| |
ஆக்கம் எண் (ID #) 95 | | | திங்கள், மே 11, 2015 | | முஸ்லிம்களால், தமிழர்களால் தோற்றேன் என்று புலம்புவதில் பலன் உண்டா? தலைவர், காயல் நல மன்றம் (காவாலங்கா), கொழும்பு, இலங்கை |
| இந்த பக்கம் 2871 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய | |
பிரிட்டனின் பொது தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் நாடுகளின் வம்சா வழியினர் பலர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இவர்கள் தங்கள் இனத்தவர்களின் வாக்குகளால் மட்டும் வெற்றி பெறவில்லை. பெரும்பான்மையினரும் இவர்களை ஆதரித்ததால்தான் இந்த வெற்றி சாத்தியமாயிற்று. ஆனால் போட்டியிட்ட ஒரு இலங்கை தமிழரும் வெற்றி பெறவில்லை. இது சிந்திக்கத்தக்கது. ஒரு வேளை இவர்களது ஆர்பாட்ட அரசியலும் ஒரு காரணமாக இருக்கலாம்.
அன்று ஆயுத பலத்தில் நம்மை அடக்கி ஆண்ட ஆங்கிலேயர் இன்று ஜனநாயக வழியில் அவர்களை ஆள நம்மவர்களைத் தெரிவு செய்துள்ளனர். காலத்தின் மாற்றம். ஆனால் இலங்கை அரசியலில் இன்னும் இனவாதம் பேசி பேசியே பதவிக்கு வர முனைகிறது ஒரு கூட்டம். அதற்கு மேலாக சிறுபான்மையினர் ஏன் என்னை ஆதரிக்கவில்லை என்று தெரியவில்லை என்று போலிக் கண்ணீர் வடிக்கிறார் தலைவர்.
'எனது ஆட்சியில் முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் சில அநீதிகள் நடந்தன. என்னை மீறி இடம்பெற்ற இந்த விடயங்களுக்கு நான் பொறுப்பல்ல' என்று இப்போது கூறத் துவங்கியுள்ளார். இது என்ன பேச்சு? நானே ராஜா என்று சகல அதிகாரமும் கொண்ட ஒருவர், தான் பொறுப்பல்ல என்றால் வேறு யார்தான் பொறுப்பு? அதையாவது கூற வேண்டாமா?
அணித்தலைவர் தன் வீரர்களின் துர்செயலைத் தன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் அவர் பதவி விலகி இருக்கவேண்டுமல்லவா ? செய்யவில்லை. ஆனால் மக்கள் அவரைப் பதவி நீக்கம் செய்தனர். இருந்தாலும் ஒட்டகம் கூடாரத்தில் நுழைவது போல் அவர் மீண்டும் பதவிக்கு வர முனைவது அவரது பதவிப் பற்றையே காட்டுகிறது.
'கடந்த காலத்தில் நடந்த விடயங்கள் குறித்து கவலையடைகிறேன். இது தொடர்பில் நான் மன்னிப்பும் கேட்டிருக்கிறேன். (?) எதிர்காலத்தில் இவ்வாறு சம்பவங்கள் நடைபெற இடமளிக்க மாட்டேன்' என்று அவர் கூறிய அதே வேளை அவருக்காக கூட்டம் நடத்தி தொண்டை கிழிய கத்துபவர்கள் 'சிங்கள பௌத்தம்' என்று துவேசம் கக்குகிறார்கள். சிறுபான்மை இனத்தவர்கள் இங்கு விருந்தாளிகள், உரிமையாளர்கள் அல்ல என்கிறார்கள்.
இவர்களின் இனவாதத்தை அவர் தடுக்கவில்லை. அப்படியானால் நாளை இதன் மூலம் சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டால், கவலை அடைகிறேன் ஆனால் நான் பொறுப்பல்ல என்று கூறுவாரா? 2005இல் பதவி ஏற்பு வைபவத்தின் பொது " நான் ஒரு கட்சியினருக்கோ, ஓரினத்திற்கோ ஜனாதிபதி அல்ல. இந்த நாட்டின் சகலருக்குமான ஜனாதிபதி" என்று கூறியதை அவர் மறந்து விட்டாரா?
பிரிட்டனின் தொழில் கட்சி தலைவர், தன் கட்சியின் தோல்விக்கு முழுப் பொறுப்பும் ஏற்று தான் பதவி விலகுவதாகக் கூறியுள்ளார். வெற்றி பெற்ற பிரதமர், தான் அனைத்து மக்களையும் மதிப்பேன், பாதுகாப்பேன் என்று கூறியுள்ளார். தம்மை மதிப்பவர்களையே மற்றவர்கள் மதிப்பர். ஆனால் இலங்கையில் சிலர் சிறுபான்மையினர் மீது பொறுப்பற்ற அரசியலையே நடத்த முனைகிறார்கள். இத்தகையினரை எப்படி சிறுபான்மையினர் ஆதரிப்பர்? அடிக்கிற கையை அணைப்பவர்கள் அறிவிலிகள் அல்லவா? பின்பு முஸ்லிம்களால், தமிழர்களால் தோற்றேன் என்று புலம்புவதில் பலன் உண்டா? |
| |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|