தொழில் மயமாக்குதல் என்பது, அந்தத் தொழிலால் சுற்றுவட்டாரமும், அதன் மக்களும் பயன்பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தானே ஒழிய, அதே தொழிற்சாலையால் அதனருகில் இருக்கும் ஒரு சமூகமே பாதிக்கப்படும்போது இயற்கையிலேயே எதிர்ப்பு எனபது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிடும்.
கேன்சர் என்ற கொடிய ஆட்கொல்லி வியாதிக்கு DCW தொழிற்சாலையிலிருந்து வெளியிடப்படும் சுகாதாரக்கேடான வாயுக்களும், நமதூர் கடலில் கலக்கும் அத்தொழிசாலையின் அமிலக் கழிவுகளும் முக்கியமான காரணிகள் என்று பெரிதும் நம்பப்படுகிறது.
கேன்சர் நோயின் ஆபத்துக்களையும், அதனால் ஒருவர் படும் அவஸ்தைகளையும் நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அதையும் விட வீட்டில் ஒருவருக்கு கேன்சர் என்ற வியாதி வந்துவிட்டால் அவரைச் சார்ந்துள்ள குடும்பமே பொருளாதார ரீதியில் தரைமட்டமாகி விடுகிற அவலங்களை நம்மில் கண்கூடாகக் காணாதவர் மிகவும் அரிது..
இப்படிப்பட்ட ஒரு நோய்க்கு அடித்தளமாக இருக்கும் DCW தொழிசாலை ஓன்று அவர்களுக்கு விதிக்கப்பட்ட விதிகளுக்குட்பட்டு, எந்தவித சுகாதாரக் கேடும் இல்லை என்று நிரூபணம் செய்யப்பட்டால், அதன் படி இயங்கட்டும் அல்லது அப்படிப்பட்ட ஒரு தொழிற்சாலை - அது நமதூர் நகராட்சிக்கு எவ்வளவு வருமானம் ஈட்டும் நிர்வாகமாகவும் இருந்தாலும் சரி. அது நமக்கு வேண்டவே வேண்டாம்.
வெளிநாடுகளில் வசிக்கும் எங்களைப் போன்றோர் அல்லாஹ்வுக்கு அடுத்து நமதூரில் நிலவும் இயற்கையான சூழலை நம்பிதானே எங்கள் குடும்பங்களை அங்கே விட்டுவிட்டு பிரிந்து இருக்கிறோம்? இப்போது அதற்கே ஒரு தொழிற்சாலையால் ஆபத்து என்கிறபோது, நமது வாழ்வாதாரத்தை மீட்டுப்பெற இப்படிப்பட்ட ஒரு போராட்டம் மிகவும் இன்றியமையாத ஒன்று.
எனவே, இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொள்வது என்பது நமது ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் உரிமையையும், எதிர்கால சந்ததியினரின் சுகாதாரத்தையும் காத்திட நாம் எடுக்கும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் இருக்கும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் குரல் தமிழக மற்றும் இந்திய அரசாங்கங்களின் கவனங்களை ஈர்க்கும் முகமாக, ஒட்டுமொத்த ஊரும் திரண்டு நமது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும். நமக்குள் இருக்கும் பல பிரிவினைகளைப் பார்க்கும் நேரம் இதுவல்ல!. காயலர்கள் என்ற ஒரு குடையின் கீழ் நமதூரின் அருகாமையில் இருக்கும் சகோதரர்களையும் நம்மோடு இணைத்துக்கொண்டு, அறவழியில் போராடுவோம்! இறையருள் கொண்டு வெற்றிபெறுவோம்! நோயற்ற சமூகத்தை உருவாக்குவோம் - இன்ஷா அல்லாஹ்.
நிகழ்காலம் - மாதமிருமுறை பத்திரிக்கையின் டிசம்பர் 1 - 15 இதழில் வெளியான கட்டுரை |