அழகும் அறிவும் ஓரிடத்தில் இருக்காது என்று சொல்வார்கள். ஆகவே இவருக்கு அமைச்சுப் பதவி என்றதும்
அதிர்ந்தேன். அப்புறம் கொடுத்த துறையைப் பார்க்கும் போது ஐயோ என்று அதிர்ச்சி அடைந்தேன். பா.ஜ.க.வில்
அறிவு ஜீவிகளுக்கு பஞ்சமா?
ஸ்மிருதி மல்ஹோத்ரா என்பது இவர் இயற் பெயர். மார்ச் 23, 1976 ம் ஆண்டு அஜய் மல்ஹோத்ரா, சிவானி
தம்பதிகளுக்கு, மூன்று பெண் குழந்தை களில் மூத்தவராக டெல்லியில் பிறந்தார். வெள்ளை நிறம். உருண்ட
கண்கள். கவர்ச்சியான முகம். நீண்ட கூந்தல். உயரம் 5'6". இப்போது எடை 72 கிலோ.
தந்தை பஞ்சாபி ஜட், தாய் பெங்காலி பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். இரு குடும்பமும் இவர்களின் கலப்பு
திருமணத்தை ஏற்காது ஒதுக்கி வைத்துவிட்டனர். கையில் 150 ரூபாவோடு தனிக்குடும்பம் போனார்கள்.
ஸ்மிருதி 1998 ம் ஆண்டு தனது 22 வயதில் இந்திய அழகு ராணிப் போட்டியில் கலந்து
கடைசி சுற்றுக்கு தேர்வானவர். வெற்றி பெறவில்லை. இதற்காக தந்தையிடம் கடன் வாங்கிய ஒரு லட்சம்
ரூபாயை சேர்பதற்கு McDonald உணவகத்தில் வேலை செய்தவாறே பாலிவூட்டை சுற்றிவந்தார்.
அது மாடலிங் உலகிற்கு அழைத்து சென்றது. அங்கிருந்து சின்னத்திரைக்குப் போனார். பல தொடர் நாடகங்களில்
நடித்தார். ‘Kyunki Saas Bhi Kabhi Bahu Thi’ மாமியார் மெச்சிய குஜராத்தி மருமகளாக நடித்தது மூலமும்,
ராமாயணம் சீரியலில் சீதையாக நடித்ததன் மூலமும் ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டார். வெற்றி
நடிகையானார். பின்பு தயாரிப்பாளராகவும் மாறினார்.
சின்னத் திரை உலகில் இவர் நிறைய பரிசுகள் பெற்றுள்ளார். ஐந்து முறை தொடர்ச்சியாக சிறந்த நடிகை
விருதையும் நான்கு தொலைக் காட்சி விருதுகளையும், எட்டு ஸ்டார் பரிவார் விருதுகளையும் பெற்று சாதனை
படைத்துள்ளார். சின்னத் திரையின் ராணியாக இவர் வலம் வந்தார் என்றால் மிகையாகாது.
கல்யாணம். இதுவும் கலப்பு கல்யாணம். தனது 25 வது வயதில் 35 வயது ஜுபின் ஈரானி என்ற நெருப்பை
வணங்கும் பார்சியை பம்பாயில் மணந்தார். அவருக்கு இது இரண்டாம் கல்யாணம். அவர் மனைவி மோனா,
ஸ்மிருதியின் சிநேகிதி. அவரும் அழகுப் போட்டியில் கலந்து கொண்டவர் தான். அழகுப் போட்டி நடத்துவதிலும்
பங்கெடுத்தவர்.
மோனாவைப் பொருத்த வரையில் ஸ்மிருதி சீதா அல்ல, மாதவி. தன் வீட்டிலேயே தங்குவதற்கு
ஸ்மிருதிக்கு இடம் கொடுத்து இவரிடம் தன் கணவனை இழந்த அப்பாவி கண்ணகி அவள் என்பர் விஷயம்
தெரிந்தவர்கள்.
ஆமாம் 2001ம் வருடம் மகன் ஜொஹ்ர் வயிற்றில் வளரும்போது ஜுபினைக் கைப்பிடித்த புரட்சிப் பெண் - மாதர்
குல மாணிக்கம் ஸ்மிருதி. சில வருடங்களுக்கு முன்பு நடிகை குஸ்பு கூறிய அறிவுரையை அவர் சொல்வதற்கு
முன்பே பின் பற்றியவர். குஷ்பு,சொல்வதை செய்பவர், செய்வதை சொல்பவர். அதெல்லாம் உங்களுக்கு
தெரியாது.
2003ம் வருடம் மகள் ஜோஇஸ் பிறந்தாள். ஜுபினின் மூத்த மகள் ஷா நெல்லா பக்கத்து தெருவில் தாயோடு
வசிக்கிறாள். வாரக் கடைசியில் தந்தை வீடு வருகிறாள்.
ஜுபின் விளையாட்டு பொருட்கள், மருத்துவக் கருவிகள் விற்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். ஸ்மிருதி தன்
கணவரை விட உயரமானவர். ஆமாம் கணவரை விட உயர உயரப் போகிறார்.
இவர் 2003 ம் ஆண்டு பாரதிய ஜனதா வில் இணைந்து 2004 நாடாளுமன்ற தேர்தலில் கபில் சிபலை எதிர்த்து
டெல்லி சாந்தணி சௌக் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
அதனைத் தொடர்ந்து, சொன்னால் நம்ப மாட்டீர்கள், வாஜ்பாய் ஆதரவாளராக தன்னைக் காட்டிக் கொண்டு தீவிர
நரேந்திர மோடி எதிர்ப்பாளராக மாறினார். குஜராத் கலவரத்திற்கு மோடியே காரணம் என்றும் அவராலேயே 2004
தேர்தலில் தோல்வி என்றும், அவர் பதவி விலகாவிட்டால் தான் சாகும் வரை உண்ணா விரதம் இருப்பேன்
என்றும் முழங்கினார்.
குஜராத் கலவரத்தில் மோடியின் நிலைப்பாட்டை வாஜ்பாய் எதிர்த்தார் - அவரைப் பதவி விலகக் கோரினார்.
ஆனால் மோடியின் பின்னால் அத்வானி தூணாக நின்று அவரைக் காப்பாற்றினார்.
நிலைமை மீறிப் போவதைக் கண்ட பா. ஜ. க. தலைமை ஸ்மிருதியை அமைதி காக்கும்படி எச்சரித்தது. அவர்
மன்னிப்பு கேட்டார். இப்போது அதைப் பற்றிக் கேட்டால் மோடிஜி எனது அறியாமையை பெருமனதோடு
மன்னித்து விட்டார் என்கிறார்.
கலைத் துறையில் இருந்து வந்த ஸ்மிருதி விளம்பரத்தின் வலிமையை உணர்ந்தவர். எதை எப்படி செய்தால்
மக்களால் பேசப்படுவோம் என்பதையும் நன்கு அறிந்தவர். அரசியலில் பிரபலங்களை எதிர்த்தால் பிரபலம்
ஆவோம் என்பதும் அவருக்குத் தெரியும்.
எல்லோரும் வெற்றி வாய்ப்பு தொகுதியைத் தேடி ஓடும் இக்காலத்தில், தோற்ப்போம் என்று தெரிந்தும் விரும்பி
சீட்டு கேட்டு ராகுல் காந்தியை எதிர்த்து அமேதியில் போட்டியிட்டதன் காரணம் அதுதான்.
அங்கு, தான் ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்தவள் என்றும் McDonald உணவகத்தில் உணவு பரிமாறினேன்,
மேசை துடைத்தேன், தரையை சுத்தம் பண்ணினேன் என்றும் பேசி ஏழை வாக்காளர்களைக் கவர்ந்தார்.
மக்களால் அறியப்பட்டவராகவும் சுறு சுறுப்பாக வேலை செய்பவராகவும் இருப்பதால் கட்சியில் பல
பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டார். ராஜ்ய சபாவிற்கு மோடி தயவால் இவர் குஜராத்திலிருந்து தெரிவான போது
கட்சியில் பலர் ஆச்சரியப் பட்டனர். இப்போது இவர் மத்திய மனிதவளத்துறை அமைச்சராக மீண்டும் மோடியால்
நியமனம் பெற்றபோதும் உள்ளேயும் வெளியேயும் பலர் வியந்தனர்.
மகளிர் உரிமைகள் போராளி மது கிஷ்வார் தனது ட்விட்டர் தளத்தில் "கல்வித்துறையை தரம் உயர்த்தும்
நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். கூரிய சிந்தனையுள்ள ஒருவர் இப்பணிக்குத் தேவை.
மனிதவளத்துறை அமைச்சகம், பல்வேறு மாநில அமைச்சர்களைக் கையாள வேண் டியிருக்கும்."
"ஏனெனில் கல்வி என்பது மாநிலங்களின் அதிகாரத்துக்கு உட்பட்டது. துணை வேந்தர்களையும் கையாள
வேண்டியிருக்கும். கல்வித்துறையில் இடதுசாரி, வலது சாரிச் சிந்தனையுள்ளவர்களுக்குத் தலைமை தாங்கி
நுட்பமாகச் சமாளிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்" என முதலில் ஸ்மிருதிக்கு எதிராகச் சர்ச்சையைக்
கிளப்பினார்.
அதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான அஜய் மாக்கன், “மோடியின்
அமைச்சரவையில் ஸ்மிருதி ஈரானிக்கு கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் பட்டப்படிப்பு கூட
படிக்கவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இது பா. ஜ.க. வினரை ஆத்திரமடையச் செய்தது. சந்நியாசினி எனத் தன்னை அழைத்துக் கொள்ளும் மத்திய
அமைச்சர் உமாபாரதி பொங்கினார். சோனியாவின் கல்வித் தகுதி குறித்து கேள்வியெழுப்பினார். சாமியார்களுக்கு
கோபம் வரக் கூடாதே!
"ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு சோனியா தலைமை வகித்தார். மேலும் பிரதமருக்கும் அவர்
அறிவுறுத்தல்களைக் கொடுத்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, சோனியா வீட்டு வாசலில் கை கட்டி
நின்றது. ஆகவே சோனியாவின் கல்வித்தகுதி என்ன எனக் கூற வேண்டும்."
"சோனியா காந்தியின் கல்விச் சான்றிதழ்களை காங்கிரஸார் காட்ட வேண்டும். அவர் எங்கு எப்படிப் படித்தார்
என்பதையும் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகே ஸ்மிருதி ஈரானியைப் பற்றி விமர்சிக்கலாம். சுகாதாரத்துறை
அமைச்சர் மருத்துவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், எப்படிப் பணி புரிய வேண்டும் என்பது
தெரிந்திருக்க வேண்டும்" எனச் சாடினார் உமா பாரதி.
இன்னும் பல பா.ஜ. க. வினர் காங்கிரசை வறுத்து எடுத்தனர். கொள்கையாளர்கள் என்று தங்களுக்கு தாங்களே
மகுடம் சூட்டிக் கொள்ளும் பா.ஜ.க.வினர், கேள்விக்கு கேள்வி, என் கேள்விக்கு என்ன பதில் என்று,
குற்றச்சாட்டிற்கு பதில் தந்து தன்னை தூய்மைப் படுத்தாது, சில்லறை கட்சி போல் பேசுவதைப் பலர்
ரசிக்கவில்லை.
அந்த தெருவில் ஒரு குழாயடிச் சண்டை. ஒருத்தி மற்றவளிடம் கேட்டாள் ; " ஊகும்... குப்புசாமி வீட்டிற்கு நீ
அடிக்கடி போறது எனக்கு தெரியாதுன்னு நெனேச்சியா?". மற்றவள் "அடி ஆத்தே ராமசாமி கூட நீ மட்னீ ஷோ
போனியா இல்லையா?" என்றாள். இவர்களில் யார் ஒழுக்கமானவள்? ஒருத்தியை மற்றவள் அசிங்கப்
படுத்துவதன் மூலம் அவள் சுத்தவாளி ஆகிவிடுவாளா?
இவரது கல்வி தகுதி இப்பதவிக்கு போதுமா - பொருத்தமா என்று கேட்டால் மற்றவரின்
கல்வி தகுதி என்ன என்று திருப்பிக் கேட்பதன் மூலம் இவருக்கு தகுதி வந்து விடுமா? கட்சி அபிமானத்தால்,
தலைவர் பாசத்தால், மற்றவர் பால் இருக்கும் வெறுப்பால் பலர் மனச் சாட்சிக்கு விரோதமாகக் கருத்துச்
சொல்கிறார்கள், வாதிடுகிறார்கள்.
அது மட்டுமல்ல. 2004 தேர்தல் விண்ணப்பத்திலும் 2014 தேர்தல் விண்ணப்பத்திலும் இவர் தனது கல்வி
தகைமையைப் பற்றி மாறுபட்ட தகவலைக் கொடுத்துள்ளது மேலும் பிரச்சினையைக் கிளப்பியுள்ளது.
பொதுவாகப் பார்க்கும்போது ஸ்மிருதியிடம் உண்மை குறைவாகவே தெரிகிறது.
அவரது தனிப்பட்ட வாழ்கையை நாம் விமர்சிக்க வரவில்லை. ஆனால் ஒரு ஒரு பானை சோற்றுக்கு ஒரு
சோறு பதம் என்பார்கள் அல்லவா. தனது திருமணத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், ஜுபினை பால்ய சிநேகிதன்
என்கிறார். அவரது அம்மாவும் ஜுபினின் அம்மாவும் சிநேகிதிகளாம். ஆகவே இவர்கள் வீட்டிற்கு அவர்கள்
வருவார்களாம்.
ஜுபின் இவரது கொண்டையைப் பிடித்து இழுத்து கோபமூட்டுவாராம். ஜுபினும் மோனாவும் ஏன் பிரிந்தார்கள்
என்று எனக்குத் தெரியாது. நான் ஜுபினோடு சந்தோசமாக குடும்பம் நடத்துகிறேன் என்றார்.
இவரது இந்த கதையை நம்புவது கஷ்டமாக உள்ளது. ஸ்மிருதி பிறந்து வளர்ந்ததெல்லாம் டெல்லியில். பார்சி
சமுகத்தின் கோட்டை பம்பாய். டெல்லியில் அவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மேலும் ஜுபினுக்கும்
ஸ்மிருதிக்கும் 10 வயது வித்தியாசம். ஆகவே இத்தகைய குழந்தை சேட்டைகளுக்கு வாய்ப்பு இருக்குமா என்பது
சந்தேகம்.
மோனாவை சந்திப்பதற்கு முன் ஜுபினை டெல்லியில் தெரியுமென்றால், மோனா ஜுபின் திருமணம், மோனவை
இவர் பம்பாயில் சந்தித்த பின் தான் நடந்தது. இவருக்கு வீட்டில் தங்க இடம் தந்தது மோனாவே அல்லாது
ஜுபின் அல்ல. இந்த அறிக்கை எல்லாம் அவரின் பட்ட படிப்பு போல் தான் காற்றில் பறக்கிறது.
காங்கிரெஸ் கட்சி இப்பதவியை அமிதாப் பச்சனுக்கோ, தர்மேந்திரவிற்கோ, ஸ்ரீ தேவிக்கோ, ஏன் சச்சின்
தெண்டுல்காருக்கோ கொடுத்திருந்தால் பா. ஜ.க. நாடாளுமன்றத்தில் அமளி படுத்தாது இருந்திருக்குமா?
கல்விக்கும் இவருக்கும் சம்பந்தம் இல்லை என்பதே வாதம். விளையாட்டுத் துறையையோ கலைத்
துறையையோ இவருக்குக் கொடுத்திருக்கலாம். ஆங்கிலமும் ஹிந்தியும் சரளமாக பேசுவதே தகுதி என்றால்
சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் இருக்கும் போர்ட்டர்கள் 14 மொழி பேசுகிறார்களாம்.
என் செயல்திறனை பார்த்துவிட்டு என்னை விமர்சியுங்கள் என்று சொல்கிறார் ஸ்மிருதி. மக்கள் அறிமுகம்,
கவர்ச்சி, செயல் துடிப்பு இவைகளை வைத்து பா. ஜ.க. ஸ்மிருதியை தூக்குகிறது என்றால் இன்னொரு
ஜெயலலிதா வடக்கே வளர்கிராரோ? |