தேர்தலில் ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்ற ஓர் அமைப்பு பரவலாகத் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது உண்மை.
இதனுடைய பெறுபேறுகள் எப்படி இருக்கும் என்பது 16ஆம் திகதி முடிவு வந்த பின்தான் தெரியும்.
தமிழ்நாட்டைப் பொருத்த வரையில் ஆசனங்கள் என்று எதையும் பெறும் வாய்ப்பில்லை. ஆனாலும் ஒரு சில
தொகுதிகளில் புருவத்தை உயர்த்திப் பார்க்குமளவிற்கு முடிவுகள் இருக்கலாம். சிலருடைய தோல்விக்குக்
காரணகர்த்தாவாகவும் இருக்கலாம்.
தேசிய அளவில் ஒருவேளை சில ஆசனங்கள் கிடைக்கலாம், இல்லை பந்தயக் கம்பத்திற்கு அருகில் வந்து குதிரை பிரண்டும் விழலாம். காசியில் சுய விருப்பில் திரண்டிருக்கும் தொண்டர் படையைப் பார்க்கும்போது அங்கு பெயர் போடலாம் என்றே படுகிறது, வெல்லாவிட்டாலும்.
ஊழலை எதிர்ப்போம் - ஒழிப்போம் என்ற கோஷம் இந்தியர்களிடம் நாலா பக்கங்களிலும் கேட்பது ஓர்
ஆரோக்கியமான அரசியல்தான். அதிலும் இதற்காகக் களத்தில் குதித்திருப்பது இளவல்கள்தான். இந்தியாவில்
மட்டுமல்ல, இது வெளி நாட்டு வாழ் இந்தியர்களையும் உசுப்பி விட்டுள்ளது உண்மை.
ஊழல் என்றால் என்ன என்பதை ஊழல் இல்லாத நாடுகளில் வசிப்பவர்களால் நன்கு உணர முடியும். இவர்களில் பலர் இங்குள்ள அரசியல்வாதிகளுக்கோ, பிரமுகர்களுக்கோ அல்லது அதிகாரிகளுக்கோ கூஜா தூக்கி பதவி பெறுவதற்கு ஆர்வமில்லாது வெளிநாடு சென்றவர்கள்தானே. ஆகவே அவர்கள் கொதிக்கிறார்கள். அவர்களால் முடிந்தது பொருளாதார உதவி செய்வதுதான். அதனைக் கனிசமான அளவு அவர்கள் செய்துள்ளார்கள்.
கடந்த 2013 டிசம்பர் 12ஆம் தேதி முதல் அக்கட்சி நன்கொடை வசூலித்து வருகிறது. சமீபத்திய தகவலின் படி அந்தக் கட்சிக்கு கிடைத்த நன்கொடை ரூ.30 கோடியை தாண்டியுள்ளது. (5,000 கோடி 10,000 கோடி என்று செலவழிப்பவர்கள் மத்தியில் இது எம்மாத்திரம்
என்று நீங்கள் நினைக்கலாம். ஒரு காலத்தில் தி.மு.க.வினர், சிரட்டையில் பிளைன் டீ, கையால் கருப்பட்டி என்றுதான் தேர்தல் வேலை செய்து காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்தனர்.)
இவர்களுக்கு 116 நாடுகளில் இருந்து நன்கொடை வந்துள்ளது. 12,821 வெளிநாடு வாழ் இந்தியர்கள் ரூ. 9.24 கோடி அளித்துள்ளனர். இந்தியாவிலிருந்து ரூ.21.08 கோடி வசூலாகியுள்ளது. இது மொத்த தொகையில் 69 சதவீதம் ஆகும்.
அமெரிக்காவிலிருந்து ரூ.3.4 கோடி நன்கொடை வந்துள்ளது. அந்த நாட்டிலிருந்து 4,727 பேர் அளித்துள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்சிலிருந்து ரூ.1.23 கோடியும், ஹாங்காங்கிலிருந்து ரூ.85 லட்சமும் வந்துள்ளது. கிரிகிஸ்தானிலிருந்து ரூ.10ம், நேபாளத்திலிருந்து ரூ.51ம், மொனாக்கா விலிருந்து ரூ.201 ம் நன்கொடையாக வந்துள்ளது.
சற்று தீவிரமான வெளிநாடு வாழ் இந்தியர்கள், இங்கிருந்து பேசிக்கொண்டிருந்தால் சரி வராது, போய் ஒரு கை பாப்போம் என்று விடுமுறை எடுத்தோ அல்லாது தற்காலிகமாக வேலையை உதறிவிட்டோ வந்துள்ளார்கள்.
ஷாலினி குப்தா, வயது 55, தனது 30 வருட சிகாகோ வாழ்கையை ஒத்திவைத்து விட்டு ஊழல் எதிர்ப்பிற்காக
இந்தியா வந்துள்ளார்.
'நெஞ்சு பொறுக்கு தில்லையே
இந்த நிலை கேட்ட மாந்தரை நினைத்து விட்டால்'
என்பதுதான் அவரின் குமுறல்.
"சட்டம், ஒழுங்கு அப்படியே செயலற்றுப் போய்விட்டன. தினசரி ஒரு ஊழல், தினசரி ஒரு கற்பழிப்பு. நாடாளுமன்றத்திலோ சமுக விரோதிகளின் கூட்டம். மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. எங்களால் சும்மா பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை" என்பது அவரது கொதிப்பு.
ஒரு கோடி இந்தியா பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாங்களும் தேர்தலில்
வாக்களிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்குறிய வழிமுறைகளை அரசு செய்து தர வேண்டும் என்று கோருகிறார்கள்.
இப்படி கேட்பவர்களில் உலகின் மிகப்பெரும் எக்கு இரும்பு உற்பத்தி நிறுவனமான அர்செலோர் மிட்டல்
அதிபரும் லண்டனில் வசிப்பவருமான லக்ஷ்மி மிட்டலும் ஒருவர். உலகமெல்லாம் சுற்றும் இவர் இன்னும் இந்திய பிரஜைதான்.
இந்த முறை 12,000 வெளி நாட்டு வாழ் இந்தியர்கள் தான் வாக்களிப்பதற்கு பதிவு செய்துள்ளார்கள். அவற்றில் பாதி பேர் கேரளாவைச் சேந்தவர்கள்.
இதில் இன்னொரு பிரச்சினை உள்ளது. வேட்பாளர்கள் இறுதி முடிவு செய்வது தேர்தலுக்கு 3 வாரங்களுக்கு
முன்புதான். இக்குறுகிய காலம் பரப்புரைக்கு போதுமானது இல்லை என்று பலர் நினைக்கையில், எப்படி வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் தொகுதி வேட்பாளர்களின் தகைமைகளை அறியமுடியும் - முடிவு செய்ய முடியும்? கணினி வழியில் உருவாக்கும் ஓர் ஏற்பாடே சாலச் சிறந்ததாக அமையும்.
தேர்தல் ஆணையர் B. H. பிரஹ்மா "அவர்களும் இந்தியர்கள்தான். தங்கள் வாழ்க்கைக்காக வேறு நாட்டில் வசிக்கிறார்கள் என்பதற்காக தங்களுடைய அரசியல் உரிமையை அவர்கள் இழக்கக் கூடாது" என்று ஆதரவாகப் பேசுகிறார்.
முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு, வாக்களிப் பதற்காக வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலர் தங்கள்
கிராமங்களுக்கு வந்ததைக் காண முடிந்தது. அவர்களின் பொருளாதார பலம் கூடி இருப்பதும், தாய் நாட்டு அரசியலில் தாங்களும் பங்கெடுக்க வேண்டும் என்ற அவாவுமே இதற்கு காரணம்.
அதற்கு தோதாக நாட்டின் பல பகுதிகளுக்கும் வெளி நாட்டு விமானங்கள் வந்து போகும் வசதி ஏற்பட்டிருப்பதையும் கூறலாம். அஹ்மதாபாத் விமான நிலையத்தில் இருந்து மட்டும் 7 வெளிநாட்டு
விமானங்கள் செயல்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு தந்தவைகள் தான் இவை.
உச்ச நீதி மன்றமும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்களிக்கும் உரிமை தரவேண்டும் என்றே
சொல்லுகிறது. டெல்லியைச் சேர்ந்த கருத்து கணிப்பு எடுக்கும் நிறுவனம் ஒன்றின் இயக்குனர் சஞ்சய் குமார்
கூறுகையில்
"வெளிநாடு வாழ் இந்தியர்கள் இப்போது இந்திய அரசியலைக் கூர்ந்து கவனிக்கிறார்கள். ஆகவே
அவர்கள் வாக்குரிமை பெரும் காலம் வெகு தூரத்தில் இல்லை" என்றார்.
நிச்சயமாக வெளிநாடு வாழ் இந்தியர்களின் வாக்குகள் இந்திய அரசியலில் பெரிய மாற்றத்தைக் கொண்டு
வரும். நோட்டுக்காகவோ குவாட்டருக்காகவோ அவர்கள் ஒட்டு போடமாட்டார்கள். சாதி சனம் என்று
பார்க்கமாட்டார்கள். இலவசங்கள் அவர்களுக்குத் தேவை இல்லை.
அப்படி ஒரு கூட்டம் இந்த வாக்களிக்கும் கூட்டத்தில் சேர்வது நல்லது. ஊழலை அவர்கள்
ஆதரிக்க மாட்டார்கள். அவர்களது குறிக்கோள் நல்லாட்சி தரும் அரசு ஒன்றை உருவாக்குவது அல்லது ஆதரிப்பது. பெண்களின் பாதுகாப்பை வெளி நாட்டு வாழ் பெண்கள் மிகவும் வற்புறுத்துவார்கள். அவர்களில் பலர் இப்போது இந்திய நகரங்களில் தனியாகப் பயணிக்கவே பயப்படுகிறார்கள்.
தூர கிழக்கு நாடொன்றில் வசிக்கும் நடுத்தர வயது வசதியான பெண் ஒருவர் சென்னையில் பஸ் நம்பர்களைத் தேடிப் பிடித்து பஸ்சிலேயே பிரயாணம் செய்கிறார். ஆட்டோவில் தனியாகப் போகப் பயமாக இருக்கிறதென்கிறார். ஒரு பெண்ணின் ஆட்சியிலேயே பெண்ணின் நிலை இப்படி என்பது வருந்தக் கூடியது. எதிர்மறை அரசியலில் ஆர்வமாக இருக்கும் அம்மையார் மக்கள் சார்பு நடவடிக்கைகளிலும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
இது நிற்க, இந்து மதத்தின் முக்கியப் புனிதத் தலங்களில் ஒன்றாகிய வாரணாசியில் நடந்தது முற்றிலும் எதிர்பாராதது - நம்பமுடியாதது. இங்குதான் இந்தியத் தேர்தலின் உச்சகட்ட யுத்தமே நடப்பது போல
தோன்றுமளவுக்கு அவ்வூரில் தேர்தல் ஜுரம் பரவி இருந்தது. 2004ஆம் ஆண்டைத் தவிர, 1991ஆம்
ஆண்டிலிருந்து பாரதீய ஜனதாக் கட்சியின் வசமே இருந்துவரும் தொகுதி இது.
இந்தியாவின் மிகப் பழமையான நகரமாக இருந்தாலும் அடிப்படை வசதிகளில் மிகவும் பின்தங்கியிருக்கும் நகரம் இது. எங்கு பார்த்தாலும் நீக்கமற நிறைந்திருக்கும் வாகனங்களின் இரைச்சலும், தூசியும், போக்குவரத்து நெரிசலும், கங்கை நதியின் மாசுபாடும், சுகாதாரமின்மையும் நகருக்குப் புதிதாக வந்திறங்கும் யாரையும் திகைக்க வைக்கும்.
அழையா விருந்தாளியாக - இல்லை பணியாளர்களாக ஒரு கூட்டம் ஊழல் எதிர்ப்பிற்காக இங்கு வந்தது.
பேராசிரியர்கள், மாணவர்கள், இல்லத்தரசிகள், சமுக சேவகர்கள் என்று நாட்டின் பல பகுதியில் இருந்தும்
தினசரி வந்து இறங்கிய வண்ணமே இருந்தார்கள். தர்மசாலைகள், விடுதிகள் என்று எல்லாமே வழிந்து ஓடின. மறந்து விட்ட உறவினர்களின் முகவரிகளைத் தேடுவோரும் இருந்தனர்.
நேற்று வரை அரசியல் என்றால் சீ சீ என்றவர்கள், இன்று ஊழல் ஒழிப்பிற்காக வீடு வீடாக ஏறி
இறங்கினார்கள். பிரசுரங்களை விநியோகம் செய்தார்கள். மோடியின் மகுடியில் மயங்கிவிடாதீர்கள் என்று மக்களை எச்சரித்தனர்.
இதில் தமிழ்நாட்டு தொண்டர்களும் உண்டு. அவர்கள் தமிழ் பேசும் வாக்காளர்களைத் தேடிப் போனார்கள்.
இங்குள்ள தமிழ் பிராமணர்கள் வெளிப்படையாக மோடியை ஆதரிக்கிறார்கள்.
நிச்சயமாக இந்த தொப்பி ஆர்வலர்களின் செயல்பாடுகள் பீ. ஜே. பி., ஆர். எஸ். எஸ். தொண்டர்களை அசத்திவிட்டது. இப்படியும் ஒரு கூட்டமா என்று அவர்கள் வியந்தார்கள்.
இந்தியாவில் அதிகம் கவனிக்கப்படும் இந்த தொகுதியில் இப்போது வாக்களிப்பு துவங்கிவிட்டது. வாராணசி வடக்கு, வாராணசி தெற்கு, வாராணசி கண்டோன்மெண்ட், ரோஹானியா, சேவாபுரி என ஐந்து சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருக்கும் வாராணசி நாடாளுமன்றத் தொகுதியில் சுமார் பதினைந்து லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 3.5 லட்சம் பேர் முஸ்லிம்கள்.
இங்குதான் விஷ(ய)ம் இருக்கிறது. குஜராத்தின் ஒரு முஸ்லிம் இயக்கத்தினர் மோடிக்காக வேலை
செய்கிறார்கள். உள்ளூர் முஸ்லிம் நெசவாளர்களின் வாக்குகளும் எதிர் பார்க்கப் படுகின்றன. குஜராத்
நெசவாளர்களோடு இவர்களுக்கு உறவு உண்டு. இரண்டு முஸ்லிம் பட்டதாரி பெண்கள் அமைப்பு இங்கு
மோடிக்காக ஆதரவு திரட்டுகிறார்கள்.
ஜமாத்-ஏ-இஸ்லாமி ஹிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். டெல்லி இமாம் புஹாரியின்
வேண்டுதலின் படி முற்றும் முழுதாக முஸ்லிம் வாக்குகளை நம்பி இருக்கிறார் காங்கிரஸின் அஜே ராய்.
பரவலாக முஸ்லிம்களின் வாக்கு மோடிக்கு பெரிய அளவில் இல்லை என்பது தெளிவு. அவர்கள் மொத்தமாக ஒரு வேட்பாளருக்கு வாக்களித்தால் தான் அவர்கள் விரும்பும் முடிவு கிடைக்கும்.
பாபர் "கட்டிடத்தை" (மசூதியை என்று குறிப்பிட வில்லை) உடைத்ததில் என்ன தவறு என்று கன்னியா குமரியில் கேட்ட பொன். ராதாகிருஷ்ணன் இங்கு தேர்தல் பணி செய்தார். ஆனால் அந்த கேள்வியை அவர் வாரணாசியில் கேட்கவில்லை. மாறாக 'முஸ்லிம்களும் அபிவிருத்தி யையே விரும்புகிறார்கள். ஆகவே அவர்கள் ஆதரவும்
மோடிக்கே' என்று சொன்னார். பொன்னார் ஒரு பொய்யர் என்பது விரைவில் தெரியும்.
வாரணாசியில் அபிவிருத்தி என்ற வார்த்தை மறைந்து, பழைய குருடி கதவைத் திறவடி என்பது போல் மீண்டும் ஹிந்துத்வா கொள்கைதானே தலைவிரித்தாடியது காரணம் உ.பி.யின் முந்திய கட்ட வாக்களிப்பு இவர்கள் எதிர்பார்த்தது போல் இல்லை.
அமித் ஷா வின் ஏற்பாட்டில் உள்ளூர் தொண்டர்கள் ஓரங்கட்டப்பட்டு குஜராத்தில் இருந்து வந்த 3000
தொண்டர்களே களப்பணி செய்தனர். இவர்களால் வாக்களர்களை ஈர்க்க முடியவில்லை. இத்திட்டம் தோல்வி அடைந்துவிட்டது.
மோடி வென்றால் அவர் இந்த தொகுதியை ராஜினாமா செய்வார் என்றோ மீண்டும் இங்கு ஒரு தேர்தல் வரும்
என்றோ யாரும் எடுத்து சொல்லவில்லை. என்ன காரணமோ?
இதற்கு எதிராக, மோடி தான் பிரதமர் ஆனால் இங்கு பிரதமர் அலுவலகம் ஒன்றைத் திறப்பேன் என்று கூறி
மக்களைக் கவர்கிறார். இது எப்படி சாத்தியம்? இரண்டில் ஒரு தொகுதியை மோடி விடவேண்டும்.
அது வடோடரா அல்ல வாரணாசியாகத்தான் இருக்க முடியும். அப்படியானால் அங்கு மீண்டும் தேர்தல் வரும். எதிர் கட்சி வேட்பாளர் வென்றால் அவர் தொகுதியில் இவர் எப்படி அலுவலகம் அமைக்க முடியும்?
16ஆவது மக்களவை தேர்தல் மூன்று முக்கிய கேள்விகளை எழுப்பி உள்ளது. மோடி பிரதமர் ஆவாரா? காங்கிரஸ் எத்தனை ஆசனம் பெறும்? ஆம் ஆத்மி கட்சி சாதிப்பது என்ன? 16ஆம் திகதி வரை பொறுப்போம்!
|