பத்மநாபா கொலை
அது செவ்வாய்க்கிழமை ஜூன் மாதம் 19ஆம் திகதி 1990ஆம் வருடம், நேரம் மாலை 06.15 மணி. வெள்ளை அம்பாசடர் கார் TMA3157, 3ஆம் தெரு, A5 பவர் அபார்ட்மெண்ட், ஜக்கரியா காலனி, கோடம்பாக்கம், சென்னை என்ற முகவரியின் வாசலில் நுழைந்து, உள்ளே வந்து நின்றது.
ஒருவர் மட்டும் ஒட்டுனர் ஆசனத்தில் அமர்ந்திருக்க, நால்வர் இறங்கினர். அவர்கள் கைகளில் ஏ.கே.47 துப்பாக்கியும், வெடிகுண்டுகளும் இருந்தன.
இருவர் காருக்கு வெளியே காவலுக்கு நிற்பது போல் நின்றனர். மற்ற இருவர் A5 அபார்ட்மெண்டை நோக்கி மாடியேறினர்.
அடுத்த சில நிமிடங்களில் துப்பாக்கி ரவை மழையோடு பயங்கர வெடிச்சத்தமும் கேட்டது. கீழே நின்ற இருவரும் தங்கள் கைகளிலிருந்த
துப்பாக்கிகளால் கண்டதையும் சுட்டனர். வெடிகுண்டுகளையும் பல திசைகளில் வீசினர். ஒரே சத்தம்... அலறல்... கலவரம்... களேபரம்...
நால்வரும் அதே காரில் ஏறிப் பறந்துவிட்டனர். விளைவு?
மொத்தம் 14 இலங்கையர், 2 சென்னைவாசிகள் கொல்லப்பட்டனர். 22 பேர் துப்பாக்கி, வெடிகுண்டுகளால் காயப்பட்டனர். 164 துப்பாக்கி ரவைகள்
படுக்கையறை, ஹால், வீட்டிற்கு வெளியே, சாலைப் பகுதி, ஆகிய பகுதிகளிலிருந்து பொறுக்கியெடுக்கப்பட்டன. பல இடங்களில் இரத்தக் கறைகள்
படிந்திருந்தன.
வெற்றிகரமாக இக் கொலைத் தாக்குதலை முடித்துக்கொண்ட குழு திருச்சி நோக்கி பயணமாயிற்று. வெள்ளைக் கார், திருச்சியில் வசித்த இலங்கை கடத்தல்காரனான சந்தான கிருஷ்ணனுக்குச் சொந்தமானது. 10 நாட்களுக்கு முன்பு அதில் சென்னை வந்த கொலைவெறிக் கூட்டத்தில் - சிவராஜன், டேவிட், டேனியல், திலீப், ரவி, சாந்தன் ஆகியோர் இருந்தனர். அவர்கள் வடபழனியில் உள்ள ஜெயபாலசிங்கம் வீட்டில் தங்கினர்.
சுமார் 09.30 மணியளவில், வண்டலூர் மிருகக் காட்சி சாலைக்கு அருகில் காரை நிறுத்தி, காரின் இலக்கத் தகடுகளை மாற்றிக்கொண்டிருந்த
இவர்களை, வீதி சோதனையில் சென்ற ஓட்டேரி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் சிட்டிபாபுவும், காசிநாதனும் விசாரித்தபோது,
அவர்களோடு தகராறு செய்ததோடு, சிட்டிபாபுவையும் தாக்கினர். அவர் ஓட்டேரி காவல் நிலையத்தில், குற்றம் இலக்கம் 136/90 பிரிவு 341/342
IPCயின் கீழ் புகார் பதிவு செய்திருந்தார்.
இது இப்படியிருக்க, EPRLF எனும் ஈழ மக்கள் புரட்சி விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபா மற்றும் 13 பேர் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு
பலியானது பற்றி, அப்போதைய உள்துறைச் செயலர் திரு, ஆர்.நாகராஜன் அவர்கள், இக்கொலையைச் செய்தது யார் எனக் கூறாமல், 'இந்தக்
கொலைக்கும், பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் தொடர்பு இல்லை' என்று சொற்ப அவகாசத்தில் அறிக்கை விட்டார்!
இது பலரையும் வியப்படையச் செய்தது. எப்படி இவ்வளவு விரைவாக அரசு நற்சாட்சிப் பத்திரம் கொடுக்கிறது என்று சிந்தித்தனர்.
இரு நாட்களுக்குப் பின் பத்திரிகைகள், விடுதலைப்புலிகள் மாருதி காரில் AK47 துப்பாக்கிகளுடன் வந்ததாகவும், பின்பு அதே காரில் தஞ்சாவூரில்
உள்ள பிள்ளையார் திடலுக்குச் சென்று விசைப் படகு மூலம் யாழ்ப்பாணம் தப்பிச் சென்றதாகவும் செய்தி வெளியிட்டதானது முதல்வர் கருணாநிதிக்கு
பெருத்த அவமானமாக இருந்தது.
ஏற்கனவே தமிழகத்தில் திமுக அரசின் ஆதரவால் ஈழப்போராளிகளின் துப்பாக்கிக் கலாச்சாரம் பெருத்துவிட்டது என்று பலரும் அலறிய நிலை
இருந்தது. அதோடு, நாகராஜன் அவர்கள் கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும், அவர்களைத் தப்பிச் செல்ல விடுமாறும்
காவல்துறைக்கு அறிவித்ததாகக் கூறி, அவர் மீது வழக்கு பதிவு செயப்பட்டது.
இடது கோடியில் பத்மநாபா, வலது கோடியில் பிரபாகரன்
வெள்ளை அம்பாசிடர் கார் தனது பயணத்தைத் தொடர்ந்தது. இரவு 01.30 மணியளவில் அது விழுப்புரம் ரெயில்வே கடவையில் நின்றது. பின்னால்
வந்த மாருதி வேன் TN 01 7969ஐ நிறுத்தி, ஓட்டுநர் சிறிநிவாசனை வெள்ளைக் காருக்குள் இழுத்துச் சென்றனர். உள்ளே தோமஸ் சார்ல்ஸும்,
அவரது தாயாரும் இருந்தனர். அவர்களைப் பின் ஆசனத்தில் உட்கார வைத்து, துப்பாக்கி தாங்கிய இரு விடுதலைப் புலிகள் அருகில் அமர்ந்தனர்.
ஒரு போராளி வாகனத்தை ஓட்டினார். வெள்ளைக் கார் பின்தொடர்ந்தது. மூன்று கிலோ மீட்டர் தாண்டியதும் அந்த மூவரையும் நடு வீதியில் இறக்கி
விட்டுவிட்டு, காவல்துறையில் புகார் செய்யக்கூடாது எனப் பயமுறுத்தி அவர்கள் சென்றனர். சார்ல்ஸ் சென்னை நகரில் குற்றம் இலக்கம் 977/90
பிரிவு 341, 347, 392, 397, 506 (22), IPC பிரிவு 27 ஆயுதம் பாவித்தல் பேரில் குற்றப்பதிவு செய்தார்.
தங்களைக் கடத்திய ஒருவருக்கு இடது கண் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அவர்தான் ஒற்றைக்கண் சிவராசன் என்று ராஜீவ்காந்தி கொலை
வழக்கில் அழைக்கப்பட்டு, பெங்களூரில் துப்பாக்கி மோதலில் இறந்தவர்.
திருச்சி சென்ற அவர்கள் வெள்ளைக் காரை ஒப்படைத்துவிட்டு, அன்று மாலையே தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகிலுள்ள சுப்பையா பிள்ளை
தோப்பிற்கு மாருதி வேனிலேயே சென்று, 21ஆம் திகதி பகல் 03.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த விடுதலைப்புலிகளின் விசைப்படகில்,
20 நிமிடங்களில் யாழ்ப்பாணக் கரையை அடைந்தார்கள்.
அது வரை தமிழகத்தில் எப்பகுதியிலும் வீதித் தடுப்போ, சோதனையோ போடவில்லை. பத்மநாபா உடலிலும், வீட்டிலும், வீதியிலும் சிந்திய
துப்பாக்கி ரவைகளும், 21ஆம் திகதி மே மாதம் 1991இல் ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்ட ராஜீவ்காந்தியின் உடலில் இருந்த ரவைகளும் ஒரே இனம்.
ஆம்! இந்த இரு கொலைகளைச் சேர்ந்தவர்களும் ஒரே இனம்தான். பத்மநாபா கொலையில் சம்பந்தப்பட்ட ஆறு பேர் ராஜீவ் கொலையிலும்
இருந்தனர்.
போராளி குழுக்களின் பிறப்பு
இலங்கையில் யாழ்ப்பாணத்தவர்கள் கல்வி - கேள்விகளில் சிறந்தவர்கள். ஆங்கிலேயர்கள் கரையோரப் பகுதிகளில் பாடசாலைகளையும், கிறிஸ்துவ
ஆலயங்களையும் திறந்து, தங்களது நிர்வாகத்திற்குத் தேவையான - ஆங்கிலம் படித்த ஊழியர்களை உண்டாக்கும் பணியில் ஈடுபட்டனர். வறண்ட
பூமியில் விவசாயத்திற்கான வாய்ப்பு குறைவு.
ஆங்கிலக் கல்வியால் வாழ்வாதாரம் பெருகும் என்ற வாய்ப்பு வந்ததும் அம்மக்கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்டி முன்னேறினர். தாழ்த்தப்பட்ட
மக்களும், உயர்குடியினரும் கூட கல்விக்காக மதம் மாறினர். ஆகவே, யாழ்ப்பாண மாவட்டம் இலங்கையிலேயே அதிக பட்டப் படிப்பாளர்களைக்
கொண்ட மாவட்டமாக உருவாகியது. இன்றைய ஈழப்பிரச்சினையின் ஆணிவேரும் அதுதான்.
இலங்கையில் பட்டப்படிப்பிற்கு பல்கலைக் கழகம் செல்ல வேண்டுமேயொழிய, கல்லூரிகள் பட்டம் தருவதில்லை. 1970ஆம் ஆண்டு பதவிக்கு வந்த
சிறிமா பண்டாரநாயக்காவின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த அலிகர் பல்கலைக் கழகப் பட்டதாரி அல்ஹாஜ் பதீயுத்தீன் மஹ்மூது
அவர்கள் பல்கலைக் கழகங்களுக்கு Standardization – தரப்படுத்துதல் என்ற ஒரு முறையைக் கொண்டு வந்தார்.
அதாவது, பல்கலைக்கழக புகுமுக வகுப்பில், அதிக மதிப்பெண்கள் அடிப்படையில் பல்கலைக் கழக அனுமதியைக் கொடுத்தால், யாழ்ப்பாணத்து தமிழ்
மாணவர்களே பெரும்பான்மையான இடங்களைப் பிடித்து விடுகின்றனர். அவர்கள் கற்ற குடும்பங்களிலிருந்து வருகின்றனர். நாட்டின் ஏனைய பகுதி
கல்லாத குடும்பங்களிலிருந்து புதிய தலைமுறைப் பட்டதாரிகள் உருவாகுவது சிரமமாகவே இருக்கிறது என்று கூறி, மற்ற மாவட்ட
மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியைக் (கட்ஆஃப்) குறைத்தார்.
இதனை, பெரும்பான்மையினருக்கான ஒரு விதமான இடஒதுக்கீடு எனலாம். சிங்கள,முஸ்லிம், மற்ற பகுதி தமிழ் மாணவாகள் இதனை
வரவேற்றனர். யாழ்ப்பாணத்து மாணவர்கள் எதிர்த்தனர். அரசுக்கும், கல்வி அமைச்சருக்கும் எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கல்வியமைச்சர் ஒரு முஸ்லிம் என்பதால், தமிழ் மாணவர்களுக்கிடையில் முஸ்லிம் எதிர்ப்பு - வெறுப்புணர்வு உருவாயிற்று.
‘தமிழ் மாணவர் பேரவை’ என்ற எதிர்ப்பு அமைப்பு சத்தியசீலன் என்ற மாணவர் தலைமையில் உருவாயிற்று. நாற்பது உறுப்பினர்களைக் கொண்ட
இந்த அமைப்பில், பொன்னுதுரை சிவகுமாரன், பத்மநாபா (ஆம்! அவரேதான் கோடம்பாக்கத்தில் கொல்லப்பட்டவர்), 18 வயது வேலுப்பிள்ளை
பிரபாகரன் (ஆம்! அவரேதான் கோடம்பாக்கத்தில் பத்மநாபாவைக் கொன்ற இயக்கத்தின் தலைவர்) ஆகியோர் இருந்தனர். ஈழத்துப் போராளி
குழுக்களின் நதிமூலம் இங்குதான் உருவாகிறது.
1972ஆம் ஆண்டு செட்டி தம்பலசிங்கம் என்பவர் பிரபாகரனோடு சேர்ந்து, Tamil New Tigers- புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை உருவாக்கி,
அதன் தலைவரானார். அந்த நாட்களில் நடராஜா தங்கதுரை, குட்டிமணி என்ற செல்வராஜா யோகசந்திரன் ஆகியோர், இந்த TNT அமைப்பினரோடு
ஆயுதப் போராட்டம் பற்றி விவாதிக்கவும், அவ்வழியில் பயணிக்கவும் துவங்கினர்.
1971ஆம் ஆண்டு சிறிமா பண்டாரநாயக்கா அரசிற்கு எதிராக JVP எனும் இடதுசாரி சிங்கள இளைஞர் அமைப்பான மக்கள் விடுதலை முன்னணி
நடத்தியது போன்ற ஆயுதக் கிளர்ச்சியை நாமும் நடத்த வேண்டும் என்பது அவர்களது குறிக்கோள்.
அதன் துவக்கமாக அரசு ஆதரவு தமிழ் அரசியலாளர்களைத் தாக்கவும், கொல்லவும், காவல்துறையினரையும், அரசு அதிகாரிகளையும் வெடிகுண்டு
மூலம் தீர்த்துக்கட்டவும் தீர்மானித்தனர் - துணிந்தனர் - இறங்கினர். யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பா. அவரைக் கொல்லும் முயற்சி
துவங்கியது.
ஜனவரி 3-9,1974இல், யாழ்ப்பாணத்தில் குழப்பத்தில் முடிந்த மூன்றாவது உலக தமிழ் ஆராய்சி மாநாடு இந்த இளைஞர்களை ஆத்திரமடையச்
செய்தது. மேயர் அல்பிரட் துரையப்பா தான் தமிழ் மாநாட்டில் நடந்த அனர்த்தங்களுக்குக் காரணம் என்று கூறி, அவரது வீட்டின் மீதும், காரின் மீதும்
வெடிகுண்டுகைள வீசினர். அவர் செல்லுமிடங்களிலெல்லாம் குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.
1974ஆம் வருடம் ஜூன் 05ஆம் திகதி காவல்துறை சிவகுமாரனைப் பிடிக்கும் தருவாயில் அவர் சயனைடு அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
முதன் முதலாக சயனைடு அருந்தி எதிரியிடம் பிடிபடாது உயிர்நீக்கும் கலாச்சாரம் உருவாயிற்று. இப்போது புதிய தமிழ் புலிகளின் தலைவராக
பிரபாகரன் பொறுப்பேற்றார்.
27 ஜூலை 1975 அன்று மேயர் துரையப்பா - பொன்னாலையிலுள்ள கிருஷ்ணன் கோவிலுக்கு வந்தபோது, நேருக்கு நேராக நின்று, சிறிய கைத்துப்பாக்கியால் பிரபாகரன் அவரைக் கொன்றார். பிரபாகரன் செய்த முதல் கொலை இதுவே. வழிபாட்டுத் தலங்களிலும் கொலை செய்யலாம் என்று இதன் மூலம் அவர் வழி காட்டினார்.
1976ஆம் ஆண்டு மே 05ஆம் திகதி பிரபாகரன் தனது அமைப்பிற்கு, Liberation Tigers of Tamil Eelam ( LTTE) தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்
என்று பெயர் மாற்றம் செய்தார்.
இந்தியா - இந்திரா தந்த ஆயுதப் பயிற்சி
இக்காலத்தில், இந்தியாவில் பதவியில் இருந்த இந்திரா காந்தி அம்மையார், சிறிமா பண்டார நாயக்காவோடு நல்ல நட்புறவு கொண்டிருந்தார்.
நெஹ்ருவும், திரு. சாலமன் பண்டாரநாயக்காவும் லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் ஒன்றாகப் படித்த நண்பர்கள். அந்த சினேகம் இரு
குடும்பத்தாரிடமும் தொடர்ந்தது.
அதன் விளைவுதான் 1974இல் குடியுரிமை இல்லாத 5 இலட்சம் இந்திய தோட்டத் தொழிலாளர்கள் அனைவரையும் இந்திய ஏற்க வேண்டுமென
இலங்கை முரண்டு பிடித்தபோது, பாதித் தொகையை ஏற்பதாகக் கூறி, அத்தோடு கச்சத்தீவையும் அவர்களுக்குக் கொடுத்தார்.
1977 மார்ச்சில் இந்திரா அரசு தோற்றது. இலங்கையில் 1977 ஜூலையில் சிறிமாவோ அரசு தோற்று, ஜெ.ஆர்.ஜெயவர்த்தனவின் அரசு
வந்தது.1980இல் இந்திரா மீண்டும் பதவிக்கு வந்த பின், இலங்கை - இந்திய உறவு பாதித்தது. ஜெயவர்த்தனவை மேற்குலகின் கைப்பாவை என்று
ரஷ்யா சார்பு இந்திரா வர்ணித்தார். அவருக்கு எதிராகச் செயல்பட ஆரம்பித்தார்.
பாலஸ்தீன போராளிகள் தீவிரமாக செயல்பட்ட காலம் அது. வட இலங்கையிலும் பல தமிழ்ப் போராளிகள் குழுக்கள் உருவாகி இருந்தன. அவர்கள்
பாலஸ்தீன குழுக்களிடம் ஆயுதப் பயிற்சி பெற ஆரம்பித்தனர்.
இலங்கை அரசுக்கு எதிராக தமிழ் போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சியை இந்திரா தரலானார். முதல் குழு உத்தரகண்டின் சக்ரதா இராணுவ முகாமில்
பயிற்சி பெற்றது. இரண்டாவது குழுவில் விடுதலைப் புலிகளின் உளவுத் தலைவர் சண்முகலிங்கம் சிவ சங்கர் என்ற பொட்டு அம்மான் ஹிமாச்சல்
பிரதேசத்தில் பயிற்சி பெற்றார். இந்த இரண்டு இடங்களுக்கும் பிரபாகரன் நேரில் சென்று பயிற்சியை அவதானித்தார்.
பின்பு பயிற்சி முகாம்கள் தமிழ்நாட்டுக்கு மாற்றப்பட்டு, விடுதலைப்புலிகள் உட்பட பல போராளிகள் எட்டு பிரிவுகளாகப் பயிற்சி பெற்றனர். முன்னாள்
இராணுவ அதிகாரிகளே பயிற்சியாளர்கள். துப்பாக்கி சுடுவது, நீச்சல், படகு ஓட்டுதல், இயந்திர துப்பாக்கி பாவித்தல், வாகனங்களை ஓட்டுதல்,
கெரில்லா யுத்த முறைகள், உடற்பயிற்சி அனைத்தையும் பயிற்றுவித்தனர்.
இன்றைய ஈழ ஆதரவு தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், காங்கிரஸ் கட்சி ஈழ மக்களுக்கு துரோகம் செய்தது என்று ஒப்பாரி வைக்கும் வேளையில்,
இலங்கையிலுள்ள தீவிர சிங்கள ஈர்ப்பு அரசியல்வாதிகள், முப்பதாண்டு தமிழ் தீவிரவாதத்திற்கு, இலங்கையில் விடுதலைப்புலிகளால் ஏற்பட்ட
உயிர்ச்சேதம், சொத்து இழப்பு என்பனவற்றுக்கு இந்தியாதான் காரணகர்த்தா... இந்தியா துரோகி... ஆகவே இந்தியாவிடம் நட்டஈடு கேட்க
வேண்டுமென்று கனல் கக்குகிறார்கள். மத்தளத்திற்கு இருபுறமும் இடி.
(அடுத்து: 1983 இனக்கலவரம் - கொழும்பு எரிந்தது) |