எல்லாப் புகழும் இறைவனுக்கே! வல்லோன் அவனே துணை நமக்கே!
இங்கே நான் ஒரு நகர்மன்றத் தலைவியாக அல்லாமல், ஒரு தாயாக - 1000 மழலைகளுக்குக் கல்வி கற்றுத் தந்த ஓர் ஆசிரியையாக, எனது உள்ளத்து உணர்வுகளை இந்த மண்ணின் மக்களோடு மனதார பகிர்ந்து கொள்கிறேன்.
மார்ச் மாதம் 21ஆம் தேதி சென்னையில் நடந்த DCW தொழிற்சாலை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டத்தில், நமது நகராட்சியின் சார்பாக கலந்து கொள்வதற்கான பயண வாய்ப்பு - எதிர்பாராத விதமாக குறுகிய கால அவகாசத்தில் அமைந்தது. சென்னையில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தைச் சார்ந்த உயரதிகாரிகள் முன்னிலையில், ஒரு தலைவியாக இல்லாமல், ஒரு தாயாக மனதில் தேக்கி வைத்திருந்த வேதனைக் குமுறல்களை வேண்டுகோள்களாக விண்ணப்பித்துவிட்டு வந்தேன்.
எனது நான்கு வயது மகளை அவர்கள் முன்பு நிறுத்தி “இந்தக் குழந்தை வயிற்றுப் பசியாற உணவுப் பொருள் எதுவும் எடுத்து வர மறந்த நான், அது நிம்மதியாக மூச்சு விட இன்ஹாலரை என்னுடன் மறவாமல் எடுத்து வந்துள்ளேன் பாருங்கள்” என்று கூறி, இன்ஹாலரைக் காட்டினேன்.
DCW தொழிற்சாலையின் நச்சுப் புகையை சுவாசித்து சுவாசித்து எங்கள் பிஞ்சுகளில் இரத்தம் எல்லாம் நஞ்சாக மாறி 10 மாதம் சுமந்து பெற்றேடுத்த தாய்குலங்களின் நெஞ்சங்களில் சொல்ல முடியாத வேதனைகளை சுமந்து கொண்டிருக்கிறோம்.
எமது பள்ளியில் பயிலும் சின்னஞ்சிறு மழலைகள் உற்சாகத் துள்ளளோடு ஓடியாடி விளையாடி மகிழும் சமயம் அவர்களது ஒவ்வொரு அசைவையும் ரசித்து சந்தோஷிக்கும் நாங்கள், வீசிங் (இளைப்பு) பிரச்சனையின் காரணமாக இந்தக் குட்டி குழந்தைகள் ஆடாது அசையாது, கண் விழிகள் பிதுங்க, மூச்சுமுட்டிப் போய் அமர்ந்திருக்கும் காட்சியை கண்டு காலங்காலமாக உள்ளுக்குள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறோம்.
எங்கள் ஊர் குழந்தைகள் நல மருத்துவர் “உங்க பிள்ளை நல்லா இருக்கனும்னா இந்த ஊரை விட்டு தூரமா செல்லுங்க” என்று வேதனையோடு கூறுகிறார். வீட்டுக்கு வீடு வாசற்படியாக ஒவ்வொரு வீட்டின் சந்தோஷத்தையும், நிம்மதியையும் சேர்த்தே அரித்து உருக்குலைக்கும் புற்றுநோய்க்கும், இன்னும் பல நோய்களுக்கும் கண் முன்னே தெரியும் காரணமாக DCW தொழிற்சாலையின் மாசு இருக்கிற பட்சத்தில், எங்கள் சந்ததிகள் நலமாக வாழ - நோயின்றி வளர, தயவுசெய்து உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்” என தலைவியாக கலந்து கொள்ள வந்த நான் - காயல் மாநகரின் அனைத்து தாய்குலங்களின் சார்பாகவும் எனது வேண்டுகோள்களை ஒரு தாயாக கண்ணீருடன் சமர்ப்பித்துவிட்டு திரும்பினேன்.
நாம் விட்டுப்போகும் விலைமதிக்க முடியாத சொத்தான நம் சந்ததிகளின் ஆரோக்கிய வாழ்வின் அஸ்திவாரமே ஆட்டம் கண்ட பிறகு, அடுக்கு மாடிகளா மகிழ்ச்சி தரும் நமக்கு...? ஆயுளே அல்பமாகிவிட்ட பிறகு நிலபுலன்களா நிம்மதி தரும் நமக்கு...?? அங்கங்கள் நலமில்லாது போன பிறகு தங்கங்களா பெருமைதரும் நமக்கு...??? நிச்சயம் இல்லை!
காலங்கள் கடந்து நிற்கும் உயிர் போராட்டத்தின் உன்னதச் சுவடுகளை நம் சுவாசம் கலந்த மண்ணில் - நம் சந்ததிகளுக்காகப் பதித்துச் செல்வோம். நாம் ஒவ்வொருவரும் கண்ட இறப்புகளிலிருந்து, போராட்ட உணர்வுகளை “ஃபீனிக்ஸ்” பறவையாக நாம் பிறந்த ஊரில் உயிர்த்தெழச் செய்வோம். நம் ஊர், நம் மக்கள், நம் நலன் என்று ஓரணியில் ஒன்றுபட்டு நின்று போராடும் மக்கள் சக்தி இறையருளால் வெற்றிபெறும்.
நிகழ்காலம் - மாதமிருமுறை பத்திரிக்கையின் டிசம்பர் 1 - 15 இதழில் வெளியான கட்டுரை |