அது ஏப்ரல் 22ஆம் தேதி நள்ளிரவைத் தொட்டுவிட்டது. இரவு 11.30 மணிக்கு, மலேஷியாவின் கோலாலம்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் பேருந்திற்காகக் காத்திருந்தோம். இறுதியாக பேருந்து வந்தது. என் மகளையும், அவளது கணவரையும் அனுப்பி விட்டு, நானும், என் மனைவியும் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்புவதற்காக, வந்த டாக்சியை கை காட்டி நிறுத்தினோம். சாரதி தமிழர். உள்ளே நுழைந்ததும் வரவேற்றது மக்கள் திலகத்திற்காக டி.எம்.சௌந்திர ராஜன். ‘தாயில்லாமல் நானில்லை’ என்று உரத்து பாடினார். உண்மைதான்.
முன் ஆசனத்தில் அமர்ந்த நான் ஓட்டுநரைப் பார்த்து, “நீங்கள் எம்.ஜி.ஆர். ரசிகரா?” என்று கேட்டேன். “என்ன சார் அப்படி கேட்டுட்டீங்க...? ரேடியோவில் பாட்டு போடுறாங்க. நான் கேட்கிறேன்...” என்றார். ஆம், நான் ஹோட்டல் செல்லும் வரை எம்.ஜி.ஆரின் தனிப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. ஓட்டுநர் மேலும் பேசினார்.
“அவரைப் பிடிக்கிறவங்க உண்டு... பிடிக்காதவங்க உண்டு... இல்லாட்டி எப்படி சார் ஒருத்தர் அவரை சுடப்போவார்...?” என்று, 1967இல் நடந்த எம்.ஆர்.ராதா துப்பாக்கி சூடு சம்பவத்தை அவர் விவரமாக வர்ணித்தபோது, உண்மையில் எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. எப்படி இவர் இவ்வளவு தெளிவாக இத்தனை விஷயங்களையும் நினைவில் வைத்திருக்கிறார் என்றெண்ணி வியந்தேன். இறுதி வரை அவர் பேச்சிலிருந்து அவர் எம்.ஜி.ஆரின் விசிறியா அல்லது எதிரியா என்று என்னால் இனங்காண முடியவில்லை.
மே 5 ல் வரக்கூடிய மலேஷிய நாடாளுமன்றத் தேர்தலின் பக்கம் எனது பேச்சைத் திருப்பினேன். “தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?” இது என் கேள்வி. “அரசாங்கம்தான் சார் ஜெயிக்கும்... எதிர்க்கட்சிக் காரங்க வாயால் பேசுவாங்க... அவங்களால ஒன்னும் செய்ய முடியாது... அப்படியே அவங்க வந்தாலும் மூனு மாசத்துல போட்டுட்டு ஓடிடுவாங்க... யாரு சார் அவங்களுககு சப்போர்ட் பண்ணுவாங்க? அமெரிக்கா காரன் சப்போர்ட் பண்ணுவான்னு நினைக்கிறாங்க... அதெல்லாம் நடக்காது...” என்று கூறிக்கொண்டே போனார்.
“இப்போ பாருங்க! நாங்க டாக்சி ஓட்டுறோம்... எங்களுக்கு டாக்சி லைசென்ஸ் தர்றாங்க... இரண்டு டயர் இலவசமா தர்றாங்க... மாச தவணைல பணம் கட்டி, 6, 7 வருஷத்துல டாக்சி எங்களுக்கு சொந்தமாகிறது...” என்று பல வசதிகளைப் பற்றி சொல்லிக்கொண்டே வந்தார்.
“இந்த அரசாங்கத்தில் ஊழல் அதிகமாக இருக்கிறதாகவும், எல்லோரும் சம்பாதிக்கிறவங்களா இருக்கிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டுகிறார்களே...?” என்று கேட்டபோது, அவர் அதை மறுக்கவில்லை. “ஆமாம் சார்... நம்ம வாழ்க்கை முன்னேறுதா
இல்லையா? நம்ம குழந்தைகள் படிச்சு முன்னுக்கு வர்றதுக்கு வாய்ப்பு தர்றாங்களா இல்லையான்னு நாம அதைப் பார்த்துகிட்டு போகனும் சார்... அவன் சாப்பிடுறதை நாம தடுக்க முடியாது” என்றார்.
மொத்தத்தில், இவர் எம்.ஜி.ஆரின் அனுதாபியா இல்லையா என்பதை இவர் வெளிக்காட்டவில்லை. ஆனால், தான் ஆளும் கூட்டணியின் தீவிர ஆதரவாளன் என்பதை வெளிப்படையாகக் காட்டினார்.
சென்ற நாடாளுமன்றத் தேர்தலில், ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்த மலேஷிய இந்திய காங்கிரஸ் நியாயமான பின்னடைவைச் சந்தித்ததற்கும், அதன் தலைவராக இருந்த அமைச்சர் டத்தோ சாமிவேலு தோல்வி அடைந்ததற்கும், பல தமிழர் குறைகள் களையப்படாமலேயே இருந்தது முக்கிய காரணம்.
அவற்றுள் ஒன்று இந்த டாக்சி ஓட்டுநர் பிரச்சினை. மலேஷிய தமிழர்கள் பலர் டாக்சி ஓட்டுநர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு முறையாக உரிமம் வழங்கப்படாது பாரபட்சம் காட்டப்பட்டு வந்தது. அதனைத் தலைவர்களால் சரிப்படுத்த முடியவில்லை. ஆகவே, 2008 தேர்தலில் மக்கள் எதிர்கட்சி பக்கம் சாய்ந்தனர்.
தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள 13.3 மில்லியன் வாக்காளர்களில், 950,000 பேர் இந்திய வம்சாவழியினர் என்பது குறிப்பிடத்தக்கது. 222 நாடாளுமன்றத் தொகுதிகளில், கிட்டத்தட்ட 60 தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக இந்த இந்திய வம்சாவழி வாக்காளர்கள் உள்ளார்கள் என்பது கவனிக்கத்தக்கது. இதனால் ஆளும் கூட்டணியும், எதிரணி கூட்டணியும் இம்மக்களைக் கவர பல விதமான வழிகளில் முயல்கிறார்கள். நவீன கணணி யுக்திகளும் YouTubeகளும் புகுந்துள்ளன என்பது ருசிகரமான தகவல்தான்.
முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மலேஷிய தேர்தலில் தமிழ்மொழி புழக்கம்
‘கொலவெறி’யாக வலம் வருகிறது. தமிழன்னைக்கு சந்தோஷம்தான். தமிழில் மட்டுமே அச்சடிக்கப்பட்ட வேட்பாளர்களின் பிரசுரங்கள் நிறையவே கண்களில் படுகின்றன. ஆளும் தேசிய கூட்டணியை ஆதரித்து ஒரு டஜனுக்கும் மேற்பட்ட பாடல்கள் YouTubeஇல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி அணியை ஆதரித்தும் ஐந்து பாடல்கள் உள்ளன. கட்சிகள் தங்கள் பிரச்சாரத்திற்கேற்ப பாடல் வரிகளை மாற்றியமைத்துள்ளன.
தமிழ் மக்களிடையே பிரபலமான ‘கும்கி’ படத்தின் “சொய்... சொய்...” பாடல் வரிகள் அரசாங்கத்திற்கு ஆதரவாகவும், ‘கொலவெறி’ பாடலானது அரசாங்கத்திற்கு எதிராகவும், ஆட்சியை மாற்றக் கோரியும் பாடுகின்றன. ஏப்ரல் 24ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்ட ‘கொலவெறி’ பாடலை, ஏப்ரல் 28ஆம் தேதி மாலை 06.00 மணி வரை 64,212 பேர் பார்த்ததாக YouTube கூறுகிறது. அப்படியானால், தமிழ் இளைஞர்கள் ஒருவர் மீது இருவர் சாய்ந்து எதிரணி பக்கம் செல்கிறார்கள் என்பதுதான் பொருள்.
இதைத் தவிர, முப்பது நிமிடங்கள் ஓடக்கூடிய ‘விடியல்’ எனும் நாடக வடிவிலான பிரச்சார வீடியோ ஒன்றும் எதிர்தரப்பின் சார்பில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மலேஷிய பொதுத் தேர்தலில் இம்முறைதான் அதிகளவில் தமிழ் திரைப்படப் பாடல்களும், வீடியோக்களும் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்படுவதாகக் கூறுகிறார்கள்.
இது நிற்க, மலாய் சமூகத்தினர் நாட்டின் 28.3 மில்லியன் ஜனத்தொகையில் 63 சதவிகிதத்தினர். சீனர்கள் 27 சதவிகிதம். இந்திய வம்சாவழியினர் தமிழர்கள் உட்பட 9சதவிகிதமும், ஏனையோர் 1 சதவிகிதமும் ஆகும்.
ஆளும் கூட்டணியின் தலைமைக் கட்சியான ஐக்கிய மலாய் கட்சியை சுமார் 72 விகித மலாய் மக்கள் ஆதரிப்பதாகவும், சீனர்களில் 20 விகிதம் மட்டுமே ஆதரிப்பதாகவும், ஜனவரி - பிப்ரவரியில் எடுத்த ஓர் ஆய்வு அறிவிக்கிறது. அதாவது, சீன வாக்காளர்களில் முக்கால் பகுதியினர் ஆட்சி மாற்றத்தைக் கோருகிறார்கள். தமிழர்களைப் பொருத்த வரை பாதி அளவிற்கு இரு பகுதிகளுக்கும் அது பிரியலாம் என்று எதிர்பார்க்கலாம். இளவட்டங்கள் மாற்றங்களை எதிர்பார்ப்பது இயற்கை. அதன் சாயலும் பல இடங்களில் தெரிவதாகவே ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
இருப்பினும், மலாய் மக்கள் மொத்தமாக அரசு பக்கம் திரண்டு நின்றால் எதிரணி சற்று சிரமப்படவே செய்யும். முன்னாள் பிரதமர் மஹதிர் முஹம்மத் பிரச்சார களத்தில் நிற்கிறார். அரசை ஆதரிப்பதுதான் மலாய் மக்களுக்கு நல்லது என்றும், எதிரணிக்குத் தலைமை வகிக்கும் முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் இப்றாஹீம் கூறும் சமத்துவ அரசு, மலாய் மக்களின் முதன்மையையும், இஸ்லாத்தின் மேன்மையையும் அழித்து விடும் என்றும் பிரச்சாரம் செய்கிறார். கிராமங்களில் அவரது பெயருக்கும், பேச்சிற்கும் நல்ல செல்வாக்கு உண்டு.
ஆகவே, மலாய் குடும்பங்களில் மூத்தவர்கள் தொடர்ந்தும் ஐக்கிய மலாய் கட்சியை ஆதரிப்பதில் உறுதியாக இருக்கும்போது, இளவட்டங்கள் ‘ஊழல் - Corruption” என்று
முனங்கிக்கொண்டிருப்பதைக் காண முடிகிறது. ஆம், காலம் மாறிவிட்டது. கல்வி வளர்ந்துவிட்டது. கணணியும் வந்துவிட்டது. அது எல்லா விபரங்களையும் தருகிறது.
மக்களுக்கு, மாடு வாங்கும் பணத்தில் சொகுசு வீடு வாங்கிய அமைச்சர் மீது நடவடிக்கை ஏதுமில்லை. பாலம் கட்டியதில் ஊழல், ரோடு போட்டதில் ஊழல், அதில் கமிஷன், இதில் கமிஷன் என அத்தனையுமே கணணியில் வருவதால், இளைஞர்கள் வெறுக்கிறார்கள். அதில் அவர்களுக்கு மலாய் என்றோ, சீனர் என்றோ, இந்தியர் என்றோ பிரிவினை இல்லை. இள இரத்தம் எல்லாம் ஒன்றுதான்.
எதிர்க்கட்சி கூட்டணி தலைவர் அன்வர் இப்றாஹீம், அரசின் ஊழலை - பண விரயத்தைத்தான் பிரதானமாக எடுத்து மேடைகள்தோறும் பேசுகிறார். ஓர் இரவில் சுமார் மூன்று ஊர்களில் பேசுகிறார். அவர் சிறந்த பேச்சாளர். இஸ்லாமிய மார்க்க அறிஞர். சென்ற 2011ஆம் வருடம் பிப்ரவரி 23ஆம் திகதி கர்நாடகா - மங்களூரில் நடந்த ஓர் இஸ்லாமிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவர் வந்தபோது, சந்தித்துப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
பிரதமர் நஜீப் அப்துல் ரசாக் அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்திலிருந்து வந்தவர். ஒரே குடும்பத்திலிருந்து வந்த இரண்டாவது பிரதமர் என்றும் இவரைக் குறிப்பிடலாம். இவரது தந்தை துன் அப்துல் ரசாக் அவர்கள் 1970 முதல் 1976 வரை மலேஷியாவின் பிரதமராக இருந்தார். மலேஷியாவில் நான் வசித்த அக்காலத்தில் ஒருமுறை, ‘மஸ்ஜித் நெகரா’ என்று சொல்லப்படும் தேசிய மஸ்ஜிதுக்கு வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக சென்று, மூன்றாவது வரிசையில் அமர்ந்து இருக்கையில் எனக்கருகில் வந்தமர்ந்த நபரைப் பார்த்து நான் அப்படியே அசந்து போய்விட்டேன். அது அன்றைய பிரதமர் துன் அப்துல் ரசாக் அவர்கள்தான்.
இறுதியாக, ஏப்ரல் 23ஆம் திகதி கோலாலம்பூரிலிருந்து தாய்லாந்தின் தலைநகரான பேங்காக் செல்வதற்காக அறையைக் காலி செய்து வெளியேறியபோது, “டாக்சி வேண்டுமா?” என ரூம் பாய் (அவர் பையன் அல்ல, 35 வயது இருக்கலாம்) கேட்டார். “ஆமாம்” என்ற நான், “சாமான்களைக் கீழே வையுங்கள். 15 நிமிடங்கள் ஹனீஃபா கடைக்குப் போய் வர வேண்டும்” என்றேன். ரூம் வாடகையை முன்கூட்டியே மொத்தமாக செலுத்திவிட்டோம்.
ஆகவே நாங்கள், அறையைக் காலி பண்ணிவிட்டோம் என்று ரிசப்ஷனில் சொல்லவும், அங்கிருந்த நங்கை, “நீங்கள் 45 ரிங்கித் (மலேஷிய நாணயம்) கட்டணம் தொலைபேசியில் பேசியதற்கு செலுத்த வேண்டும் என்றார். ஒரு ரிங்கித் சுமார் 17 இந்திய ரூபாய். எனக்கு தூக்கி வாரிப்போட்டது. “உங்கள் தொலைபேசியில் உள்ளூர் அழைப்பு ஒன்று மட்டுமே எடுத்தேன்... அதற்கு 3 ரிங்கித் மட்டுமே வரும்” என்று நான் வாதிட, “இல்லை, நீங்கள் டெல்லிக்கு இரண்டு முறை பேசியுள்ளீர்கள்...” என்றார்.
நான் மறுத்து, “அந்த இலக்கத்தை சொல்லுங்கள்” என்றேன். அவர், “நீங்கள் உள்ளூருக்குப் பேசிய இலக்கத்தைச் சொல்லுங்கள்!” என்றார். எனது கைபேசியில், அந்த இலக்கத்திற்குப் பலமுறை நான் பேசியதைக் காட்டினேன். அதே இலக்கம்தான் அவரது அட்டையில் டெல்லி எண்ணோடு பதிவாகியுள்ளது. ஆகவே, அவர் தான் கணணி இலாகாவில் விசாரிப்பதாகவும், நான் வெளியே சென்று வரலாம் என்றும் சொன்னார்.
பின்பு நான் வந்ததும், “அது கணணியின் தவறு, மன்னிக்கவும்... கட்டணம் கட்ட வேண்டியதில்லை...” என்றார். எனக்கு எரிச்சலாக இருந்தது. நான் அந்தப் பெண்ணிடம், “இந்த ஹோட்டல் எந்தக் குழுமத்தின் நிர்வாகத்தில் உள்ளது என்று எனக்குத் தெரியும்...” என்று சொல்லி, எனது கைபேசியின் Contact பகுதியைக் காட்டி, “இவரை உங்களுக்குத் தெரியுமா...? நானும், இவரும் இதே தெருவிலுள்ள Malay Mansionஇல் ஒரு காலத்தில் ஒரே மாடியில் வசித்தோம்...” என்றேன். அந்தப் பெண் ஆடிப் போய்விட்டார். அதில் இருந்த பெயர்: HAJI SYED M.SALAHUDDIN, ETA ASCON GROUP, DUBAI.
அருகில் நின்ற ரூம் பாய், ஏற்கனவே சாமான்களை டாக்சியில் வைத்துவிட்டதாகவும், “அதுதான் டாக்சி! 80 ரிங்கித்” என்றார். “ஏன் வைத்தீர்கள்...? ஏன் டாக்சிக்கு ரேட் பேசினீர்கள்...? மீட்டர் படிதானே காசு கொடுக்கனும்...?” என்று சொல்ல, அவர் தலையை சொறிந்தார்.
மலேஷியா செல்லும் பயணிகள் கவனிக்க வேண்டும். அங்கு எங்கு சென்றாலும் மீட்டர் படிதான் காசு கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டிலே ரேட் பேசுகிற வழக்கத்தை வைத்து - குறிப்பாக, மலேஷிய தமிழ் டிரைவர்கள் ஒன்றுக்கு இரண்டாக, மூன்றாக, ஏன் நான்காகக் கூட சகோதர தமிழனிடம், தொப்புள் கொடி உறவைக் காட்டி ஏய்க்கிறார்கள். ரூம் பாய் மன்னார்குடியிலிருந்து வந்தவராம். கேட்க வேண்டியதில்லை!
இப்போது டிரைவரிடம், “எவ்வளவு?” என நான் கேட்டேன். “80 ரிங்கித்” என்றார். “மீட்டரைப் போட்டு, எவ்வளவு வருகிறதோ அதனை எடுத்துக்கொள்ளலாமே...?” என்றேன். உடனே “சரி” என்று மீட்டரைப் போட்டுவிட்டார். இதமான மனிதர். அவரது நடத்தை எனக்குப் பிடித்திருந்தது.
சில தினங்களுக்கு முன் பக்கத்திலிருந்த நகை, ஆபரணக் கண்காட்சிக்கு நான் டாக்சியில் சென்றபோது, ஐந்து ரிங்கித் வந்ததாகவும், பின்பு எனது மகள், மனைவி, மருமகன் ஆகியோர் வரும்போது, தமிழ் டிரைவர் 25 ரிங்கித் கேட்டதாகவும், மீட்டர் போட மறுத்ததால் வேறு டாக்சியில் வந்ததாகவும், அது ஏழு ரிங்கித்தில் வந்ததாகவும் நான் அவரிடம் குறிப்பிட்டு, சிங்கப்பூரில் இதுபோன்ற தில்லுமுல்லுகள் இல்லை என்று குறிப்பிட்டேன்.
அவர் எனது கருத்தை ஆதரித்தார். தான் சிங்கையில், நெடுங்காலமாக சிங்கை - கோலாலம்பூர் பஸ் ஓட்டியதாகவும், பின்பு தாய்லாந்து - கோலாலம்பூர் பஸ் ஓட்டியதாகவும் கூறினார்.
பின்பு மெதுவாக அரசியலுக்கு பேச்சைத் திருப்பினேன். இவர் முழுக்க முழுக்க ஊழல் எதிர்ப்பாளர். ஆகவே, ஆட்சி மாற்றம் வேண்டும் என்றே பேசினார். அரசு தோல்வியடைவது உறுதி என்றார். திடீரென எனக்கோர் அதிர்ச்சி ஏற்பட்டது. இவ்வளவு நேரமும் இவரை நூற்றுக்கு நூறு ஹிந்து என்று நினைத்தே பேசிய நான், காரின் முன்பு இருந்த ஓட்டுநரின் அடையாளப் படத்தில், இவர் தொப்பி அணிந்திருந்ததைப் பார்த்ததும், “உங்கள் பெயர் என்ன?” என்றேன். “முஹம்மது சுலைமான்” என்றார். அதோடு, “எனது கதை மிகவும் வித்தியாசமானது” என்றார்.
“நான் பிறவியில் ஒரு ஹிந்து... எனது தந்தை வங்கியிலும், தாய் ஆசிரியையாகவும் பணிபுரிந்தனராம்... எனக்கு மூன்று வயது இருக்கும்போது அவர்கள் இருவரும் ஒரு கார் விபத்தில் மரணமாகவே, ஒரு மலாய் குடும்பத்தில் என்னை எடுத்து வளர்த்தனர்... எனக்கு தமிழ் தெரியாது... வளர்ந்த பின், கொஞ்சங்கொஞ்சமாக தமிழ் பேசக் கற்றுக்கொண்டேன்...” என்றார்.
மலாய் பெண்ணைத் திருமணம் செய்து, மூன்று ஆண் மக்களும், ஒரு பெண்ணும் இருப்பதாகவும், மூவரும் படித்து வேலை செய்வதாகவும், கடைசி பெண் மட்டும் படித்துக்கொண்டிருப்பதாகவும், அவரும் படித்து முடித்துவிட்டால் தனக்கு ஓய்வாகிவிடும் என்றும் கூறினார் அவர்.
“அரசு டாக்சி டிரைவர்களுக்கு நிறைய சலுகைகள் தந்திருப்பதாக சொல்கிறார்களே...?” என்று கேட்டபோது, “அப்படி சொல்ல முடியாது... ஒரு கையில் கொடுத்து அடுத்த கையில் வாங்கிவிடுகிறார்கள்... பின்னால் பல பிடிகளை வைத்துள்ளார்கள்...வண்டி ரிப்பேருக்கு அவர்கள் குறிப்பிடும் இடத்திற்குத்தான் போக வேண்டும்... பொருட்களை, அவர்கள் குறிப்பிடும் இடத்தில்தான் வாங்க வேண்டும்... இப்படி நிறைய ஊழல் உண்டு!” என்று அவர் பொரிந்து தள்ளினார். மீட்டர் 55 ரிங்கித் வந்தது. நான் 80 கொடுத்தேன்.
டாக்சி டிரைவர் முஹம்மது சுலைமான் தமிழ் பேசினாலும், மலாய் குடும்ப சூழலில் வசிக்கிறார். இவர் ஊழலை எதிர்க்கிறார் என்றால், ஓரளவு விபரமறிந்த மலாய் மக்கள் இவரது மனநிலையில் இருக்கிறார்கள் என்பது பொருள். இளைஞர்கள் சிங்கப்பூரை உதாரணமாகப் பார்க்கிறார்கள். ஊழலற்ற ஆட்சியை அவர்களால் தர முடியும் என்றால், ஏன் நம்மால் முடியாது என்பது கல்வியறிவுள்ள அவர்களின் கேள்வி.
ஆனால் கிராமத்து மலாய் பாமர மக்கள், தங்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்தே வருவதால், பெருச்சாளிகளைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை. ஆனாலும், சமீபத்திய ஆய்வு அன்வர் இப்றாஹீம் தரும் ஊழல் - பண விரயம் பற்றிய புள்ளி விபரம் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றிருப்பதாகவே சொல்கிறது.
பிரதமர் நஜீப் அவர்களைப் பொருத்த வரையில், மலாய் வாக்குகளை உறுதிப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார். சென்ற முறை எங்கெல்லாம் அற்ப சொற்ப வாக்குகளில் வென்றனரோ, தோற்றனரோ அங்கெல்லாம் அவரது குழு சுத்திச் சுத்தி வருகிறது. “மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெல்வோம்” என்று அவர் வெளிப்படையாகக் கூறினாலும், தொடர்ந்து 60 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும், சுதந்திரம் கிடைத்த பின்னர் 13ஆவதாக நடைபெறும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் நிச்சயமாக இழுபறி நிலையைத்தான் தரப்போகிறது.
பணபலமும், ஆட்சியதிகாரமும் கையிலிருப்பதால் அரசு மீண்டும் பதவிக்கு வரலாம். ஆனால் அது இலகு நடையாக இருக்க முடியாது. இந்தக் கணக்கிற்கு எதிராக மக்கள் தீர்ப்பளித்து, எதிரணியை சிம்மாசனத்தில் அமர்த்தவும் செய்யலாம்.
அன்வரா? நஜீபா? மலேஷியாவில் ஆட்சி மாற்றம் வருமா? பொறுத்திருந்து பார்ப்போம்! |