"என்ன 120 கோடி? அது என்ன பெரிய பணமா? அவர்களின் குடும்பத்தின் ஒரு வார துணி சலவை
செய்வதற்கான செலவு அது. அது அவர்களின் பணமும் அல்ல, என் உழைப்பிற்கான ஊதியம்." இப்படிச்
சொல்கிறார், தன்னை மறைந்த சவுதி அரேபியாவின் மன்னரின் மனைவி என்று கூறும் லண்டனில் வசிக்கும்
ஜனன் ஜோர்ஜ் ஹர்ப்.
அது செப்டம்பர் 1967. பிரபல உள்ளூர் அறபி வர்த்தகர் ஒருவரின் பார்ட்டிக்கு சென்ற போது அவரைக் கண்டாள்.
வெள்ளை ஆடை. வயது 45. தடித்து உயரமானவர். குறுந்தாடி. அரசியல் அதிகாரம் கூர்மையான கண்களில்
தெரிந்தது. ஒருமுறை பார்த்தால் மீண்டும் பார்க்கச் சொல்லும் கம்பீரமான தோற்றம். ஒரு கணம் ஜனன்
தடுமாறிப்போனாள்.
யார் இந்த ஜனன் ஜோர்ஜ் ஹர்ப்?
அவள் ஒரு பாலஸ்தீன கிறிஸ்தவர். ஹைபா வில் 1949 ல் பிறந்தாள். தந்தை சிறிய உணவகம் ஒன்றை
நடத்தினார். ஜனனுக்கு 12 வயதாக இருக்கும்போது குடும்பம் ரமல்லாஹ் விற்கு குடி பெயர்ந்தது. மேற்கு
கரையை இஸ்ரேலியர்கள் ஆக்கிரமித்த நேரம் அது.
ஜனன் 19 வது வயதில் புதிய வாழ்க்கை தேடி சவுதி அரேபியாவின் ஜித்தாஹ் நகர் சென்று தனது உறவுப்
பெண்களோடு தங்கினாள். அங்குள்ள வெனிசுலா தூதரகத்தில் அறபி - ஆங்கில மொழிபெயர்ப்பாளராக வேலை
கிடைத்தது. அமெரிக்காவிற்கு செல்வதே அவள் குறிக்கோளாக இருந்தது.
அவள் உள்ளே நுழையும் போதே வைத்த கண் வாங்காது அவளையே பார்த்த அவர், யார் இந்த சோபியா
லோறேன் (அக்காலத்தில் பிரபலமாக இருந்த ஹாலிவூட்டின் இத்தாலிய நடிகை) என்று சிந்தித்தார். நேரில்
வந்து பேசினார்.
"நான் உள்ளே நுழையும் போதே அந்த உயரமான மனிதரைப் பார்த்தேன். அவர் மிகவும் பிரபல்யமான இளவரசர்.
உலகின் பலமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். என்னையே அவர் பார்த்தார். நேரடியாக வந்தார். மிகவும்
மரியாதையாகப் பேசினார். எனது கருத்துகளுக்கு மரியாதை கொடுத்தார்".
ஒன்பது குழைந்தைகளின் தந்தையின் உள்ளத்தில் ஒரு கனவுக் கன்னி குடியேறிவிட்டாள். எப்படியாவது அவளை
அடைந்தே தீரவேண்டும் என்று அவர் முடிவு செய்து விட்டார்.
அடுத்த நாள் அவள் வேலை முடிந்து வீடு திரும்புகையில் கறுப்பு நிற படகுக் கார் ஒன்று அங்கு நின்றிருந்தது.
அவளைக் கண்ட ஓட்டுனர் ஒரு நகைப் பெட்டியையும் ஒரு கடித உறையையும் கொடுத்தார். அதில் டாலர்
20,000 ம், காதணிகளுடன் ஒரு வைர நெக்லசும் இருந்தது. ஒரு கணம் அசந்து போன ஜனன் அவைகளை
அப்படியே திருப்பிக் கொடுத்து விட்டாள்.
" நான் சற்று கடுமையானவள். அவைகளைப் பார்த்தேன். எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. ஆனால்
அவைகளுக்கு ஈடாக என்னால் எதுவும் கொடுக்க முடியாது. ஆகவே திருப்பி அனுப்பி விட்டேன்" என்றாள்
ஜனன். விட்டாரா அவர்?
அடுத்த நாள் பகல் சாப்பாடு வேண்டும் என்றார். "என் வீட்டில் ஓர் இளவரசருக்கு கொடுக்கும்படியான உணவு
இல்லை என்றேன் நான். ஒரு மணி நேரத்தில் ஏழு கார்களில் ஏழு பணியாளர்கள், விதம் விதமான அறபி
உணவுவகைகள், கோழி புறா பழ வகைகள் என கொண்டு வந்து விருந்து படைத்தனர்".
அடுத்த நாள் அவர் மீண்டும் வந்தார். இப்போது நாங்கள் Roulette ஆடினோம். என் நண்பர்களும் நண்பிகளும்
ஆட்டத்தில் இணைந்தனர். அவருக்கு ஆட்டத்தில் நல்ல பரிச்சயம் இருந்தது. இப்போது எனக்கு ஒன்று புரிந்தது.
குடும்பம், செல்வம் எல்லாம் இருந்தும் அவரிடம் தனிமை இருந்தது என்று.
இளவரசர் முதன் முதலில் தன் காதலை வெளிப்படுத்தியது - I Love You சொன்னது லண்டனில்தான். அதற்கு
முன்பாக அவர் தனது பண மலை மூலமாக தன் அன்பு மழையில் ஜனனை தொப்பு தொப்பாக நனைத்தார்.
ஆனாலும் வெற்றி பெறவில்லை அவர் நோக்கம்.
ஜனனையும் அவள் குடும்பத்தின் பத்து உறுப்பினர்களையும் இரண்டு வார விடுமுறைக்காக லண்டன்
டோசெஸ்டெர் ஹோட்டலுக்கு அழைத்து வந்தார். Harrods கடையில் பெறுமதியான ஆடைகளும் குளிர்
கோட்டும் அவளுக்கு வாங்கி கொடுத்தார். அன்றிரவு ஒரு பெரிய பிரமுகரின் விருந்துக்கும் அவர்களை
அழைத்துச் சென்றார்.
ஹோட்டலுக்கு வந்ததும், அன்றைய இரவை அவளோடு கழிக்க விரும்புவதாகக் கூறினார். ஆனால் அவள்
மறுத்து விட்டாள். "உடலுறவை அவர் விரும்பினார். திருமணம் செய்யாமல் நான் அதற்கு ஒப்பமாட்டேன்
என்றேன். அத்துடன் அவ்விசயம் முடிந்து விட்டது என்று நான் நினைத்து இருந்தேன்".
ஆறு வாரங்கள் கழிந்திருக்கும் திடீரென்று ஒரு நாள் ஜனனின் தந்தையை இளவரசர் ஜித்தா அழைத்து வந்தார்.
தனது காதலியாக - ஆசைநாயகியாக இருக்க அவள் மறுத்ததால் அவளை மனைவியாக்கிக் கொள்ள அவர்
முடிவு செய்தார்.
"என்னைத் திருமணம் செய்ய விரும்புவதாகச் சொன்னார். அது இரகசியமாக நடக்க வேண்டும் என்றதோடு
இரண்டு கட்டளைகள் என்றார். ஒன்று, நான் மதம் மாறவேண்டும். இரண்டு, குழந்தை பெறக் கூடாது. நான்
சம்மதித்தேன். காலப்போக்கில் குழந்தை விசயத்தில் அவர் மனதை மாற்ற முடியும் என நம்பினேன்."
சுருக்கமாகச் சொல்வதானால் இளவரசர் ஜனனின் அழகை ரசித்தார். அவள் உடலை ருசிக்க விரும்பினார்.
மோகம் 30 நாள், ஆசை 60 நாள் என்பார்களே. அந்த ரகம் தான். மன்னர்களுக்கு மங்கையர் விளையாட்டுப்
பொருள் தானே.
அடுத்த சில நாட்களில் அல்- சரபியா மாளிகைக்கு ஜனன் குடிபுகுந்தாள். அது மூன்று மாடிகளைக் கொண்ட
முழுவதும் வெல்வெட் கார்பெட் போடப்பட்ட வெள்ளை மாளிகை. வழக்கமாக விருந்தாளிகள் தங்கும் மாளிகை.
நகரின் மத்தியில் இருந்தது. ஒரு திரையரங்கு, நீச்சல் குளம், எட்டு பெரிய அறைகள், எட்டு சலவைக் கற்கள்
பதித்த குளியல் அறைகள், ஐந்து வரவேற்ப்பு அறைகளைக் கொண்டது.
1968 மார்ச்சில் ஒரு நாள் அவசரம் அவசரமாக நிக்காஹ் - திருமண நிகழ்ச்சி மாளிகைக்குள்ளேயே இரகசியமாக
நடைபெற்றது. ஷேய்க் ஒருவர் மூன்று சாட்சிகள் முன்னால் அதனை நடத்தினார். அதில் ஒருவர் ஓர் இளவரசர்.
அதன்பின் கல்யாண விருந்தில் ஆறு நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். அரச குடும்பத்தினருக்கு அங்கு
நடந்தது என்ன என்று தெரிந்திருந்தாலும் வெளியார் யாருக்கும் தெரியாதவாறு பார்த்துக்கொண்டனர்.
அங்கு அவள் தந்தை, சகோதரி என இந்த ஆறு பேரின் கட்டளைக்காக ஒரு பணியாளர் பட்டாளமே இருந்தது.
அவளுக்கெனத் தனியாக சோமாலியா - எத்தியோபியா பெண் பணியாளர்கள் இருந்தனர். ஓட்டுனருடன் Aston
Martin கார் அவளுக்கு தரப்பட்டிருந்தது. பல வகை Piaget கைக் கடிகாரங்களும் பிரான்சின் Oscar de la Renta
ஆடை வகைகளையும் இளவரசர் அவளுக்காகத் தெரிவு செய்திருந்தார்.
அவள் ஆடம்பரத்தின் உச்சிக்கு போய்விட்டாள். கனவுலகில் வாழ்ந்தாள். மொத்தத்தில், அவள் பிறந்த வீட்டிற்கும்
புகுந்த வீட்டிற்கும் இடையில் மலைக்கும் மடுவிற்கும் உண்டான வித்தியாசம் இருந்தது எனலாம். ஆனால் நாள்
செல்ல செல்ல தன் வாழ்க்கை தங்க கூட்டில் இருக்கும் கிளியின் வாழ்க்கைக்கு ஒப்பானது என அவள் உணரத்
தொடங்கினாள்.
அவர் அப்போது உள்துறை அமைச்சர். அரியணையின் வாரிசு பட்டியலில் அவர் பெயர் இருந்தது. மூத்த
சகோதரர்கள் இருவர் இருந்தாலும், இன்றில்லாவிட்டால் ஒருநாள் சவுதியின் மன்னராகும் வாய்ப்பு அவருக்கு
பிரகாசமாக இருக்கவே செய்தது. காரணம் மற்ற சகோதரர்களைவிட பொறுப்பான பதவிகளை அவர்
வகித்தார்.
மேலும் மன்னரே புனித மஸ்ஜித் இரண்டுக்கும் பொறுப்பாளராக இருப்பார். அத்தகையவர் ஒரு முஸ்லிம்
அல்லாத பெண்ணை மணம் செய்தார் என்றால் மக்கள் ஏற்பார்களா எனப் பயந்த இளவரசர் ஜனனை வெளியார்
அறியாத நிலையிலேயே வைத்திருக்க விரும்பியதில் வியப்பில்லை.
லண்டன் நைட்பிரிட்ஜ் பகுதியில் வீடு ஒன்று எடுத்தனர். இருவரும் லண்டனில் ஆனந்தமாகப் பொழுது
போக்கினர். அவளுக்கு அங்கு நிறைய சுதந்திரம் இருந்தது. அனுபவி ராஜா அனுபவி என்று அதே காலத்தில்
நாகேஷ் பாடி ஆடியது இளவரசருக்கு ரொம்பவும் பொருந்தும். அவர் நன்கு அனுபவித்தார்.
இதற்கிடையில் குழந்தை பெறும் விடயத்தில் அவள் நினைத்ததுபோல் அவர் மனதை அவளால்
மாற்றமுடியவில்லை. அவள் கேட்டது கேட்காதது எல்லாம் கொடுத்த இளவரசர், பிடிவாதமாக குழைந்தை
மட்டும் தரமாட்டேன் என்றார்.
"ஒரு அரை பாலஸ்தீன குழைந்தையை நான் விரும்ப வில்லை. அல்- சரபியா மாளிகையில் ஒரு குட்டி யாசிர்
அரபாத் ஒடித் திரிவதை நான் விரும்பவில்லை" என்று சிரித்துக்கொண்டு ஆனால் கண்டிப்பாக அவர் சொன்னது
ஜனனின் மனதைக் காயப் படுத்தியது. அவள் விரும்பியது குடும்பம். அவர் விரும்பியது இன்பம்.
ஆனால் எந்த கருத்தடை முறைகளையும் அவர்கள் பின்பற்றவில்லை. அவள் கருவுற்ற போதெல்லாம்
கலைக்கச் சொன்னார்.
"நான் 1968 இறுதியிலும் 1969 மத்தியிலும், இறுதியிலும் கருத்தரித்தேன். கலைத்துவிடச் சொன்னார். முதன்
முறை மருத்துவ மனையிலும் அடுத்த இரண்டு முறைகளும் ஒரு கிளினிக்கிலும் கலைத்தேன். கிளினிக்கில்
மயக்க மருந்து சரியாக வேலை செய்யாததால் என்னால் வலி பொறுக்க முடியவில்லை. செத்து பிழைத்த மாதிரி
இருந்தது."
"இந்த விடயத்தில் என்னால் எதுவும் செய்ய முடியாது என்று எனக்கு நன்றாகப் புரிந்தது. எனது திருமணம்
எவ்வளவு பலவீனமானது என நான் உணர்ந்தேன். அவர் விரும்பினால் சுலபமாக தலாக் என்ற வார்த்தையில்
என்னை விலக்கிவிடலாம். பின்பு என் கதி அதோ கதிதான். ஆகவே நான் அவர் சொற்படியே
நடந்தேன்".
இவ்வாறு இனிப்பும் உவர்ப்பும் கலந்து சென்று கொண்டிருந்த அவள் மண வாழ்வை திடீர் சூறாவளி ஒன்று 1970
கடைசியில் தாக்கியது.
(தொடரும்.) |