“தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முன்னேறி, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்க வேண்டுமென்றால், நாம் சொல்வதைக் கேட்கக் கூடிய மத்திய அரசு அமைய வேண்டும். 40 தொகுதிகளிலும் வெற்றிக் கனியைப் பறிக்க வேண்டும். அதற்காக, எம்.ஜி.ஆர். பிறந்த நல்ல நாளில், லோக்சபா தேர்தல் பணிகளைத் துவங்குங்கள்!”. இது தமிழக முதல்வர் மாண்புமிகு ‘அம்மா’ ஜெயலலிதா ஜெயராம் அவர்களின் அழைப்பு - அறிவிப்பு - அறைகூவல்!
அதிரடி முடிவுகளை எடுப்பதும், அதிர்ச்சி வைத்தியம் தருவதும், முன்பின் முரணாகப் பேசுவதும் - செயல்படுவதும் தமிழக முதல்வரின் வாடிக்கை. இந்த அறிக்கையில் அவர் என்ன கூறுகிறார் என்பதுடன், அதற்கு பலனாகத் தொண்டர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதையும் ஆராய வேண்டும். 40 தொகுதிகளையும் வென்றால் அம்மாதான் இந்தியப் பிரதமர் என்கிறார்கள் கட்சிக்காரர்கள் - பரப்புரை செய்கிறார்கள். ஆனால், ஜெயலலிதாவோ, “நாம் சொல்வதைக் கேட்கக் கூடிய மத்திய அரசு அமைய வேண்டும்” என்கிறார். அப்படியானால், சொல்பவர் இவர். கேட்பவர் வேறொருவர். அதாவது பிரதமர் ஆசனத்தில் இருப்பவர் வேறொருவர். இது என்ன குழப்பம்?
சரி, அது எப்படி போனாலும், ஜெயலலிதாவிற்கு டெல்லிக்குப் போவதற்கு ஆசை உண்டு என்பது அறிந்த விஷயம். 1982-89 காலத்தில், ராஜ்யசபா உறுப்பினராக இருந்தவர் அவர். தேசிய அரசியலில் என்.டி.ராமராவ் இருந்தபோது, தனக்கு துணைப் பிரதமர் பதவி கேட்டதாகவும், தேர்தல் செலவிற்கு பெரிய அளவில் பணம் தருவதாகச் சொன்னதாகவும் செய்தி இருந்தது. இப்போது நாடாளுமன்றம் செல்ல வேண்டுமென்றும், அடுத்த பிரதமராக வேண்டும் என்றும் அவரிடம் கனவு இருப்பது உண்மையிலும் உண்மை.
எந்த அடிப்படையில் 40 தொகுதிகளை வெல்லும் ஒருவர் பிரதமர் ஆக முடியும் என்று இவர் கணக்குப் போடுகிறார் என்று பார்ப்போம். நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 545. இன்றைய நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 202 ஆசனங்களும், பாரதீய ஜனதாவிற்கு 116 ஆசனங்களும் உண்டு. இவர்கள் இருவரும் 318 ஆசனங்களைத் தொடுவதால் இவ்விருவர் அல்லாது - இவர்களின் ஆதரவு இல்லாது மூன்றாவது ஒரு நபரோ, அணியோ ஆட்சியமைக்க முடியாது. ஆகவே, காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது. இப்போது அது தேர்தலை சந்திக்கப் போகிறது.
மிகுதி 227 ஆசனங்களை, சுயேட்சை உறுப்பினரையும் சேர்த்து 38 கட்சிகள் பங்கு போடுகின்றன. அவற்றில் பிரதானமாக: உத்திரபிரதேசத்தின் 80இல் சமாஜ்வாதி கட்சி 22, பகுஜன் சமாஜ் கட்சி 21, (காங்கிரஸ் 21) மேற்கு வங்காளத்தில் 42இல் திரிணாமூல் காங்கிரஸ் 19, பிஹாரின் 40இல் ஐக்கிய ஜனதா தளம் 19, தமிழ்நாட்டின் தி.மு.கழகம் 18, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 16, ஒடிசா பிஜு ஜனதா தளம் 21இல் 14, சிவசேனா 11, அதிமுக 9, மற்றவை ஒற்றைப்படை எண்ணிற்குச் செல்கின்றன. இவர்கள் அனைவரும் 40 என்ற எண்ணிக்கையைப் பெற முடியாது. ஆகவே, “நாம் 40 பெற்றால் நானே பிரதமர்” என்பது அம்மாவின் கனவு. இது சாத்தியமா இல்லை சறுக்குமா?
ஒருவேளை பா.ஜ.க.வும், காங்கிரசும் ஆட்சியமைக்கும் அளவு தனிப்பெரும்பான்மை பெறாது, மூன்றாவது அணி என்ற ஒன்று தன் பலத்திலேயே - பண்டாரங்கள் கூடுவது போல - ஆட்சி அமைக்கும் வாய்ப்பு நேர்ந்தால், தேசிய கட்சி இரண்டும் சேர்ந்து 270 ஆசனங்களுக்கு மேற்படாது எடுக்க வேண்டும்.
இன்றைய நிலையில் காங்கிரஸ் 202, பா.ஜ.க. 116 என்று 318 ஆசனங்கள் அவர்களிடம் உண்டு. ஊடகங்கள் ஓங்கி முழங்குவது போல காங்கிரஸ் 202இல் இருந்து இறங்கி 100 ஆசனங்கள் பெறுவதாக வைத்துக்கொண்டாலும், பா.ஜ.க. தனது 116 இலிருந்து கூடவே செய்யும். 150க்கும் குறைவாக அவர்களை மதிப்பிட முடியாது. அதையும் தாண்டலாம்.
இந்த மூன்றாவது அணி கூடாரத்திற்குள் ஆம் ஆத்மி கட்சியும் நுழையவே செய்யும். அவர்களும் சில ஆசனங்களை அங்குமிங்குமாகப் பெறலாம். ஒருவேளை, யாரும் எதிர்பாராத அளவு அதிகமாகவும் அவர்கள் பெறலாம். டெல்லியில் அவர்கள் இப்போது நடத்தும் காட்டு தர்பார் “சிறுவர்கள் செய்த வெள்ளாமை வீடு வந்து சேராது” என்பது போல் கவலைக்கிடமாக இருந்தாலும், அரசியல் அறிவு - அனுபவம் குறைந்த இளைஞர்கள் ஒரு கூட்டம் அவர்கள் பக்கம் இருப்பதால் மீண்டும் ஓர் அதிர்ச்சியை அக்கட்சி தந்தாலும் வியப்பில்லை.
மேலும் இந்த கூடாரத்தில் பெண்களின் குடுமிப்பிடி சண்டையோடு, ஆண்களின் மல்யுத்தமும் இருக்கும். அங்கு குறைந்தது ஆறு கட்சிகளின் தலைவர்கள் தனக்கே பிரதமர் பதவி எனப் போட்டி போடுவர். இதில், அதிக ஆசனங்களைப் பெற்றவர் “நானே மூத்தவன்; நானே முதல்வன் எனக்கே பட்டம் சூட்ட வேண்டும்” என்று சண்டை பிடிப்பார்.
இந்தச் சூழலையே தமிழக முதல்வர் குறி வைக்கிறார். அதில் இணக்கம் வருமா, இல்லை “நான் சேரவில்லை” என்று யாராவது சொன்னாலும் இந்த அணி ஆட்சியமைப்பது இயலாது என்றாகிவிடும். அப்படியானால், பண்டாரங்களின் ஆட்சி எந்த நேரம் கவிழுமோ என்ற நிலையற்ற தன்மையைத்தான் தரும். அது நாட்டிற்கு நல்லதல்ல. எந்த முதலீடும் வராது. எந்த வளர்ச்சியும் பெறாது.
புதுச்சேரியைப் பொருத்த வரையில் அங்கு காங்கிரசை அசைக்க முடியாது. ஆகவே, 39க்குள்தான் ஜெயலலிதா தனது அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்க்க வேண்டும். தமிழகத்தில் அ.தி.மு.க. 39 ஆசனங்களை எப்படிப் பெறும்? அதை - தமிழ்நாட்டில் அமையும் கூட்டணியைப் பொருத்துதான் மதிப்பிட முடியும்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 38% வாக்குகளையும், தி.மு.க. 22% வாக்குகளையும் பெற்றன. அ.தி.மு.க.வின் இந்த 38இல் நடிகர் விஜயகாந்தின் தே.மு.தி.க. கட்சி 2009 நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற 10% வாக்குகளும் அடக்கம். இப்போது, அ.தி.மு.க.விற்கு அந்த 10% இல்லை என்பது தெளிவு. அந்த 10க்குத்தான் தி.மு.க. தலைவர் படாத பாடுபடுகிறார்.
இப்போது அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி 28% என்று இறங்கியே இருக்கும். தி.மு.க. தனது 22% விகிதத்தோடு, விஜயகாந்திரன் 10% விகிதத்தையும் சேர்த்தால் 32%. அம்மாவின் நிலை 28%. பலம் மிக்க பலப்பரீட்சையில் இறங்கலாம் - போட்டி போட்டுப் பார்த்து விடுவோம் என்று முடிவு செய்து, தே.மு.தி.க.வின் கதவைத் தட்டியபடியே இருக்கிறார் தி.மு.க. தலைவர். தே.மு.தி.க.வைப் பொருத்த வரை, அந்த 10 % வாக்கு வங்கி இப்போது இருக்காது என்பதே அரசியல் அவதானிகளின் கணிப்பு.ஆனால், அரசியல்வாதிகளின் கருத்து வேறு மாதிரியாக இருக்கிறது.
இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். தி.மு.க. கூட்டணி ஆட்சியில் இருந்து பெற்றது 22% விகிதம். ஆட்சியளர்களுககு எப்போதும் தேர்தலில் சில சாதகங்கள் இருப்பது உண்டு. இப்போது தி.மு.க.விற்கு அது இல்லை. அ.தி.மு.க.விற்கு அது உண்டு. ஆகவே, இப்போதும் அக்கணக்கில் ஏற்ற தாழ்வு வரவே செய்யும்.
மேலும், 10% விகிதமாக மதிப்பிடப்பட்ட விஜயகாந்தின் செல்வாக்கு, கூட்டணி ஒன்று நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற எப்படிப் பயன்படும் என்று சிந்திப்பவர் எவருமிலர். இந்த 10% விகிதம் எல்லா தொகுதியிலும் இருக்காது. ஏறி இறங்கி இருக்கும். இலங்கை - அமெரிக்கா போல் தேசிய அளவில் ஒரே வேட்பாளரைத் தெரிவு செய்யும் ஜனாதிபதி தேர்தலுக்கு அது பயன்படுவது போல், சட்டசபை, நாடாளுமன்றத் தேர்தலில் அதன் தாக்கத்தைப் பெரிய அளவில் காட்டாது.
இரண்டு கழகங்களுக்கும் மாற்றாக விஜயகாந்த் கட்சி வரும் - வளரும் என்று நம்பிய - இரு கழகங்களின்பாலும் அதிருப்தியுற்ற ஒரு கூட்டம், அவரைப் பிரதானமாக ஆதரித்தது. நடிகர் மன்ற ஆதரவும் ஒரு புறம் இருந்தது - இருக்கிறது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜயகாந்தின் அரசியல் நடவடிக்கைகள் நிச்சயமாக அவரது செல்வாக்கைக் கூட்டவில்லை. “ஏமாற்றாதே, ஏமாறாதே” என்று எம்.ஜி.ஆரின் வழியில் வந்த, “கருப்பு எம்.ஜி.ஆர். நான்” என்று தன்னை வர்ணித்த அவர் ஏமாற்றினார் - ஏமாந்தனர் மக்கள்.
எனது கணிப்பு, விஜயகாந்த் பா.ஜ.க. அணிக்குத் தலைமை தாங்குவார் என்பதே. 2% விகிதம் மட்டும் வாக்கு வங்கியைக் கொண்ட பா.ஜ.க., விஜயகாந்தையும் இணைத்து, தமிழகத்தில் தன்னை மூன்றாவது சக்தியாக்கிடத் துடிக்கிறது. ம.தி.மு.க., பா.ம. க., தே.மு.தி.க. மற்றும் சில உதிரி கட்சிகளைச் சேர்த்துக்கொண்டால், தங்கள் அணி 15 முதல் 20% விகித வாக்குகளைப் பெறலாம் என நினைக்கிறார்கள்.
"பாரதீய ஜனதாவின் நரேந்திர மோடி பிரதமராகும் வாய்ப்பு இல்லாவிடில், ஜெயலலிதா பிரதமராக வர பா.ஜ.க. ஆதரவு தர வேண்டும்” என சமீபத்தில் பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி பேசினார். இவர் ஏன் இப்படிப் பேசினார்? மோடியின் வெற்றி உறுதியில்லை என்று நினைக்கிறாரா? இல்லை -ஜெயலலிதாவையும் தடவிக் கொடுப்பது போல் பேச வேண்டும் என்ற கட்டாயத்தில் அப்படிப் பேசினாரா என்று தெரியாது. ஆனால், அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் இணைந்து போட்டியிட வேண்டுமென்ற இவரது மன்றாடலை ‘அம்மா’ புறக்கணித்துவிட்டார். அதன் வருத்தம் அவருக்கு உண்டு. ஒரே உறைக்குள் இரண்டு வாள் இருக்க முடியாது. உண்மைதான்.
பாரதீய ஜனதா ஆட்சியமைக்கும் வாய்ப்பு இல்லாது போனால், நரேந்திர மோடி எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்வாரே தவிர, நிச்சயம் ஜெயலலிதாவோ, வேறு யாருமோ பிரதமராவதற்கு அவர் ஆதரவு அளிக்க பா.ஜ.க.வை விட மாட்டார்.
அதே நேரம், தாங்கள் ஆட்சியமைக்க ஜெயலலிதாவின் ஆதரவைக் கேட்க அவர் தயங்க மாட்டார். அ.தி.மு.க.வால்தான் மோடி பிரதமராக முடியும் என்ற ஒரு நிலை வந்தால், ஜெயா தனக்குத் துணை பிரதமர் பதவி வேண்டுமென்று கேட்பார்; அடம் பிடிப்பார். அது தராவிட்டால், அந்த பா.ஜ.க. அரசை வீழ்த்தவும் அவர் தயங்க மாட்டார். இந்த இரண்டு நிலைகளும் வரும் வாய்ப்பு உண்டு. சேனியன் குடுமி சும்மா ஆடாது.
கூட்டணிகள் உறுதியாகிய பின்புதான் யாருக்கு எவ்வளவு ஆசனங்கள் கிடைக்கலாம் என்று கணிக்க முடியும். தி.மு.க.வோடு விஜயகாந்தும், காங்கிரஸ் கட்சியும் சேர்ந்தால் அது ஓரளவு பலம் பெறும். இல்லாது, விஜயகாந்த் பா.ஜ.க.வுடனும், காங்கிரஸ் தனித்தும் போட்டியிட்டால் அது ஜெயலலிதாவிற்கு போட்டியை மிகவும் இலகுவாக்கும்.
இப்போதைய சூழலிலும் அவர்தான் முன்னணியில் நிற்கிறார். எப்படியும் அவர்தான் அதிக ஆசனங்களைப் பெறுவார் - 40 அல்ல! ஆனாலும் தமிழக முதல்வரின் பிரதமர் கனவு பலிக்காது!
[Administrator: கட்டுரை திருத்தப்பட்டது @ 11:00 am / 31.01.2014]
|