சாளை சலீம் அவர்கள் நகராட்சியின் தேக்க நிலையைப் போக்க வேண்டும் என்பதற்காக சளையாமல் உழைத்தது உண்மை. 22.08.2012இல் என் வீடு
வந்த அவர் ஒரு மணி நேரம் வரை ஊர் நலன் பற்றிப் பேசியது என்னையும் அந்த முயற்சிக்குத் துணை போகத் தூண்டியது. மாறாக, 5ஆவது வார்டு
உறுப்பினர் தனது இணையதளத்தில் குறிப்பிட்டது போல, சமரசக் குழுவில் நானில்லை; ஆனால் எனது ஆசி இருந்தது.
இந்த வீடியோ பிரச்சினைதான் ‘வாடி, போடி’ என்று நகர்மன்றக் கூட்டத்தில் பேச வைக்கிறதோ என்று நினைக்கிறேன். இது கணனி உலகம். ஆம்,
கணனி - உலகத்தை கிராமமாக்கிவிட்டது. என்னைப் பொருத்த வரையில் ஒவ்வொரு கூட்டத்தையும் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு
செய்தாலும் தகும் என்பதாகும். அதற்கான ஆற்றல் இங்கு உண்டு. இதன் மூலம் உள்ளூரில் உள்ள மக்களும் மன்றத்தில் நடப்பது என்ன என்று அறிய
முடியும்.
வீடியோ பதிவு செய்தால் சில குறிப்புகள் ஊறு விளைவிக்கலாம் என்று கருதினால் பதிவை நிறுத்தி - OFF THE RECORD ஆக அதனைப் பேசலாம்.
அதனை விடுத்து பதிவே வேண்டாம் என்பது கற்கால கருத்து.
ஓர் இணையதளத்தின் பிறப்புதான் வெளிநாடு வாழ் காயலர்களுக்கு நம்ம ஊர் செய்தியை உடனுக்குடன் தந்து தொடர்பை ஏற்படுத்தியது. இதன்மூலம்
ஊருக்கு பல சமூக உதவிகள் கிடைத்ததை - கிடைத்துக் கொண்டு இருப்பதையும் குறிப்பிட வேண்டும். பல தளங்கள் வரட்டும்.
மேலும் மன்ற நிகழ்வில் செய்தி சேகரிக்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து ஊடகத்திற்கும் உரிமை உண்டு. ஆஸ்தான ஊடகம் என்று எதுவும்
கிடையாது. ஆனால் சில இடங்களில் FAVOURED MEDIA உண்டு. தமிழக அரசியலில் இதனைக் காணலாம்.
மேலும் வெளிநடப்பு செய்பவர்கள் சவரக்கடையில் நுழைவதும் - போவதும் போல, மீண்டும் தானே உள்ளே வருவதும், வந்தவர் கருத்துக்
கூறுவதும், வாய்ச்சண்டையில் ஈடுபடுவதும் மரபல்ல. மறுப்பு உறுப்பினர் உள்ளே வந்தால் அவரது வெளிநடப்பு இரத்து ஆகிவிடும். இது கூட
தெரியாத அரசியலாளர்கள்தான் இந்த ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார்கள். நம்மை ஆள்கிறார்கள்.
தலைவியிடம் கேள்வி கேட்க உறுப்பினருக்கு உரிமை உண்டு. பதில் தர தலைவிக்கு கடப்பாடும் உண்டு. ஆனால் பத்து உறுப்பினர்கள் எழுந்து நின்று
ஒரே நேரத்தில் பத்து கேள்விகள் கேட்டால் பதில் தர வேண்டியவருக்கு பத்து வாய் உண்டா? தலைவியை மடக்க நினைப்பவர்கள் தலைவி தப்பிக்கவே
வழி செய்கிறார்கள் இதன் மூலம். நகர்மன்ற தேக்க நிலை போக்கப்பட வேண்டும்; அது செயல்பட வேண்டும்; யார் குத்தியும் அரிசியாக வேண்டும் என்பதுதான் எங்கள் அவா. விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. கெட்டுப் போகிறவர்கள் ...
தொலைக்காட்சி நிருபர்களை அழைத்தது யார்? கிழக்கே வசிக்கும் அன்பர் ஒருவர் 02.09.2012 அன்று மாலையில் என்னை சந்தித்தபோது, தானே
தூத்துக்குடியில் உள்ள நிருபர்களை தொலைபேசியில் அழைத்ததாகவும், நகர்மன்றக் கூட்டம் மூன்றாம் முறையாகவும் வெளிநடப்பாகப் போகிறது;
அதனை ஒளிபரப்பி, கலெக்டரின் கவனத்திற்குக் கொண்டு வந்து, மன்றத்தைக் கலைக்க வழி செய்யுங்கள் என்று கேட்டதாகவும் சொன்னார். இது
பொருத்தம்தானா?
மன்ற உறுப்பினர்கள் கட்டுப்பாடு இல்லாது, கோபம் கொப்பளிக்க உடலாலும் - நாவாலும் செயல்படுவது வீடியோ பதிவு அவசியம்தான் என்ற கருத்தை
எனக்கும் தந்தது. என்னிடம் அன்று தன்னிலை விளக்கம் தந்த உறுப்பினர் ஒருவர் “உற்சாகத்தில்” மிதந்ததையும் நான் அவதானித்தேன்.
இந்நிலையில் மன்றத்தை நடத்துவது எப்படி?
இறுதியாக, இன்றைய வெளிநாடு வாழ் காயலர்கள் புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள். ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தங்கள் சுய
விருப்பில் தங்களது நேரத்தையும் - பணத்தையும் ஒதுக்கும் அவர்கள் ஊரில் நல்லாட்சியை விரும்புகிறார்கள். ஆனால் அது கிடைக்கவில்லை என்பதே
உண்மை. நகர நிர்வாகத்தில் ஏகப்பட்ட தாமதம், குழப்படிகள் உண்டு. எனக்கு இதில் சொந்த அனுபவமும் உண்டு. எந்த நாட்டு மன்னராக -
தலைவராக - துரையாக இருந்தாலும் மண்ணின் மைந்தர்கள் என்ற அமைப்பில், பொறுப்பில் உள்ளவர்களின் பொறுப்பற்ற செயலால் அவர்களும்
பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே குரல் எழுப்ப உரிமை உண்டு.
அதிகாரம், கலந்தாலோசனை, சூரா என்ற வார்த்தைகள் அதிகம் அடிபடுகின்றன. அனைத்தும் அவசியமே. ஆனாலும் தலைமைப் பொறுப்பில்
உள்ளவர்க்கு சில வரையறைக்கு உட்பட்டு - அவசியம் கருதி - சுயமாக முடிவு எடுக்கும் அதிகாரமும் உண்டு. தமிழக அரசியலின் இரண்டு முக்கிய
தலைவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதைப் பார்த்தாவது இது புரியாதா?
அதை விடுத்து, “நீங்களே எல்லாம் செய்தால் நாங்கள் என்ன மயிருக்கு இருக்கிறோம்?” என்று உதிர்த்த வார்த்தைகள் கண்ணியக் குறைவானவை -
அதுவும் ஒரு பெண் முன்னால்.
என்று திருந்தும் காயல் நகர் மன்றம்? |