சுவர்கள் - வீட்டின் எல்லைகளாகவோ அல்லது பாதுகாப்பிற்காகவோ தேவைதான் என்றாலும், மனிதர்களுக்குள்ளே ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணம் காட்டி தனித்தனியே அல்லது கூட்டாக தங்களுக்கிடையே மனங்களில் சுவர்களை எழுப்பிக் கொண்டு வாழ்தல் தேவையா என்பது ஆழ்ந்த சிந்தனைக்கும் ஆய்வுக்கும் உரிய ஒன்றாகும்.
ஏதோ ஒரு அறியாமையில் அற்பக் காரணத்திற்காக
தத்தம் நெஞ்சத்திற்குள் நெடுஞ்சுவர்களை எழுப்பிக் கொண்டு,
இன்ப ஊற்றாக இருக்க வேண்டிய நமது உறவில்
ஈட்டியை பாய்ச்சிக் கொண்டு,
ஒருவருக்கொருவர் நெருங்காமல்
தொலைதூரத்தில் நின்றுக் கொண்டு,
அருகிலே எதிரும் புதிருமாக
அவரவர் முதுகை காட்டி கொண்டு,
மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல்,
ஏதோ ஒரு சூறாவளியில் சிக்கி கொண்டு,
வீட்டை சுற்றி கட்ட வேண்டிய சுவற்றை
உள்ளத்தைச் சுற்றி எழுப்பிக் கொண்டு,
சோகத்தின் சொந்தக்காரர்களாகி நிற்கின்றோமே.
நாம் - பல ஆண்டுகள் உயிருக்கு உயிராய் பழகிய நண்பர்கள் என்பது மறந்து விட்டதா? அல்லது மறக்கடிக்கப்பட்டதா?.
"எனக்காக உயிர் கொடுப்பான் என் தோழன் என்று பெருமிதப்பட்டு, பிரிக்கப்பட முடியாதவர்கள் நாங்கள்" - என மார்தட்டி நட்பை அடைமழையாய் பொழிந்தவர்களிடையே கூட திடீரென ஒரு சுவர் ஓசையின்றி கட்டப்பட்டு விட்டதே! அதுவும், இந்த குறுக்குச் சுவர், நமது பல ஆண்டுகால நட்பு என்பதையே பொய்யாய், பழங்கதையாய், கனவாய், மாற்றி விட்டதே. ‘கண்ணுக்கு தெரியாத, கருத்துக்கு’ மட்டுமே தெரியக் கூடிய இந்த சுவருக்கு இப்படி ஒரு சக்தியா? என்ன ஒரு ஆச்சரியம்!
நட்புரிமை பாராட்டும் நண்பர்களுக்கும், சகோதரர்களுக்கும் இடையே ஏற்படும் பிழைபட உணர்தல், கசப்புணர்வாக மாறி - "காரையும் சிமெண்டும் இல்லாமலேயே சித்தாளும் கொத்தாளும் கட்டாமலேயே" இந்த மனச்சுவர்கள் - மனைசுவர்களை விட வெகுவேகமாக எழும்பிவிட்டதே! என எண்ணும்போது நல்லோர் மனம் வேதனை கொள்கிறது.
கருத்து-வேறுபாடு என்பதற்கும், கருத்து-மாறுபாடு என்பதற்கும் உள்ள முக்கிய வித்தியாசம் என்ன என்பதையே நண்பர்கள் பலர் உணர்ந்து கொள்வதை விட்டு, நயத்தக்க நாகரீக முறையில் ஒன்று கூடி, தன்மையாகப் பேசி தீர்வை சிறப்பாக்கி கொள்ளலாமே.
சில மனிதர்களிடத்தில் "ஆசைக்கு முன் அறிவு வேலை செய்வதில்லையே?" அது போன்று, "படித்தவர்கள் எண்ணிக்கை பெருகிய அளவிற்கு பண்பாளர்களின் எண்ணிக்கை பெருகவில்லையே" - ஏன்? என்பதும் இது போன்ற சுவர்கள் தோன்ற காரணமாகி விடுகின்றதோ? மனிதன் என்பவன் பகுத்தறிவையும், மனித நேயத்தையும், மனிதாபிமானத்தையும், விட்டு கொடுத்து வாழும் நெறிமுறைகளையும் அடிப்படையாக கொண்டு இருப்பதால்தான் மற்ற உயிர்வாழ் பிராணிகளை விட உயர்ந்த, வாழ்வியலுக்கு உரியவனாகிறான்.
வீட்டின் ‘மூலையில் உள்ள குப்பைகளை வெளியே எறிவது போல நமது மூளையில் ஏற்படும் சில தரமில்லாத முடிவுகளை புறந்தள்ளி விடுவோமேயானால்’ அனைவரும் மகிழும்படியான ஒரு நல்ல தீர்வு "தானே" அமையும். "பிரச்சனைக்கு தீர்வை தேட வேண்டும் அல்லாது தீர்வையே பிரச்சனையாக்கினால்" ‘சிந்துபாத்’ தொடர் போன்று நீண்டு கொண்டே போகுமல்லவா?
உன்னுடனேயே நீ நட்பு கொள்வதும், மற்றோரிடம் அன்பு காட்டுதலும், பெருந்தன்மை, நியாயம் என்பவற்றை நடைமுறைப்படுத்தும் போதே சமுதாயம் உங்களை பின்தொடர வழிவகை செய்யும். "எதை உங்களுக்கு பிறர் செய்யக் கூடாது என நீங்கள் கருதுகிறீர்களோ, அந்த செயலை மற்றோருக்கு நீங்களும் செய்யாதிருப்பதே சிறந்த மனிதனின் செயல். ஆகவே, எது முறையான செயல்? என்பது எப்போதும் நமக்குள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டிய கேள்வியாகும். "ஊக்குவிக்க ஆள் இருந்தால் - கொண்டை ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்".
கசப்புணர்வு, சச்சரவு இவைகளற்ற ஒரு சமாதானமான அமைதி வாழ்க்கை அமைய, உயர்ந்த உன்னத உணர்வினை கொண்டவர்களாக, தொண்டு எண்ணமும், ஒற்றுமைக்கு உழைக்கும் - வானம் போன்ற பரந்த - மனம் உள்ளவர்களாக வாழ கற்றுக் கொண்டு வாழ்வோமேயானால், காலம் நம்மை சிறந்த மனிதர்கள் என்று மட்டுமல்லாது - வரலாற்று மனிதர்கள் என்றும் போற்றும்.
இப்போதோ, பின்னரோ அடுத்தவர் மனம் வருந்தும் விதமாக எந்த செயலையும் செய்வது முறையல்ல. தவறுகள் பின்னர் திருந்தினாலும் அல்லது திருத்தப்பட்டாலும் கூட, அந்த தவறுகளால் ஏற்பட்ட காயங்கள், தங்க தாம்பாளத்தில் விழுந்த கீறலாக நிரந்தரமான தழும்புகளை ஏற்படுத்தி விடும். எனவே, நன்கு சிந்தித்து, எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வை உருவாக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.
மனைச் சுவர்களை மண்ணோடு மண்ணாக்கி இடிப்பதைப் போன்று, இந்த மனச் சுவர்களையும் - நமது பாசத்தால், பண்பால், பழகும் நேசத்தால் இடித்தால், முன் போலவே ஊனாகி, உணர்வாகி உறவில் கலந்து, உயர்வது எப்படி என்று யோசியுங்கள்... மகிழ்ச்சி ஊற்று மறுபடியும் நமக்குள் பொங்கி வழிவது நிச்சயம்...
மறப்போம்.
மன்னிப்போம்.
மறுபடியும் இணைவதற்கு படைத்தவனிடம் பரிகாரம் தேடுவோமாக... |