“நாங்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்... தமிழ்நாட்டை எங்கள் தாய் வீடாகவே நேசிக்கிறோம்... எங்களை ஏன் தாக்குகிறார்கள்? நாங்கள் வியாபாரத்திற்கு வரவில்லை... அன்னை மாதாவிடம் ஆசி பெறவே வந்தோம்...” என்று குமுறினார் திருமதி மெர்ஸி ஃபெர்னான்டஸ்.
இலங்கையின் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த சிலாபம் நகரிலிருந்து வரும் ஜோஸப்பைப் பொருத்த வரை, ஒவ்வொரு வருடமும் தனது நேர்த்திக் கடனை நிறைவேற்ற வருவது வழக்கம். தனது பிரார்த்தனையின்படி அன்னை வேளாங்கன்னி தனது உடல் உபாதைகளைக் குணப்படுத்தியதால்தான் இந்த யாத்திரையை ஒவ்வோர் ஆண்டும் செய்வதாகவும், இந்த வருடம் அது பயங்கர நிகழ்வாக முடிந்ததை தன்னால் நம்ப முடியவில்லை என்றும், “எதிர்காலத்தில் நிச்சயம் நிலைமை சீராகும்... அடுத்த வருடம் வருவதற்கு அன்னை அருள் செய்வார்” என்று நம்பிக்கையோடு கூறினார்.
முதலில் வந்த செய்தியானது புனித யாத்திரிகர்கள் அனைவரும் சிங்களவர்கள் என்றும், ஆத்திரம் கொண்ட ஈழ ஆதரவாளர்கள் தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டினார்கள் என்றும்தான் ஊடகங்கள் கூறின. பின்பு அச்செய்தியில் திருத்தம் பெறப்பட்டு, கனிசமான தமிழர்கள் அக்குழுவில் இருந்தார்கள் என்று இலண்டன் பி.பி.சி. தமிழோசையில் தெரிவிக்கப்பட்டது. செப்டம்பர் 05ஆம் திகதி இரவு 10.22 மணிக்கு வெளிவந்த தி ஹிந்து பத்திரிக்கையின் கணினி செய்தியில், அனைவரும் தமிழ் மொழி பேசுபவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சிலாபம் போன்ற மீன்பிடி நகரங்களில் சிங்கள மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் அவர்கள் சரளமாக தமிழ் பேசுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
“ஞாயிற்றுக்கிழமை அன்று, 184 பக்தர்களைக் கொண்ட எங்கள் குழு சில பிரச்சினைகளைச் சந்திக்கும் என்று எச்சரிக்கப்பட்டபோது நாங்கள் உண்மையில் நொந்து போய்விட்டோம்... எங்களை - பேருந்தில் இருந்தவாறே பிரார்த்தனை செய்யுங்கள்! தேவாலயத்திற்குள் செல்ல வேண்டாம்!! என்று சொல்லியபோது, மாதாவே, இதென்ன சோதனை? இவ்வளவு செலவு பண்ணி சிரமம் எடுத்து உன்னை தரிசிக்க வந்த இடத்தில் இப்படியும் சோதனையா என்று அழுதுவிட்டோம்...” என்றார் ஜோஸப்.
“08ஆம் திகதி நடக்கவிருந்த திருவிழாவில் கலந்துகொள்ள முடியாமல் போனது எங்களுக்கு பெரிதும் மன வேதனையைத் தருகிறது... அத்தோடு, பாவிகள் மீது கல் வீசுவதைப் போல எங்கள் பஸ் மீது கல் வீசி, மூன்று பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து, முன்புறம் இருந்த சிறுவர்கள் இருவர் காயப்பட்டதும், மற்றவர்கள் அனைவரும் கூச்சலிட்டு அலறியதும் என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு” என்று ஜோஸப் மேலும் குறிப்பிட்டார்.
தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்திய இந்நிகழ்வு, உலகச் செய்தியாக மாறிவிட்டது. இலண்டன் பி.பி.சி.யின் தமிழ் ஒலிபரப்பான தமிழோசை - இந்நிகழ்வு பற்றி பிரபல ஈழ ஆதரவாளரான ஓர் அரசியல்வாதியைப் பேட்டி கண்டபோது, தனக்கே உரிய குரலில் அடுக்கு மொழி வசனத்தில் பேசிய அவர், “அந்தப் பேருந்தில் தமிழ் கிறிஸ்தவர்களும் இருந்தார்களே?” என்ற கேள்விக்கு, “அந்தத் தமிழர்கள் எதற்கு சிங்களவர்களோடு வந்தார்கள்?” என்று கர்ஜித்தார். என்ன அறிவிலியான கேள்வி இது?
தமிழக அரசியலில் மறுமலர்ச்சி காணத் துடிக்கும் அந்தத் தலைவருக்கு பதில் கூறும் பொறுப்பை வாசகர்களிடமே விட்டு விடுகிறேன். தமிழ் பேசும் ஹஜ் பயணிகள் எதற்காக ஹிந்தி பேசும் ஹஜ் பயணியரோடு ஒரே விமானத்தில் வந்தார்கள் என்று கேட்பது போல் இது இல்லையா? பி.பி.சி. மேலும் தலைவரை கேள்விகளால் குடைந்தபோது, அவர் தனது தொலைபேசியை நிறுத்திவிட்டார். மீண்டும் பதில் தரவில்லை. ஜனநாயகம் வாழ்க!
இது நிற்க, 1983ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தின்போது மலையகத்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டபோது, தமிழக அரசோ, இந்திய அரசோ அவர்களைக் காப்பாற்ற முன்வரவில்லை. 150 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயரால் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் அழைத்து - இல்லையில்லை, அடிமைகள் போல இழுத்துச் செல்லப்பட்ட இவர்கள்தான் தொப்புள்கொடி உறவு. வடகிழக்கு இலங்கையில் வாழும் தமிழ் பேசுபவர்கள் அல்ல. அதனை விவரிக்க இங்கு இடமில்லை.
தமிழகத்தின் இத்தகைய “தமிழ் உணர்வாளர்களால்” தமிழகத்திற்கு வர்த்தக ரீதியில் பாதிப்பு ஏற்படப் போவது உண்மை. இலங்கை - இந்திய வர்த்தகம், ஐந்து மடங்கிற்கு மேல் சாதகமாக இந்தியாவின் பக்கமே உள்ளது. ஜவுளி மற்றும் நகை, உணவுப் பொருட்களை ஏராளமான பயணியர் தினசரி கொள்முதல் செய்கிறார்கள். தி.நகரில் பிரபல கடைகளில் நிறைய இலங்கைப் பயணியரைக் காணலாம். இக்கடைகளின் வர்த்தகம் 10 சதவிகிதம் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.
மேலும், 06ஆம் தேதி வியாழக்கிழமையன்று, கொழும்பு நகரிலுள்ள தேசிய ஒருமைப்பாட்டுப் பேரவை, இந்திய வம்சாவளி வர்த்தக சமூகம், இலங்கை தமிழ் வர்த்தக சங்கம் ஆகியன இணைந்து ஆர்ப்பாட்டம் - பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தன. இந்திய தூதரகத்திற்குச் சென்ற அவர்கள், இலங்கைப் பயணிகள் தமிழகத்தில் தாக்கப்படுவதைக் கண்டித்து இந்திய ஜனாதிபதி, பிரதமர், தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோருக்கு மகஜர் ஒன்றை கையளித்தனர்.
வியாழன் அன்று கொழும்பிலுள்ள சகல தமிழ் வர்த்தக நிலையங்களும் பிற்பகலில் மூடப்பட்டன. மகஜர் அளித்த ஐவர் குழுவில் திரு. பி.சுந்தரலிங்கம், திரு. கே.துரைசாமி செட்டியார், திரு. ஆர்.அசோக் குமார், திரு. கே.இராதாகிருஷ்ணன், திரு. டி.சிவகுமார் ஆகியோர் இருந்தனர்.
தமிழகத்தின் தமிழ் உணர்வாளர்களின் செயலுக்கு இலங்கை இலங்கை வாழ் தமிழர்களிடம் ஆதரவு இல்லை என்பதை உணர்த்துவதாக அல்லவா இந்நிகழ்வு அமைந்துள்ளது?
எம்.ஜி.ஆர். அவர்களின் ஆட்சியின்போது, இலங்கை கதிர்காமத்திற்கு யாத்திரை வந்த தமிழக பயணி ஒருவர் சவரக் கடையில் இருக்கும்போது, போதையில் இருந்த ஒருவரால் குத்திக் கொல்லப்பட்டார். அவர் தாம்பரம் அ.தி.மு.க.வின் முக்கிய உறுப்பினர். அவரது சடலத்தைப் பொறுப்பேற்க எம்.ஜி.ஆர். அவர்கள் மீனம்பாக்கம் விமான நிலையம் செல்வார் என்ற செய்தி வந்ததும், அப்போதைய கொழும்பு மேயர் மற்றும் பாதுகாப்பிற்குப் பொறுப்பான அமைச்சர் என்னை அழைத்து, முதல்வர் விமான நிலையம் சென்றால் சென்னையில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை வரலாம், இலங்கையர் தாக்கப்படலாம் என்று அச்சம் தெரிவித்து, சென்னையோடு என்னைத் தொடர்புகொள்ள வேண்டினர்.
நான், சபாநாயகர் ராசாராம் அவர்ளோடு தொடர்புகொண்டு நிலைமையை விளக்கியதும், ஆவன செய்வதாக உறுதியளித்த அவர், மக்கள் திலகம் அவர்கள் விமான நிலையம் செல்லாது - அத்தொண்டரின் இல்லத்திற்குச் சென்று மரியாதை செலுத்துவதாகவும், நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனை இங்கு இப்போது குறிப்பிடுவது பொருத்தம் என்று நினைக்கிறேன். |