ஓடி விளையாடு பாப்பா - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா
என்று பாடினான் பாரதி.
2012, டிசம்பர் 14ம் தேதி அமெரிக்காவில் கனெக்டிகட்டியிலுள்ள நீயுடவுன் நகரின் சேன்டிக்ஹுக் ஆரம்பப்பள்ளியில் ஓடிவிளையாடிய 20 பாப்பாக்களையும், 6 பணியாளர்களையும் துப்பாக்கியால் சுட்டு கொன்றான் ஆடம் லான்ஸா என்ற 20 வயது பாதகன். இந்த துப்பாக்கி சூட்டில் இறந்த குழந்தைகள், 5 வயதிலிருந்து 10 வயதுக்குட்பட்ட பிஞ்சு பாலகர்கள்.
இந்த பாதகன் வைத்திருந்த துப்பாக்கி அவன் தாயார் நான்ஸி லான்ஸாவுக்கு சொந்தமானது என்றும், நான்ஸி பல வகைப்பட்ட துப்பாக்கிகளை சேகரித்து வைத்திருந்ததோடு, துப்பாக்கி சூடும் பயிற்சி இடங்களுக்கும் தன் மகனை அழைத்து சென்று துப்பாக்கி சுடுவதில் ஆர்வம் ஊட்டியுள்ளார் தனக்கு துப்பாக்கி ஆர்வமூட்டிய தன் தாயின் துப்பாக்கியை எடுத்து அவளையே குறிப்பார்த்து முதலில் சூட்டு வீழ்த்திவிட்டு பின்னர் அருகிலிருந்த சேன்டிக்ஹுக் பள்ளிகூடத்துக்கு வந்து குழந்தைகளையும், பணியாளர்களையும் சுட்டு கொன்றிருக்கிறான். இன்று அந்த பாதகனின் முகத்திலும், அமெரிக்காவின் முகத்திலும், பாரதி சொன்னது போன்று குழந்தைகள் மட்டுமல்ல இந்த உலகமே உமிழ்கிறது.
இது போன்று தனிநபரால் நடத்தப்படும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அமெரிக்காவில் நடப்பது புதிதல்ல. அண்மையில் கொலராடோ மாகாணத்தில் திரையரங்கம் ஒன்றில் முகமூடி அணிந்து வந்த ஒருவன் தனது துப்பாக்கியால் 12 பேரை சூட்டு கொன்றான்.
கடந்த ஏப்ரல் மாதம் ஆக்லாந்தில் உள்ள கிறிஸ்த்துவ கல்லூரியில் துப்பாக்கி சூடு நடந்தது, அதில் 7 பேர் உயிரிழந்தனர். ஜுலை மாதம் அரோரா நகரில் ஒரு சினிமா தியேட்டரில் புகுந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக சுட்டதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
அதை அடுத்து ஆகஸ்டு மாதம் வில்கான்சின் மாகாணத்தில் ஒரு சீக்கிய குருத்வாரவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இவை அனைத்தும் தனி நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம்தான்.
அமெரிக்காவில் 1982 முதல் துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்த சம்பவங்கள் என்று எடுத்துக்கொண்டால், அவற்றில் 139 துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அங்கு 3,00,000 துப்பாக்கிகள் சாதாரணப் பொதுமக்கள் வசம் இருப்பதாக மதிப்பிடப்படுகின்றது, 2007ல் 100 பேருக்கு 88 பேர் துப்பாக்கிகள் வைத்திருப்பதாக நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. துப்பாக்கி வைத்துகொள்ளும் உரிமையை அரசியல் சாசனத்தில் உரிமையாக்கி உள்ள ஒரே நாடு அமெரிக்கா. இது அமெரிக்காவுக்கு அவமானமாக தெரியவில்லையா?
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் தேசிய துப்பாக்கி சுடுவோர் சங்கத்தில் 4,00,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அமெரிக்காவில் பெரும்பாண்மை மக்களிடையே துப்பாக்கி வைத்து கொள்வதற்கு எதிராக ஆதரவு இல்லை. மாறாக துப்பாக்கி வைத்து கொள்வதை தங்கள் உரிமையாக கருதுகின்றனர். சேன்டிக்ஹூக் பள்ளிகூடத்தில் இந்த சம்பவத்தில் இறந்த குழந்தைகள் நினைவாக அமெரிக்காவில் பிராத்தனை கூட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால் பிஞ்சுகளை கொன்று குவிக்க காரணமாக இருக்கிற துப்பாக்கி வைத்து கொள்ளும் உரிமையை விட்டு கொடுக்க பெரும்பாலான அமெரிக்க பிரஜைகளுக்கு மனமில்லை. துப்பாக்கி கலாச்சாரத்துக்கு முடிவுகட்ட வழி காணாமல் தேவாலயத்தில் பிராத்தனை நடத்தும் இவர்களை யார் மன்னிப்பார்?
பள்ளி குழந்தைகள் சுட்டுகொல்லப்பட்ட சம்பவத்திற்காக கண்ணீர் வடிக்கிற அமெரிக்கா அதிபர் ஒபாமா அமெரிக்காவின் துப்பாக்கி உரிமம் வழங்கும் சட்டத்தில் உடனடியாக மாற்றம் கொண்டுவர எந்தமுடிவையும் எடுக்கவில்லை. ஆனபின் அழுது என்ன பயன்? ஒபாமாவின் அழுகை மட்டும் அமெரிக்காவில் எதிர் காலத்தில் தனிநபர் துப்பாக்கி பிரயோகத்தை தடுத்து விடுமா?
இது போன்ற சம்பவம் 1996ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தில் நடந்தது. துப்பாக்கி சூட்டில் பலர் கொல்லப்பட்டனர். ஆனால் இந்த சம்பவம் அந்நாட்டின் துப்பாக்கி உபயோகிக்கும் சட்டம் கடுமையாக்க பட வேண்டும் என்று அந்நாடு முழுவதும் எதிர்பலை ஏற்பட காரணமாக இருந்தது. அதன்பின் Semi Automatic துப்பாக்கி ரகத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. மேலும் துப்பாக்கி உரிமவிதிகள் சட்டம் கடுமையாக்கப்பட்டது.
ஆனால் அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் இதுபோன்ற துப்பாக்கி சூடு தொடர்ந்து நடந்து வருகின்ற போதும் தனிநபர்கள் துப்பாக்கி வைத்து கொள்ளும் சட்டம் கடுமையாக்கப்படவில்லை. நடைபெற்று வருகின்ற ஒவ்வொரு சம்பவங்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிக்கபடுவதோடு, அது முடிவு பெற்று விடுகிறது. உலகிற்கெல்லாம் சட்டாம்பிள்ளையாக செயல்படுகிற அமெரிக்க ஏகாதிபத்தியம் தம் மக்களில் துப்பாக்கி தேவையற்றவர்களிடமிருந்து அதை பிடுங்குவதற்கு ஏன் தயங்குகிறது என்று உலகமே வியக்கிறது.
இதுபோன்ற தனிநபர் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமம் இந்தியாவிலும் உள்ளது. உரிமம் பெற்றும், பெறாமலும் வைத்திருந்த துப்பாக்கிகளால் தனிநபர்களால் சுடப்பட்ட சம்பவங்கள் பல்வேறு காலங்களில் இந்தியாவிலும் நடந்து இருக்கிறது, நடந்து வருகிறது.
52 வருடத்திற்கு முன்னால், ஜனவரி 30, 1948 அன்று மகாத்மா காந்தி ஹிந்து மதவாதியான நத்ராம் கோட்சேயினால் சுட்டு கொல்லப்பட்டார். பின்னர் கோட்சேயும் அவரது நண்பன் நாரயனனும் தூக்கிலிடப்பட்டனர். கோட்சேயின் சகோதரன் கோபால் கோட்சேயும் அவருடன் இருவரும் ஆயுள்தண்டனை பெற்றனர். அன்று நத்ராம் கோட்சே காந்தியை சுட பயன் படுத்திய துப்பாக்கி 'BERETTA 1934" என்ற Semi-Automatic வகை கைத்துப்பாக்கி (அந்த துப்பாக்கியின் படம் இதன்கீழ் உள்ளது) நத்ராம் கோட்சே அந்த துப்பாக்கியை பயன்படுத்திய காலத்தில் இந்தியாவில் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமத்திற்கான சட்டம் ஏதும் அமலில் இருந்ததாக தெரியவில்லை. உரிமம் இல்லாத அந்த காலத்திலேயே நத்ராம் கோட்சேயின் கைகளுக்கு அந்த துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது கேள்விகுறியாக உள்ளது. இது போன்ற சம்பவங்கள் இந்தியாவின் பல பகுதிகளிலும் நடந்தே வந்துள்ளது.
BERETTA 1934 GUN USED BY GODSE TO SHOOT GANDHI
தமிழகத்தின் அந்தக் கால முன்னனி சினிமா நட்சத்திரம் எம்.ஜி.ராமச்சந்திரன் 1967ம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வியாழக்கிழமை அன்று தனது நண்பரும் சக நடிகருமான எம்.ஆர்.ராதாவால் கைத்துப்பாக்கி கொண்டு சுடப்பட்டார். குண்டடிப்பட்டதில் எம்.ஜி.ராமச்சந்திரன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துக்கொண்டார். பின்னர் தமிழகத்தின் முதலமைச்சராகவே ஆனார். இந்த சம்பவத்தில் ஈடுபடுத்தப்பட்டது 8 குண்டுகளை கொண்டு சுடும் துப்பாக்கி என்று தெரியவருகிறது.
டிசம்பர் 11, 2007 அன்று இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் குர்காவூன் நகரத்தில் உள்ள ஈரோ இண்டர்நேசனல் பள்ளியில் 8ஆம் வகுப்பில் படிக்கும் அபிஷேக் தியாகி என்ற மாணவனை சகமாணவன் தன் அப்பாவின் கைதுப்பாக்கியை எடுத்து வந்து சுட்டுகொன்றான். இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி 32 Harrison வகை துப்பாக்கி, அது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது.
ஆகஸ்டு 6, 2012 அன்று உத்திரபிரதேச மாநிலத்தில் நொய்டாவில் உள்ள கிரேட்டர் இந்தியா ப்ளேஸ் என்ற இடத்தில் உள்ள வணிக வளாகத்துக்கு அருகில் வியாபாரி ஒருவரிடமிருந்து பணங்களை வழிபறி செய்வதற்காக கொள்ளையர்கள் சுட்ட சம்பவத்தில் ஒரு ஆட்டோ ஓட்டுநரும், செக்யூரிட்டி பணியாளர் ஒருவரும் படுகாயம் அடைந்த சம்பவம் நடைபெற்றது.
சென்னையில் உள்ள இராணுவ குடியிருப்பு வளாகத்தில் உள்ள மரங்களிலிருந்து விழுந்து கிடக்கும் வளாங்காய்களை பொறுக்க சென்ற சேரி குடியிருப்பு பகுதியின் தில்சன் என்ற சிறுவனை ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ராம்ராஜ் என்பவர் தன் கைதுப்பாகியால் சுட்டதால் அந்த சிறுவன் உயிர் இழந்தான்.
அண்மையில் தில்லி மெஹராலியிலில் மதுபானம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலின் இந்திய பெரும் முதலாளி குருதீப் சிங் 'பொன்டி சந்தா" மற்றும் அவரது இளைய சகோதரர் ஹர்தீப் ஆகியோர் 3 ஏக்கர் நிலத்துக்கு தங்களுக்குள் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கியால் சுட்டு டெகாண்டதில் இருவரும் இறந்துபோயினர். இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி AK 47 உட்பட மூன்று வகை உரிமம் பெற்ற துப்பாக்கிகள் என தெரிய வருகிறது.
மேற்கண்ட துப்பாக்கி சூடு சம்பவங்கள் இந்தியாவில் சில இடங்களில் பல காலகட்டங்களில் நடைபெற்றவை என்றாலும் இன்னும் இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அவ்வப்போது நடைபெற்று வருகிறது. துப்பாக்கி வைத்து கொள்வது தன் சுய பாதுகாப்பிற்கே என்று உலகெங்கிலும் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் வாதிடுகிறார்கள். இது எதை காட்டுகிறது என்றால் ஒரு மனிதனின் மீது சக மனிதனுக்கு நம்பிக்கை இல்லை என்பதையும், நம்பிக்கை இல்லாத தன்மை உலகெங்கிலும் மேலோங்கி வருகிறது என்பதையும் ஒரு மனிதனுக்கு சக மனிதன் மீது கோபமும், அச்சமும் பழி வாங்கும் தன்மையும் பெருகி வருகிறது என்பதையும், பாதுகாப்பில்லாத உணர்வு அதிகமாகி விட்டது என்பதையும்தான் காட்டுகிறது. எனவேதான் மனிதன் பிற மனிதனை நம்பாமல் தனது துப்பாக்கியை பாதுகாவலாக நம்புகிறான். தன்னுடன் வாழும் சக மனிதனை ஏதோ ஒரு காரணத்திற்காகவோ அல்லது எந்த காரணமின்றியோ கொல்ல துடிக்கிறான்.
இது மாறவேண்டுமானால் இறைநம்பிக்கை வளர வேண்டும், உலகெங்கும் தனி மனித பாதுகாப்பு அரசால் பலப்படுத்தப்படவேண்டும். நாட்டின் பாதுகாப்பு பணிசார்ந்த துறைகளில் இருபவர்களிடம் மட்டும்தான் தேவையானால் துப்பாக்கிகள் இருக்க வேண்டும். தனிமனிதர்கள் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை ரத்து செய்யப்பட வேண்டும். கள்ளச்சந்தையில் துப்பாக்கி விற்பனை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இறைவனால் படைக்கப்பட்ட உயிர்களை மனிதன் பறிப்பதற்கு எந்த சட்டமும் உரிமை வழங்கக்கூடாது.
உலகமெங்கும் உள்ள தனி மனிதர்கள் வைத்திருக்கும் துப்பாக்கிகளை பிடுங்கி எடுத்து அவையனைத்தையும் ஆழ குழிதோண்டி புதைக்க வேண்டும். இந்த நிகழ்வில் உலக துப்பாக்கிதாரிகள் அனைவரும் முழங்காலிட்டு நிற்கவேண்டும், அதில் அமெரிக்க துப்பாக்கிதாரிகள் தன் அதிபர் ஒபாமாவுடன் முன்வரிசையில் நிற்கவேண்டும். துப்பாக்கி புதைகுழிக்குள்ளிருந்து வண்ண நறுமணப் பூக்கள் வெடித்து சிதற வேண்டும். மனுட மனங்கள் மகிழ வேண்டும்.
|