வெங்கட்ராமனின் கவலை
நேரடியாக ஸ்ரீபெரும்புதூரின் துன்ப நிகழ்வுக்குப் போகும் முன்பு, கோடம்பாக்கம் சம்பவத்திற்கு பின்பும் ஸ்ரீபெரும்புதூரின் துன்ப நிகழ்வுக்கு முன்பும் இடையில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளைப் பார்ப்போம்.
அப்போதைய இந்திய ஜனாதிபதியாக இருந்தவர் ஆர்.வெங்கட்ராமன் அவர்கள். தமிழ்நாட்டுக்காரர். காமராஜர் காலத்தில், தமிழக தொழில்துறை அமைச்சராகவும், பின்பு மத்திய அரசில் பாதுகாப்பு அமைச்சு, நிதியமைச்சு போன்ற முக்கிய பதவிகளையும் வகித்தவர். தஞ்சை மாவட்டத்தின் ராஜாமடம் கிராமம், பட்டுக்கோட்டை அவரது சொந்த ஊர். ஆகவே, தஞ்சையில் தமிழ்ப் போராளிகளின் ஆளுமையை அவர் அறிந்தே இருப்பார்.
1990 ஜூன் 19ஆம் திகதி, சென்னையில் பத்மநாபா கொலை நடந்த மறுநாள், அப்போதைய பிரதமராக இருந்த வி.பி.சிங் அவர்களுக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பினார் அவர். அதன் சாரமாவது:
“இலங்கைப் போராளிகளின் நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பல வகைகளில் பாதிக்கிறது என்ற எனது கவலையை நேற்று நாம் விவாதித்தோம். சென்னையில் இருந்து வந்த ஒரு சிறு தொழிலதிபர் நேற்று என்னை சந்தித்தபோது இந்த இலங்கை இளைஞர்கள் பல வர்த்தகர்களிடம் பலவந்தமாக ரூபாய் 500 முதல் கப்பம் வசூலிப்பதாகவும், தர மறுப்பவர்களை பயமுறுத்துவதால் யாரும் காவல்துறையிடம் முறைப்பாடு செய்வதில்லை என்றும் கூறினார்."
"கோடம்பாக்கத்தில் நடந்த கோரச்சம்பவம் விடுதலைப் புலிகளின் வன்முறையையும், ஆயுததாரிகளின் முன்னால் காவல்துறையின் மெத்தனப் போக்கையும் நன்கு காட்டுகிறது. நான் முன்பு கூறியபடி, அனைத்து இலங்கைப் போராளிகளையும் LTTE, EPRLF, TELO மற்றும் குழுவினரை உடனடியாக இந்தியாவிலிருந்து திருப்பியனுப்பி விடுவதே நல்லது. இல்லாவிடில், இலங்கையின் வட கிழக்கில் நடைபெறும் சம்பவங்கள் தமிழ்நாட்டிலும் வழிந்தோடி, பின்பு கட்டுக்கு அடங்காததாக மாறிவிடும்“.
இவ்வாறு ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்க பிரதமர் வி.பி.சிங் 4 மாதங்கள் எடுத்தார். 13.10.1990இல் அவர் எழுதிய கடிதத்தில்; “தமிழ்நாட்டிலுள்ள இலங்கைப் போராளிகள் பற்றிய உங்கள் கவலையையும், சட்டம் ஒழுங்கு பற்றிய உங்கள் அவதானத்தையும் நான் உணர்கிறேன். நாங்கள் நிலைமையை தொடர்ந்து அவதானித்து வருகிறோம். தமிழக அரசுக்குத் தேவையான உதவிகளையும் செய்கிறோம்."
"மத்திய அரசின் கொள்கையான, ஈழப் போராளிகள் நமது மண்ணில் செயல்படக் கூடாது, முகாம்களிலேயே இருக்க வேண்டும்; வெளியில் நடமாடித் திரியக் கூடாது என்பதையும் தமிழக அரசுக்கு அறிவித்துள்ளோம். மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படியும், கடத்தல் காரர்களைக் கண்காணிக்கும்படியும் கூறியுள்ளோம்."
"மேலும் தமிழக அரசு 22 விடுதலைப் புலிகளைக் கைது செய்துள்ளது. ஏனையவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இலங்கையர்கள் அனைவரும் தங்களை காவல்துறையிடம் பதிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த அறிவிப்பு, வாடகை வீட்டு உரிமையாளர் களுக்கும் தரப்பட்டுள்ளது. இலங்கையில் இன்றுள்ள சூழலில் பெரிய அளவில் அகதிகள் வருகிறார்கள். ஆகவே, நீங்கள் கூறிய படி, அனைத்து இலங்கையர்களையும் திருப்பியனுப்புவதென்பது இயலாத காரியம்” என்று பதில் கொடுத்துள்ளார்.
இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், ஜனாதிபதியின் கடிதத்திற்கு பிரதமர் எடுத்த காலம் நான்கு மாதங்கள். நிற்க, மே மாதம் 06ஆம் திகதி தமிழக சட்டசபையில் முதல்வர் கருணாநிதி, RAW உளவுத்துறை தான் மத்திய - மாநில அரசுகளுக்கிடையே பொய்த் தகவல்களைத் தருகிறது என்று குற்றஞ்சாட்டிப் பேசியதை பிரதமர் வி.பி.சிங்கிற்கும் எழுதியதற்கு, பிரதமர் மே மாதம் 11ஆம் திகதியே அதனை மறுத்து பதில் அனுப்பியதை இங்கு குறிப்பிட வேண்டும்.
சென்னை - டெல்லி கடிதப் பரிமாற்றத்தில் இருந்த அந்த விரைவு, டெல்லி To டெல்லி யில் இல்லை. பிரதமர், ஜனாதிபதியின் கடிதத்தை தமிழக முதல்வருக்கு அனுப்பியிருக்கலாம். முதல்வர் பதில் தர காலதாமதம் செய்திருக்கலாம். அல்லது பிரதமருக்கு, ஆறப்போட்டு பதில் கொடுங்கள் என்று சொல்லி இருக்கலாம். காரணம், சட்டம் ஒழுங்கு விடயத்தில் ஜனாதிபதிக்கும் அதிகாரம் உண்டு. ஆனால் இந்த நான்கு மாதங்களில் தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் கை பல துறைகளில் ஓங்கிவிட்டது. பல குற்றச் செயல்களில் அவர்கள் ஈடுபட்டனர்.
நடேசனும் காசி ஆனந்தனும்
ஜூன் 1990இல் இலங்கை இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சண்டை தீவிரமடைந்தது. களத்தில் நிலைத்து நிற்க புலிகளுக்கு புதிய ஆயுதங்கள் நிறைய தேவைப்பட்டதோடு காயப்பட்ட போராளிகளின் சிகிச்சைக்காக மருத்துவ உதவியும் அவசியமாகத் தேவைப்பட்டது.
ஜூன் 26இல், ஏற்கனவே சென்னைக்கு வந்துவிட்ட புலிகளின் அரசியல் துறை - காவல் துறைப் பொறுப்பாளரும் 2009 கடைசி யுத்தத்தில் வெள்ளைக் கொடி விவகாரத்தில் இறந்தவருமான நடேசன், மற்றும் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் வைகோவுடன் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து, தமது தேவைகளைக் கூறியபோது, முதல்வர் - தனக்கு ஆயுதக் கடத்தல் செல்லும் வழிகளை முற்கூட்டியே அறியத் தந்தால், அது பாதுகாப்பாகச் செல்ல உதவி செய்வதாகச் சொன்னதோடு, மருத்துவ உதவி செய்யவும் ஒப்புக்கொண்டு, காயப்பட்டவர்கள் வரும் நாட்களில் சோதனைச் சாவடிகளை மூடி விடுவதாகஉம் சொன்னார்.
மேலும், பத்மநாபா கொலை சென்னையில் நடந்ததால், ‘ஒரு துரோகி’க்கு நான் அஞ்சலி செலுத்த வேண்டி வந்துவிட்டது என்று வருந்தியதோடு, வரதராஜபெருமாளையும் முடித்துவிடுவது நல்லது என்றார். இதுபோன்ற காரியங்களில் ஈடுபடும்போது முற்கூட்டியே எனக்கு அறிவித்தால், அதற்குப் பொருத்தமான நடவடிக்கைகளை நான் எடுக்க வசதியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் சமீபத்திய அறிவிப்பு, இலங்கையர்கள் காவல்துறையிடம் பதிவு செய்ய வேண்டும் என்பதில் விடுதலைப் புலிகள் பதிவு செய்ய வேண்டியதில்லை என்றும் சொன்னார். இது பிரதமர் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்திலிருந்து மாறு பட்ட செய்தி - செயல்.
நடேசன், இந்த இறுதிப்போரில் உங்களின் உதவி அவசியம் என்றும், அதன் மூலம் - உங்கள் காலத்தில் ஈழம் அடைந்தால் அந்தப் பெருமை உங்களையும் சாரும் என்று பிரபாகரன் சொல்லச் சொன்னதாக சொன்னார். இலங்கை இராணுவத்தை எதிர்க்க எங்களுக்கு ஏவுகனைகள் வேண்டும் என்று கேட்டார். அதற்கு மத்திய அரசோடு தொடர்புகொள்கிறேன் என்று கூறிய முதல்வர், நான்கு லட்சம் ரூபாய் அன்பளிப்பாகக் கொடுத்தார் காசி ஆனந்தனிடம்.
மேலும், ஒரு விசேஷ தூதுவர் ஜூன் 28ஆம் திகதி பிரபாகரனிடமிருந்து இரண்டு கடிதங்களை, பிரதமருக்கும், முதல்வருக்கும் கொண்டு வருகிறார் என்றும் நடேசன் குறிப்பிட்டு அவர்கள் வரும் வழி பாதுகாப்பாக இருக்கும் படி பார்த்துக்கொள்ளுமாறு முதல்வரைக் கேட்டுக்கொண்டார். பிரதமரின் கடிதத்தை நடேசனே டெல்லி சென்று கொடுக்கும்படி கருணாநிதி சொல்லி, விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்வதில் தனக்கோ, பிரதமருக்கோ பிரச்சினை இல்லை என்ற அவர், எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தலால்தான் சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டி உள்ளது என்றார்.
ஜூலை 2 திகதி நடேசன் மீண்டும் கருணாநிதியைச் சந்தித்தபோது பிரபாகரனின் கடிதங்களைப் பெற்றுக்கொண்டமைக்கு நன்றி தெரிவித்தார். தான் மத்திய ரயில்வே அமைச்சரோடு இதுபற்றிக் கலந்ததாகவும், பிரபாகரனுக்குச் சொல்லி, இன்னொரு புதிய கடிதத்தில் - தேவை என்னென்ன என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டு எழுதும்படியும் கருணாநிதி கேட்டார். தான் பிரதமருக்கு ஆயுத உதவி செய்ய வேண்டும் என்று அழுத்தி - வற்புறுத்தி எழுதவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அவர் கேட்டுக்கொண்டபடி புதிய கடிதம் இந்தியப் பிரதமருக்கு பிரபாகரனால் பின்பு எழுதப்பட்டது. நடேசன் மீண்டும் ஜூலை 22ஆம் திகதியன்று வைகோவுடன் கருணாநிதியைச் சந்தித்து அதைக் கொடுத்தார். கலைஞர், தான் பிரதமர் வி.பி.சிங்கிடம் விடுதலைப் புலிகளின் ஆயுதத் தேவை பற்றிப் பேசியுள்ளதாகவும், நடேசனை வைகோவுடன் டெல்லி சென்று பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னான்டசைப் பார்க்கும்படியும் சொன்னார்.
அதன்படி டெல்லி சென்ற அவர் பாதுகாப்பு அமைச்சரிடம் ஆயுத தேவைக்கு பிரபாகரன் தந்த பட்டியலைக் கொடுத்தார். அதனை பெர்னான்டஸ் பிரதமருக்கும் வெளிவுறவு துறை அமைச்சருக்கும் அனுப்பினார். (REF: Annexure M- 63(xx) (IB Report No32 dated 29.7.90)
இதே காலகட்டத்தில் காசி ஆனந்தனும் சென்னையில் கருணாநிதியைப் பலமுறை சந்தித்தார். செப்டம்பர் 01ஆம் திகதி சந்திப்பின்போது, போராளிகளுக்கு பண உதவி தேவை என்ற பேச்சு வந்தபோது கலைஞர், காசி ஆனந்தனிடம் பாதிக்கப்பட்ட 'ஈழ மக்களின் மறுவாழ்விற்கான தொண்டு இயக்கம்' என்ற ஓர் அமைப்பை - அவர்கள் இருவரும் பொறுப்பாளர்களாக இருந்து உருவாக்கினால், அரசு பணத்தை அதற்குத் தள்ளிவிட தடை இருக்காது என்று குறிப்பிட்டார். அப்போது உள்துறை செயலாளர் நாகராஜனும் உடனிருந்தார்.
பட்டுகோட்டை சம்பவம்
விடுதலைப் புலிகளுக்கு தமிழ்நாட்டு அதிகார மையம் எவ்வளவு தூரம் பணிவாக - கனிவாக நடந்தது என்றும், புலிகள் எவ்வளவு அகந்தையாக நடந்தனர் என்பதையும் காட்டும் சம்பவங்கள் பல உண்டு. அவற்றுள் ஒன்றை இங்கு பார்ப்போம்.
ஜூன் 28ஆம் திகதி பிரபாகரனிடமிருந்து கடிதம் கொண்டு வந்த நபர் கிரூபன். ஜூலை 25ஆம் திகதி பகல் 01.30 அளவில் மாருதி வேன் TSA 2414 பட்டுகோட்டை, ரெண்டாம் புலிக்காடு சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டது.
அதில் இருந்தவர்கள் அதே கிரூபன், விக்டர், குமார், சந்திரன், ரவி ஆகியோர். அவர்கள் தாங்கள் கடல் பகுதிக்குச் சென்று, காயப்பட்ட போராளிகளைப் பொறுப்பேற்கச் செல்வதாகவும், தங்களுக்கு இதற்கான அனுமதி வை.கோபால்சாமி மாறலாக முதல்வரால் தரப்பட்டுள்ளது என்றும் வாதித்தனர்.
இவர்களில் பத்மநாபா கொலையாளிகள் இருக்கலாம் எனச் சந்தேகப்பட்டு காவலர்கள் அவர்களை பட்டுக்கோட்டை காவல் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு போராளிகள் வாகனத்திலிருந்து இறங்க மறுத்தனர், வற்புறுத்தினால் சயனைட் உட்கொள்வோம் எனப் பயமுறுத்தினர்.
தாங்கள் எஸ்.பி. அல்லது டி.ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ளவர்களோடு மட்டுமே பேசுவோம் என முரண்டு பிடித்ததால், அவர்களும் வரவழைக்கப்பட்டனர். ஆயுதங்களுடன் கமாண்டோக்களும் வந்தனர். ஆறு மணி நேரம் பேசியும் விடுதலைப் புலிகள் வாகனத்தை விட்டும் இறங்க மறுக்கவே, காவல்துறை, கமாண்டோக்களிடம் பொறுப்பைக் கொடுத்து ஒதுங்கினர்.
இப்போது புலிகள் வாகனத்தை விட்டு இறங்கினர். வைகோவின் நண்பரும் பட்டுக்கோட்டை முனிசிபல் தலைவருமான எஸ். விஸ்வநாதனோடும் ஒரு வழக்கரிஞரோடும் பேசவேண்டும் என்ற அவர்களின் கோரிக்கை மறுக்கப்பட்டது.
அப்படியானால், சயனைட் குப்பிகளைக் காட்டி, தற்கொலை செய்துகொள்ளப் போவதாக பயங்காட்டினர். டி.ஜி.பி.யும், உள்துறைச் செயலரும் - சயனைட் குப்பிகளைப் பலவந்தமாகப் பறிக்குமாறு காவல்துறைக்கு தொலைபேசி வழியே பணித்தனர். கடைசி எச்சரிக்கையின் பின் புலிகள் சயனைட் குப்பிகளைக் கொடுத்தனர்.
அப்போது மணி இரவு 11.30 – அதாவது 10 மணி நேர போராட்டத்தின் பின்பு அவர்களிடமிருந்து சயனைட் குப்பிகள், 9mm பிஸ்டல், 9mm மெகசின் மற்றும் 50 தோட்டாக்களுடன் வாக்கிடாக்கி கருவியும் கைப்பற்றப்பட்டன. அவர்களைக் கைது செய்து, திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பினர். பத்மநாபா கொலையில் இவர்களுக்கு சம்பந்தம் இருக்கலாம் என்று எண்ணியதால் அவர்கள் பின்பு சென்னைக்கு மாற்றப்பட்டனர்.
பிரபாகரன் ஆத்திரம்
இந்தப் போராளிகளின் கைது - குறிப்பாக கிரூபன் கைது செய்யப்பட்டது பிரபாகரனை ஆத்திரமூட்டியது. அப்போது டெல்லியிலிருந்த நடேசனுக்கு அவர் அவசரமாகத் தகவல் அனுப்பி, கீழ்க்கண்ட செய்தியை உடனடியாக வைகோவிடம் கொடுத்து விட்டு சென்னை செல்லுமாறு பணித்தார்.
புலிகள் தமிழ் நாட்டில் பல இடங்களில் தவகல் பரிமாற்றத்திற்கு வயர்லெஸ் கருவிகளைப் பாவித்தனர். அதன்மூலம் யாழ்ப்பாணத்தோடு 24 மணி நேரத் தொடர்பு இருந்தது. மையம் திருச்சியில் இருந்தது. அதன் பொறுப்பாளர் டிக்சன்.
அந்தக் கடிதத்தில் இருந்ததாவது:
"காயப்பட்ட எங்கள் வீரர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ஏற்கனவே கைது செய்துள்ளீர்கள். அதை நாங்கள் பொறுத்துக் கொண்டோம். இப்போது நீங்கள் - நான் கடிதம் அனுப்பிய கிரூபனைக் கைது செய்துள்ளீர்கள். இதனை என்னால் பொறுக்க முடியாது.
“கிரூபன் எனது கடிதத்தைக் கொடுக்க வந்த தூதுவன். அதோடு, காயப்பட்டு சிகிச்சைக்கு வரும் போராளிகளைக் கவனிக்கும் பொறுப்பும் அவருக்குத் தரப்பட்டுள்ளது. அப்படியானால், தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து என்னையும் கைது செய்வார்களா? நாங்கள் இனி எப்படி உங்களை நம்பி அங்கு வர முடியும்?"
"நாங்கள் கலைஞரோடும், தமிழ்நாட்டோடும் நல்லுறவு பேண விரும்புகிறோம். எனது உறவு அவரோடு (கலைஞரோடு) எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பது, கிரூபனை அடுத்த இரண்டு நாட்களில் அவர் விடுதலை செய்வதைப் பொருத்தே உள்ளது” என்று அது குறிப்பிட்டது.
இது ஓர் எச்சரிக்கை கடிதம். இதன் அர்த்தம் என்ன?
ஆகஸ்ட் 06ஆம் திகதி, பட்டுக்கோட்டை நீதிமன்றம் அவர்களுக்கு கண்டிப்புடன் கூடிய பிணை வழங்கியது. வழக்காடியவர் விஸ்வநாதன். பிணைப்பணம் ரூபாய் 10 ஆயிரம் கட்டியவர் சண்முகசுந்தரம். இருவரும் தி.மு.க. உறுப்பினர்கள். |