"I have traveled across the length and breadth of India and I have not seen one person who is a beggar, who is a thief.
Such wealth I have seen in this country, such high moral values, people of such calibre ..."
"நான் இந்தியா முழுவதும் பயணம் செய்துள்ளேன். ஆனால் - ஒரு திருடரையோ, ஒரு பிச்சைக்காரரையோ நான் காணவில்லை. இந்த நாட்டில்
பெரும் செல்வதை நான் கண்டுள்ளேன். ஒழுக்க நெறியும், திறமையும் இங்கு மிகுந்து உள்ளது ...
மூலம்: 02.02.1835இல் பிரிட்டன் பார்லிமெண்டில் மெக்காலா பிரபு ஆற்றிய உரைப்பதிவு.
இந்தச் சூழ்நிலை தான் 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் நிலவியது!
----------------------------------------------------------------------
மூன்றடுக்கு ஆட்சி முறை (Three-Tier Administration) கொண்ட நாடு நம் நாடு. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளுள் ஒன்று.
ஆனால் சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகளாகியும் எந்தவோர் ஊரோ, நகரமோ தனது அடிப்படைத் தேவைகளான குடிநீர், சுகாதாரம், சாலை வசதிகள்,
மருத்துவ வசதி, மின்சாரம், கல்வி போன்றவற்றில் தன்னிறைவு அடைந்ததாகக் கொக்கரிக்க இயலாத நிலை.
உள்ளாட்சி நிறுவனங்களுக்கு நாம் செலுத்தும் வரி இனங்கள், மாநில அரசுக்கு நாம் செலுத்தும் வரி இனங்கள், மத்திய அரசுக்கு நாம் செலுத்தும் வரி
இனங்கள், உலக வங்கியிலிருந்து பெறப்படும் கடன்தொகை ஆகியன முறையாகக் கையாளப்படவில்லை.
முறையற்ற வகைகளில் கையாளப்பட்டு,
கறுப்புப் பணமாக - வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளது. நாம் செலுத்தும் வரி இனங்கள் முறையாகக் கையாளப்பட்டிருந்தால், நம் நாட்டின்
அனைத்து அடிப்படைத் தேவைகளும் தொலைநோக்கு அடிப்படையில் தன்னிறைவு அடைந்திருக்கும்.
இந்திய அரசமைப்புச் சட்டம் நம்மால் இயற்றப்பட்டது. நமக்கு நாமே அமைத்துக்கொண்டது. அச்சட்டத்தின்படி, நம் நாட்டில் - பிரதிநிதித்துவ
ஜனநாயகம் (நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மூலம்) நடைபெறுகிறது.
ஆனால், நம்மால்
தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள், மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பவர்களாக இல்லை. மாறாக, கட்சித் தலைமையின் மனப்போக்குக்கு உகந்த
வகையில் செயல்படுகின்றனர். வெளிப்படைத் தன்மையற்றவர்களாகவும், ஊழல் பெருச்சாளிகளாகவும், க்ரிமினல் குற்றவாளிகளாகவும்
உள்ளனர்.
மக்கள் பிரதிநிதி என்பவர் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் உணர்ந்தவராக இருத்தல் வேண்டும். எளிமையானவராகவும், எளிதில்
அணுகக்கூடியவராகவும் இருத்தல் வேண்டும். நம்மில் ஒருவராய், நாம் அன்றாடம் சந்திக்கும் நபர்களுள் ஒருவராய், மக்களோடு மக்களாய்
வாழ்பவராக இருத்தல் வேண்டும். சிந்திக்கத் தெரிந்தவராகவும், மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராட ஆயத்தமாக உள்ள போராளியாகவும் இருத்தல்
வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, மக்கள் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும்போது, சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றல் உள்ளவராகவும்,
மக்கள் பிரச்சினைகளுக்காக அனைத்து தியாகங்களையும் செய்யக்கூடிய ஆற்றல் மிக்கவராகவும் இருத்தல் வேண்டும்.
அண்மையில் டெல்லியில் பதவியேற்ற ஆம் ஆத்மி கட்சி, மக்களை மையப்படுத்தி பல முடிவுகளை எடுத்தது உண்மையிலேயே பாராட்டுக்குரியது.
மக்களை மையப்படுத்தி, மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, உண்மையான - நேர்மையான - வெளிப்படைத் தன்மையுடன் செயல்படக்கூடிய
நம்மில் ஒருவரை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுப்பதன் மூலம், நம்மை நாமே அதிகாரப்படுத்திக் கொள்வோமாக!
மனுதாரராக வாழ்ந்தது போதும்!
மன்னராக மாறுவோம்!!
நம்மை நாமே வலுப்படுத்துவோம்!!! |