அது ஞாயிற்றுகிழமை இரவு மணி 11.30. படை அணி போல் வரிசையாக நின்ற மினி வேன்கள், சில கார்கள், அவற்றிற்கு மத்தியில் ராஜயானைபோல் கம்பீரமாக நின்ற கறுப்பு நிற பெரிய
Hundai SUV வாகனம் ஆகியன மாளிகையின் கதவு திறந்ததும் சீறிப்பாய்ந்து கொண்டு வெளிக்கிளம்பின.
இளவரசரின் செயலாளர் ஒருவர் சுமார் 200 கடித உறைகள் வைத்திருந்தார். அவற்றின் பெறுமதி இரண்டரை லட்சம் அமெரிக்க டொலர்கள் ஆகும். ரியாத் நகரத்திற்கு சற்று வெளியே, வறியவர்கள் வசிக்கும் ஒரு பகுதியில் அந்த வாகனக் கூட்டம் நின்றது. பல வீடுகளில் வெளிச்சம் இருந்தது. ஜனங்கள் விழித்திருந்தனர். ஆனால் ஒருவரும் வாகனச் சத்தத்தை கவனிக்கவில்லை, வெளியே வந்து பார்க்கவும் இல்லை.
வீதியில் நடமாடிய ஒரு சிலர் அச்ச உணர்வோடு இந்த வாகனக் கூட்டத்தைப் பார்த்தனர். அதில் இருந்து இறங்கிய மனிதர்கள், அவர்களின் தோற்றம், அந்த வறிய மக்களின் பகுதியில் வருவோர் போவோரைச் சற்றுக் குழப்பியது.
அந்த பெரிய காரில் இருந்து அவர் இறங்கினார். அவரது மெய்க்காப்பாளர்கள் உடனடியாக அவர் அருகில் வந்து நின்றனர். மூன்று உதவியாளர்களுக்கு அவர் சைகைகாட்டினார். அவர்கள் ஒவ்வொருவராகப் பிரிந்து பக்கத்தில் உள்ள வீடுகளில் கதவைத் தட்டினர். அவை மிகவும் ஏழ்மையான வசதிகள் அற்றவர்களின் வீடுகள்.
ஒரு வீடு திறந்தது. உதவியாளர் இளவரசருக்கு வரும்படி தனது சைகையால் காட்டினார். மெலிந்த தோற்றம் உள்ள முதியவர் ஒருவர் வாசலில் நின்று என்ன என்பது போல் கண்களால் கேட்டார். அவசரமாக உள்ளே நுழைந்த இளவரசரையும் அவரது கூட்டத்தையும் கண்டதும் அவர் மனதில் ஏதோ அரசாங்க சோதனையோ என்று கூட எண்ணத் தூண்டியது. ஆனால் புன்னகை தவழும் முகத்தோடு தன் முன் நிற்கும் இந்த மனிதர், ஏதோ நல்ல செய்தி சொல்லப் போகிறார் என்ற நினைப்பும் அவருக்கு வந்தது.
“இந்த வீட்டின் தலைமையாளர் யார்” முதியவரின் பதிலுக்காகக் காத்திராது தனது கண்களை அந்த வீட்டின் பகுதிகளில் அலையவிட்டார் இளவரசர். அந்த வீட்டின் சூழல், அலங்கோலமாக அசுத்தமாக இருந்த முன் அறை, பாத்திரங்கள் ஆகியன அவர் மனதைத் தாக்கின.
“இங்கே பாருங்கள். இவர்கள் எப்படி வாழ்கிறார்கள்?” தனது கூட்டத்தினரைப் பார்த்து இளவரசர் சொன்னார். முன் அறையின் ஒரு பகுதி சமையலறையாகத்தான் இருந்தது. அது மறைக்கப்பட்டிருந்தது. செங்கற்களால் சிறிய இரண்டு அடுப்புகளைக் கொண்ட ஸ்டவ் ஒன்று இருந்தது. பாத்திரங்கள் சிதறிக் கிடந்தன. சில சுத்தப்படுத்தப்படவில்லை.காலியாக்கப்பட்ட டின்கள், அட்டைப் பெட்டிகள் அங்கும் இங்குமாகக் கிடந்தன. சுத்தம் கிலோ என்ன விலை என்று அந்த சமையலறைக் கேட்டது?
“இது மிகவும் மோசமான நிலை. மக்கள் இப்படி வசிக்கக் கூடாது” என்ற இளவரசர் தனது கையிலிருந்த ஒரு கடித உறையை எடுத்து அங்கு கூடி விட்ட குடும்பத்தாரிடம் காட்டினார். பருமனான கறுப்பு புர்கா அணிந்த பெண் ஒருவர் வந்தார். மெலிந்த அந்த முதியவரின் முன் வந்து நின்று நான்தான் இந்த வீட்டின் தலைமையாளர் என்பது போல் காட்டினார். முதியவர் மறுக்கவில்லை. எதிர்க்கவில்லை.
இளவரசர் கடித உறையை அந்த பெண்ணின் கையில் திணிப்பதற்கு முன்பதாகவே அப் பெண் அதனை இடையிலேயே பறிப்பது போல் அல்லது மரத்தில் இருந்து காய் பிடுங்குவதுபோல் பிடுங்கிக் கொண்டார். கொடிது கொடிது வறுமை கொடிது! அப்பெண்ணின் மார்பில் அந்த கடித உறை அடைக்கலமாகிவிட்டது.
இளவரசர் திரும்பி கதவை நோக்கி நடந்தார். அப்பெண் அவரைப் பின் தொடர்ந்தார். இளவரசரின் கொடைக்கு நன்றி கூறி அல்லாஹ் அவருக்கு நிறைய பறக்கத்தையும் சுகமான வாழ்வையும் கொடுக்கும் படி பிரார்த்தனை செய்தார்.
வெளியே வந்த இளவரசர் பக்கத்தில் இருந்த வீட்டிற்கு சென்றார். கதவு ஏற்கனவே திறந்து இருந்தது. அவரது உதவியாளர்களும் வாசலில் நின்றனர். ஆகவே இளவரசர் உடனடியாக வீட்டினுள் சென்றார். அவரது கண்கள் அங்கும் இங்கும் அலைபாய்ந்தன. முந்தைய வீட்டிற்கும் இதற்கும் அமைப்பில் வித்தியாசம் இல்லை.
ஆனால் இங்கு குடும்பம் வசிக்கவில்லை. எந்த தளபாடமும் இல்லை. அதனுடைய தோற்றம் ஆறு அல்லது ஏழு ஆண்கள் வசிக்கும் இடம் போல் காட்சியளித்தது. சிறு சிறு தடுப்புகளால் சில அறைகள் உருவாக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
இந்த குடியிருப்பு பகுதியின் பல பகுதிகளில் ஏறி இறங்கிய இளவரசருக்கு அம் மக்களின் ஏழ்மையான வாழ்வை புரிந்து கொள்ள முடிந்தது. தெருக்கள் தூசு நிறைந்தவையாகவும் சுத்தம் குறைவாகவும் இருந்தன. பல கட்டடங்கள் ஒன்றோடு ஒன்று மோதுவது போல் தோற்றமளித்தன.
நிற்க சில வீடுகள் மிகவும் நேர்த்தியாக இருந்தன. “இதோ பாருங்கள் சில மக்கள் தாங்கள் ஏழைகளாக இருந்தாலும் எப்படி தங்கள் வாழ்விடத்தை ஒழுங்காக அமைந்திருக்கிறார்கள்” என்று பாராட்டினார். இப்போது வந்திருப்பது யார், அவர் எதற்காக வந்திருக்கிறார் என்பது அப்பகுதி மக்களுக்கு புரிந்து விட்டது.
பல குடும்பங்களில் எட்டு உறுப்பினர்கள் வரை இருந்தார்கள். அதன் உறுதியை இளவரசரிடம் காட்டி தங்களுக்கு கூடுதல் உதவி வேண்டுமெனக் கேட்டனர். இளவரசரின் ஒவ்வொரு கடித உறைக்குள்ளும் சுமார் 5,000 சவூதி ரியால் இருந்தன. அதாவது சுமார் 81,000 ரூபாய்கள்.
ஒரு வீட்டின் சுவர் வர்ணம் பூசப்பட்டிருந்தது. தரையில் விரிப்புகள் போட்டு தரை தெரியாதவாறு மறைத்து அழகு படுத்தப்பட்டிருந்தது. இளவரசரை அந்த ஒழுங்கு முறை கவர்ந்தது. தன் குழுவினரிடம் அவர்களைப் பாராட்டினார். “பலர் இதில் அக்கறை காட்டுவதில்லை” என்றார் அவர்.
உண்மை சில வீடுகள் சொல்லும் தரம் இருக்கவில்லை. ஒரு வீட்டில் தெருவில் வீசிஎறியும் பொருட்கள் சேகரிக்கப்பட்டு அட்டைப் பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. உணவுப் பொருட்களும் கூட அதில் இருந்தன. ஒரு வீட்டில் பழைய சப்பாத்து, செருப்பு போன்றவை அட்டைப்பெட்டியில் போட்டு வாசல் கதவுக்குப் பக்கத்திலேயே வைக்கப்பட்டிருந்தது. இத்தகைய கழிவுப் பொருட்களின் அட்டைப்பெட்டிகள் சில வீடுகளில் பெரும் பகுதியை அடைத்தவாறு இருந்தன.
மற்றொரு வீடு மிகவும் அழகாகப் பராமரிக்கப்பட்டு இருந்தது. இளவரசர் புன்முறுவல் பூத்தார். பழைய தொலைகாட்சி பெட்டி ஒன்று இருந்தது. போதிய அளவு தளபாடங்கள் நாற்காலிகள்
மேசை போன்றவை இருந்தன. ஏழ்மையிலும் வசதி என்பது போல் அது காட்டியது. உயரமான கறுப்பு மனிதர் ஒருவர் இருந்தார். தான் நைஜீரியாவில் இருந்து வந்தவர் என்றார் அவர்.
இளவரசர் சற்று தயங்கினார். அவர் சவூதி பிரசைகளுக்கு தனது ஸகாத் பணத்தை கொடுப்பது வழக்கம். எதிர்பாராது சவூதி மக்கள் வசிக்கும் பகுதியில் வேறு ஒருவர் இருக்கிறார். தனது நிலையை அவரிடம் விளக்கிய இளவரசர் நீங்கள் இந்த விசயத்தை உங்கள் ஆட்களிடம் கூறக் கூடாது என்று சொல்லி ஒரு கடித உறையை அவர்கையில் திணித்தார். அந்த மனிதர் தனது வெள்ளைப் பற்களைக் காட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
வெளியேறிய இளவரசர் தனது உதவியாளரிடம் கூறினார்” நான் ஒரு மனிதனின் வீட்டில் நுழைந்த பிறகு, இல்லை - இல்லை உனக்கு ஒன்றும் இல்லை என்று சொல்லி வெளியேற முடியாது. நான் ஏதாவது கொடுக்க வேண்டும்” என்றார். அவர் தனது உதவியாளர்களிடம் ஏழை சவூதி பிரஜைகளின் வீடுகளையே தெரிவு செய்யும் படி சொல்வது வழக்கம்.
இப்போது அந்த வட்டத்தில் மிகவும் வேகமாகச் செய்தி பரவி விட்டது, ஒரு மனிதர் வீடுகளுக்கு பணம் கொடுக்கிறார் என்று. ஆகவே பலரும் தங்கள் வாசலிலேயே காத்து நின்றனர். அந்த கூட்டத்தில் ஒரு பெண்மணி, வந்திருப்பது இளவரசர் அல்வாலித் பின் தலால் என்பதை அறிந்து அவரைப் புகழ்ந்து பாடியடியே அவரைப் பின் தொடரலானாள்.
கறுப்பு புர்கா அணிந்த பெண்களின் கூட்டம் இளவரசரின் பின்னால் சென்றது. சத்தம் அதிகமாகியது. ஆகவே பின்னால் நிற்பவர் ஒவ்வொருவருக்கும், ஒரு கடித உறையை அவர் மடமடவென பகிர்ந்து கொடுத்தார். ஆனால் அது கூட்டத்தைப் பெருக்கியதே தவிர குறைக்கவில்லை. அத்தோடு குறுகிய அந்த சந்துகளில் வெளிச்சம் அதிகம் இல்லாத நிலையில் ஆட்களை அடையாளம் காண முடியவில்லை. ஆனால் வாங்கிய பெண்களில் சிலர் மீண்டும் வாங்குகின்றார்கள் என்பது மட்டும் புரிந்தது.
இப்போது அவரால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. முன்னும் பின்னும் கறுப்பு அங்கி அணிந்த பெண்கள் கூட்டம் அவரைச் சிறை பிடிப்பது போல் சூழ்ந்து விட்டனர். கைகள் பல திசைகளில் இருந்து அவரை நோக்கி நீட்டப்பட்டன. இருந்தாலும் இளவரசர் அங்கும் இங்குமாக நுழைந்து அக் கூட்டத்தினரைத் தாண்டி வேறு சில வீடுகளுக்கும் சென்றார்.
பாதுகாப்பு அதிகாரிகள் இப்போது சற்று கவலைப்பட ஆரம்பித்தனர். ஆகவே அவர்கள் வளையம் அமைத்து பெண்கள் தொடராதவாறு பாதுகாத்தாலும் எப்படியோ சில பெண்கள் நுழையவே செய்தனர்.
இளவரசர் வீட்டு வாசலில் நின்றவர்களோடு பேசியபடி விரைவாக ஒவ்வொருவருக்கும் கொடுத்துக் கொண்டு வந்தார். இப்போது சில கடித உறைகள் மாத்திரம் அவரிடம் இருந்தன. வெளியில் கூட்டம் கட்டுக்கு அடங்காத மாதிரி இருந்தது. தனது உதவியாளரிடம் கொடுத்து இதுவரை பெறாதவருக்கு கொடுக்கும்படி அவர் சொன்னார். வாகனம் நிறுத்தப்பட்ட திசையில் அவர் நடக்கலானார். பாதை தவறியது. கூட்டம் பின் தொடர்ந்தது.
இவர் வேகமாக நடக்க, இல்லை; ஓட கூட்டம் துரத்தியது. சர்ரென்று வந்து நின்றது அவரது கறுப்பு ஹுண்டாய் தப்பி பறந்து விட்டார் அவர். இளவரசர் அல்வலித் பின் தலா அவர்கள் உலக கோடீஸ்வரன். |