தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட சிங்கித்துறை மீனவ கிராமத்தில் ஓலைக் குடிசைகளில் வசிக்கும் இந்த ஏழை மக்களின் அவல நிலையைக் கேளீர்.
பெரும்பான்மையாக குடிசைகளில் வாழும் இந்த மக்கள் கூலிக்கு மீன் பிடிக்கச் செல்கிறவர்கள். இவர்களுக்குச் சொந்தமாகப் படகு ஏதும் கிடையாது. கோடை காலங்களில் மீன்பிடித் தொழில் இல்லாத நேரங்களில் குடும்ப உறுப்பினர்களோ அல்லது குடும்பத் தலைவர்களோ வேறு ஊர்களுக்குச் (கேரளா, தூத்துக்குடி, மங்களூர்) சென்று தங்கள் தொழிலான மீன்பிடித் தொழிலைச் செய்கிறார்கள்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்தக் கிராமத்தில் இருந்துகொண்டு, தங்கள் குடும்ப உறுப்பினர்கள் வெளியூர்களில் இருந்து தரும் பணத்தில் தங்கள் ஜீவனத்தை சரி செய்கிறார்கள். கோடை காலங்களில் கூட இவர்கள் அச்சத்துடன்தான் குடிசைகளில் வசிக்கிறார்கள். காரணம், இவர்கள் குடிசைகளைச் சுற்றியுள்ள காய்ந்த கருவேல மரங்கள், அதற்குள் இருக்கும் காய்ந்த புற்கள். இதிலிருந்து விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் வந்து விடுகின்றன. சில சமூக விரோதிகள் இந்தப் புற்களில் தீயிட்டுச் சென்று விடுகிறார்கள். இந்தத் தீ பரவி, குடிசைகளை எரித்து விடுமோ என்ற பயம்தான், இப்படிப்பட்ட நாசச் செயல்கள் நடந்து, தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
இதன் பிறகு மழைக்காலம். மழை வருவதற்கு முன்னாள் இவர்கள் தங்கள் குடிசைகளைப் புதுப்பித்தோ அல்லது பழுது பார்த்தோ வைத்து விடுகிறார்கள். இதற்காக சுமார் ஏழாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை செலவு செய்கிறார்கள். மழை அதிகமாக வரும் நாட்களில் தங்கள் வீட்டிற்குள்ளேயே நீரூற்று எடுத்துவிடுகிறது. ரோட்டில் வழிந்தோடும் நீரும் வீட்டிற்குள் வந்து விடுகிறது. இவர்கள் குழந்தைகளை வைத்துக்கொண்டு, உட்காரக் கூட இடமில்லாமல் தங்கள் வீட்டிற்குள்ளே பரண் என்னும் கட்டிலைக் கட்டி, அதிலே அமர்ந்துகொள்கிறார்கள். எரிவாயு இணைப்பு இல்லாத சிலர் - விறகெல்லாம் நனைந்து, சமையல் கூட செய்ய இயலாமல் பட்டினி கிடக்கிறார்கள்.
இவர்கள் செய்யும் தொழில், இந்த மழைக்காலங்களில் இயற்கைச் சீற்றங்களால் பெரிதும் பாதிக்கப்படுகிறது. கடலில் போட்டிருக்கும் வலைகளைக் கூட எடுத்து வர இயலாமல் தவிக்கிறார்கள். இயற்கைச் சீற்றங்கள் முடிந்த பின் அதை எடுக்கச் சென்றால், கடலில் வலையே இல்லாமல் ஏமாற்றத்துடன் கரை திரும்புகிறார்கள். காரணம், இயற்கைச் சீற்றங்களாகிய காற்று, கடல் நீரோட்டத்தினால் வலைகள் அடித்துச் செல்லப்பட்டு விடுகின்றன.
இவை போன்ற காரணங்களால் இவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. மீண்டுமாக கடன்களை வாங்கி, வலைகளை தயார் செய்து, தொழிலுக்குச் செல்கிறார்கள்.
இப்படித்தான் இவர்களது வாழ்க்கை சென்றுகொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்களால் கனவில் மட்டுமே கான்கிரீட் வீடுகளை நினைக்க முடிகிறது. நிஜத்தில் கனவு நிறைவேறுமா...?
|