ஜெயலலிதா பெறும் 30 அல்லது 32 சீட்டுகளை வைத்துக் கொண்டு இந்தியாவிற்கே பிரதமராக அவர் முயற்சிப்பது வீண் கனவு என்று தெளிவாக சில
அனுபவம் வாய்ந்த பத்திரிக்கையாளர்கள், ஊடகங்கள் வாயிலாக யதார்த்தத்தை தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில் இந்தியாவின் பெரும்போக்கு ஊடகங்களும் அறிவு ஜீவிகளும் காங்கிரஸிற்கு மாற்றாக மக்கள் முன் உள்ள ஒரே வாய்ப்பாக நரேந்திர
மோடியை முன் நிறுத்துகின்றனர். ஆனால் பாரதிய ஜனதா இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் இருக்கிறது என்பதை அவைகள் வசதியாக மறந்து
விடுகின்றன.
கஷ்மீரில் பாரதிய ஜனதா என்று ஒரு கட்சி இருக்கிறதா? அருணாச்சல பிரதேசம், நாகலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாகாணங்களில் மோடிக்கு
செல்வாக்கு இருக்கிறதா? குசராத், அரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை தவிர்த்து எத்தனை மாநிலங்களில், பாரதிய
ஜனதா நேரடி செல்வாக்கை பெற்றிருக்கிறது? இந்தியா முழுவதும் மோடி அலை வீசுவதாக ஊடகங்கள் கூறுவது முற்றிலும் பொய். மோடியை
திணிக்க கார்ப்பரேடுகள் முயற்சிக்கிறார்கள் என்பதே உண்மை.
இசுலாமியர்கள் பெரும்பாலும் இருக்க கூடிய கேரளா, பீகார், மேற்கு வங்கம், உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் மோடி செல்வாக்குடன்
இருக்கிறாரா என்பதை மனசாட்சியுடன் பேச வேண்டும். மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கூட்டணி கட்சிகளின் உதவியுடன்தான் பிஜேபி
இருக்கிறது. பீகாரில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இரண்டுமே மோடியை கடுமையாக எதிர்க்கின்றன. ஏனென்றால், மோடியை
முன்னிறுத்தினால், அங்கு வாக்கு கிடைக்காது என்பதை அவர்கள் அறிவார்கள்.
உத்திரபிரதேசத்தில் செல்வாக்கு செலுத்தும சமாஜ்வாதியும், பகுசன் சமாஜ்வாதி கட்சியும் இசுலாமியர்கள் வாக்குகளை அடிப்படையாக கொண்ட
கட்சிகள். ஆகவே அவை இரண்டும் தேர்தலுக்கு பிறகு கூட பாரதிய ஜனதாவை ஆதரிப்பதற்கு வாய்ப்பில்லை.
எது எப்படியாயிருந்தாலும், படித்த வர்க்கம், நடுத்தர வர்க்கம் எங்கள் பக்கம் இருக்கிறது என்று பாரதிய ஜனதா மார்தட்டுகிறது. இந்த கனவிற்கு,
டில்லி தேர்தல் முடிவே அவர்களுக்கு சரியான பதிலடியை தந்திருக்கிறது. காங்கிரஸை தூக்கியெறிய வேண்டும் என்று நினைத்த மக்கள் முழுமையாக
பாரதிய ஜனதாவை ஆதரிக்கவில்லை. பாரதிய ஜனதாவின் பாசிச போக்கை கண்டு படித்த வர்க்கம் அச்சப்படுகிறது என்பதே உண்மே. அதனால்தான்
கட்சி ஆரம்பித்து ஆறு மாதமே ஆன அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கணிசமான வாக்குகளை அளித்துள்ளர்.
வீரசர்வாக்கர் காலத்தில் இருந்து கூட்டம் சேர்க்கும் பாரதிய ஜனதாவை விட ஆறு மாத குழந்தையான ஆம்ஆத்மிக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை
நாம் உணர வேண்டும். ஆம் ஆத்மி தன்னுடைய வாக்குகளை பிரிக்கிறது என்கிற உண்மை தெரிந்த காரணத்தினால்தான் ஆம் ஆத்மி அலுவலகத்தை
பாரதிய ஜனதா தாக்குகிறது. இந்தியா முழுவதும் ஆம் ஆத்மி போட்டியிடும் இடங்களில் பாரதிய ஜனதாவிற்கு சற்று சரிவுதான். இது போன்ற
உண்மைகளை ஊடகங்கள் சொல்வதே இல்லை.
காங்கிரசிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்து விட்டது என்பதை பெரிதுபடுத்தும் ஊடகங்கள் பாரதிய ஜனதாவின் உண்மை நிலையை மட்டும்
ஏன் எடுத்துரைப்பதில்லை? சில பாஜக ஆதரவு அறிவு ஜீவிகள் மோடி தனித்த பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை என்பதை
ஒத்து கொள்கிறார்கள். ஆனால், தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால், மூன்றாவது கூட்டணியிலுள்ள அனைத்து மாநில கட்சிகளும் மோடியை
ஆதரிப்பார்கள் என்று ஆருடம் கூறுகிறார்கள்.
மம்தா பாரதிய ஜனதாவை ஆதரிப்பார் என்று திண்ணமாக கூறுகிறார்கள். சரி, பீகாரில் நிதிஸ் குமார் தேர்தலுக்கு பிறகு யாரை ஆதரிப்பார் என்று
அவர்கள் ஆராயவில்லை. ஏனென்றால் மோடிக்கு சார்பாக மட்டுமே அவர்களால் சிந்திக்க முடிகிறது. அதற்கு முரணான உண்மைகளை ஏற்றுக்
கொள்ள அவர்களின் மனம் மறுக்கிறது.
அவர்களின் கூற்றின்படியே, மோடி அலையால் பாரதிய ஜனதா வெற்றி பெறும் என்று வைத்துக் கொள்வோம். கர்நாடகாவில் மோடி பிரச்சாரம்
செய்தும் பாரதிய ஜனதா தோல்வியை தழுவியதே. அது ஏன்? அதுவும் ஆளும் கட்சியாக இருந்தும், அரியணை இறங்கியதே! அதை பற்றியெல்லாம்
ஊடகங்கள் பேசுவதும் இல்லை. எழுதுவதும் இல்லை.
உசிலம்பட்டியிலும், ஆட்டையம்பட்டியிலும், ஆத்தூரிலும் தாமரை என்கிற சின்னம் கூட தமிழக மக்களிடம் சென்று சேரவில்லை. ஆனால் நம்
ஊடகங்களோ தமிழகத்தில் திராவிட கட்சிகளை விட பாரதிய ஜனதாவிற்கு அலை வீசுவதாக பிரச்சாரம் செய்கின்றனர். நம் கிராம மக்களுக்கு
ராகுலையும் தெரியாது, மோடியையும் தெரியாது. ஆனால் திமுக, அதிமுக, காங்கிரசு, கம்யுனிஸ்ட் போன்ற கட்சிகளை மட்டும்
தெரியும்.
இந்தி மற்றும் குசராத்தி மொழி பேசும் மக்களைத் தவிர இந்தியாவின் பிற மொழிபேசும் மக்களை மோடி சென்று சேரவில்லை. இசுலாமியர்கள் உட்பட
25 கோடி சிறுபான்மை மக்களும் மோடி அதிகாரத்திற்கு வந்து விடக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வுடன் இருக்கின்றனர்.
பல்வேறு மொழி பேசும் மக்களும், பல்வகைப் பட்ட கலாச்சாரங்களை உள்ளடக்கிய பழங்குடியினரும், பல்வேறு மதநம்பிக்கைகளை பின்பற்றும்
மதத்தினரும் வாழும் நாடு இந்தியா. இதை மோடி ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. ஒரே மொழி, ஒரே மதம் என்கிற அடையாளத்துடன்
இந்தியாவைப் பார்க்கிறார். இதை இந்தியர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொள்ளும் தலைவராக எவ்வாறு ஜெயலலிதா இருக்க முடியாதோ, அவ்வாறு மோடியும் இருக்க
முடியாது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பாரதிய ஜனதா இல்லை. மோடியும் சென்று சேரவில்லை. அவர்கள் ஆட்சியில் இருக்கிற ஜந்து
மாநிலங்களைத் தவிர பாரதிய ஜனதா எங்கும் செல்வாக்குடன் இல்லை என்பதே உண்மை.
ஆயிரம் சொன்னாலும் பாரதிய ஜனதா தேசிய கட்சி என்று நீங்கள் வாதிட்டால், பகுசன் சமாஜ் கட்சியும், இடதுசாரிகளும் கூட தேசிய கட்சிகள் தான்
என்பதை ஊடகங்களுக்கு நினைவுப்படுத்துகிறேன். சீதாராம் யெச்சூரியும், மாயாவதியும் கூட பிரதமராக வாய்ப்பிருக்கிறது என்று ஊடகங்கள் செய்தி
வெளியிடுமா?
----------------------------------------------------------------
ஜீவசகாப்தன் - கடந்த ஆறு வருடங்களாக - புதிய பார்வை, தமிழ் வாசல், நாளை விடியும், சிந்தனையாளன், தமிழர் கண்ணோட்டம், கருஞ்சட்டைத் தமிழர் ஆகிய இதழ்களில் அரசியல், சமூகம், சினிமா, பெண்விடுதலை, பின் நவீனத்துவம், தேசிய இனச் சிக்கல் என்ற தலைப்புகளில் கட்டுரைகள் எழுதிவருகிறார்.
கீற்று இணைய இதழில் அய்ம்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.
இயக்குனர் ஜனநாதன் உட்பட முக்கிய திரை ஆளுமைகளையும், நாஞ்சில் நாடன் போன்ற இலக்கிய ஆளுமைகளையும் நேர்காணல் செய்துள்ளார்.
காட்சி ஊடகத்தில் பாலிமர், சன் தொலைக் காட்சி, சத்யம் தொலைக்காட்சிகளில் செய்தியாளராக பணியாற்றியுள்ளார்.
ஜிடிவி தொலைக்காட்சியில் (GTV) சிறப்பு செய்தியாளராக இரண்டரை வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். திறன் பட பேசு என்கிற விவாத நிகழ்ச்சியை ஒரு வருடத்திற்கும் மேலாக ஜிடிவியில் நடத்தி வருகிறார். |