அது நவம்பர் 07, 2012. 'உலக நாயகனின்' பிறந்த தினம். ஓர் உற்சாகமான தினம்தான் அவருக்கு. ரசிகர்கள் அப்படி இப்படி என்று கொண்டாடிக் கொண்டிருக்க, ‘நாயகன்’ ‘அம்மா’வின் ஆசி வேண்டி அவரை நாடிச் சென்றார். ‘அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே’ என்று களத்தூர் கண்ணம்மாவில் பாடி திரை உலகத்திற்கு வந்த அவர், தனது 58 வயதிலும் ஒரு ‘அம்மா’வை நாடிச் சென்றது ஆச்சரியமல்ல.
மருதநாயகம் முடக்கப்பட்டு கிடக்கையில், அதற்கு இணையான தனது நவீன படைப்பாக - வாள் சண்டை, குதிரை ஏற்றத்திற்கு பதிலாக - துப்பாக்கி, வெடிகுண்டு, ஹெலிகாப்டர் என்று பிரம்மாண்டமாக புதிய படத்தில் தான் அசத்தியிருப்பதாகக் கூறிய அவரது வர்ணணையில் அம்மா அசந்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.
அடுத்து வந்தது ஓர் இடி. தொலைக்காட்சி உரிமையை ஜெயா டிவிக்கு கொடுக்கும்படி அம்மா கேட்டதுமத், நாயகன் தான் வெடிகுண்டால் தாக்கப்பட்டது போல் உணர்ந்தார். தடுமாறிய அவர் சற்று நிதானித்து, திருப்தியான வியாபார ஏற்பாடுகள் செய்தால் தனக்கு ஆட்சேபனை இல்லை என்று கூற, அம்மா ஜெயா டிவி நிர்வாகிகளைத் தொடர்புகொள்ளச் சொல்வதாகக் கூறி முடித்துக்கொண்டார்.
அதன்படி ஆரம்ப வர்த்தக ஏற்பாடுகள் இரு தரப்பாருக்கும் திருப்தி போலவே இருந்தன. ஆகவே ஜெயா டிவிக்கு audio release உரிமை வழங்கப்பட்டது. இசை வெளியீடானது டிசம்பர் 07ஆம் திகதி ஜெயா டிவி ஏற்பாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் நடந்தன. பாடல்கள் வைரமுத்து, கமல்ஹாசனால் இயற்றப்பட்டன. இசை ஷங்கர் - ஹிசன் - லோய் ஆகிய மூவர் குழு. பாடியவர்கள் ஷங்கர் மகாதேவன், சூரஜ் ஜகன், பென்னி தயால், நிகில் டி சூசா, கமல்ஹாசன் ஆகியோர்.
விஸ்வரூபம் ஜெயா டிவிக்கு என்ற முத்திரை ரசிகர்கள் மனதில் குத்தப்பட்டது. ஜெயா டிவிக்கும் அது பெருமையைத் தேடித் தந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்து அது தொலைக்காட்சி உரிமைக்குரிய விலையைப் பேசியபோது விஸ்வநாதனுக்கு தகதக திமிதிமி என கை கால்கள் ஆடத் துவங்கிவிட்டன. அவரது பாணியில், என்ன இவ்வளவு குறைச்சலா பேசுறீங்க, நான் கடன் பட்டு 100 கோடி செலவழிச்சிருக்கிறேன் என்று தன் பக்கத்து வாதத்தை அவர் சொல்லியும் ஜெயா டிவியால் அவர் கேட்ட தொகையைக் கொடுக்க முடியவில்லை.
இசை வெளியீட்டிற்கு முன்பாகவே இந்த தொலைக்காட்சி உரிமை, பேசி முடிக்கப்பட்டு கையெழுத்தாகி இருக்க வேண்டும். அதுதான் வியாபார முறை. ஆனால் ஜெயா டிவி தனது ‘செல்வாக்கை’ பாவித்தது என்பதும், அம்மா மீது உள்ள மரியாதையால் கமல் அவ்வளவு கறாராக நடக்கவில்லை என்பதும் உண்மை.
இப்போது விஜய் டிவி காட்சிக்குள் நுழைந்தது. 1994இல் துவங்கிய காலம் முதல் பல கைகள் மாறிய இந்த டிவி அரசியல் கலப்பு இல்லாது இருப்பதால் - அதாவது அரசியல் ஆதரவு இல்லாது இருப்பதால் தரமான நிகழ்ச்சிகளைத் தருவதன் மூலமே தன்னை தக்க வைக்கலாம் என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது. நல்ல நிகழ்ச்சிகளைத் தருகிறது. திரைப்பட உரிமைக்கு மற்றவர்களை விட இவர்கள் அதிக விலை கொடுக்கிறார்கள்.
ஆரம்பத்தில் தொலைக்காட்சியை எதிரியாகப் பார்த்த சினிமா உலகம், இன்று ஓரளவு அதன் மூலம் பயன்பெறுகிறது. மிகவும் குறைந்த செலவில், அதிகம் அறிமுகமில்லாத, அல்லது முற்றிலும் புது முகங்களையே கொண்ட படத்திற்கு 10 முதல் 50 லட்சம் விலை கிடைக்கிறது. பிரபல்யங்களின் ‘மெகா’ தயாரிப்புகள் 5 கோடி முதல் 10 கோடி வரை சாதாரணமாக விலை போகின்றன.
விஜய் டிவி ஒன்பது இலக்க தொகைக்கு விஸ்வரூபத்தை தனதாக்கிக் கொண்டது. அதன்படி அது விளம்பரப்படுத்த ஆரம்பித்தது. முதல் பிரச்சினை இங்குதான் உருவாகியது. ஜெயா டிவியைப் பொருத்த வரையில் இது ஒரு வியாபாரத் தோல்வியாகப் பார்க்கப்பட்டது. அம்மாவைப் பொருத்த வரையில் ஒரு மானப் பிரச்சினையாக - தான் அவமானப்படுத்தப்பட்டதாக அவர் நினைத்தார்.
இது நிற்க, ஒரு கல் ஒரு கண்ணாடியை உடைத்தது போக, மீண்டும் ஒரு கல் டிசம்பர் 29ஆம் திகதி வீசப்பட்டு, உடைந்த கண்ணாடியை மேலும் சேதப்படுத்தியது. சென்னை காமராஜர் அரங்கத்தில் நடந்த - மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் ‘ஒரு பார்வை’ என்ற புத்தக வெளியீட்டில் கமல் பேசிய பேச்சு கனலைத் தூண்டியது. அரசியல் பிரமுகர்கள் பலர் உட்பட - கலைஞர், ரஜனி ஆகியோரும் கலந்துகொண்ட விழா அது.
ரஜனி பேசும்போது, “கருணாநிதி, மூப்பனார், சிதம்பரம் ஆகியோரோடு எனக்கு நெருக்கமான சிநேகம் ஏற்பட்டது... பல அரசியல் உண்மைகளை இவர்கள் மூலம் அறிந்ததோடு, அரசியலில் இவ்வளவு சிரமங்கள் உள்ளன என்பதையும் அறிந்தேன்... எனக்கு அரசியல் அவ்வளவாகத் தெரியாது... அதனால்தான் அரசியலுக்கு வரக்கூடாது என்று இருக்கிறேன்... அப்படி வந்தால் என் வழி தனி வழியாகத்தான் இருக்கும்” என்றார்.
1998ஆம் வருடம் ஹாங்ஙாக்கில் நான் ரஜனியை ‘ஹாங்காங் ஹோட்டலில்’ சந்தித்து பேட்டி கண்டு குமுதம் பத்திரிக்கையில் எழுதியதில், ரஜனி அரசியலுக்கு வர மாட்டார் என்று குறிப்பிட்டு இருந்தேன். அவரது பேச்சிலிருந்து அக்கருத்து தெளிவாகப்பட்டது எனக்கு.
கமலஹாசன் இந்நிகழ்ச்சியில் பேசும்போது, “எப்போதும் அறிவாளர்களிடம் பழகுவதை விரும்புவேன்... இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருப்பது கடமைக்காக அல்ல... கடன் பட்டவனாக வந்துள்ளேன்... சிதம்பரத்தின் சாதனைகள் பற்றி விழா எடுக்க வேண்டும் என்றால் அதிக அளவு விழாக்கள் நடக்க வேண்டும்... இன்னும் சொல்ல வேண்டியது எவ்வளவோ உள்ளது” என்று சொல்லிய கமலின் பேச்சு, பின் அவர் சொல்லியது, அதனை கலைஞர் திசை திருப்பியது என அனைத்தும் அம்மாவை எரிச்சலடையச் செய்ததோடு, சுந்தரகாண்டத்தில் இருந்த கமலை யுத்த காண்டத்திற்கு இழுந்து வந்ததோடு, பின்பு வதை படலத்திற்கும் இட்டுச் சென்றது.
மேடைக்குக் கீழே சபையில் அமர்ந்திருந்த சிதம்பரத்தைப் பார்த்து கமல், "உச்சத்தில் இருக்கும் நிதி அமைச்சரைக் கீழே இறங்கும்படி கேட்டார்கள்... இதற்கு மேலும் அவர் கீழே இறங்க வேண்டாம்... மனிதர்கள் புகழின் உச்சிக்கு ஏற வேண்டுமே தவிர இறங்கக் கூடாது... அவர் இன்னும் சாதிக்க வேண்டியது எவ்வளவோ உள்ளது... நிதியமைச்சருக்கு நல்ல பெயர் இருப்பதால் அவருக்கு இன்னும் கூடுதல் பொறுப்புகள் வரும். அவருக்கு கூடுதல் பொறுப்புகள் வர வேண்டும் என்பது என் ஆசை... அதை அவர் நிறைவேற்றித், தர வேண்டும்... எனது ஆசையைக் கூற எனக்கு உரிமை உண்டு... அது நிறைவேறினால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்” என்று பேசிக்கொண்டு போன கமல் இறுதியாக, “வேட்டி கட்டிய தமிழன் இந்தியாவின் அடுத்த பிரதமராக வர வேண்டும்” என்று கூற, மண்டபம் கை தட்டுகளால் அதிர்ந்தது.
அதனைத் தொடர்ந்து பேசிய கலைஞர் வைத்த பொடி, வெடியாக மாறியது. “வேட்டி கட்டிய தமிழன்தான் பிரதமராக வர வேண்டும் என்று கூறியதோடு, புடவை உடுத்த தமிழ்ப் பெண் பிரதமராக வரக்கூடாது என்று கமல் சொல்கிறார் என்று சேர்த்து வாசித்தார் அவர். இது ஜெயலலிதாவிற்கு அடித்த அடி. விளைவு? அடிபட்டது கமல்தான்.
தானைத் தலைவர் விரும்பி இருந்தால் 1996 இல் ஒரு “வேட்டி கட்டிய தமிழன்" பிரதமராக வந்திருக்கலாம். கெடுத்தது அவர்தான். இப்போது சிவகங்கை சின்னப்பயல் என்று இவர் அழைத்தவர் பிரதமர் ஆகவேண்டுமாம். கலைஜர் ஒரு காற்றாடி.
கருணாநிதிக்கும், ஜெயலலிதாவிற்கும் எப்படி வெளிப்படையான அரசியல் குரோதம் உண்டோ அதே போல ஜெயலலிதாவிற்கு சிதம்பரம் மீது மறைமுகமான விரோதம் உண்டு. இவர் முதன்முறையாகப் பதவிக்கு வந்த காலத்திலேயே - அதாவது, ராஜீவ் மறைவிற்குப் பின் காங்கிரசின் உதவியோடு, அப்போதே இணையமைச்சராக இருந்த சிதம்பரம் திருச்சி வந்தபோது, விமான நிலையத்திலேயே அவரது காரை அ.தி.மு.க.வினர் தாக்கினர். இவற்றுக்கெல்லாம் காரணங்கள் பல.
அம்மா தான் 30 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன் என்கிறார். உண்மைதான். கொள்கை பரப்புச் செயலாளராக 80இன் மத்தியில் வந்த அவர், பல படிகளைத் தாண்டி, பல சோதனைகளையும் சந்தித்து, இன்று இந்நிலையில் உள்ளார். பாராட்டும் நிகழ்வுகள் சில அவரிடம் இருந்தாலும், பாராட்ட முடியாத குணங்கள் பல அவரிடம் உள்ளன.
கமலுக்கு எப்படி ஓர் ஆசை இருக்கிறதோ அது போல அம்மாவிற்கும் ஓர் ஆசை - பெரிய ஆசை - பேராசை உண்டு. அது இன்று நேற்று வந்தது அல்ல. என்.டி.ராமராவ் தேசிய அரசியலில் இருக்கும்போது வந்த தேர்தலில் தன்னை துணைப் பிரதமராக நியமித்தால் தான் பெரிய அளவில் தேர்தல் நிதி தருவதாகக் கூறியதாக ஒரு செய்தி வலம் வந்தது. ஆகவே 40ம் வென்றால் அம்மாதான் பிரதமர் என்ற மாயையை அவர் கிளப்பி விட்டுள்ளார். கமலின் பேச்சு அந்தக் கனவிற்கு எதிரானது. தாங்குமா தாயுள்ளம்?
இவர் திட்டம் 40தோடு நிற்கவில்லை. இவர் ஓர் அணியை - பெரும்பாலும் நான்காவது அணியை உருவாக்கலாம். அதில் வலது கம்யூனிஸ்ட், பிஜு ஜனதா தளம் போன்ற சில வேறு கட்சிகளையும் சேர்த்து, 60 முதல் 80 வரை எட்டலாம் என நினைக்கலாம். நிச்சயமாக அ.தி.மு.க.வும், காங்கிரசும் சேர வாய்ப்பே இல்லை. இந்த அணி பா.ஜ.க.வின் வாசலில்தான் நிற்கும். அங்கு மோடி நிற்கிறார். பா.ஜ.க. எப்படியும் 120 பெறும் என்று கணிக்கிறார்கள். அப்படியான சூழலில் எப்படி மோடி விட்டுக் கொடுப்பார்? மகாபாரதம் மாதிரி, ஒரு கிராமம் தராவிட்டால், ஒரு தெரு தா என்பார் ஜெயலலிதா. இல்லாவிடில் ஒரு வீடு தா என்றும் கேட்கலாம்.
மூன்றாவது அணி ஒன்று உத்திரப் பிரதேசத்தில் இருந்து உருவாகி, பின்பு அது காங்கிரஸ் கடலில் கலக்கலாம். அப்படியான சூழலில் காங்கிரஸ் அரசமைக்கும் வாய்ப்பு சற்று கூடுதலாகவே இருக்கும். பலமான எண்ணிக்கை இருந்தால் ராகுல் பிரதமராகலாம். சற்று கடின பிரசவமாக இருந்தால் வேட்டி கட்டிய தமிழன் பிரதமராகலாம். சென்று வருகிறேன் என்று நான் முன்பு இந்த இணையதளத்தில் எழுதிய கட்டுரையில், ‘ஒரு தமிழன் பிரதமராகலாம். யார் அது? சிதம்பர ரகசியம்’ என்று குறிப்பிட்டிருந்தேன். நினைவிருக்கா?
இசை வெளியீட்டை ஜெயா டிவி செய்ய, தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவி வாங்கி விளம்பரப்படுத்துவது தனக்கு அவமானம் என்று குமுறிய அம்மாவின் பிரதமர் (பகல்) கனவிற்கு உலக நாயகன் எதிராக வார்த்தைகளைப் பரப்பி விடவே அவர் கொதித்துப் போனார்.
தன்னை எதிர்ப்பவர்களையும், எதிர்த்தவர்களையும் அணைத்தே தன் காலடியில் விழச் செய்வது மக்கள் திலகத்தின் குணம். ஆனால் அம்மாவோ தன்னை எதிர்க்கும விதை ஒன்று முளைக்கையிலே வெளிப்படும் ரூபம் அது என்ன ரூபமாக இருந்தாலும் வெட்டி விட வேண்டும் என்பது அவர் குணம். இப்போது கூறுங்கள், 'விஸ்வரூபம்' எடுத்தது யார்?
|