கூட இதனை வளர்க்கலாம். இப்படி செய்வதன் மூலம் நம் உடலுக்கும், உள்ளத்திற்கும் ஒரு சிறப்பான உடற்பயிற்சியாகவும் அது அமைந்துவிடும்.
இதேபோல வீட்டின் முன்புறம் - பின்புறம் இடவசதி உள்ளவர்கள், தென்னை, பலா போன்ற மரங்கள் வளர்த்து வருகின்றனர். அவர்கள் அம்மரங்களின் இரு புறங்களிலும் 3 முதல் 7 அடி ஆழக்குழி தோண்டி நம் வீட்டில் உற்பத்தியாகும் கழிவுகளை இட்டு வந்தால், மரத்திற்கு நல்ல இயற்கையான உரம் கிடைக்கும். நல்ல வளர்ச்சியும் கிடைக்கும். நல்ல வருமானமும் கிடைக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. இவ்விதம் ஒவ்வொரு வீட்டிலும் நடைமுறைப்படுத்தி வந்தால், வீதியில் குப்பைகள் வர வாய்ப்பே இல்லாமல் போய்விடும். நோய் பரவும் தன்மை குறைந்து, ஆரோக்கியம் பெருகிவிடும்.
நமது நகரமும் குப்பையில்லா நகராட்சியாகத் திகழும். ஏன் - நம் மாவட்டமே குப்பையில்லா கோபுரமாகிவிடும் என்பதில் ஐயம் எதுவுமில்லை. ஒருவர் வீட்டில் இதை நடைமுறைப்படுத்திவிட்டால், சிறுதுளி பெருவெள்ளமெனப் பெருகி, பொருளாதார சேமிப்பு ஏற்படும் என்பதை நாம் தெளிவுற விளங்கிக் கொள்ள வேண்டும். மேலும் புவி வெப்பமயமாதலும் தடுக்கப்படுகிறது. எனவே...
வீட்டுத் தோட்டம் அமைப்போம் – குப்பையை
வீதியில் கொட்டுவதைத் தவிர்ப்போம்...!
அமுத மொழிகள்
1. நம்மால் முடியும் நம்மால் முடியும் குப்பையில்லா நகரமாக்க நம்மால் முடியும்.
2. வீட்டுத் தோட்டம் அமைப்போம்
வீதிகளை சுத்தமாக வைப்போம்
3. முறையாக பயன்படுத்தினால்
குப்பையிலும் கோடியைக் காணலாம்...!
4. உரக்குழி அமைத்திடுவோம்
உற்பத்தியைப் பெருக்கிடுவோம்.
5. சிறு சிறு ஆக்கர் பொருட்களம்
சிறப்பான வருமானத்தைத் தரும்.
6. ஆகாத ஆக்கர் பொருட்களையும்
அழகு சாதமாக்குவோம்.
|