அது ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 26, 2004ஆம் வருடம். நான் ரங்கூனின் Traders Hotelலில் தங்கி இருந்தேன். வழக்கம் போல் காலையில் மேல் மாடியில் இருக்கும் கணணி அறையில் நுழைந்தேன். வெளியே வந்த அந்த இந்தோனேசிய பெண்ணின் முகம் பேயறைந்ததுபோல் இருந்தது. முன்தினம் மாலை வரை என்னோடு நன்கு பேசிய அவர் எதுவும் பேசாமல் சென்றார்.
அவர் தனது குழந்தை + இந்திய முஸ்லிம் கணவரோடு சிங்கப்பூரில் இருந்து வந்திருந்தார். அத்துடன் இவர்களின் நண்பர்களான சிங்கப்பூரில் பணியாற்றும் இன்னொரு இந்திய ஹிந்து தம்பதிகளும் தங்கள் குழந்தையுடன் வந்திருந்தார்கள். முந்திய தினம் மாலையில் ஹோட்டலின் வரவேற்பு கூடத்தில் நான் இருக்கும்போது சந்தித்தேன். குழந்தைகளின் பொழுது போக்கிற்கு எங்கு செல்லலாம் என்று அவர்கள் கேட்டபோது பூங்காவிற்கு செல்லுமாறு வழி சொன்னேன்.
இப்போது அவர் விட்டு சென்ற கணணி மேசையிலேயே நான் அமர்ந்தேன். கணணி பக்கத்தை அவர் மூடவில்லை. அதில் அச்சே மாநிலத்தில் பூமி அதிர்ச்சியால் சுனாமி என்ற கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு பல்லாயிரக் கணக்கானவர்கள் இறந்து விட்டார்கள் என்று இருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதோ இயற்கை அழிவு என்று நினைத்து வருந்தியதோடு இலங்கையின் ஞாயிறு பத்திரிகைகளைப் படிக்கலானேன்.
அடுத்து தமிழக பத்திரிகைகளுக்குத் தாவியபோது சென்னை மெரினா கடற்கரை வீதி வெள்ளத்தில் இருப்பதையும் அதில் கார்கள் மிதப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அதனை வாசித்துக்கொண்டு இருக்கையில் யாரோ என் முதுகைத் தட்டுவதுபோல் இருந்தது. திரும்பிப் பார்த்தேன். ஒருவருமில்லை. பிரமை என்று நினைத்தேன். மீண்டும் அதுபோல் தட்டுவதாக உணர்ந்தேன்.
அதே நேரத்தில் கணணி மேசை அசைவது போல் தோன்றியது. தலை சுற்றியது. எனக்கு ஏதோ உடல் கோளாறு என்று நினைத்து, மருத்துவரிடம் செல்லவேண்டும் என்று நினைத்தபடி, உண்மையில் மேசைதான் அசைகிறதா என்று பார்ப்போமே என்று கைகள் இரண்டையும் மேசை மேல் வைத்து கூர்ந்து பார்த்தேன். ஆமாம் உண்மையில் மேசைதான் அசைந்தது.
அறையை விட்டு வெளியே வந்து, வரவேற்பு அறையில் இருந்த பெண்ணிடம், “ஏதோ வித்தியாசமாக இருக்குதில்லையா?” என்று நான் கேட்க, “ஆமாம் சார்” என்ற அவள் கீழே தொலைபேசியில் தொடர்புகொண்ட நேரத்தில் அந்த 21வது மாடி தளம் கப்பல் அசைவதுபோல் அசைவதைக் கண்ட நான் அது உடைந்து விழப்போகிறது என்று நினைத்து, இதோடு நானுட்பட இங்குள்ள அனைவரின் வாழ்வும் முடிந்துவிடும் என்று முடிவு கட்டி, ஒரு கணத்தில், இத்தனை காலம் எனக்கு வாழ்வு தந்த இறைவனுக்கு நன்றி சொல்லி எனது இறுதி நேரத்திற்கு மனதை தயார் படுத்திக் கொண்டேன். வேறு சிந்தனை ஏதும் வரவில்லை.
அதேநேரத்தில் கீழே இருந்து வந்த தகவலில், பூமி அதிர்ச்சி ரங்கூன் நகரத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் அனைவரையும் உடனடியாகத் தரையில் குப்புற படுக்கும்படியும் கேட்கவே எல்லோரும் அப்படியே செய்தோம். ஓரிரு நிமிடங்களில் கட்டிடம் அசைவது நின்றதும் எல்லோரையும் கீழே வரும்படி அழைத்தார்கள். கீழே சென்றோம்.
அது ஒரு வித்தியாசமான காட்சி. ஏதோ பாடசாலையில் மாறுவேட போட்டிக்கு உடை அணிவதுபோல் ஒவ்வொருவரும் விதம் விதமான ஆடையில் இருந்தனர். சில பெண்களின் நிலை சங்கடமாக இருந்தது. தூக்கத்தில் இருந்தவர்கள் அப்படியே விழுந்தடித்து ஓடி வந்துள்ளார்கள். உயிர் பெரிதல்லவா?
எனது அறைக்குச் சென்ற நான் தொலைக்காட்சியில் சுனாமியின் கோரத் தாண்டவத்தையும் இந்தோனேசியா, பர்மா, தாய்லாந்து, மலேசியா, இந்தியா, பங்களாதேஷ், மாலத்தீவு, இலங்கை நாடுகளில் அது ஏற்படுத்திய நாசத்தையும் பார்த்து அதிர்ந்து போனேன்.
அன்று முழுக்க கொழும்பிற்கு தொலைபேசி தொடர்பு கிடைக்காததால் எனக்கு என்ன முடிவு எடுப்பது என்று அறியாது இருந்தேன். நள்ளிரவு எனது மனைவியின் தொலைபேசி அழைப்பு வந்தது. தனியே இருந்த அவர் மிகவும் குழம்பிப் போயிருந்தார்.ஆகவே நான் உடனடியாக கொழும்பு திரும்ப முடிவெடுத்தேன்.
Thai Airways காலை விமானத்தில் பேங்காக் செல்ல ஆசனம் கேட்டேன். பலர் வெளியேறிக்கொண்டு இருந்தார்கள். Business Class டிக்கெட் வைத்திருந்ததால் எனக்கு சரி என்றார்கள். ஆனால் நகரின் அசாதாரண சூழலால் எனக்கு உணவு எதுவும் தர வசதியில்லை என்றார்கள். சம்மதித்தேன்.
பகல் 12 மணிக்கு பேங்காக் விமான நிலையம் சென்ற நான் இரவு 8 மணி வரை காத்திருந்தேன். நான் குழந்தைப் பருவத்தில் இருந்தே விமானத்தில் பறப்பவன். எனது வாழ்நாளில் எந்த விமான நிலையத்திலும் இவ்வளவு நேரம் காத்திருந்ததில்லை. பெரும்பாலும் கடைசி நபர் பட்டியலில்தான் பெயர் இருக்கும்.
5 மணி அளவில் எனக்கொரு அதிர்ச்சி தகவல் சொன்னார்கள். ஸ்ரீ லங்கன் விமானத்தில் 20 Business Class ஆசனங்கள்தான் உண்டு. ஜப்பானில் இருந்து வரும் 25 பேர் கொண்ட நீர்மூழ்கி குழுவினருக்கு அதனைக் கொடுக்க இருப்பதாகவும் எனக்கு Economyயில் கூட இடம் கஷ்டமாக இருப்பதாகவும் பொறுத்துச் சொல்வதாகவும் சொன்னார்கள். மிகவும் சங்கடமாக இருந்தாலும் நான் நம்பிக்கை இழக்கவில்லை.
பின்பு எனக்கு Economy ஆசனம் தருவதாகச் சொல்லி, நான் எனது சுய விருப்பில் Business Classக்கு பதிலாக Economyயில் பயணம் செய்வதாக எழுதி வாங்கிக் கொண்டார்கள். ஆனால் என் நிலையோ பல்லவன் மாதிரி நின்று பயணம் செய்யவும் தயார். (அதுபோன்று விமானத்தில் செய்வதில்லை).
கடைசியாக விமானத்தில் ஏற தயாராகும்போது, ஜப்பானியர் சிலர் பேங்காக்கில் இரவு தங்கி வருவதாகவும் அதனால் எனக்கு Business Class ல் இடம் தருவதாகவும் சொல்லி தந்தார்கள். கொழும்பு விமான நிலையம் வந்து இறங்கி நகர் செல்லும் வரை சுமார் 10 வாகனங்கள் மட்டுமே எதிரில் பயணித்தன. ஊரெங்கும் மயான அமைதி. அவ்வளவு விரைவாக ஒருநாளும் நான் வீடு சென்றதில்லை.
இந்த பூமி அதிர்ச்சியில் என்னை நெகிழ வைத்த சம்பவம் ஒன்று உண்டு. நண்பர் இக்பால் ஒரு தமிழ் முஸ்லிம். ஹாங்காங் வாசகர்களுக்கு இவரை இலகுவாக அறிமுகப்படுத்தலாம். பர்மா தமிழன் என்று பெருமையோடு எப்போதும் தன்னை அழைக்கும் பெரியவர் ஹாஜி எஸ்.எம். யூனுஸ் அவர்களின் சகோதரியின் மகன்.
இவரது வீடு ரங்கூனில் ஒரு பழைய கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் உண்டு. பூமி அதிர்ச்சியின்போது கட்டிடங்களில் உள்ளவர்கள் எல்லாம் கலவரப்பட்டு வீதிக்கு வந்து விட்டார்கள். இக்பாலும் தன் குடும்பத்தாரை அவசர அவசரமாக கீழே போகும்படி விரட்டினார். ஆனால் தான் கட்டிடத்தில் தங்குவதாகச் சொன்னார்.
காரணம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தன் மனைவி நடக்க முடியாது கட்டிலிலேயே கிடந்தார். அவரைத் தூக்கிக்கொண்டு கீழே போக நேரமில்லை. ஆகவே மனைவியை விட்டுப் பிரிய மனம் இல்லாத அவர் அவரோடு இருக்கவே விரும்பினார். கட்டிடம் இடிந்து விழுந்து இறக்க நேரிட்டால் இருவரும் ஒன்றாகவே இறப்போம் என்ற மனநிலை. இதுவல்லவோ தாம்பத்திய அன்பு! |