ராஜீவ் காந்தி ஒடிசா, ஆந்திரா பொதுக்கூட்டங்களை முடித்துக்கொண்டு, சென்னை விமான நிலையத்தில்
நிருபர்களைச் சந்தித்துவிட்டு, இரவு சுமார் 10.20 மணியளவில் ஸ்ரீபெரும்புதூர் வந்தார். சிவப்பு கம்பளத்தில் அவர்
நடந்து வர, கூட்டம் ஆரவாரம் செய்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால், காவல்துறையினர் மாலை
மரியாதைகளைக் கட்டுப்படுத்த முயன்றபோது, ராஜீவ் - “வேண்டாம்! எல்லோருக்கும் வாய்ப்பு கொடுங்கள்!”
என்று கூறி, மரண தேவதைக்கும் வாய்ப்புக் கொடுத்தார்.
கோகிலா என்ற பெண் ஹிந்தியில் கவிதை ஒன்றை வாசித்த பின், “மணப்பெண்” தானு சந்தனமாலையை அவருக்கு அணிவித்து, அவரது கால்களைத் தொட்டு வணங்கியபடி, ஆடையின் வலது பக்கத்தில் இருந்த ஸ்விட்சை அழுத்தவும், அரை கிலோ வெடிபொருட்கள் ‘டபீர்’ என்ற சப்தத்துடன் பயங்கரமாக வெடிக்கவும், அங்கு, “மணமகன் - மணமகள்” மற்றும் 17 பேர் உயிரிழந்தனர். மிகுதி வரலாறு, கறை படிந்த - ஆம்! இரத்தக் கறை படிந்த வரலாறு. தமிழனே தமிழகத்தைத் தலைகுனிய வைத்த வரலாறு.
காவல்துறை அதிகாரி ரகோத்தமன் கூறும்போது, “பிரபாகரன் ராஜீவைக் கொல்ல உத்திரவு பிறப்பித்து விட்டால்
அதிலிருந்து அவர் தப்புவது கடினம்” என்றார். இந்தக் கொலையைத் துப்பு அறிந்த அதிகாரி டி.ஆர்.கார்த்திகேயன்
கூறும்போது, “இது மிகவும் தந்திரமாக - நுண்ணிய முறையில் திட்டமிட்டு செய்யப்பட்ட பயங்கரமான கொலை”
என்று வர்ணித்தார்.
பிரபாகரன் விரும்பிய படி இக்கொலை எந்தவித தடயமும் இல்லாதே போயிருக்கும். ஆனால், மனிதன்
நினைப்பது ஒன்று; கடவுள் நினைப்பது ஒன்று என்று சொல்வார்கள் அல்லவா? அதுபோல, தானுவின் அருகில்
நின்று படம் பிடித்த ஹரிபாபுவும் கொல்லப்பட்டுவிடவே, அநாதையாகக் கிடந்த அவரது கெமரா இந்தத் “துன்ப
நிகழ்வை” உலகிற்குக் காட்டிவிட்டது. வெடிகுண்டின் தாக்கம் எவ்வளவு சுற்றளவு வரை செல்லும் என்று
அறிந்திருந்த கொலையாளிகள், அருகில் நின்று படம் எடுக்கும் ஹரிபாபுவின் நிலை என்னவாகும் என்று
சிந்திக்கத் தவறிவிட்டனர்.
கூட்டத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டதோடு, நளினியும், சுபாவும் அவசரமாகப் பேருந்து நிலையத்தை அடைந்தனர். அங்கு நின்றிருந்த சிவராசன் இவர்களிடம், “ராஜீவ் காந்தி, தானு, ஹரிபாபு இறந்துவிட்டனர்...
ஆகவே, நாம் உடனடியாக இந்த இடத்தை விட்டும் சென்று விட வேண்டும்” என்றார்.
மூவரும் ஒரு ஆட்டோ ரிக்சாவில் ஏறி, பூந்தமல்லி சென்று, அங்கிருந்து வேறு ஒரு ஆட்டோவில் சிவராசன்
வசிக்கும் போரூர் இல்லத்திற்கு சென்றனர். சிவராசன், சுபா சுந்தரத்திற்கு தொலைபேசியில், ஹரிபாபு
குண்டுவெடிப்பில் இறந்துவிட்டாலும், அவரது கெமரா பத்திரமாகவே இருக்கும் என்றும், உடனடியாக அதனைத்
தேடி எடுக்கும்படியும் கேட்டார். சென்னை நகர் கொந்தளிப்பாக இருந்ததால் இவர்கள் யாரும் வெளியே தலை
காட்டவில்லை.
சுந்தரம், இராமமூர்த்தி என்ற புகைப்படக் கலைஞரின் வீட்டிற்கு போன் செய்தார். இராமமூர்த்தி அங்கு இல்லை.
குண்டுவெடிப்பில் இராமமூர்த்தி சற்று காயமடைந்துள்ளதாகவும், தற்சமயம் பூந்தமல்லி காவல் நிலையத்தில்
இருப்பதாகவும் வீட்டார் சொன்னார்கள்.
சுந்தரம் பூந்தமல்லி காவல் நிலையத்திற்குத் தொடர்புகொண்டு, இராமமூர்த்தியிடம் ஹரிபாபுவின் கெமராவை
அவர் ஏதும் எடுத்து வந்துள்ளாரா என்று கேட்க, அவர் அது எனது வேலை இல்லை என்று எரிச்சலுடன்
சொன்னார். சுந்தரம், ரவிசங்கரனோடு தொடர்புகொண்டு, “ஹரிபாபுவின் கெமராவில் உள்ள பிலிம் ரோலை நம்
வசம் எடுப்பது மிக மிக அவசியம் - அவசரம்” என்றார்.
இதற்கிடையில், விசேஷ புலனாய்வுத் துறை மின்னல் வேகத்தில் செயல்பட்டது. சென்னை அரசு பெரிய
மருத்துவமனைக்கு விஜயம் செய்த அவர்கள், காயப்பட்டு அங்கு இருந்தவர்களிடம் நேரடியாகக் கண்ட
காட்சிகளின் விபரங்களைக் கேட்டனர். காவல் அதிகாரி அனுஷ்யா குமாரியும் அங்கு சிறு காயத்தோடு
சேர்க்கப்பட்டிருந்தார்.
நிகழ்ச்சியைப் பற்றி அவர் விவரிக்கையில், குறிப்பாக சந்தன மாலை போட்ட ஒரு பெண் மீதும், அவளோடு
வந்தவர்கள் மீதும், ஒரு புகைப்படக்காரர் மீதும் தனக்கு சந்தேகம் இருப்பதாகச் சொன்னார். ஹரிபாபுவின்
கெமராவில் இருந்த பிலிம் ரோல் கழுவி படம் போடப்பட்டு, அனுஷ்யாவிற்குக் காட்டப்பட்டபோது, அவர்
ஆட்களை அடையாளங்காட்டி உறுதி செய்தார்.
அடுத்த நாள் காலை, புலனாய்வுத் துறையினர் பொதுக்கூட்ட மைதானத்திற்கு விஜயம் செய்து, சிதறிக் கிடந்த
தானுவின் உடல் பாகங்கள், அவள் உடுத்திய ஆடையின் பகுதிகள், அதிலிருந்த வெடிபொருட்கள், பேட்டரி
மற்றும் சகலவற்றையும் ஆராய்ந்து, மனித வெடிகுண்டால்தான் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் என்ற
முடிவிற்கு வந்தனர். அது மட்டுமல்ல. பத்மநாபா கொலைக்கும் இதே C4 RDX வெடிபொருட்கள்
பாவிக்கப்பட்டதையும் உறுதி செய்தனர்.
மே மாதம் 25ஆம் திகதி ஷங்கர் கைது செய்யப்பட்டார். அவர், பிரபாகரன் - EPRLF தலைவரும், வட மாகாண
முன்னாள் முதல்வருமான வரதராஜ பெருமாளைக் கொல்வதற்கு சென்னைக்குத் தன்னை பிரபாகரன்
அனுப்பியதாகக் கூறினார்.
ஹரிபாபு ஸ்ரீபெரும்புதூரில் எடுத்த புகைப்படங்களைக் காட்டியபோது, குர்தா அணிந்து நிருபர் போல் இருப்பவர்
பெயர் ரகுவரன் என்றும், வெடிகுண்டு விற்பன்னரான அவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய தளபதிகளுள் ஒருவர்
என்றும், பத்மநாபா கொலையின் முக்கிய பொறுப்பாளி அவர் என்றும் ஷங்கர் அடையாம் காட்டினார்.
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் பலரை தமிழகமெங்கும் கைது செய்து விசாரிக்கையில், வேதாரண்யத்தில்
உள்ள ஜகதீசன் என்பவர், குர்தா அணிந்தவர் ரகு என்றும், சமீபத்தில் தனது படகில் பருத்தித் துறை -
யாழ்ப்பாணத்திற்குப் பிரயாணம் செய்தார் என்றும் கூறினார். சங்கரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஒரு நோட்டு
புத்தகத்தில், சென்னையின் இரு தொலைபேசி எண்கள் குறிக்கப்பட்டிருந்தன. அவை முருகன் மற்றும்
நளினியுடையவை.
அதே வேளையில், ஹரிபாபுவின் கெமராவைத் தேடி, சுபா சுந்தரமும் ரவி சங்கரனும் அலையும் தகவலும்
அவர்களுக்குக் கிடைத்தது. ஹரிபாபுவின் தாய் லட்சுமி புலனாய்வுத் துறைக்குக் கூறுகையில், ரவி சங்கரன்
22ஆம் திகதி காலையில் தங்கள் வீட்டிற்கு வந்து, கெமராவைப் பற்றி விசாரித்ததாகவும், ஆனால் ஹரிபாபு
வெடிகுண்டில் இறந்தது பற்றி எதுவும் சொல்லவில்லை என்றும் கூறினார்.
ஹரிபாபுவின் நண்பர் கண்ணன் புலனாய்வுத் துறையிடம், சுபா சுந்தரம், ரவி சங்கரன் ஆகியோரின்
தொலைபேசியைக் கண்காணிக்குமாறு கூறினார். அது செயல்படுத்தப்பட்டது. புலனாய்வுத் துறை, ஹரிபாபு
எடுத்த படங்களுடன் ஸ்ரீபெரும்புதூர் சென்று, அதிலுள்ள ஆட்களை டையாளம் காணும் படி மக்களிடம்
கேட்டதில், நான்கோ, ஐந்தோ நபர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டனர். சுபா
சுந்தரமும், நளினியும் அடையாளம் காணப்படவில்லை.
ரவிசங்கரன் கைது செய்ப்பட்டு, அவரிடமிருந்த புகைப்பட ஆல்பம் கைப்பற்றப்பட்டபோது, அதில் நளினி
பலருடன் இருந்தாள். அதில், பாக்கியநாதனை நளினியின் சகோதரன் என ரவிசங்கரன் அடையாளம் காட்டினார்.
பாக்கியநாதன் அவருடைய பதிப்பகத்தில் கைது செய்யப்பட்டபோது, நளினியும் - முருகனும்
தப்பிவிட்டனர்.
பாக்கியநாதன், தான் பேபி சுப்பிரமணியத்தால் இந்தக் கூட்டத்தினரின் வலையில் விழுந்த விபரத்தைச் சொல்லி,
குர்தா அணிந்திருப்பவர் பெயர் சிவராசன் என்றார். புலனாய்வுத் துறையினர் சிவராசன், தானு, சுபா, முருகன்,
நளினி ஆகியோரே இந்தக் கொலையின் முக்கிய பாத்திரங்கள் என்பதைப் புரிந்துகொண்டனர். பாக்கியநாதன்,
சுபா சுந்தரம், ரவி சங்கரன் தந்த தகவல்கள் அவர்களுக்குப் பெரிதும் உதவி செய்தன.
முருகன் - நளினியைத் தேடும் படலம் ஏற்கனவே துவங்கிவிட்டிருந்தது. திருப்பதி சென்ற இருவரும், அங்கு
திருமணம் செய்ய விரும்பினர். ஆனால் சூழல் சரி இல்லாததால், செய்யவில்லை. நளினியின் படம் அனைத்து
பத்திரிகைகளிலும் ஏற்கனவே வெளிவந்துவிட்டது. முருகன் மொட்டை போட்டுக்கொண்டார். வேண்டுதல்
நிறைவேற்றப் பட்டதால் என்று அவர் சொன்னார். ஆனால், ஆள் அடையாளம் தெரியாமலிருக்க அவர்
மொட்டை போட்டார் என்பதே கருத்து.
தஞ்சை கடற்கரைப் பகுதி பெரிய கண்காணிப்பில் இருக்கும் என்று நினைத்த அவர்கள், சென்னை திரும்ப முடிவு
செய்தனர். அவர்களை எதிர்பார்த்து காவல்துறை சென்னையின் சகல பஸ் நிலையங்களிலும், ரயில்
நிலையங்களிலும் கண்கொத்திப் பாம்பு போல் நின்றனர். அதன் பலனாக, அவர்கள் கைது
செய்யப்பட்டனர்.
முருகன் சகலத்தையும் ஒப்புக்கொண்டார். தான் பிரபாகரனால் ராஜீவ் காந்தியைக் கொல்வதற்கு சென்னைக்கு
அனுப்பப்பட்ட விபரங்கள் அனைத்தையும் கூறினார். முருகனின் வாக்குமூலப் படி, பேரறிவாளனும், பயாசும்
கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் திட்டமிட்ட படி, “கல்யாணம்” சிறப்பாக முடிந்துவிட்டதால், டெல்லியில் கணகசபாபதியும்,
அதிரையும் உடனடியாக தாங்கள் தங்கியிருந்த வடக்கு மோடி பாக் ஜாகையை விட்டு, பஹர்கன்ஜ்
பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலுக்குச் சென்றனர்.
நேபாளம் வழியாக வெளியேறுவதற்காக முயன்ற வேளையில், ஜூன் 1991இல் அவர்களும் கைது
செய்யப்பட்டனர். எட்டு வருடங்களுக்குப் பின், 1999இல் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். காரணம்,
ஸ்ரீபெரும்புதூர் நிகழ்விற்கும், அவர்களுக்கும் தொடர்பு இல்லை என்று நீதிமன்றம் அறிவித்தது. இப்போது
அவர்கள் சுவிட்சர்லாந்தில் வசிக்கிறார்கள். என்ன பாஸ்போர்ட்டில், எப்படிப் போனார்கள்...? எல்லாம்
மர்மம்தான்!
இவர்கள் இலங்கையர் என்பது உறுதி. ராஜீவ் கொலையில் இவர்கள் சம்பத்தப்படாது இருக்கலாம். ஆனால்
இந்திய குடிவரவு சட்டத்தில் அவர்கள் விசா இல்லாது இந்தியாவில் தங்கிய குற்றவாளிகள். ஆகவே முறைப்படி
அவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்பி இருக்கவேண்டும். இலங்கையில் அவர்களை காவல் துறை
விசாரிக்கும். பல உபயோகரமான தகவல்களைப் பெற்றிருக்கலாம். ஏன் செய்யவில்லை வாஜ்பாய் அரசு?
தடுத்தது யார்?
விடுதலைப் புலிகளுக்காக செஞ்சோற்றுக் கடன் தீர்க்கும் கூட்டம் ஒன்று அன்றும் இன்றும் இந்த நாட்டில்
உண்டு. அவர்களது நாவன்மை உண்மையைப் பொய்யாக்கிறது. பொய்யை உண்மையாக்கிறது. அதில் மயங்கி
தான் இளவல்கள் துரோகியையும் தீரானகப் பார்கிறார்கள்!
[நிறைவு] |