| |
ஆக்கம் எண் (ID #) 47 | | | ஞாயிறு, செப்டம்பர் 15, 2013 | | ஜோர்தானின் சிரிய அகதி முகாமில் இளம் மணப்பெண்கள் விற்பனை! தலைவர், காயல் நல மன்றம் (காவாலங்கா),
கொழும்பு, இலங்கை
|
| இந்த பக்கம் 2965 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய | |
“அகதி முகாமில் இரவில் மின்சாரம் இல்லை. நடுங்கும் கால்களுடன் கூட்டமாகவே கழிப்பறைக்கு செல்வோம். தனியே சென்றால் அங்கு இருளில் ஒருவன் புலிபோல் பாய்வான். மான்போல் நாங்கள் இரையாக வேண்டியதுதான். இதுதான் ஸாதரி அகதி முகாமின் நிலை” என்று கூறினாள் ஜோர்தானில் உள்ள இவ்வகதி முகாமில் வசிக்கும் சிரிய அகதிப் பெண் ஒருத்தி. சில பெண் கள் விடியும் வரை காத்திருப்பதுண்டு. சிலர் தங்கள் கூடரத்திலேயே அவசரத் தேவையைப் பூர்த்தி செய்வதும் உண்டு.
சிரியாவில் உள்நாட்டுப் போர் மூண்டதன் விளைவாக இவ்வகதி முகாம் 2012ம் வருடம் ஜுலை 28ம் திகதி அன்று துவக்கப்பட்டது. தற்சமயம் இங்கு சுமார் 160,000 சிரிய அகதிகள் இருக்கிறார்கள். பெரும்பான்மையானவர்கள் பெண்களும் குழந்தைகளும்தான். இங்கு ஆண்களின் பாலியல் தொல்லை அதிகம். உலர் உணவு வாங்குமிடத்தில் பெண்களிடம் சிலேடையாக பேசுபவர்கள் உண்டு. பொது சமையல் அறையில் தனியாகச் சமையல் செய்யும் பெண்ணை துன்புறுத்துபவர்கள் உண்டு. ஆகவே சில பெண்கள் திறந்த வெளியில் சமைப்பதையே விரும்புவார்கள்.
பாலியல் வல்லுறவு சம்பவங்கள் பல நடந்துள்ளன. ஆனால் பெண்கள் யாரும் தனக்கு நடந்ததாக ஒத்துக் கொள்வதில்லை. மாறக அடுத்தவருக்கு நடந்ததைக் கண்டேன் என்று தான் வாக்கு மூலம் தருவார்கள். ஆகவே பெற்றோர்களைப் பொறுத்தவரையில் இப்பிரச்சினைக்கு அவர்கள் அறிந்த தீர்வு, தங்கள் வசம் இருக்கும் வயது வந்த பெண்களை உடனடியாகத் திருமணம் செய்து கொடுப்பதுதான்.
நஜ்வாவிற்கு வயது 13தான். அவளது மூத்த சகோதரிகள் இருவருக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்தாயிற்று. அவளது கூடாரத்தின் ஓர் ஓரத்தில் அவள் அமர்ந்திருக்க அருகில் அவள் கணவன் 19 வயது காலித் இருக்கிறான். அவளது தாயார் கூறுகிறாள் "அல்லாஹ் மீது ஆணையாகச் சொல்கிறேன். நாங்கள் சிரியாவில் இருந்திருந்தால் இவ்வளவு சின்ன வயதில் அவளுக்கு திருமணம் செய்து வைத்திருக்க மாட்டேன். எனக்கு இங்கு பயமாக இருக்கிறது” என்றார் அவள்.
காலித், “இங்கு கற்பழிப்பு அதிகம். எனக்கு இப்போது குழந்தை வேண்டுமென்ற அவசியம் இல்லை. நான் அவளைப் பாதுகாத்துக் கொள்வேன். திருமண பார்டியைக் கூடநான் விரும்ப வில்லை” என்று நிதானமாகக் கூறினான் அந்த புதிய மணமகன்.
ரீம்- அவளுக்கு வயது 16 தான். நான்கு மாதங்களுக்கு முன்புதான் அவளுக்கு லிபியாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவனோடு திருமணம் ஆயிற்று. அகதி முகாமிற்கு வெளியே சென்று ஒரு மாதம் அவனோடு அவள் வாழ்ந்தாள். இப்போது அவன் லிபியா சென்றிருக்கிறான். இவளுக்கு பாஸ்போர்டு ஏற்பாடு செய்து இவளை லிபியாவிற்கு அழைத்து செல்ல முயல்வதாக தொலைபேசியில் கூறுகிறான். அவன் நினைவில் இவள் நாட்களைக் கழிக்கின்றாள்.
செய்யது, தனது 15,16 வயது இரு மகள்களை சென்றமாதம் தான் திருமணம் செய்து கொடுத்தார். “எனக்கு வேலை இல்லை. பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். ஆகவே என்னால் குடும்பத்தை காப்பாற்ற முடியாது. இந்த முகாமில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை"என்றார் அவர்.
15 வயது நடாவிற்கு 18 வயது மாசெம்மோடு சென்ற மே மாதம் 4ம் திகதி திருமணம் நடந்தது. கல்யாண கொண்டாட்டங்கள் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தது. ஆனால் அது வழக்கமாக சிரியாவில் நடப்பது போல் இல்லை. பெரிய விருந்து இல்லை. இசை இல்லை. புது உடுப்பு சரசரக்க வரும் உறவினர் கூட்டம் இல்லை. பரிசுகளும் குறைவு. நடாவின் தந்தை 35வயது முகம்மது, நாங்கள் கொண்டாடுகிறோம் ஆனால் அந்த மகிழ்ச்சி உள்ளத்தில் இருந்து வரவில்லை என்று வேதனைப்பட்டார்.
இன்னொரு 50வயது அபு முகம்மது இங்கு இருக்கிறார். அவர் கதையைப் பார்ப்போம். சமீபத்தில் தான் அவர் 40 வயது பணக்கார சவூதி அரேபியர் ஒருவருக்கு தனது இளஞ்சிட்டைத் திருமணம் செய்து கொடுத்தார். தனது மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையும், தனக்கு பொருளாதார உதவியும் கிடைக்கும் என்பது அவர் நம்பிக்கை.
“இப்படி செய்வதில் எனக்கு கொஞ்சமும் விருப்பமில்லை. ஆனால் இந்த அகதி முகாம் ஒரு நரகம்" என்றார் அவர். ஆனால் மணமகன் - அவரது மருமகன் சிரிய யுத்தம் முடியும் வரை அவருக்கு உதவுவதாகவும், அதன்பின் சிரியா சென்று மீள் குடியேறவும் உதவுவதாக வாக்குறுதி தந்திருந்தார் என்ற அவர், மாதம் மூன்றாகியும் இன்னும் அவரிடம் இருந்து எந்த செய்தியும் இல்லை என்றார்.
தாங்கள் இருக்கும் சூழ்நிலையின் தாக்கத்தால் வெளிநாட்டவர்க்கு தங்களது இளம் வயது பெண்களைத் திருமணம் செய்து கொடுக்கும் பெற்றோர் அவர்களது எதிர்காலம் உறுதியானதா என்று கவலைப் படவில்லை. இப்போதைய பிரச்சினையில் இருந்து அவர்களை மீட்டால் போதும் என்றே நினைக்கிறார்கள். நாளைவருவது என்ன என்று சிந்திக்கும் சூழ்நிலையில் அவர்கள் இல்லை.
மற்றுமொரு 15 வயது பெண்ணின் தந்தை ஒருவர் 9000 ஜோர்தான் தினார்களை, சுமார் 13 ஆயிரம் டாலர் ரொக்கமாகப் பெற்று தனது மகளை ஒரு சவூதி செல்வந்தருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். அவர் அவளோடு நகரில் உள்ள ஒரு வீட்டில் சில காலம் தங்குவார். பின்பு அவர் தனியே சவூதி சென்று விடுவார். மீண்டும் அவர் வரலாம் அல்லது வராமலும் விடலாம். அப்படியே திருமணமான பெண்ணை அவர் சவூதி அழைத்து சென்றாலும் அங்கு மனைவி அந்தஸ்து கிடைப்பது கடினம். காரணம் முன் அனுமதியின்றி சவூதி அரேபியர் வெளிநாட்டு பெண்களைத் திருமணம் செய்ய முடியாது.
அகதிப் பெண்களுக்குத் தொல்லை அகதி முகாமில் மட்டும் என்றில்லை. வெளியிலும் உண்டு. ஒரு பெண்ணுக்கு 13 குழந்தைகள். மூத்த இரு பெண்களும் பருவ வயதுக்கு வந்து விட்டவர்கள். அவர்களைத் தனியே விட்டுச் செல்ல அவள் பயந்ததால் தனது சிறு குழந்தைக்கு தடுப்பு ஊசி கூட அவளால் போடுவதற்கு போக முடியாமல் ஆயிற்று. இதுதான் இம் மகளிரின் நிலை.
ஜோர்தானில் உள்ள சிரிய பெண்களுக்கான மகளிர் அமைப்பு இத்தகைய திருமணங்களை பகிரங்கமாக எதிர்ப்பதோடு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அரசு இயந்திரம் தடுக்க வேண்டும் என்றும் கூறுகிறது.
அரசோ எங்களால் முடிந்ததைச் செய்கிறோம் என்கிறது. வேலியற்ற வெள்ளாடுகளாக இப்பெண்கள் இருப்பது ஓநாய்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது. "சிரிய அகதிப் பெண்கள் அடிமைகள் அல்ல. உங்கள் காமப் பசியைத் தீர்க்கும் இயந்திரங்களும் அல்ல. எங்களை சீரழிக்காதீர்கள்” என்று அவ்வியக்கம் கணைகளைத் தொடுக்கிறது.
“நாங்கள் சாவிற்குப் பயந்து சிரியாவைவிட்டு ஓடிவந்தோம். ஆனால் இங்கு சாவை விட பயங்கரமான ஒரு சூழலை நாங்கள் எதிர் கொள்கிறோம். நாங்கள் சிரியாவில் இருந்திருந்தால் சாவு எங்களை விரைவாக அணைத்துக் கொள்ளும். அது கெளரவமானது. ஆனால் இங்கு சாவு மெல்ல மெல்ல வந்து எங்களைக் கொல்லுகிறது” என்று கூறி தனது இளம் மகளை இறுக அணைத்தவாறு கூறினாள் மரியம்.
இம் மக்களின் நிலை சட்டியில் இருந்த மீன் விடுதலை தேடி அடுப்பில் விழுந்த கதைபோலவே உள்ளது. என்று மாறும் இம்மக்களின் அவலம்? |
| |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|