"என் கணவர் என் தோழன். அவர் மிகவும் அன்பானவர், நேர்மையானவர், கண்ணியம் மரியாதை மிக்க ஒரு
விசேசமான மனிதர். எங்கள் வாழ்க்கை இன்ப மயமாகவே இருந்தது - அவரது சகோதரரர் திடீரெனெ ஒரு நாள்
என்னை மாளிகையை விட்டு வெளியேற்றும் வரை. அவர் சுகவீனராகும் வரை நாங்கள் தொடர்பிலேயே
இருந்தோம்."
'எங்கே போகுதோ வானம், அங்கெ போகிறோம் நாமும்' என்று ஓரளவு இன்பமாகவே போய்க்கொண்டிருந்த அவளின் மணவாழ்வில் அன்றொருநாள், 1970 கடைசியில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலையை உண்டாக்கியது. முடிந்தது தன் வாழ்வு என்று நினைக்குமளவு அது அவளைத் தள்ளியது.
எந்த காரணமும் கூறாது, கணவர் இளவரசர் பஹத் பின் அப்துல் அசீஸ் அல் சவூத்தின் சகோதரர், இளவரசர்
துர்கி யினால் இரண்டு மணி நேர அவகாசத்தில் அவள் மாளிகையிலிருந்து வெளியேற்றப்பட்டாள். இல்லை
துரத்தப்பட்டாள்.
அவளது திருமண அத்தாட்சிப் பத்திரம், நகைகள்,ஆபரணங்கள், புகைப்படங்கள் கைப்பற்றப் பட்டன. உடுப்புகள்
மற்றும் ஏனைய பொருட்கள் பெய்ரூத்தில் உள்ள சவூதி தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவள்
அமெரிக்காவிற்கு அஞ்சா வாசம் செல்லுமாறு பணிக்கப்பட்டாள்.
"மீண்டும் நான் சவூதிக்கு வர முடியாது என்றே நினைத்தேன்". இளவரசர் அவளோடு தொலைபேசியில் தொடர்பு
கொள்வார். அவள் வெளியில் இருப்பதுதான் நல்லது என்று அவரும் கூறினார். ஏன் மாளிகையிலிருந்து வெளி
யேற்றப் பட்டீர்கள் என்ற கேள்விக்கு இன்று வரை பதில் சொல்ல மறுக்கும் அவர், தகுந்த நேரத்தில் நீதி
மன்றத்தில் அதனைக் கூறுவேன் என்கிறார்.
அமெரிக்காவில் நண்பர்கள் இன்றி குடும்பம் இன்றி ஒருமாதிரியான வாழ்கையை வாழ்கையில், தான் மன
நோயாளி ஆகிவிடுவோமோ என்று அவள் அஞ்சினாள். இவ்வாறு மூன்று ஆண்டுகள் கழிந்தன.
இளவரசர் மீண்டும் அவளை அழைத்தார். "அந்த வருடம் அவரை நான் மூன்று முறை சந்தித்தேன். இரு
முறைகள் ரியாத்திலும் ஒருமுறை லண்டனிலும். அவர் இன்னும் என்னை விவாகரத்து பண்ணாததால் அவர்
மனைவியாகவே நான் செயல் பட்டேன். இந்த வாழ்க்கை முறை எனக்கு சலித்தது. நான் பிள்ளை குட்டி என்று
குடும்ப வாழ்கையை விரும்பினேன்."
"இறுதியாக அவரை நான் ரியாத்தில் ஜனவரி 1974ல் சந்தித்தேன். இச் சந்திப்பு என் வாழ்கையில் இன்னொரு
திருப்பத்தைத் தந்தது. அப்போது அவர் தனது நான்காவது மனைவியை மணந்திருந்தார். சேர்ப்பதும் விலக்குவதும்
அவருக்கு வாடிக்கை என்றும் நான் அறிந்திருந்தேன்".
"ஓரளவு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நான், பெய்ரூத்தில் வசிக்கும் ஒரு கிறிஸ்தவ வழக்கறிஞரைத்
திருமணம் செய்யவிரும்புவதாகவும் குழந்தைகள் வேண்டும் என்றும் கூறினேன். அவர் மறுக்கவில்லை.
விவாகரத்து என்று எதையும் பேசவில்லை. என்னை கட்டித் தழுவி வாழ்த்தி வழி அனுப்பினார்".
அத்திருமணம் இரண்டு குழந்தைகளைத் தந்ததோடு 5 ஆண்டுகளில் முறிந்தது. இப்போது மீண்டும்
அவளும் இளவரசரும் அடிக்கடி பேசினர், தொடர்பு கொண்டனர். இளவரசர் ஐரோப்பாவில் அவளது
குழந்தைகளின் படிப்பிற்கு உதவினார்.
1982 ல் இளவரசர் பஹத் மன்னர் பஹத் ஆனார். இக்காலங்களில் அவரது வெளிநாட்டு சுற்றுப் பயணங்களில்
குழுவில் ஒருவராக அவளும் சேர்க்கப்பட்டாள்.
"1995 இல் நான் எனது இரு மகள்களுடன் அவரை சந்திப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக அவர் பக்க
வாதத்தால் தாக்கப்பட்டு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதன் பின் நான் அவருடன் பேசவே
இல்லை. அவர் இறுதி வரை என்னை விவாக ரத்து செய்யாததால் நான் அவர் மனைவி. ஆகவே அவர் தேக
ஆரோக்கியம் உள்ளவராக இருந்திருந்தால் அவரது வாக்கைக் காப்பாற்றி எனக்கு சேரவேண்டியதை
தந்திருப்பார்" என்கிறார் ஜனன்.
அவர் இப்போது கேட்பது என்ன? £12 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகள்.
மன்னர் பஹத் பின் அப்துல் அசீஸ் அல் சவூத், சவூதி அரசின் ஸ்தாபகர் இப்ன் சவூத் அவர்களின் 11 வது மகன்,
தன் ஆயுள் முழுக்க தனக்கு செலவிற்கு பணம் தருவதாக வாக்களித்திருந்ததாகவும் அவர் நோய்வாய் பட்டபின்
அது நிறுத்தப்பட்டதாகவும் அதனைக் கேட்டு லண்டன், அமெரிக்க நீதி மன்றங்களில் போடப்பட்ட வழக்குகள்
போதிய முகாந்திரம் இல்லை என்று தள்ளுபடி செய்யப்பட்டன. மன்னரின் சட்டப்படியான இரண்டாவது மனைவி
தானே என்றும் ஆகவே அவரது சொத்தில் 1/16 பங்கு தனக்குத் தரவேண்டும் வேண்டும் என்றும் நீதி மன்றத்தில்
அவள் கேட்டாள்.
அவளிடம் திருமண உறுதிப் பத்திரமோ, படங்களோ இல்லை. அவள் தந்த ஆவணங்கள் திருப்தியானவை அல்ல
என்று நீதி மன்றம் கூறியது. ஜனன் தனது இரண்டாவது திருமணத்தின் மூலம் மன்னரின் மனைவி என்ற தன்
நிலையைக் குழப்பிக் கொண்டாள்.
அதுபற்றிக் கூறும்போது இளவரசர் தன்னை மணந்தது ஷரியா முறையில் என்றும் அடுத்தது சிவில் முறையில்
நடந்த திருமணம் அது சட்டப்படி முறிந்தது என்றும், இளவரசர் தனது இறப்பு வரை தன்னை விவாகரத்து
செய்யவில்லை ஆகவே தான் அவர் மனைவி என்றும் அவர் மன்னராக இருந்த காலத்தில் அவரது குழுவில்
ஒருத்தியாக வெளிநாட்டு பயணங்களில் சென்றதாகவும் மனைவியாக நடந்து கொண்டதாகவும் கூறியது அவள்
வழக்கிற்கு வலு சேர்க்கவில்லை.
மாறாக இஸ்லாத்தில் பெண்கள் பலதார மணம் செய்ய அனுமதி இல்லை. இளவரசரிடமிருந்து விவாகரத்து பெறாமல் இவள் அடுத்த திருமணம் செய்தது சட்டப்படி தவறு. அதற்கு அனுமதி கொடுத்த இளவரசர் இவளை மணவிலக்கு செய்யாதது தவறு. அப்படியானால் இவள் மீண்டும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டாளா என்ற பல கேள்விகள் எழுந்தன. இவை அனைத்தும் நீதி மன்றத்தில் இவள் கோரிக்கைக்கு எதிராக நின்றன. நீதி மன்றத்திற்கு மனச்சாட்சி இல்லை. சாட்சி தான் வேண்டும்.
ஆனாலும் நீதி மன்றத்தில் மன்னருக்கும் அரச குடும்பத்திற்கும் எதிராக அவள் தாக்கல் செய்த விபரங்கள்
பாரதூரமானவை. ஆகவே அவைகளை திரும்பப் பெற்று அதனைத் தன்னிடம் தரவேண்டும் என்றும், இனிமேல்
அரச குடும்பத்திற்கு அவமானம் தரும் எக்காரியமும் செய்ய மாட்டேன் என்ற உத்திரவாதமும் தரவேண்டும்
என்றும் அதற்கு ஈடாக £12 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகளும், செல்சீ பகுதியில் இரண்டு தொடர் மாடி
வீடுகளை அவள் இரு மகள் பெயருக்கும் எழுதித் தருவதாகஉம் 2003ம் ஆண்டு இளவரசர் அப்துல் அசீஸ் பின்
பஹத், ( மன்னரின் மகன்) லண்டன் டோசெஸ்டெர் ஹோட்டலில் அவளைச் சந்தித்து செய்த ஒப்பந்தப்படி
அவள் நடந்ததாகவும், ஆனால் அவர்கள் இன்றுவரை எதுவும் செய்யவில்லை என்று லண்டன் உயர் நீதி
மன்றத்தில் அவள் போட்ட வழக்கு ஜூன் 9ம் திகதி அவளுக்கு சாதகமாக முடிந்தது உலகைப்
பரபரப்புக்குள்ளாக்கியது.
மன்னருக்கு விதி விலக்கு (state immunity) உண்டு, அதன்படி அவர் மீது பிரிட்டனில் வழக்கு தொடர முடியாது
என்ற மன்னர் தரப்பு வாதத்தை நீதிபதி ஏற்கவில்லை. பதவியில் இருப்பவர்க்கு தான் விலக்கு உண்டு. பதவி
துறந்தவற்கோ இறந்தவற்கோ அது இல்லை என்று தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கு பற்றி ஜனனின் வழக்கறிஞர் மந்தீர் கஉர் விர்தீ (இந்திய பஞ்சாபி பெண்) கூறும்போது " மறைந்த
மன்னரின் மகன் இளவரசர் அப்துல் அசீஸ் தான் ஜனனோடு செய்த ஒப்பந்தத்தை ஒப்புக்க்கொள்கிறார். ஆனால்
மன்னர் மீது வழக்கு தொடுக்க பிரிட்டிஷ் நீதி மன்றத்திற்கு அனுமதி இல்லை என்று மட்டுமே
வாதாடினார்".
"பின்பு பதவியில் இருந்து இறந்த மன்னருக்கு எப்படி விதி விலக்கு உண்டோ அதுபோல் அவர் வாரிசுகளுக்கும்
உண்டு. ஆகவே இளவரசர் மீதும் வழக்கு போடா முடியாது என்று வாதிட்டார். அவர்களது வாதங்கள்
அனைத்துமே இன்று உடைக்கப்பட்டன" என்று கூறினார்.
இந்த விதி விலக்கிற்கு எதிரான தீர்ப்பை மேற்குலகம் பெரிதும் வரவேற்றது. காரணம் அரச குடும்ப இளைஞர்கள்
அங்கு பல குற்றச்செயல்களில் தைரியமாக ஈடுபட இது துணையாக நின்றது.
இந்த வழக்கானது - 'ஒப்பந்தப்படி நான் நடந்தேன் ஆனால் அவர்கள் ஒப்பந்தப்படி நடக்கவில்லை. எனக்கு பணம்
தரவில்லை, என் குழந்தைகளின் பெயரில் சொத்து மாற்றப்படவில்லை. வாக்குறுதி காப்பாற்றப் படவில்லை.
இல்லாத காரணங்களைக் கூறி ஏமாற்றினர்' என்பதேயாகும்.
மறுபுறத்தில்,1974 பிற்பகுதியில் பிறந்த தனது மூத்த மகளுக்கு மன்னர் தந்தையாக இருக்கலாம் என்று அவள்
மன்னரின் இரத்த மரபணு DNA கேட்டு நின்றதற்கு அரச குடும்பம் செவி சாய்க்கவில்லை. இப்போது அதுவும் நீதி
மன்றத்திற்கு போய் அனுமதிகிடைத்து ஒருவேளை உறுதி செய்யப்பட்டு விட்டால் அவளும் இளவரசியாகி
விடுவாள். பெரிய சொத்திற்கும் அதிபதியாகி விடுவாள்.
சவூதி அரேபியாவில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டது மன்னர் பஹத்தின் காலத்தில் தான். கட்டிடக் கலை
பெரிதாக வளர்ந்தது. அரசும் தனியாரும் பல துறைகளில் முதலீடு செய்து தொழில் வாய்ப்புகளைப்
பெருக்கியதால் பல்லாயிரக் கணக்கான வெளிநாட்டார் வேலை வாய்ப்பு பெற்றனர்.
சில முதலீடுகளுக்கு தான் தரகராக செயலாற்றியதாகவும், வர்த்தகர்களை அறிமுகப் படுத்தியதாகவும்
அதற்கெல்லாம் தனக்கு தரகு தரவில்லை, மனைவி என்ற அந்தஸ்தோடு அவை போய்விட்டன என்றும் ஜனன்
குறிப்பிடுகிறார். இவர் 1967 முதல் 1995 வரை சுமார் 28 வருடங்கள் மன்னர் பஹத்தோடு தொடர்பில்
இருந்திருக்கிறார் என்ற உண்மையை மறுக்க முடியாது.
இதற்கிடையில் ஜனன் மன்னரோடு தனக்கு இருந்த உறவு பற்றியும் அரச குடும்பம் பற்றிய பல தகவல்களை
உள்ளடக்கி "The King and I" 'அரசனும் நானும்' என்று ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.
பல பதிப்பாளர்கள் அதற்கு விலை பேசும் நேரத்தில் ஹாலிஊட் தயாரிப்பாளர்களும் அதனைப் படமாக்க ஆர்வம்
காட்டுகிறார்கள்.
இது பற்றி ஜனன் கூறும்போது "12 வருடங்கள் நான் வழக்கோடு போராடினேன். இப்போது தான் சற்று நிம்மதி
கிடைத்துள்ளது. இளவரசர் அப்துல் அசீஸ் தன் நிலையை இப்போது புரிவார் என்று நினைக்கிறேன். அவர்
மேலும் வழக்கை நீடிப்பாராரானால் விபரங்கள் அனைத்தும் புத்தகமாகவும் திரைப்படமாகவும் வருவது தவிர்க்க
முடியாததாகிவிடும்."
"அது அரச குடும்பத்தை சங்கடப் படுத்தும் என்பது நான் சொல்லி அவர்கள் அறியவேண்டியதில்லை. நான்
பொறுக்கிறேன். மன்னர் அப்துல்லா நல்லவர். அவர் நல்ல முடிவு தருவார் என்று நம்புகிறேன். இல்லாவிடில்
நான் பிரிட்டிஷ் மகா ராணியை அணுகி எனக்கு நீதி பெற்றுத் தரும்படிக் கேட்பேன்" என்கிறார்.
இது முதலில் புத்தகமாக ஆங்கிலம், அறபி, ஜப்பானிய மொழிகளில் வெளி வரவும் அதனைத் தொடர்ந்து
திரைப்படமாக வரவும் பேச்சு வார்த்தைகள் நடக்கின்றன. திரைப்படமாக வந்தால் உலகின் பட்டி தொட்டி
எல்லாம் இந்த கதை சென்றடையும். அரச குடும்பத்தின் செல்வாக்கிற்கு இது இழுக்கு தரும். அதனை இளவரசர்
தவிர்ப்பாரா - தனது நாணயத்தைக் காப்பாரா, இல்லை, ஆனது ஆகட்டும் போனது போகட்டும் என்று
விட்டுவிடுவாரா என்பதைப் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
"என்ன £12 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகள்? அது என்ன பெரிய பணமா? அவர்களின் குடும்பத்தின் ஒரு வார
துணி சலவை செய்வதற்கான செலவு. அது அவர்களின் பணமும் அல்ல, என் உழைப்பிற்கான ஊதியம்." இப்படிச்
சொல்கிறார், தன்னை மறைந்த சவூதி அரேபியாவின் மன்னர் பஹத் பின் அப்துல் அசீஸ் அல் சவூத்தின்
இரண்டாவது மனைவி என்று கூறும் லண்டனில் வசிக்கும் ஜனன் ஜோர்ஜ் ஹர்ப்.
ஜனன் கதையல்ல நிஜம்.
(முற்றும்) |