தமிழக முதல்வரும், அ.இ.அ.தி.மு.க.வின் தலைவருமான ஜெயலலிதா - தனது நீண்ட நாள் கனவான பிரதமராக வேண்டும் என்ற
குறிக்கோளுக்கு, உயிர்கொடுக்கும் முகமாக மூன்றாம் அணிக்கு ஆதரவு கொடுத்துள்ளார். அதற்காக முக்கிய இடது சாரி கட்சிகளான மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியுடனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனும் - பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தேர்தல் கூட்டணி அமைத்துள்ளார்.
1996 ஆம் ஆண்டின் தேர்தலுக்கு பிறகு உருவான ஐக்கிய முன்னணி கூட்டணியின் அரசின் கீழ் பிரதமராக தேவகோடா பொறுப்பேற்றதிலிருந்து,
ஜெயலலிதா தானும் பிரதமாராக வேண்டும் என்ற ஆசையில் உள்ளார். அத்தேர்தலில் - காங்கிரஸ் கட்சியோ, பி.ஜே.பி.யோ அதிபெரும்பான்மை
பெறவில்லை. அதனால் - பிராந்திய கட்சிகள் கூட்டணி சேர்ந்து - சுமார் ஓர் ஆண்டு நீடித்த ஐக்கிய முன்னணி ஆட்சியினை அமைத்தனர்.
வேடிக்கை என்னவெனில், அத்தருணத்தில் - பிரதமர் பதவிக்கு பொருத்தமாக கருதபட்டவர்களில் ஒருவர் - நீண்ட காலமாக மேற்கு வங்காள
முதல்வராக இருந்த ஜோதிபாசு. மார்க்சிஸ்ட் கட்சி மேலிடம், ஜோதிபாசு பிரதமாரவதை ஏற்றுக்கொள்ளவில்லை, நிராகரித்தது. மார்க்சிஸ்ட்
கட்சியின் இந்த முடிவு பிற்காலத்தில் - ஜோதி பாசுவாலும், பிறராலும் - வரலாற்றில் பெரிய தவறு (HISTORIC BLUNDER) என குறிப்பிடப்பட்டது.
ஜோதி பாசு பிரதமராவதற்கு அப்போது எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ்ட் கட்சியின் இளம் தலைவர்களான சீதாராம் எச்சூரி மற்றும் பிரகாஷ் கரட்
ஆகியோர் - தற்போது சி.பி.ஐ. கட்சியின் மூத்த தலைவரான பரதனுடன் சேர்ந்து - ஜெயலலிதா பிரதமாவதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
ஜெயலலிதாவிற்கு விண்ணை நோக்கி குறி வைக்க அனைத்து உரிமையும் உள்ளது. ஆனாலும் - அவர் ஜோதி பாசு போன்ற உயர்ந்த தலைவர் என
எவராலும் கூற முடியுமா? தொடர்ச்சியாக, எந்த தடையும் இன்றி - ஜோதி பாசு, மேற்கு வங்காளத்தின் முதல்வராக 18 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.
1987 இல் எம்.ஜி.ஆர்.இன் மரணத்திற்கு பிறகு, அவரின் வாரிசாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், முதல்வராக ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள்
தேவைப்பட்டது. அதன் பிறகு - அவராலோ, அல்லது அவரின் எதிரியும், தி.மு.க.வின் தலைவருமான கருணாநிதியாலோ, தொடர்ந்து இரு முறை
ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை.
காமராஜரும், எம்.ஜி.ஆரும் 9 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதல்வராக இருந்தனர். ஆனாலும் - அவர்கள், ஜெயலலிதாவை போல், இது போன்று
ஆசைப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், காமராஜர் கட்சிப்பணிக்காக அதிகாரத்தை துறந்தார். எம்.ஜி.ஆர். மாநில அளவில்
செயல்புரிவதொடு நிறுத்திக்கொண்டார்.
ஜெயலலிதாவிற்கு தெரியும் - வெளிப்படையாக தன்னை அவர் பிரதமர் வேட்பாளராக அறிவித்துவிட்டால், நாட்டினை அவர் வழிநடத்தி செல்ல
அவருக்கு தகுதி உள்ளதா என்பது குறித்து கேள்வி எழுப்பப்படும் என்று. மேலும் - மூன்றாம் அணி, எவ்வாறு அமையும் என்பதும் தற்போது
தெளிவாகவில்லை. அதனால் தான் அவர் - சாமர்த்தியமாக, இந்த சமயத்தில், பிரதமர் யார் என்று பேசுவது அர்த்தமற்றது எனக்கூறியுள்ளார்.
இதற்கு அர்த்தம் - முதலில், அவர்கள் அதிகமான தொகுதிகளில் வெற்றியடையவேண்டும். மேலும் - காங்கிரஸ் கட்சியும், பி.ஜே.பி.கட்சியும் -
ஆட்சி அமைக்கும் வாய்ப்புக்கு நெருக்கமாகவும் இருக்ககூடாது.
கடந்த சில ஆண்டுகளாக, ஜெயலலிதா - தமிழகத்தில் உள்ள 39 இடங்களையும், புதுச்சேரியில் உள்ள 1 இடத்தையும் அ.இ.அ.தி.மு.க.
வெல்லவேண்டும் என தன் கட்சியினரிடம் கூறிவருகிறார். அப்போதுதான் மத்தியில் அடுத்த ஆட்சி வரும்போது, அதன் உருவாக்கத்தில்
அ.இ.அ.தி.மு.க.வினால் முக்கிய பங்கு வகிக்கமுடியும் என்றும், அதன் மூலமாக தமிழக மக்களின் பிரச்சனைகளான மீனவர்கள் பிரச்சனையோ,
காவிரி பிரச்சனையோ, முல்லைத்தீவு பிரச்சனையோ, இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் பிரச்சனையோ - அவற்றை காதுகொடுத்து கேட்கும்
ஓர் அரசாங்கம் கிட்டும் என்றும் அவர் கூறி வருகிறார்.
இன்னும் சொல்லப்போனால், காவிரி நதி நீர் பிரச்சனை உச்சக்கட்டத்தில் இருந்த போது, சட்டமன்றத்தில் ஜெயலலிதா - இப்பிரச்சனையில்
காங்கிரஸ் கட்சியும், பி.ஜே.பி.யும் தமிழகத்தை ஆதரிக்காது; ஏனெனில் - அவ்வாறு அக்கட்சிகள் ஆதரித்தால், அம்மாநிலத்தில் அவர்கள் ஆட்சிக்கு
வரமுடியாது எனக்கூறினார்.
சித்தாந்த ரீதியாக அவர் சரியாக கூறலாம். இருந்தாலும், 30-40 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொண்டு எப்படி அவர் பிரதமர் பொறுப்புக்கு
குறி வைக்கலாம்? அந்த எண்ணிக்கையும் சாத்தியாமானது அல்ல.
அ.இ.அ.தி.மு.க.வோ, தி.மு.க.வோ, தனியாக எந்த லோக்சபா தேர்தலிலும் - மொத்தமாக, அனைத்து தொகுதியையும் பெற்றதில்லை. 1989
யிலும், 1991 யிலும் அ.இ.அ.தி.மு.க. - காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்தது. 1996 ஆம் ஆண்டு, காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவால்,
தி.மு.க.வும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் - பெருவாரியான தொகுதிகளில் அமோக வெற்றிபெற்றனர். அதன் பிறகு 2004 இல்,
தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும் அமோக வெற்றி பெற்றனர்.
புதுச்சேரியை பொறுத்தவரை - எந்த கூட்டணி உள்ளது, அதன்படி - தி.மு.க.வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் தான் சென்றுள்ளது. அங்கு
அ.இ.அ.தி.மு.க.விற்கு செல்வாக்கு ஏதும் இல்லை.
எதிர்கட்சியினர் மத்தியில் நிலவும் குழப்பங்கள் ஜெயலலிதாவிற்கு சாதகம் என்பது உண்மை என்பதனை ஏற்றுக்கொள்ளத்தான் செய்யவேண்டும்.
2G அலை ஊழல் பூதம், தி.மு.க.வையும், கனிமொழியையும் மீண்டும் அச்சுறுத்த கிளம்பியுள்ளது. அக்கட்சிக்கு மற்றொரு சிக்கல் - ஸ்டாலின் -
அழகிரி லடாய். இதில் அழகிரி கட்சியில் இடைக்கால நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தே.மு.தி.க.வை பொறுத்தவரை அதன் சக்தி மிகைப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய மனநிலையை பார்த்தால், காங்கிரஸ் தோல்வியுறும்
என்பது ஏறத்தாழ உறுதி.
இவற்றையெல்லாம் முழுவதுமாக ஏற்றுக்கொண்டாலும், ஜெயலலிதாவினால் அதிக பட்சமாக 39 இடங்கள் தான் பெறமுடியும். குறைந்த
ஆதரவுக்கொண்டு பிரதமரானவர் - 1990 களில் சந்திரசேகர். காங்கிரஸ் ஆதரவு பெற்ற இவர் கூட 55 உறுப்பினர்களை தன் வசம் வைத்திருந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதாவை கவலையுற வைக்கவேண்டிய மற்றொரு விஷயம் பிரதமர் பதவியின் மேல் கண் வைத்துள்ள தலைவர் இவர் மட்டும் அல்ல.
முலாயமும் அந்த குறிக்கோளுடன் தான் இருக்கிறார். உத்தர் பிரதேஷ் மாநிலத்தில் 80 இடங்கள் உள்ளன. இந்த மாநிலம் தான் - மோடி,
பி.ஜே.பி.யினை தலைமை பொறுப்பிற்கு அழைத்து செல்வாரா, இல்லையா என முடிவு செய்யும்.
பிராந்திய தலைவர்களான தெலுகு தேச கட்சியின் சந்திரபாபு நாய்டு, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மமதா பானர்ஜி, ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமார் ஆகியோர் பி.ஜே.பி.யுடன் முன்னர் உறவாடியுள்ளனர். நிதிஷ் குமார் சில மாதங்களுக்கு முன்னர் தான் பி.ஜி.பி. உடன் இருந்து பிரிந்தார். பிஜு ஜனதா தளத்தின் தலைவர் நவீன் பட்நாயக் - பி.ஜே.பி.யை விட தீவிரமாக காங்கிரஸ் கட்சியை எதிர்க்க கூடியவர்.
மேலும் (பி.ஜே.பி.க்கு) மற்றொரு ஆதரவு சரத் பவார். அவரின் தேசிய காங்கிரஸ் கட்சி தற்போது காங்கிரஸ் உடன் இருந்தாலும், அது ராகுல் காந்தியின் தலைமையை ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தலுக்கு பிறகு பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைத்துக்கொள்ள அது திறந்த மனதுடன் இருக்கிறது.
எனவே - பி.ஜே.பி. கட்சி - பாதி இலக்கை அடையாவிட்டாலும், அவர்கள் நிதிஷ் குமார் மற்றும் இடது சாரிகளை தவிர, இதர கட்சிகளின் ஆதரவை பெறுவதில் பெரிய சிரமம் இருக்காது. வாஜ்பாய் உடைய அரசாங்கத்தில் ஓர் ஆண்டு - 1998-99 களில் - அங்கம் வகித்தவர் தான் ஜெயலலிதா. 1999 ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்தவுடன், சென்னையில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் - தான் பி.ஜே.பி.க்கு ஆதரவு தெரிவித்தது மிகப்பெரிய தவறு என்று அவர் முஸ்லிம்களிடம் கூறினார். ஆனாலும் குஜராத் கலவரங்களுக்கு பிறகு கூட நரேந்திர மோடியுடன் அவர் நெருக்கமாக பழகி வருகிறார். இரண்டாம் முறையாக முதல்வராக மோடி பதவியேற்ற போது, அந்நிகழ்ச்சியில் அவரும் கலந்துக்கொண்டார்.
தற்போது பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட்டுள்ள நிலையில், பி.ஜே.பி. கட்சிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் - மோடி, ஜெயலலிதாவின் ஆதரவை நம்பலாம்.
அப்போது - ஜெயலலிதா தனது செயலை, ஸ்தரமான அரசு வேண்டும் என்றும், மோடியை நீதிமன்றங்கள் குற்றவாளி அல்ல எனக்கூறிவிட்டது என்றும் - நியாயப்படுத்திக் கொள்ளலாம். எமர்ஜன்சி காலகட்டத்திற்கு பிறகு தி.மு.க., காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வழங்கிய போது, கருணாநிதி இதை தான் சொன்னார்.
அரசியல் என்பது - அனைத்தும் சாத்தியம் ஆகும் ஒரு கலை. மாறாமை - முட்டாள்களின் நற்குணம்.
ஜெயலலிதா ஒன்றும் அரசியல் யதார்த்தங்களை அறியாமல் இல்லை. அவர் ஏன் பெரிதாக கனவு காண்கிறார் என்றால், "நட்சத்திரங்களை இலக்காக
வையுங்கள்; நிலவை நோக்கி சுடுங்கள்" என்ற பழமொழியை அவர் நம்புகிறார். அவரை, அவரின் கனவுகளில் இருந்து எழுப்பவேண்டாம்.
----------------------------------------------------------------
சு.முராரி - தமிழகத்தின் மூத்த பத்திரிக்கையாளர்களுள் ஒருவர். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் தனது அனுபவத்தைத் துவக்கிய இவர், 1984
ஆம் ஆண்டு DECCAN HERALD நாளிதழின் தமிழக செய்தியாளராக சென்னையில் இருந்து சேவை புரியத்துவங்கினார்.
இக்காலக்கட்டத்தில் இலங்கைக்கு பல பயணங்கள் மேற்கொண்ட இவர், தனது பயணங்களின்போது - தமிழ் மற்றும் சிங்கள தலைவர்கள் பலரை
சந்தித்தார். ஈழப் போராட்டம், தாய்லாந்து நாட்டில் நடந்த விடுதலை புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கிடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை,
1987 முதல் 2010ஆம் ஆண்டு வரை இலங்கையில் நடந்த அனைத்து தேர்தல்கள் ஆகியவற்றை இவர் நேரடியாக செய்திகளை சேகரித்து
ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார்.
மேலும் DECCAN HERALD பத்திரிகையில் பணிபுரியும்போது பல சர்வதேச நிகழ்ச்சிகள், சார்க் மாநாடுகள் ஆகியவற்றில் கலந்துகொண்டுள்ள இவர்,
கஷ்மீர் மாநிலத்தில் போராட்டங்கள் தீவிரமாக இருந்த 1994ஆம் ஆண்டு காலகட்டத்தில், JKLF அமைப்பின் தலைவர் யாஸீன் மாலிக்கை நேர்காணல்
செய்ய கஷ்மீர் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 2009ஆம் ஆண்டு DECCAN HERALD நாளிதழில் இருந்து இவர் ஓய்வுபெற்றார்.
கடந்த ஆண்டு தனது இலங்கை அனுபவத்தை, "The Prabhakaran Saga: The Rise and Fall of an Eelam Warrior" எனும் தலைப்பில்
புத்தகமாக முராரி எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை Sage Publications நிறுவனம் வெளியிட்டது. பரவலாக வரவேற்பு பெற்ற இப்புத்தகத்தை,
தற்போது முராரி தமிழாக்கம் செய்து வருகிறார்.
[Administrator: கட்டுரை திருத்தப்பட்டது @ 12:30 pm / 10.02.2014] |