அது ஜூன் மாதம் 16ம் திகதி. இடம், பேருவளை அல் ஹுமெய்சரா மகளிர் கல்லுரி வளாகம்.
"இது என்ன பரம்பரை பரம்பரையாக எங்களைத் துரத்தும் தலைவிதியா? 1991ல் இது போன்று கலவரம் வந்தபோது நான் சிறுமியாக இருந்து அதனைச்
சந்தித்தேன். இன்று எனது இரு குழந்தைகளும் அதனைப் பார்க்கிறார்கள்" என்று குமுறினார் 26 வயது பாத்திமா பாஸ்ரல்.
"ஒவ்வொரு 20 வருடத்திற்கும் அழிந்த - எரிந்த வீட்டை மீண்டும் கட்டவேண்டும் என்று எங்கள் தலையில் எழுதி இருக்கா? இப்போ அவங்க
சொல்றாங்க நாங்கள் எங்க வீட்டிற்கு வரக்கூடாதாம். அப்படியானால் தெருவில் தான் தூங்கணுமா" ? தொடர்ந்தாள் அவள்.
"சில பெளத்த குருமார், முஸ்லிம்கள் உணவிற்காக மிருகங்களைக் கொல்லுகிறார்கள் என்று கத்துகிறார்கள். ஆனால் மனிதர்களைக் கொல்லலாமா?
வீடுகளை அழிப்பதும் மக்கள் வாழ்வாதாரத்தைக் குலைப்பதும் பாவம் இல்லையா" என்று பாஸ்ரல் கேட்பதற்கு இலங்கையில் பதில் இல்லை.
"ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அடிக்கடி சொல்லுவார் இலங்கையர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள், ஒரே குடும்பம் என்று" சலிப்புடன் கூறியது
சர்கேன் சித்தி. அவளது குடும்பம் அனைத்தையும் இழந்து விட்டது குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்கள் உட்பட.
"அவர்கள் எங்களிடம் சொல்லுகிறார்கள் இது அவர்கள் நாடாம். நாங்கள் இலங்கையர் இல்லையா? நாங்கள் என்ன ஆகாயத்தில் இருந்தா விழுந்தோம்? ஒரு முஸ்லிம் தவறு செய்திருந்தால் அவரைத்தான் தண்டிக்க வேண்டும். நாங்கள் என்ன செய்தோம்? நாங்கள் செய்த குற்றம் என்ன?" சித்தியின் கேள்வி நியாயமானது தான். பதில் எப்போது வரும்?
ஜனாதிபதி ஒரு யுத்தத்தை முடித்து விட்டார். முஸ்லிம் களுக்கு எதிரான இந்த யுத்தத்தையும் அவர் முடிக்கவேண்டும்" என்று சித்தி கூறும்போது
குறுக்கிட்ட பாத்திமா ஹஸ்னா " பொது பல சேனாவைத் தடைசெய்யுங்கள். ஏன் அவரால் முடியாது?" என்று சினம் பொங்க கேட்டாள். இதற்கு பதில்
சொல்லுவது யார்? பெண்கள் பொது பல சேனா அமைப்பையும் ஆளுங்கட்சி முஸ்லிம் அரசியல் வாதிகளையும் ஒரு பிடி பிடிக்கத்
தவறவில்லை.
இந்தப் பெண்கள் அனைவரும் வசதியாக வாழ்ந்தவர்கள். அன்று அகதிகளாக அடைக்கலம் பெற்று தங்கி இருந்தது பேருவளை அல் ஹுமெய்சரா
மகளிர் கல்லுரி வளாகத்தில். அளுத்கம வில் முந்திய தினம் துவங்கிய இனக்கலவரம் பேருவளை பகுதியையும் தொட்டதும் அன்றிரவு மக்கள்
ஜாமியா நளீமியா பல்கலை கழக வளாகத்தில் தஞ்சமடைந்தனர். காலையில் அங்கு பாதுகாப்பு குறைவாக இருப்பதை எண்ணி அவர்கள் இங்கு இடம்
மாறினர்.
மூன்று நாட்களில் 267 குடும்பங்கள் சுமார் 1016 நபர்கள் அங்கு சேர்ந்துவிட்டனர். இவர்களில் பலர் வீடிழந்தவர்கள் அல்லது வீட்டில் இருக்கப் பயந்தவர்கள் அல்லது வீட்டிற்குப் போகப் பயந்தவர்கள். அவர்களில் கர்ப்பிணி பெண்கள் 17, பால் குடிக்கும் குழந்தைகள் 56 மற்றும் கவலை அறியாது அங்கும் இங்கும் ஓடித்திரியும் 100 குழந்தைகளும் இருந்தனர்.
அக்குழந்தைகளுக்கு தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாது. மாறாக இந்த புதிய சூழல் முதலில் அவர்களுக்கு மகிழ்ச்சியாகவே
இருந்தது. நிறைய நண்பர்கள் நண்பிகள் ஒரே இடத்தில் இருந்ததால் விளையாட்டுகளுக்கும் ஆரவாரத்திற்கும் பஞ்சமில்லை. சிலர் ஊஞ்சலிலேயே
நேரத்தைப் போக்கினர். தங்கள் தாய் மார்களின் முகங்கள் ஏன் இப்படி இறுகிப்போய் இருக்கின்றன, ஏன் சிலர் சிலைபோல் ஒரே இடத்திலேயே
இருக்கிறார்கள் என்றெல்லாம் எண்ணிப்பார்க்க அவர்களுக்கு நேரமில்லை.
அல் ஹுமெய்சரா விற்கு சற்று தூரத்தில் முஸ்லிம் ஒருவரின் பேக்கரி சூறையாடப்பட்டு தின்பண்டங்கள் வீதியில் சிதறிக்கிடந்தன. வெண்ணை உருகி
வழிந்து ஓடியது. தெரு நாய்கள் தங்களுக்கு விருப்பமானவைகளை தேடித் தின்றன. கடை எரியூட்டப்படவில்லை. காரணம் அடுத்து இருந்த இரண்டு
கடைகளும் பெரும்பான்மை இனத்தவருடையது. நோக்கம் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை நசுக்குவதே.
67 வயது N. M. நஜீம் மாணிக்க கல் பட்டை தீட்டும் தொழில் செய்பவர். இவரது கடையும் சூறையாடப்பட்டுவிட்டது. பட்டை தீட்டபடவேண்டிய
கற்கள் சிதறிக் கிடந்தன. ஒரு தொகுதியைக் காணவில்லை. 'மீன் தொட்டியை மட்டும் அவர்கள் விட்டு சென்றார்கள்' என்று நொந்த உள்ளத்தோடு
மீன் தொட்டியைக் காட்டிக் கூறும் அவரும் 1991கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்தான்.
"அப்போது 61 வீடுகள் எரிக்கப்பட்டன. நட்ட ஈடு யாரும் தரவில்லை - பெறவில்லை" என்ற அவர் படிப்படியாக முன்னேறினார். 23 வருடங்களுக்கு
பின்பு மீண்டும் அவர் ஒன்றும் இல்லாதவராகிவிட்டார். மறுபடியும் படிப் படியாக ஏற அவர் கால்களுக்கு வலு இருக்கிறதா? இல்லை அவர் வயது தான்
ஒத்துழைக்குமா? சந்தேகமே.
இனக்கலவரம் இம்மக்களுக்கு புதிதல்ல. ஆனால் இந்த அளவிற்கு பாரிய சேதத்தை உண்டாக்குமளவு எதுவும் நடக்கவில்லை. அதனால் தான்
அமைச்சரவைக் கூட்டத்தில் ஒரு முஸ்லிம் அமைச்சர் "1983ல் தமிழருக்கு எதிராக நடந்த கலவரத்திற்குப் பிறகு அது போன்ற ஒன்று உங்கள்
ஆட்சியிலேயே நடந்துள்ளது. அதற்கு நீங்களே பொறுப்பு ஏற்கவேண்டும்" என்று ஜனாதிபதியைப் பார்த்துக் குமுற, இவருவரும் வாக்குவாதத்தில் ஈடு
பட்டார்கள்.
மூன்று பகுதியிலும் சிங்கள கிராமங்கள், மறுபுறத்தில் களனி கங்கை ஆறு என்று இம்மக்கள் சூழப்பட்டவர்கள். தான் உண்டு தன் வேலையுண்டு
என்று செயல்படும் இவர்கள் நாட்டைப் பிரித்துக் கேட்கவில்லை. வீதியில் டயர் எரித்து ஆர்பாட்டம் செய்யவில்லை, போக்குவரத்தைத் தடை
செய்யவும் இல்லை. பாத்திமா பாஸ்ரல் கேட்பதுபோல் பின்பு ஏன் இந்த தலைவிதி?
மறைந்த கொடைவள்ளல், பரோபகாரி பேருவளை நளீம் ஹாஜியார் இன்று இருந்திருந்தால் தன் பகுதி மக்களுக்கு நேர்ந்த அவலத்திற்காக இரத்தக் கண்ணீர் வடித்திருப்பார். தேசியவாதியான அவர் சிங்கள மக்களாலும் பெரிதும் மதிக்கப்பட்டவர்.
தன் சொந்த பணத்தில் நளீமியா பல்கலை கழகத்தை உண்டாக்கி ஆயிரக்கணக்கான இளைஞர்க்கு கல்விக் கண் திறந்தவர். இன்று அறபுலகில் டை
கட்டி குளிர் சாதன அறையில் இருந்து பணியாற்றும் இலங்கை முஸ்லிம் இளைஞர்களில் பலர் நளீமியாவில் இருந்து வந்தவர்கள்தான்.
மாணிக்க கல் வர்த்தகத்தில் முடி சூடா மன்னனாகத் திகழ்ந்த அவர், 1975ல் அன்றைய அரசு அண்ணிய செலவாணித் தட்டுப்பாட்டில் தவித்தபோது,
மாணிக்க கல் ஏற்றுமதி மூலம் தன் கணக்கில் இருந்த CRA என்ற Convertible Currency Account அண்ணிய செலவாணியை அரசிற்கு
நன்கொடையாகக் கொடுத்தவர்.
காயல் பட்டணத்து மக்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர். L. K. பாடசாலையில் இருக்கும் நளீம் ஹாஜியார் கட்டிடம் அதற்க்குச் சான்று.
நினைத்த நேரம் 'உம்ரா' செல்லும் பழக்கம் கொண்ட அவர் அறபு நாட்டு அதிபர்களுக்கும் அறிமுகமானவர். அவர்களின் அன்பளிப்பும் இப்பல்கலை
கழகத்திற்கும் நிறைய உண்டு. குறிப்பாக சவுதியின் ஒத்துழைப்பு அதிகம். அவர் மறைவு இம்மக்களுக்கு பேரிழப்பு.
தர்கா டவுன் இப்பகுதியில் கல்வியில் முன்னேற்றமடைந்த ஊர். இங்கு இருக்கும் பெண்கள் ஆசிரிய பயிற்சி கலாசாலையால் உள்ளூர் வெளியூர்
முஸ்லிம் பெண்கள் பலர் நாடெங்கும் ஆசிரியைகளாகப் பணியாற்றுகிறார்கள். ஆண்கள் அதிகமாக வியாபாரம், சுயதொழில் என்று வியர்வை சிந்திய
நேற்றைய நடை பாதை வியாபாரிகள், இன்று அடுக்கு மாடி கட்டிடத்தில் கடை நடத்துகிறார்கள்.
இன்றைய கலவரத்தின் பின்னணி என்ன?
தமிழ் மொழியில் எத்தனையோ ஆமைகள் உண்டு. அதில் ஓர் ஆமை இவர்களைச் சுற்றியுள்ள மக்களின் மனதில் புகுந்து குடைகிறது. உழைத்து,
சேமித்து உயரும் மக்களைப் பார்த்து - உழைத்து, குடித்து, சூதாடி விரயமடிக்கும் வீணர்களின் உள்ளத்து பொறாமையே இதன் பின்னணி.
இது நடப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே இப்படி ஒரு தாக்குதல் முஸ்லிம்கள் மீது நடக்கலாம் என்ற செய்தி, அதிலும் குறிப்பாக
ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரான அவரது சகோதரரும் நாட்டில் இல்லாதபோது அது நடக்கலாம் என்ற செய்தி உலா வந்தது. அது போல் அன்று
அவர்கள் இருவரும் இல்லை.
ஏப்ரல் 27ம் திகதி அளுத்கம வில் உள்ள அஹ்மத் கானின் வணிக வளாகம் அதிகாலை 3.30 அளவில் எரியூட்டப்பட்டது. அஹ்மத் கான்
நடைபாதயில் - இருந்து - நடந்து - இன்று உயர்ந்து நிற்கும் வர்த்தகர். இருபால் ஊழியர் இருவரின் "பேரன்பு" சமுக சர்ச்சையைக் கொண்டுவர அது
காவல் நிலையம் வரை சென்று சுமுகமாகத் தீர்க்கப்பட்டது.
ஆனால் ஆமை புகுந்த சில வர்த்தக உள்ளங்களால் அதனை ஜீரணிக்க முடியவில்லை. ஆகவே கானின கடை - கட்டிடம் பலியாக்கப் பட்டது.
இதற்கான திட்டம் அருகில் உள்ள பெளத்த ஆலயத்தில் தீட்டப்பட்டது என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். ஊழியர்கள் "மோக வலையில்" வீழ்ந்ததற்கு
எஜமான் எப்படி பொறுப்பாளியாவார்? இச் சம்பவத்திற்குப் பிறகு இப்பகுதியில் நிலைமை சூடாகவே இருந்தது.
சூடாக இருந்த சூழலை கொழுந்து விட்டெரியச் செய்தது ஜூன் 12ல் தர்கா டவுன் மருத்துவ மனைக்கு பின்னால் நடந்த ஒரு சிறு சம்பவம். குறுகலான அந்த வீதியின் வளைவில் எதிர் எதிரே வந்த ஒரு வேன் ஓட்டுனரும் மோட்டார் பைக்கில் வந்த முஸ்லிம் இளைஞரும் வாய்த் தகராறில் ஈடுபட்டனர். வேனில் இருந்த பெளத்த மத குரு இருவரையும் சமாதானம் செய்து வைத்தார். அத்தோடு அது முடிந்தது.
பெளத்த குரு அருகில் உள்ள ஆலயத்தில் நடந்த ஒரு கூட்டத்திற்காக வந்தவர் ஆகவே அங்கு சென்ற அவர் அந்த சம்பவத்தை அங்குள்ளவர்களுக்கு
கூறினார். அங்குதான் வந்தது வினை. செய்தி திரிபு படுத்தப்பட ஆரம்பித்தது. சிலர் மதகுருவை, தான் தாக்கப்பட்டதாககக் கூறி காவல் துறையிடம்
புகார் கொடுக்கும்படி வற்புறுத்த, முதலில் மறுத்த அவர் பின்பு மசிந்ததாக முஸ்லிம் தரப்பு கூறுகிறது.
புகாரைத் தொடர்ந்து அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் கொண்டு வரப்பட்டார். மக்கள் காவல் நிலையம் முன்பு கூடி ஆர்ப்பாட்டம்
செய்தனர். அத்துமீறி உள்ளே நுழைந்த சிலர் அதிகாரி முன்பாகவே அந்த இளைஞனை துவம்சம் செய்ததாகச் சொல்லப்படுகிறது.
பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டது. ஓர் ஆங்கில தினசரி பத்திரிகை தனது இணைய தளத்தில் 'ஒருவர் தாக்கப்பட்டதால் பதட்டமான சூழல் இங்கு
உருவாகியுள்ளது. மக்கள் வீதியில் ஆர்பாட்டம் செய்வதால் நெடுஞ்சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சமாதானம் செய்ய வந்த
அமைச்சர்களின் வாகனங்களும் கல்வீச்சிற்கு ஆளாகின' என்று செய்தி வெளியிட்டது.
Tense situ in Aluthgama
http://www.dailymirror.lk/news/48354-tense-situ-in-aluthgama.html
இணைய தளம், ஒருவர் என்று குறிப்பிட்டாலும் இதில் கருத்து பதிவு செய்தவர்கள் பெளத்த மத குரு என்றே குறிப்பிட்டு கருத்து பதிவு
செய்தனர்.
தாக்கப்பட்டவர் காயத்திற்கு மருந்து போட வேண்டாமா? மதகுரு அளுத்கம மருத்தவ மனைக்கு எடுத்து செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த
டாக்டர் தமயந்தி வீரசிங்க அவருக்குப் பிரச்சினை ஏதுமில்லை என்று சொல்லி அவரை அனுமதிக்க மறுத்துவிட்டதால் அவர் தர்கா டவுன் அரசு
மருத்துவ மனைக்கு சென்றார்.
அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர் இஸ்மா மஹ்பால் அதே காரணத்தைக் கூறி அவருக்கு சிகிச்சை தேவை இல்லை என்று கூறிவிட்டார். அடுத்து
நாகொட அரசு மருத்துவ மனையில் அரசியல் அழுத்தம் காரணமாக சேர்க்கப்பட்டதாகவும் அவரோடு அரசு ஆதரவு தீவிர பெளத்த கட்சி ஒன்றின்
உறுப்பினர் இருவர் நெடு நேரம் இருந்ததாகஉம் சொல்லுகிறார்கள்.
ஒரு பொய்யை உண்மை என நம்பியதால் சினம் கொண்டவர்கள், இத் தாக்குதலுக்கு எதிராக ஆர்பாட்டம் செய்ய வேண்டும் எனக் குமுறிக் கொண்டு
இருக்கையில் பொது பல சேனா தனது நாசகாரப்பணியை இரகசியமாக திட்டமிட்டு செயல் படத் துவங்கியது.
ஜூன் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அளுத்கமவில் பொதுக்கூட்டம் ஒன்றை அறிவித்தது. திடுக்கிட்ட முஸ்லிம் அரசியலாளர்கள் கூட்டத்திற்கு
அனுமதி கொடுக்க வேண்டாம், அது வன்முறைக்கு இட்டு செல்லும் என்று காவல் துறைத் தலைவரை (IGP) வேண்டினர். சில அமைச்சர்களிடமும்
முறையிட்டனர். முஸ்லிம் பொது மக்கள் பீதி அடையத் துவங்கிய செய்தி வரத் துவங்கியும் பாதுகாப்பு பிரச்சினை வராது என்று பிடிவாதமாககக் கூறி
கூட்டம் நடத்த பொது பல சேனா அனுமதிக்கப்பட்டது.
பின்பு நடந்தது என்ன? |