அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கொப்ப சென்ற வாரம் தமிழக அரசியலில் புதிதாக முளைத்த பரபரப்பு செய்திகளுக்குப் பஞ்சமில்லை. கூட்டணி அமைப்பதில் தஞ்சாவூர் பொம்மை போல இரு புறமும் ஆடிக் கொண்டிருக்கும் மதுரைக்காரரை மையப்படுத்தி நிறைய தகவல்கள் வெளிவந்தன. அதில் பிரதானமானது, மத்தியை ஆளும் கட்சியை, விவாகரத்து பெற்ற தமிழகக் கட்சியோடு மணப்பந்தலில் மீண்டும் அமர வைக்கும் முயற்சிக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரராகச் செயல்படும் அந்த கேப்டன் பற்றிய செய்திகள்தான்.
பெண்ணின் தந்தை சம்மதித்தாலும், அவளது சகோதரரோ - வெட்டியது வெட்டியதுதான்... இனி அந்த உறவு வேண்டவேண்டாம் என்று சண்டை பிடிப்பதாகவும், அப்படியே அந்தத் திருமணம் நடந்தால், நான் அதில் கலந்துகொள்ள மாட்டேன் என்றும் பிடிவாதம் பிடித்து நிற்பதாகவும் சொல்கிறார்கள்.
இந்த தம்பதிகளுக்கிடையே இது எத்தனாவது பிரிவு - உறவு என்று எண்ணிச் சொல்லி விட முடியாது. எலியும், பூனையுமாக ஆரம்பத்தில் எதிரணியில் நின்றவர்கள் 1971இல் ஒரே மேடையில் வாக்கு கேட்டார்கள். அன்றிலிருந்து இன்று வரை இவர்கள் பலமுறை சேர்ந்தார்கள் - பிரிந்தார்கள். போற்றினார்கள் - பின்பு தூற்றினார்கள்.
பெட்டி படுக்கையோடு அம்மா வீட்டிற்கு ஓடிய மனைவி, தான் திருந்திவிட்டேன் என்றோ, கணவன் திருந்தி விட்டார் என்றோ திரும்பி வந்ததுண்டு. அதற்கும் மேல், இடையில் வேறு சில திருமணங்கள் செய்தும் கஜானா காலியானதும், ‘மீண்டும் கோகிலா’ பாணியில் அவள் வந்ததுமுண்டு.
ஆனால் இப்பொது சகோதரரோ கொள்கை அடிப்படையில் - கூடா நட்பு என்றும் தந்தை வர்ணித்த உறவை, மீண்டும் புதுப்பித்தால் மக்கள் என்ன நினைப்பார்கள் என்று கேட்கிறாராம். பொதுக்குழுவில் போட்ட தீர்மானங்களுக்கும் என்ன மதிப்பு என்று கொதிக்கிறாராம் – குதிக்கிறாராம்.
பொதுக்குழு, அது என்ன பொதுக்குழு? வடை, பொங்கல், காபி சாப்பிட்டு தலைவர் சொல்வதற்கு ஆமாம் சாமி என்று கோரஸ் பாட அமைக்கப்பட்டது தானே பொதுக்குழு. கொள்கையாவது, மண்ணாங்கட்டியாவது! அப்படி ஒன்று இருந்திருந்தால், இத்தனை கொள்ளையில் நீங்கள் ஈடுபட்டதாக செய்திகள் வந்த பின்பும், உலக மகா ஊழலில் நீங்கள் ஈடுபட்டதாக உலகின் முதல் தர ஊடகங்கள் எல்லாம் செய்தி வெளியிட்ட பின்பும், உங்கள் பின்னால் இத்தனை தொண்டரணி இருக்குமா?
திருச்சியில்தான் இவ்வளவு கூட்டம் கூடியிருக்குமா? இத்தனை கோடி செலவு செய்ய பணம் எங்கிருந்து வந்தது என்று எந்த கடைநிலை தொண்டனாவது வினவியது உண்டா? திருச்சி மாநாட்டு வெற்றி ஸ்ரீரங்கம் தொகுதி எம் எல் எவை நடுநடுங்க வெச்சுருச்சு என்று ஒரு பத்திரிகை எழுதி இருக்கு.
அரசியலில் நேற்று என்பது போய்விட்டது. நாளை என்பது இன்னும் பிறக்கவில்லை. இருப்பது இன்று எனும் நிகழ்காலம் மட்டுமே. இதற்கேற்ப நாணல் புல் போல் வளைவதுதான் புத்தியே தவிர, தென்னை மரம் போல் கொள்கைக்காக தலைநிமிர்ந்து நிற்கிறேன் என்று கூறி, பின்பு தடால் என்ற சப்தத்தோடு கீழே விழுவது விவேகமாகாது. காரணம், இன்று அரசியல் - பொது சேவை என்று சொல்லப்படும் பொய் சேவைதான். அது வியாபாரமாகிவிட்டது. பணம் சம்பாதிப்பதற்குரிய ஒரு வழி என்று ஆகிவிட்டது.
காசு, பணம், துட்டு, மணியே குறி என்று வந்துவிட்டால் - அங்கு மானம், மரியாதை, நேர்மை, வாய்மை என்பதற்கெல்லாம் இடமில்லை. Politics is the last resort of a scoundrel என்று சாமுவேல் ஜான்சன் என்ற அறிஞர் ஏப்ரல் 07ஆம் திகதி 1775இல் சொன்னார். இன்று நேற்றல்ல; ஆனால் இன்றும் அது செல்லும்!
சகோதரர் எண்ணிப் பார்க்க வேண்டும்... சட்டமன்றத்தில் வெறும் இரண்டு ஆசனங்களை மட்டும் பெற்றிருந்த நிலையில் சந்தித்த 1996 தேர்தலில் - மூப்பனாரும், சூப்பர் ஸ்டாரும் உங்களோடு இணைந்ததால்தான் மறுவாழ்வு கிடைத்தது. இல்லாவிடில் அப்போதே கழகம் கல்லறைக்குச் சென்றிருக்கும். இப்போது சொல்லுங்கள்! நன்றி கெட்டவர்கள் யார்?
உலக மகா ஊழலில் ஓர் அரசாங்கத்தை இழுத்துவிட்டு, எல்லோரையும் இளிச்சவாயர்களாக நினைத்து செயல்பட்டு, வேடிக்கையான விளக்கங்களையும் தந்து, இன்று தலைவர் தூக்கமின்றி தவிக்கும் நிலையிலும், 20% விகித பங்காளியை விசாரித்தவர்கள், 60% விகித பங்காளியை முதுமையைக் காரணங்காட்டி விட்டு வைத்திருக்கும் நிலைக்காவது நீங்கள் நன்றி காட்ட வேண்டாமா? இல்லையில்லை... உங்கள் உறவு உறுதியான உறவல்ல. அது பரத்தை உறவு. கையில் காசு இல்லாதவன் கடவுளே ஆனாலும் கதவை சாத்தடி.
சென்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தோற்றதின் பிரதான காரணம், ஈழப் பிரச்சினையோ, மீனவர் பிரச்சினையோ, மின்சாரமோ பிரதானம் அல்ல. கழகக் குடும்பம் – அதாவது கழகத் தலைவரின் குடும்பம் சினிமா வுட்பட முழு தமிழகத்தின் தொழில்துறைகளையும் Octopus போல ஆக்கிரமித்திருந்ததாலும், 2 ஜி அலைக்கட்டில் அவர்களின் திருவிளையாடல் நிறைந்திருந்ததாலும் மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பும், சலிப்பும்தான்.
ஈழப் பிரச்சினையைப் பிரதானமாக தமிழக மக்கள் கருதினால், இரவு பகலாக - செத்த மனிதரையும் ‘இருக்கிறார், இருக்கிறார்... வருவார், வருவார்...’ என்று கத்திக் கொண்டிருக்கும் கறுப்புத் துண்டுக்காரனான அவரை தமிழக வாக்காளர்கள் எப்போதொ உச்சிக்குக் கொண்டுபோய் இருப்பார்களே...? ஏன் இல்லை??
தளபதியார் இன்றைய சூழ்நிலையை அரசியல் சாணக்கியத்தோடு பார்க்க வேண்டும் - அணுக வேண்டும். ‘மீண்டும் கோகிலா’ வேண்டாம்; ஐந்து ஆசனங்கள் கிடைத்தாலும் போதும் என்று இவர் சொல்கிறார். தன் வாயாலேயே அ.தி.மு.க.விற்கு 35 ஆசனங்களைக் கொடுத்துவிட்டார். பா.ஜ.க. கூட்டணியோ, வேறெந்த அணியுமோ எந்த ஆசனங்களையும் பெறும் என்று கூட சொல்ல முடியாது. தே.மு.தி.க., காங்கிரஸ் இல்லாது தி.மு.கழகம் போட்டியிடுமானால், அனைத்து ஆசனங்களும் அ.தி.மு.க.விடம் போனாலும் ஆச்சரியமில்லை.
இப்படியான சூழலில், தனக்கு - கழகத்திற்கு வரும் ஆபத்தை இவர் அறியவில்லையா? அம்மா கவனமாகக் காய்களை நகர்த்துகிறார். பா.ஜ.க. ஈர்ப்பு கொண்ட அவர் அக்கட்சியை தன் அணியில் சேர்க்கவில்லை. காரணம் தருவதை வாங்குவதெல்ல, தட்டிப் பறிப்பதே அவர் குணம்.
தேசிய அளவில், அ.தி.மு.க.,வை மூன்றாவது அணிக்கு தலைமை ஏற்க செய்யலாம் என்ற முயற்சியிலும் கம்யூ., கட்சிகளின் மூத்த தலைவர்கள் இறங்கியுள்ளனர். மதவாத எதிர்ப்பு கூட்டணியில் பிரதானமானவர் என்று பெயர் எடுக்கும் அவர், காங்கிரசை ஒழிப்போம் என்று சொல்கிறாரே தவிர, மதவாதத்தை எதிர்ப்போம் என்று சொல்வதில்லை. அவர் அருகில் வாலைக் குழைந்து நிற்கும் பொதுவுடமையாளர்கள் கூட அப்படிக் கூறும்படி அவரைக் கேட்பதில்லை. ஆனாலும் பா.ஜ.க. கூட்டணிக்கு ஆட்சியமைக்க அம்மா உதவுவது உறுதி.
இவரால்தான் அவர்கள் செங்கோட்டைக்கு செல்ல முடியும் என்றால், நிச்சயம் இவர் துணைப் பிரதமர்தான். வானளாவிய அதிகாரம் டெல்லியில் இவருக்கு இருக்கும். நிச்சயமாக 2 ஜி அலை ஓசை மலைப்பாம்பு போல் ஒவ்வொருவரையும் விழுங்க ஆரம்பிக்கும். முதலாவதாக, வெளியில் பறந்து திரியும் கனியவள் கூண்டுக்கிளியாவாள். அடுக்கடுக்காக வரும் அழைப்புகளால் கோபாலபுரமே கலகலகத்துப் போகும்.
உங்களது இலக்கு 2016தான் என்று கூறுகிறீர்கள். நீங்கள் வெளியில் இருந்தால்தானே அதைச் சந்திக்கலாம்? அது மட்டுமா? 91 வயதுக்காரரையும் அவர் விட்டு வைக்க மாட்டார். வருஷத்தைப் பாரு 66 என்று பாடி ஆடி வந்தவர், 2016இல் தமிழ்நாட்டில் என்னை எதிர்க்க ஆளே இல்லை பார்- தனக்கு எதிரியே கிடையாது என்ற நிலையை அவர் உருவாக்கிவிடுவார்.
பொருளாளரான நீங்கள் பிரமிக்கும் அளவு பொருள் கட்சிக்கு எப்படி வந்தது - கிடைத்தது என்று நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கி செல்ல வைப்பார் - சொல்ல வைப்பார். உங்களை செல்லாக் காசாக்கி விடுவார். இன்னும் எவ்வளவோ ஆபத்துகள் வரும்.
அந்த நிலை உங்களுக்கு மட்டுமா? என்ன பேசுகிறோம் என்பது கூட அறியாது - மற்றவர்களுக்கும் புரியாது, “துமாரா நாம் கியாஹே (உங்கள் பெயரென்ன) என்று எனக்குத் தெரிந்த இங்கிலீசில் கேட்டேன்” என்று கூறும் அந்த நடிகரையும் உண்டு, இல்லை என்று ஆக்கிவிடுவார்.
தவளையான இவர் மூச்சு பிடிச்சு உப்பினால் யானையாகிடலாம் என்று நினைக்கிறார். இவர் எப்போது "ஓவர்" ஆகிறாரோ அப்போது விழுந்துவிடுவார். 'அரபடிச்ச மூஞ்சர் களனி பானையில் விழும்' என்று காயல் தாய்குலம் அன்று கூறும். பேராசை பெரும் நஷ்டம்.
அவற்றையெல்லாம் எதிர்கொள்ள தயார் என்றால், கொள்கை என்றும், குப்பை என்றும் பேசுங்கள். அது உங்கள் தலைவிதி. ஆனால், தனிக்கட்சியாக ஒரு கட்சி இருப்பது எந்த நாட்டு அரசியலுக்கும் ஆரோக்கியமானது அல்ல. அது சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும்.
இந்தியை வெளியில் எதிர்த்து குடும்ப உறுப்பினர்களை ஹிந்தி பண்டிதர்களாக்கி அவர்களை மத்திய மந்திரிகளாக ஆக்கி அழகு பார்த்தது எந்த கொள்கை ? வயதில் மூத்த நேரு, வயதில் குறைந்த தளபதி காலில் விழுந்து ஆசி பெற்றார். இது எந்த பகுத்தறிவு கொள்கை? இதை பார்த்திருந்தால் பெரியார் சிரித்திருப்பார்.
எம்ஜிஆர் உடல் நலம் அற்று அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்தபோது " என்னை முதல்வராக்குங்கள்... எம்ஜிஆர் உடல்நலம் தேறி வந்தவுடன் ஆட்சியை அவரிடம் ஒப்படைத்து விடுகிறேன்" என்று தமிழக மக்களிடம் தேர்தல் பிரச்சாரத்தின்போது தலைவர் கெஞ்சியது எந்த பொதுக்குழுவில் போட்ட தீர்மானம்?
மதவாதத்தை எதிர்ப்பவர்கள் தான் தி.மு.க., அணியில் சேர முடியும் என திருச்சியில் நடந்த தி.மு.க. மாநாட்டில் பேசிய கருணாநிதி, பா ஜ க தீண்ட தகாத கட்சி அல்ல என்று கூறி 1999 - 2004ல் பா ஜ கவுடன் பதவி சுகத்தில் இருந்தது ஏன் என்ற கேள்விக்கு,நேர்மையான அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பதிலை எந்த காலத்திலும் சொல்லப் போவதில்லை. 2002 குஜராத் கலவரம் குறித்த விமர்சனம் எதுவும் இவர் அந்த காலத்தில் செய்ததில்லை என்பதை நாடறியும். இது எந்த மதவாத கொள்கை ?
சகோதரர் முரண்டு பிடிப்பது இன்று தந்தை 'எதிர்க்கும்' மதவாதத்திற்கு வுரம் சேர்பதாகும் என்று யாரும் சொல்லவில்லையா? தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பது மூத்தோர் மொழி.
அதிமுக உருவாகி 1977 ல் நடைபெற்ற முதல் பொது தேர்தலில் திமுக தனித்து நின்று வாங்கிய வாக்குகளை விட அதிமுக கூட்டணியாக (கம்யுனிஸ்டுகள், பார்வட்பிளாக், முஸ்லிம் லீக்) நின்று 5% வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்றார்கள். திமுகவும் கூட்டணி அன்று அமைத்திருந்தால் அதிமுக கதை அப்போதே முடிந்திருக்கும்.......ஆனால் அன்று தமிழக அரசியலில் தி.மு.க. தீண்ட தகாத கட்சி.
ஆயிரம் பொய் சொல்லியும் ஒரு கல்யாணம் செய் என்பர். அதற்குத்தான் கேப்டன் முயல்கிறார். ஆதாயம் இல்லாது அல்ல. சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன். அப்புறம் உங்கள் இஷ்டம். தளபதியார் அறியாரோ அம்மாவால் வரும் ஆபத்தை???
|