25/08/2014 அன்று இரவு 8.30க்கு தந்தி டிவி யின் 'ஆயுத எழுத்து' நிகழ்ச்சியின் தலைப்பு இது. இதில் நான்கு பேர் கலந்து கொண்டார்கள். காங்கிரஸ் கட்சி சார்பில் 'அமெரிக்கா' நாராயணன், ம.தி.மு.க சார்பில் அந்தோணி தாஸ், பா.ஜ.க சார்பில் கே.டி. ராகவன், இந்திய தேசிய லீக் சார்பில் நிஜாமுதீனும் கலந்துரையாடினர்.
நிகழ்ச்சியில் நிஜாமுதீன் அறிமுகப்படுத்தப்படும் போது இரு கரம் கூப்பி அவர் வணக்கம் தெரிவித்தது நமக்கு பார்ப்தற்கு ஒரு மாதிரியாக இருந்தது. அது நிற்க, ISIS இயக்கம் போராளியா இல்லை பயங்கரவாதியா என்ற கேள்விக்கு நிஜாமுதீனின் வாதம் மிகவும் பரிதாபமாக இருந்தது எனலாம். பயங்கரவாதிகள் அல்ல, போராளிகளே என்ற தனது கருத்தை அவரால் சரியாகச் சொல்லமுடியவில்லை.
சம்பந்தம் இல்லாது எதை எதையோ பேசுகிறார். சாப்டீங்களா என்று கேட்டால் நாளைக்கு ஊருக்குப் போகிறேன் என்கிறார். இந்த மேடையில் இவர்தான் இஸ்லாமிய சமூகத்தைப் பிரதி படுத்துகிறார். அவரது தடுமாற்றம் நமக்கு வெட்கமாக இருக்கிறது. பிறர் இவரை ஒரு கேலிப் பொருளாகவும் எடுத்திருக்கலாம். இவர் கருத்தைத்தான் மற்றவர்கள் இஸ்லாமியரின் கருத்து என்று எண்ணினால் அது நமக்குப் பெருமை தராது.
தமிழ் தொலைக்காட்சி விவாதங்கள் பல குழாயடி சண்டைபோல் அருவருப்பாகவே இருக்கின்றன. தரமில்லை. ஒரே நேரத்தில் பலர் கத்துகிறார்கள். சில பேச்சாளர்கள் சரியான பதில் சொல்வதை விட்டு விட்டு அடுக்கு மொழியில் பேசி நேரத்தைப் போக்கிவிடுகின்றனர். சிலர் அரசியல் நிர்பந்தத்தின் காரணமாக கறுப்பை வெள்ளை என்று பிடிவாதமாகக் கூறுகிறார்கள்.
அவர்கள் அங்கு தோன்றுவது அவர்களுடைய கருத்தை பார்வையாளர்களிடம் சொல்வதற்காகவே. ஆனால் அவர்கள் ஒரே நேரத்தில் சாதக பாதகமான கருத்தை குறிக்கீடு செய்து கத்திக் கொண்டு இருந்தால் மக்களுக்கு எதுவுமே தெளிவாகக் கேட்காது - புரியாது.
இந்தியாவின் ஆங்கில தொலை காட்சி ஊடகங்கள் இதற்கு சற்றும் சளைத்தன அல்ல. அங்கு நிகழ்ச்சி நடத்துபவரே ஏலக்கடையில் ஏலம் விடுபவர் போல உணர்ச்சி வயப்பட்டு கத்துவார். மகா தவறு. மேல் நாட்டு ஆங்கில ஊடகங்களைப் பார்த்தாவது இவர்கள் திருந்துவது இல்லை. இது இந்தியன் ஸ்டைல் போலும்.
ஆகவே இவர்கள் மூலம் நாம் ஏதாவது அறிந்தோம் என்று இல்லை. மாறாக இவர்களை விட நமக்கு அதிகம் தெரியும் என்பது போலவே நம் மனம் சொல்லுகிறது.
பாவனையாளர் உரிமை என்று சொல்வார்கள் அல்லவா அதுபோல் நிகழ்ச்சி பார்ப்பவருக்கும் அந்நிகழ்ச்சியை தெளிவாகக் கேட்கவேண்டும் - பார்க்கவேண்டும் என்ற உரிமை உண்டு. அவர்கள் தங்கள் நேரத்தை அங்கு செலவழிக்கிறார்கள். அதனை வீணடிக்க நிகழ்ச்சியில் கலப்பவர்க்கு உரிமை இல்லை.
தொலைக் காட்சி நிறுவனம் நாம் திருப்தி படுமளவு தனது நிகழ்ச்சியைத் தரமாகத் தரவில்லை என்றால் அவர்கள் மீதும் அதில் கலந்து கொண்டவர் மீதும் வழக்கு தொடரலாம். காரணம் அவர்கள் நமக்கு அதனை இலவசமாகத் தரவில்லை. நாம் பணம் கட்டுகிறோம். காசு கொடுத்து வாங்கும் எந்தப் பொருளும் தரமில்லை என்றால் வழக்கு போடலாம். ஆனால் அதெல்லாம் இப்பகுதி நாடுகள் அறியாத விடயங்கள்.
'ஆயுத எழுத்து' நிகழ்ச்சியை நெறிப்படுத்தும் ஹரிஹரன் தனது முகஉரையில், சமீபத்தில் பா.ஜ.க தலைவி தமிழிசை சௌந்தரராஜனிடம் விடுதலைப் புலிகள் போராளிகளா இல்லை தீவிரவாதிகளா என்று கேட்டபோது, அவர்கள் தமிழருக்காகப் போராடியதால் போராளிகள் என்றும் ராஜீவ் கொலைக்குப்பிறகு அவர்களுக்கு தீவிரவாதி பெயரும் வந்துவிட்டது என்று, இங்கும் இல்லாது அங்கும் இல்லாது பதில் சொன்னதால் இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறோம் என்றார்.
இத்தகைய கருத்து மயக்கம் பல போராளி இயக்கங்களுக்கு உண்டு என்ற ஹரிஹரன், ISIS, விடுதலைப் புலிகள், ஹமாஸ் போன்ற வேறு சில இயக்கங்களையும் எப்படி அடையாளப் படுத்துவது என்ற பிரச்சினை உண்டு. அது ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது என்றார்.
ஆஷ் துறையை சுட்ட வாஞ்சிநாதனை சுதந்திரப் போராட்ட வீரன் என்று இந்தியர் அழைத்தாலும் பிரிட்டிஷ் அரசு தீவிரவாதி என்றே முத்திரை குத்தி இருந்தது என்று குறிப்பிட்ட அவர், அப்பாவி பொது மக்களைக் கொல்லுவது, ஊடகவியலாளர்களைக் கழுத்தறுத்து கானொளியில் காட்டுவது போன்ற பயங்கர செயல்களைச் செய்யும் ISIS, போராளியா இல்லை தீவிரவாதியா என்று நிஜாமுதீனிடம் கேட்டதற்குத்தான் அவர் சொதப்பினார். அமெரிக்காவை இழுத்து ஏதேதோ பொருத்தமில்லாது பேசினார்.
வன்முறையில் இறங்கும் ஆயுதக் குழுக்களை தீவிரவாதிகள் என்று அழைப்பதைவிட பயங்கரவாதிகள் என்ற சொல்லே பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து. அது போக, போராளியா பயங்கரவாதியா கேள்விக்கு வருவோம். வண்ணாத்திப் பூச்சியின் பரிணாம வளர்ச்சி போன்றதுதான் இதுவும். அதன் பிறப்பை பட்டுப் புழு என்கிறோம். வளர்ச்சியை வண்ணாத்தி என்கிறோம்.
அடித்தால் வாங்கிக்கொள், திருப்பி அடிக்காதே என்ற அஹிம்சை முறையில் போராடியது காந்தி மட்டுமே. ஆயுதக் கலாச்சாரம் மிகுந்த இவ்வுலகில் இன்று அது சாத்தியமில்லை. காலப் போக்கில் ஒரு போராளி தனது பரிணாம வளர்ச்சியில் பயங்கரவாதியாகவே மாறி விடுகின்றான்.
'ஆயுத எழுத்தில்' தந்தியின் டெல்லி நிருபர் சலீம், 'தனக்கு தீங்கு விளைவிக்காத அப்பாவி பொதுமக்களைத் தாக்கும் ஆயுதக் குழுக்களை இந்திய காவல் துறையும் அமெரிக்க காவல் துறையும் பயங்கரவாதிகள் என்று முத்திரை இடுகின்றன' என்றார்.
இது போர் தர்ம முறைக்கு அப்பாற்பட்டது ஆகவே இது சரியே. நிஜாமுதீன் தடுமாறிய இந்த இடத்தில் சலீம் சரி செய்தார் என்றே சொல்லலாம்.
விடுதலைப் புலிகள் ராஜீவ் காந்தி என்ற ஒரே ஒரு தனி மனிதரைக் கொன்றார்கள் என்பதற்காக அவர்களுக்கு தீவிரவாதி பெயரும் வந்துவிட்டது என்று தமிழிசை சௌந்தரராஜன் சொன்னால் அவருக்கு அந்த இயக்கத்தின் சரியான வரலாறு தெரியவில்லை என்றே பொருள். உண்மையில் ஈழப் பிரச்சினைக்கு குரல் கொடுக்கும் பலருக்கு இலங்கைத் தமிழர்களின் பூர்வீகம் தெரியாது. (கலைஞர் விதி விலக்கு).
சில வருடங்களுக்கு முன்னால் பிரபல நடிகர் விஜேயின் பெற்றோர் இலங்கை வந்தனர். தமிழ் சங்கத்தில் நடந்த வரவேற்ப்பு கூட்டத்தில் நானும் பேசினேன். இறுதியாக சந்திரசேகர் பேசினார். "நீங்கள் எல்லாம் தமிழ்நாட்டின் புதுக் கோட்டையிலோ தஞ்சாவூரில் இருந்தோ வந்தவர்களாக இருக்கலாம்" என்றார். அங்கிருந்தவர்கள் யாழ்பாணத்தவர்கள். அதிர்ச்சி அடைந்த பலர் திரும்பி என் முகத்தைப் பார்த்தனர்.
விஜேயின் மனைவி சங்கீதா லண்டனில் வசித்த யாழ்ப்பாண குடும்பத்தில் இருந்து வந்தவர். ஒரு பெண்ணின் வழிமுறையே அறியாமல்தான் அவர் பெண் எடுத்தாரா? மருமகளின் வரலாறு இவருக்கே தெரியவில்லை என்றால், தெருவில் கொடிபிடித்து கத்தும் சாதாரண தொண்டனுக்கு எப்படி பிரபாகரனின் வரலாறு தெரியும்?
பிரபாகரன் தமிழர்களுக்காகப் போராடினார். அது உண்மை. ஆனால் தன் சகோதர தமிழர்களைக் கொன்றார். பிற ஆயுதக் குழுக்களின் தலைவர்களை இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், வெளிநாட்டிலும் கொன்றார். நீலன் திருச்செல்வம் போன்ற பல ஜனநாயக வழியில் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண முயன்ற அறிவுசால் பெருமக்களைக் கொன்றார். தான் சார்ந்திருந்த கட்சியின் தலைவர் அமிர்தலிங்கத்தைக் கொன்றார்.
பெளத்த ஆலயங்களைத் தாக்கினார். சாமானியர் பயணம் செய்த பஸ் வண்டிக்கு குண்டு வைத்தார்.
அப்பாவி முஸ்லிம்களைக் கொன்றார். காத்தான்குடி பள்ளிவாயிலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த வர்களைக் கொன்றார். இங்கு ஒரு சிறுவனின் வாயில் துப்பாக்கியை வைத்து சுட்ட விடுதலைப் புலியை மறக்க முடியுமா? பட்டியல் கன்னியாகுமரியில் இருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை நீளும்.
ISIS இயக்கத்தின் செயல்பாடுகளில் இருந்து எப்படி விடுதலைப் புலிகள் வேறுபட்டது? ISIS இயக்கத்தை பயங்கரவாதிகள் எனப் பெயர் சூட்ட விரும்பும் ஹரிஹரன் விடுதலைப் புலிகளை ஏன் அப்படி அழைக்கவில்லை? பிரபாகரனைத் தமிழர் தலைவர் என்கிறார். யார் அவரைத் தலைவனாகத் தேர்ந்தெடுத்தனர்?
பேச்சு வார்த்தைக்கு அவரைத்தானே அழைத்தார்கள் என்று சொல்கிறார். வேறு யார் இருந்தார்கள்? எல்லோரையும் தான் இவர் காலி பண்ணி விட்டாரே - இல்லை அடக்கி விட்டாரே. துப்பாக்கியால் அச்சமூட்டும் ஆயுதக் குழுவின் தலைவனை மக்கள் எதிர்க்காவிட்டால் அவன் தலைவனாகிவிடுவானா?
ஹரிஹரன் போன்ற இளைஞர்கள் இது போன்ற வரலாறுகளை புத்தகங்கள் மூலம் அறிய முடியாது. கண்டும் கேட்டும் அனுபவித்து இருந்தால்தான் சரியான கருத்தை எடுக்க முடியும்.
மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் ISIS செயல்பாடு இஸ்லாம் மதச் சட்டத்துக்கு எதிரானது என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "ISIS நடவடிக்கைகள், இறைதூதர் முகமது நபியின் படிப்பினைகளுக்கு எதிராக இருக்கின்றன. இது இஸ்லாம் மதச்சட்டத்துக்கு எதிரானது. சிரியாவிலும், இராக்கிலும் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் எங்கள் மத நம்பிக்கை, கலாச்சாரம், அடிப்படை மனிதநேயத்திற்கு எதிராக அமைந்துள்ளன" என்று அவர் கூறியுள்ளார்.
ISISஸை ஒடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், சிரியா, இராக்கை அடுத்து, அவர்களின் இலக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா தான் என்று சவுதி மன்னர் அப்துல்லா எச்சரித்துள்ளதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.
ஆயுதத்தைக் கையில் வைத்திருக்கும் போராளிக்குழுக்கள் அனைத்துமே பயங்கரவாதிகள் தான். தங்கள் குறிக்கோளுக்காக சொந்த பெற்றோரையும் கொல்ல அவர்கள் தயங்க மாட்டார்கள். அதே நேரத்தில் திருடனைக் கொல்லப்போகிறேன் என்று சொல்லி, அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதை அறிந்தும் அலட்சியப் படுத்தும் அரசுகளும் பயங்கரவாதிகளே!
|