ஆம் இன்று இந்தியாவில் - தமிழகத்தில் உள்ள பல கட்சிகள் அப்படித்தான் சொல்கின்றன. ஆகவே நானும்
சொல்கிறேன். அதுவும் 1967க்குப் பிறகு மீண்டும் சொல்கிறேன். 67 தேர்தலில் மேடையில் பேசினேன்.
வாகனத்தில் இருந்து தெருத் தெருவாகப் பேசினேன். முஸ்லிம் லீக் கட்சியில் கையெழுத்து போடாத
உறுப்பினராக இருந்து மறைந்த மர்ஹூம்களான மஹ்மூது ஹுசைன், சதக்கதுல்லா ஆலிம், மற்றும் தி.
மு.கழக செயலர் செய்யது அஹமத் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினேன்.
சிராஜ்ஜூல் மில்லத் அ. க. அ. அப்துல் சமத், இசைமுரசு நாகூர் ஹனிபா, இசைமணி யூசுப் ஆகியோர் காயல்
நகருக்கு வந்தபோது, அவசரமாக காலைப் பொழுதில் KTM தெருவில் உள்ள அப்துல் ஹை ஆலிம்
பாடசாலையில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைமை வகித்தேன்.
பின்பு சீதக்காதி திடலில் - அன்று USC மைதானத்திற்கு இடப்புறம் இருந்த நிலம்- நடைபெற்ற வெற்றி விழா
கூட்டத்திற்கு சிறப்பு பேச்சாளராக வந்திருந்த இரவணை சமுத்திரம் ஹாஜி பீர் முஹம்மது பேசிய
கூட்டத்திற்கும் நானே தலைமை வகித்தேன்.
இவை எல்லாமே காங்கிரஸ்க்கு வாக்களிக்காதீர் என்ற அடிப்படையிலேயே நடந்தது. அப்போது அக் கட்சியில்
பிரபல பேச்சாளராக இருந்த சகோதரர் M. L (S.K) சாகுல் ஹமீது "ஷாஜஹான் இப்போது தெரியாது பின்பு
தெரியும்" என்றது, உண்மை என்று பின்பு தெரிந்தாலும் இப்போது மீண்டும் காங்கிரஸ்க்கு வாக்களிக்காதீர்
என்கிறேன். ஏன்?
காங்கிரெஸ் செய்த தவறுகள் நிறைய உள்ளன. அக் கட்சியைப் பொருத்த வரையில், தமிழகத்தில் திக்குத்
தெரியாத காட்டில் தனித்து விடப்பட்ட நிலைதான். இத்தேர்தல் அவர்களுக்கு பெரும் சோதனையாகப் போகிறது.
அவமானமாக அல்ல.
இதனை ஒரு பாடமாகக் காங்கிரஸ் எடுக்க வேண்டும். காளை மாட்டு சின்னத்தில் ஒரு மாட்டை நிறுத்தினாலும்
ஜெயிக்கும் என்று 1967க்கு முன் மார்தட்டியவர்கள் இன்று தமிழகத்தில் தீண்டத் தகாதவர்கள் என்பது போல்
முத்திரை குத்தப்பட்டுள்ளனர்.
இது யார் குற்றம்? “பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சூரியன் மறைவதில்லை” என்று மார்தட்டிய பிரிட்டன், சகல
தொழில்துறையிலும் முன்னணியில் இருக்கிறோம் என்ற மமதையில் தூங்கியெழுந்து பார்த்தபோது, கார்
உற்பத்தி முதல் கணினி தொழில் வரை தூர கிழக்கு நாடுகள் தன்னைத் தூக்கியெறிந்ததைப் பார்த்து
திகைத்தது.
அதுபோல வியர்வை சிந்தி உழைக்காது பழம்பெருமை பேசி, அடுத்தவர் முதுகிலேயே சவாரி செய்து பழகிவிட்ட
மேட்டுக்குடி காங்கிரஸ் - ‘மத்திதான் பிரதானம்; மாநிலம் அல்ல’ என்ற இந்திரா காந்தியின் அன்றைய சூழலுக்கு
ஒப்ப எடுத்த முடிவை, “போற்றிப் பாடடி பெண்ணே...” என்று கடைப்பிடித்ததால் - வேரைக் கவனிப்பதை விட்டு
மலர் பறிப்பதிலேயே ஆர்வமாக இருந்ததால், இன்று வேர் மக்கிப் போய்விட்டது. மலர் இல்லை பறிப்பதற்கு.
மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்புவது இயற்கை. 'இதனைப் பார்த்தோம் அதையும் பாப்போமே' என
இளவல்கள் ஏங்குவதும் உண்டு. பின்பு ஏமாறுவதும் உண்டு நாங்கள் ஏமாறியது போல.
நடப்பு காலத்தில் செய்ததை மக்களுக்கு சொல்லும் பழக்கமும் காங்கிரஸ்ஸிடம் இல்லை. பேசியே
வளர்ந்ததுதான் கழகம் என்பதை அவர்கள் உணரவில்லை. சினிமா, தமிழ், ஹிந்தி எதிர்பபு என்பனவற்றை
மூலதனமாகக்கொண்ட கழகங்களுக்கு மாற்றாக வளரும் அக்கறை அவர்களுக்கு இருக்கவில்லை.
கழகங்களின் இக்கோஷங்கள் கால ஓட்டத்தில் வலுவிழக்கும் என்பதைப் புரிந்து, புதிய தலைமுறையினரை
ஈர்க்கும் வாய்ப்பையும் இழந்து, ஆர்வமில்லாது விட்டு விட்டதால், ஆங்கில கலாச்சாரத்தில் வளரும்
இளவல்களிடம் கூட கால் பதிக்கத் தவறிவிட்டது காங்கிரஸ். மேலும் வாக்கு சாவாடிக்கு வரத் தயங்கும் தனது
மேட்டுக்குடி ஆதரவாளர்களை இழுத்து வரவும் முனையவில்லை.
தமிழக அரசியல், சினிமாவின் அடிமைப் பெண்ணாக மாறி வருடம் 50 ஆகிவிட்டது. எந்த மன்னாதி
மன்னனாலும் இப்போது அதை மாற்ற முடியாது. ஒருவேளை கருணாநிதி, ஜெயலலிதாவிற்குப் பிறகு
மாறலாம்.
அன்று கூத்தாடிகள் என்று இவர்களை அழைத்த காங்கிரஸ் இன்னும் ஒதுங்கியே நிற்கிறது. சிவாஜி கணேசன்,
கண்ணதாசனைக் கூட சரியாகப் பயன்படுத்த வில்லை. தேடி வந்த விஜய்யைக் கூட ஏற்கவில்லை.
வட நாட்டில் பாட்சா புகழ் நடிகை நக்மா செல்லும் இடமெல்லாம் பெரும் கூட்டம் கூடுகிறது. இது ஓட்டாக
மாறினால் எல்லோரும் கட்டுப்பணம் இழப்பர் என்கிறது ஊடகம். அவரது தொகுதியில் ஓட்டு முடிந்து விட்டது.
அவரை அழைத்து ஒரு ரவுண்டு சுற்றினால் ஒரு கிக் வருமே. செய்யமாட்டார்கள். அதெல்லாம் தெரியாது
காங்கிரஸ் காரர்களுக்கு.
கருத்தில் மாற்றம் வந்தால் தான் காங்கிரஸ் பிழைக்கும். ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்கணும் பாடிக்
கறக்கிற மாட்டை பாடிக் கறக்கணும். பார்த்தீர்களா அலையோ அலை என்று ஊர் ஊராக அலைபவர் கூட படி
ஏறி இறங்குகிறார்.
மேலும் தமிழக மக்கள் Hero worship - தலைவர் துதி அல்லது வழிபாடு என்பதற்கு பெயர் போனவர்கள்.
வாழ்ந்தாலும் நீயே தாழ்ந்தாலும் நீயே வையகம் நீ தானடா(டி) என்று கொண்டாடுபவர்கள்.
ஆனால் காங்கிரஸ் கோவிலில் நிரந்தர சாமி இல்லை. இன்று முருகன் கோவிலாக இருப்பது நாளை விநாயகர்
கோவிலாக அல்லது ஆஞ்சநேயர் கோவிலாக மாறிவிடுகிறது. வழிபாட்டு முறையில் வித்தியாசம் உண்டு.
காமராஜருக்குப் பிறகு ஒரு மக்கள் தலைவர் உருவாகவில்லை அல்லது உருவாக்கப் படவில்லை. இந்நிலை
மாறவேண்டும். அதனால் தான் தென் மாவட்டங்களில் இன்னும் காங்கிரஸ் சாகவில்லை.
தண்ணீரில் இறங்கத் தயங்கியவரை காங்கிரஸ் நீச்சல் போட்டிக்கு அனுப்பியது தவறு. மாறாக முன்னாள்
சபாநாயகர் திருமதி மீரா குமாரை பிரதம வேட்பாளராக அறிவித்திருக்கலாம். தலித் அவர். படித்தவர்.
மக்களுக்கு அறிமுகமான முகம். பெண்கள் ஆதரவும் கிடைக்கும். ஓரளவிற்கு பாதிப்பைக் குறைத்திருக்கலாம்.
குஜராத் காளை தன்னை அடக்குவார் இல்லை என்று இப்படி துள்ளித் திரியாது.
தென்னவர் ஒருவரைக் 'கை'காட்டலாம் என்ற ஊகங்கள் வந்த போதும் வடவர் ஏற்பாரா என்று தயங்கி, சிறுவன்
கையில் வேல் கொடுத்து போருக்கு அனுப்பி உள்ளது வீர மரணத்தை தரலாம். ஆனால் அது குடும்ப ஆட்சி
என்ற அவப்பெயரைத் தந்துள்ளதை அழிக்க முடியாது.
குஜராத் காளைக்கு பதிலுக்கு பதில் சொல்லும் நபராகத் தென்னவர் இருந்திருப்பாரே. 1998ம் ஆண்டு அவர் உலக
வங்கி மகாநாட்டிற்காக ஹாங்காங் வந்த போது, ஒரு குஜராத் வைர வியாபாரி என்னிடம் சொன்னார் "அவர்
எங்கள் இடுப்புத் துணியைக் காப்பாற்றினார்" (under wear) என்று.
அதன் அர்த்தம் பொருளாதாரச் சிக்கலில் இருந்த நாட்டைக் காப்பாற்றி எங்கள் மானத்தைக் காப்பாற்றினார்
என்பதாகும். ஆனால் உள்ளூர் மாடு உள்ளூரில் விலை போகாது. உண்மை.
நாட்டிற்காகத் தன் சொத்து பணம் உயிரைக் கொடுத்த அலஹபாத் குடும்பம் அது. கட்சியை நாடி அன்னை
செல்லவில்லை. 5 வருடங்கள் தனித்து தடுமாறிய கட்சியே அவரிடம் கெஞ்சியது. அந்த குடும்ப செல்வாக்கை ஒழித்து விட்டால் அக் கட்சியை அழித்து விடலாம் என்பது காவிக் கூட்டத்தின் கனவு. அதற்காகத்தான் குறிவைத்து இத்தனைத் தாக்குதல்கள். அப்புறம் அவர்கள் வைத்தது தான் சட்டம். காங்கிரஸ் சாகக் கூடாது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தை எதிர்த்து ஆங்கிலேயர்களுக்கு 'கூஜா' தூக்கிய இயக்கம் தான் ஆர்.எஸ்.எஸ்.
மற்றும் ஹிந்து மகா சபா. இன்று இவர்கள் சொல்கிறார்கள் இவர்கள் தான் தேசியப் பற்றாளர்களாம்.
இவர்களை ஏற்காதவர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டுமாம். காவிக் கூட்டத்தில் இருந்து சுதந்திரத்திற்காக
இரத்தம் சிந்தியவர்கள் எத்தனை பேர்? எம்மிடம் ஆயிரக் கணக்கானவர்கள் உண்டு.
இந்தியாவின் நகரங்களில் ஏன் தமிழ்நாடு உட்பட முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பது கஷ்டம். இப்போது தாமரை மலரின் ஓர் இதழ், முஸ்லிம்கள் ஹிந்து பகுதியில் வீடு வாங்கினால் அதை அபகரிக்கச் சொல்லுகிறது. ஏற்கனவே அபகரித்துள்ளதாகச் சொல்லுகிறது. இதுதான் குஜராத் மாடலா?
போலி வளர்ச்சி நாயகன் இவைகளை மறுத்தால் மட்டும் அவர் புனிதன் ஆகிவிடுவாரா? அவர்கள் ஏன் அப்படிப் பேசினார்கள்? ஐயா, 'உன் நண்பர்களைச் சொல்லு நீ யார் என்று நான் சொல்கிறேன்'. போதுமா?
இது போன்று நச்சு தன்மை கொண்ட பல இதழ்களைக் கொண்டதுதான் தாமரை. அதனோடு உறவாடுபவர்களை
நாம் ஒதுக்க வேண்டும். Goசடையான் என்று சொல்ல வேண்டும்.
"It is one thing to be religious, but it is another thing to make religion your policy."
Madeleine Albright., Former United States Secretary of State.
நரசிம்ம ராவ் அடிப்படையில் ஒரு ஹிந்துத்வவாதி. ஹைதராபாத் நிசாமிற்கு எதிராகப் பல போராட்டங்கள்
நடத்தியவர். அவரது அசமந்தத்தினால் வந்தது தான் இந்த வினை. முதல்வரின் வாக்குறுதியை நம்பினேன் என்று
ஒப்பாரி வைத்து, மக்களைப் பலிகொடுத்து நாட்டை மயானமாக்கி விட்டார். மதவாதிகளை உறம்
பெற்றவர்களாக்கி விட்டார்.
இன்றும் ஆர்.எஸ். எஸ். மதவாதிகளிடமிருந்து சிறுபான்மையினரை காக்கும் வலிமை காங்கிரசுக்கு மட்டுமே
உண்டு. மாநில கட்சிகள் குரல் தான் கொடுக்க முடியும். மாநிலத்திற்கு வேண்டுமானால் மாநிலக்கட்சிகளை
தெரிவு செய்யலாம். ஆனால் மத்தியில் பலமான தேசிய கட்சி ஆட்சி செய்வது தான் நல்லது. இந்த
மனப்பக்குவம் நலம் நாடும் மக்களுக்கு வரவேண்டும்.
இப்போது நடப்பது ஜனநாயகத் தேர்தலா? இல்லை. மதம் + சாதி + பணம் ஆகியவற்றை நாயகமாக வைத்து
நடக்கும் தேர்தல். வடநாட்டில் சாதியின் செல்வாக்கு மிகவும் அதிகம். சாதிக் கட்சிகளுக்கு வரவேற்பும் அதிகம்.
கொள்கையாளர்கள் இங்கு இழப்பானவர்கள். பகுத்தறி வாளர்களைக் கொண்ட தமிழகம் எப்படி? மகா
கேவலம்.
சாதியைச்சாடிய பெரியார் வழிவந்தவர்கள் நாங்கள் என்று நிமிடதற்கு 100 முறைக் கூறுவோர் தான் இங்கு சாதி
அடிப்படையில் வேட்பாளர்களைத் தெரிவு செய்யத் துவங்கினர். அன்று அப்பா பள்ளி தெருவைச் சேர்ந்த M.T.S.
முஹம்மது தம்பி அவர்கள் திருசெந்தூர் தாலுகாவின் காங்கிரஸ் பிரதிநிதியாக இருந்தார். இன்று முடியுமா?
ஒட்டுப்போட்ட மாநில கூட்டணிகளால் மத்தியில் நிச்சயமற்ற தன்மையே இருக்கும். உலக அரங்கில் மதிப்பு
இருக்காது. தவளைகள் யானைகள் போல் நடக்கத் துவங்கினால் அடுத்த 50 ஆண்டில் இந்த நாடு தேங்காய்
சிதறல்களாக மாறினால் ஆச்சரியமில்லை. உங்கள் கருத்து இதற்கு மாறாக இருந்தால் காங்கிரஸ்க்கு
வாக்களிக்காதீர்.
சென்ற வாரம் அமெரிக்க அதிபர் ஒபாமா பெனிசில்வெனியாவில் ஒரு கல்லூரியில் பேசும்போது,
"ஜெர்மனி, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் பொருளாதாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் நம்மைவிட அதிக
முன்னேற்றம் காண்கிறார்கள்" என்றார்.
ஆனால் இங்குள்ள தேசாபிமானிகளோ, 'எச்சிலை தனிலே எரியும் சோற்றுக்கு பிச்சைக்காரர் சண்டை
ரோட்டிலே' என்ற பராசக்தி படப்பாடல் நிலைக்கு காங்கிரஸ் கொண்டுவந்துள்ளது என்று கூறுகிறார்கள்.
ஒபாமாவின் வார்த்தைகளை நம்பாது இதை நீங்கள் நம்பினால் காங்கிரஸ்க்கு வாக்களிக்காதீர்.
தேசப்பற்று ஈமானின் பாதி என்று இஸ்லாம் சொல்லுகிறது. மாற்றான் ஒருவன் மற வழியில் உன் நாட்டு
தலைவனைக் கொன்றான் என்ற செய்தி கேட்டதும் உறையில் கிடந்த வாளை உருவி அவனை நோக்கி நீ
ஓடவேண்டுமேயொழிய, கொன்றவன் உன் மாமன் என்றோ மச்சான் என்றோ நீ பேசினால் தேசத்
துரோகியாவாய்.
குற்றம் குறைகள் இருப்பினும் அவைகள் அறவழியில் தீர்ர்கப்பட வேண்டுமே தவிர அதர்மத்தை மன்னிப்பது
தவறு. இந்த எண்ணம் உங்களிடம் இல்லாதிருந்தால் காங்கிரஸ்க்கு வாக்களிக்காதீர்.
இந்தியர்கள் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என உலகெல்லாம் பரவி வாழ்கிறார்கள். தொழில் செய்கிறார்கள்.
சீமான்களாக இருக்கிறார்கள். அவர்களில் அதிகமானோர் குஜராத்தியரே. குஜராத்தில் ஒரு குழந்தை பிறந்தால்
அமெரிக்காவின் ஜனத்தொகையில் ஒன்று கூடும் எனக் கேலியாகக் கூறுவர். அதன் அர்த்தம் எப்படியும் அக்
குழந்தை அமெரிக்கா போய் விடும் என்பதே.
குஜராத்தியர் உலக வைர சந்தையை ஆள்கிறார்கள். லண்டனில் பலசரக்கு கடை வர்த்தகம் அவர்கள் கையில்.
National Westminster Bank ன் செல்லப்பெயரே Patel Bank என்பதுதான். அமெரிக்காவில் Motel எனும்
நெடுஞ்சாலை தங்குமிடத் தொழிலின் முடி சூடா மன்னர்கள் குஜராத்தியர்.
இந்திய நிறுவனங்கள் உலகெல்லாம் முதலீடு செய்கிறார்கள். அங்குள்ள நிறுவனங்களை வாங்குகிறார்கள். ஏன்
அதானி கூட இந்தோனேசியாவில் ஒரு நிலக்கரி சுரங்கத்தை 2008 லேயே வாங்கியுள்ளார். ஆனால் இங்கு
இவரோ சில்லறை வர்த்தகம் வெளிநாட்டாருக்கு இல்லை என்கிறார். இது நாம் ஏற்றுக்கொண்ட உலகப்
பொருளாதாரக் கொள்கையின் ஒரு அங்கம். மறுக்க முடியாது. எங்க அம்மா அம்மா, ஒங்க அம்மா சும்மா என்ற
கொள்கை. கடலில் எல்லோருக்கும் மீன் உண்டு. தரையில் எல்லோருக்கும் நாலடி நிலம் உண்டு.
வெள்ளைக்காரன் ரயில் தண்டவாளம் போடும்போது, தங்கள் ஆடு மாடு அடிபட்டு செத்துப்போய்விடும் என்று
கிராமத்தவர்கள் எதிர்த்தார்கள். பணிந்திருந்தால் உலகின் மிகப் பெரிய ரயில் சேவை இந்தியாவிற்கு
கிடைத்திருக்காதே. பழையன கழிதலும் புதியன புகுதலும் மரபு என்று நீங்கள் எண்ணுபவராக இல்லாதிருந்தால்
காங்கிரஸ்க்கு வாக்களிக்காதீர்!
|