வீட்டிற்கும் ஆஸ்பத்திரிக்குமாக மாதக்கணக்கில் அலைந்ததில் அந்த அழகான வீட்டில் சோகமும், துக்கமும் நிரம்பியிருந்ததன. எல்லாவற்றிலும்
சுத்தமாக, சரியாக வைத்திருக்கும் ரஹ்மானின் மனைவி எதிலும் அக்கறையற்றுப் போய்விட்டாளோ என்று தான் தோன்றுகிறது. சீக்கிரத்தில் ஏதோ
ஒரு மிகப் பெரிய சோகம் நிகழ்ப்போகிறது என்பதை அறிந்த என் மனது தேம்பியபடியே இருக்கிறது. இன்னும் ஒரு வாரம்தான் என்று சொன்ன
அவனது குடும்ப டாக்டரை ஓங்கி அறையலாம் போலிருக்கிறது. பாவம் டாக்டர் என்ன செய்வார்.
ரஹ்மான் என் உயிர் நண்பன். அவனுக்கும் எனக்குமான நட்பிற்கு நாற்பது வயதுக்கும் மேலிருக்கும். பள்ளிக்கூடத்தில் படிக்கிற காலத்திலிருந்து
இன்று வரை விட்டுக் கொடுத்து பழகுகிற, விரிசல் விழாத, ஆழமான நட்பு எங்களுடையது. எப்போதாவது நானோ, அவனோ தெருவில் தனியாகச்
செல்கிறபோது எல்லோர் கண்களும் ஆச்சரியமாய் அலசும். "என்னப்பா.... உன் சங்காத்தீ வெளியூருக்கு போயிருக்கானா?" என்று ஆச்சரியத்தோடு
கேட்பார்கள்.
சில நண்பர்கள் எங்கள் நட்பைக்குறித்து கேலி செய்யும்போது எனக்குப் பழியாய் கோபம் வரும். ஆனால் வேகமாக எகிறி வரும் பந்தை தோனி
லாவகமாக பவுண்டரிக்கு அனுப்புவது போல அவர்களின் கேலியை ரஹ்மான் மடக்கி விடுவான்.
உங்களுக்குத் தெரியுமா - அவனுக்கு கிரிக்கெட் பார்ப்பது, விளையாடுவது என்றால் உயிர். ஆனால் நான் அவனுடன் இருக்கும்போது அதை நினைத்து
கூட பார்க்கமாட்டான். என்னை விட பெரிதாக அவனுக்கு எதுவும் தெரிவதில்லை. இது எனக்கே பல சமயங்களில் மிகப்பெரிய ஆச்சரியமாக
இருக்கும்.
அவனுக்கும் எனக்கும் நட்பு ஏற்பட்டது எட்டாங்கிளாஸ் படிக்கும்போது. இப்போது நினைத்தாலும் மிகவும் பயங்கரமானதாகவும், ஆச்சரியமாகவும்
இருக்கும். எட்டாம் வகுப்பு படிக்கும்போது அவன் என்னைவிட கொஞ்சம் வளர்த்தி. எனக்குப் பின் பெஞ்சில் இருப்பான். எப்போது எங்களுக்குள் நட்பு
ஏற்பட்டதோ அப்போதிருந்து ஒரு பெஞ்சுக்கு மாறிவிட்டோம்.
எப்போதும் நாங்கள் ஒன்றாக இருப்பதையும், ஒன்றாக செல்வதையும் பார்த்த ஆசிரியர்கள் எங்களது பெஞ்சுகளை மாற்றிப் பார்த்தார்கள். வகுப்பை
மாற்றிப் பார்த்தார்கள். அவர்கள் திட்டம் தோல்வியில் தான் முடிந்தது. அதற்கு அவனது வாப்பாவும் ஒரு காரணம். அவர் அந்தப் பள்ளியில் ஒரு
நிர்வாகக்குழு உறுப்பினர். அதனால் அவனை ரொம்ப அதட்டமுடியாது.
பத்தாம் வகுப்பு படிக்கும்போது அந்த சம்பவம் நடந்தது. டவுண் லட்சுமி தியேட்டரில் ஒரு ஆங்கிலப்படம். பல நாட்கள் ஆசைப்பட்டு, ஒரு நாள் கட்
அடித்து விட்டு போய்விட்டோம். எங்களது கெட்ட நேரம் அன்று பள்ளியில் நிர்வாகக்குழு கூட்டம். கூட்டம் முடிந்து எங்களைப் பார்க்க வந்த
ரஹ்மானின் அப்பா எங்களைக் காணவில்லை என்றவுடன் உஷாரானார். விரிவான விசாரணையில் நாங்கள் சினிமாவிற்கு சென்றது
தெரிந்துவிட்டது.
சர்ரென்று ஏறிய கோபத்தை, தனது பைக்கை உதைப்பதில் காட்டினார். அவரது புல்லட் தியேட்டரை நோக்கிச் சீறி பாய்ந்தது. சினிமா முடியும் வரை
பொறுமையாகக் காத்திருந்தார். படம் முடிந்து வெளியே வரும் போது, அவரைப் பார்த்தேன். "ரஹ்மான் உங்க வாப்பா பைக் அந்தா நிக்குது". ஒரு
கணம் என்ன செய்வதென்று யோசித்த ரஹ்மான், "ஏலேய் தப்பிச்சி ஓடிப்போய்ருவோம்" என்றபடியே எத்தனித்த எங்களை சட்டைக் காலர்களை
பிடித்து நிறுத்தினார் ரஹ்மான் அப்பா.
"ஏலேய் ரெண்டு பேரும் படிச்சி கிழிப்பீங்கன்னு பார்த்தா, படம் பார்க்கவா வந்துருக்கீங்க... ஏ ரஹீம் ஒம் வசதியென்னா, இவன் வசதியென்னா...
வக்கத்த பயலோடு சேராதே சொன்னா கேட்டானா... அதுதான் இப்போ சினிமாவுக்கு கூட்டி வந்திருக்கு. இன்னும் அது எதுக்கெல்லாம் கூட்டிட்டு
போவப் போறீயோ" என்று சொல்லிக் கொண்டே என் கன்னத்திலும் முதுகிலும் மாறி மாறி அடித்தார். "இனிமேல் எம்மவனோட பழகுற மாதிரி
தெரிஞ்சதுன்னா கால ஒடிச்சிப்போடுவேன் ராஸ்கல்" என்று திட்டியபடியே ரஹ்மானை தரதரவென்று இழுத்துச் சென்று பைக்கில் ஏற்றிக் கொண்டு
பறந்துவிட்டார்.
எனக்கு ஒன்றும் ஓடவில்லை. மனது படபடவென்று அடித்துக் கொண்டது. அய்யோ... முதன்முறையா அவனோடு சினிமாவுக்கு வந்து
இப்படியாகிவிட்டதே. சிறிது நேரம் விக்கித்தபடியே நின்றேன். எனது சட்டைப்பையையும், டவுசரையும் துழாவினேன். பத்து காசு தான் இருந்தது.
பஸ்ஸூக்கு காணாது. வேறு வழியில்லாமல் ஊருக்கு நடந்தே போனேன்.
வீட்டுக்குச் செல்வதற்குள் நன்றாக இருட்டி விட்டது. வீட்டிலும் திட்டும், உதையும் கிடைத்தது. எனக்கு அடி கிடைத்ததைப் பற்றி எனக்கு கவலை
ஏற்படவில்லை. ரஹ்மானை வீட்டுக்கு கூட்டிப் போய் என்ன செய்யப் போகிறாரோ என்று இரவு முழுக்க தூங்காமல் கிடந்தேன். ரஹ்மானை பிரம்புக்
கம்பால் அவன் வாப்பா அடித்து, அவன் வீட்டு முற்றத்தில் அழுது கொண்டுகிடப்பது போல எனக்கு பிரமை ஏற்பட்டது.
மறுநாள் அதை ஊர்ஜிதப் படுத்துவது போல, ரஹ்மான் வாப்பாவின் பைக் எங்கள் வீட்டின் எதிரில் வந்து நின்றது. நான் பயந்து போய் புறவாசலுக்கு
ஓடிப் போய்விட்டேன். எம்மா திருவிட்டத்தில் நூல் சுற்றிக் கொண்டிருந்தவள் மேத்துண்டை எடுத்து தலையில் போட்டுக் கொண்டு வீட்டிற்குள்
ஒளிந்தாள். வாப்பா, காக்குழிக்குள் இருந்து தறி நெய்து கொண்டிருந்தார்.
"யாரு இருக்கா?" என்ற சத்தம் கேட்டு, என் வாப்பா வெளியில் வந்து ரஹ்மானின் வாப்பா நிற்பதைப் பார்த்து அவரது முகம் பயத்தால் வெளிறியது.
"வாங்கோ..வாங்கோ வாப்பா. திண்ணையில இருங்கோ. ஏளா... பாய் எடுத்துட்டு வா" என்று சொல்லி நிறுத்தியவர், "வாப்பா எம் புள்ள செஞ்சது
தப்பு தான். உங்க குடும்பத்து பேரு என்னா... பெருமை என்னா... உங்க குடும்பத்துக்கும், என் குடும்பத்துக்கும் ஏணி வச்சாலும் எட்டுமா வாப்பா.
இந்தப் பய... ஒங்க புள்ளையோட சினிமாவுக்கு போயிருக்கான். எம்புட்டு கொழுப்பு இருக்கும். நேத்து ராத்திரி எம் மவனுக்கு செம அடியும்,
திட்டும். உண்டு, இல்லன்னு ஆக்கிப் போட்டேன். ஏதோ சின்னப் பய தப்பு பண்ணிட்டான். நீங்க மன்னிச்சி விட்டுடுங்க. இனிமே இந்த வாணாத்துல
போறவன் உங்க புள்ளையோட சேர மாட்டான்" என்று கெஞ்சினார்.
பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவர், "உம்மவன கூப்பிடு" என்றார். அவர் மீண்டும் என் வாப்பாவை வற்புறுத்தியதால் மெதுவாக பயந்து
கொண்டே முன்வாசலுக்கு வந்தேன். என்னருகில் வந்தவர் அப்படியே என்னை கட்டிப் பிடித்துக் கொண்டார். "ஏலே வாப்பா... என்ன மன்னிச்சிடுறா.
எம் புள்ளதான உன்ன கட்டாயப்படுத்திக் கட்டிட்டு போனானா. நான் உன்ன அடிச்சிப்போட்டேனே வாப்பா... என்ன மன்னிச்சிடு வாப்பா..." என்று
சொல்லிக் கொண்டே கண்கலங்கினார்.
"அப்படி எல்லாம் சொல்லாதிங்க வாப்பா" என்று தகப்பனாரும் அழுதார். என்னை வலுக்கட்டாயமாக தனது மகனைப் பார்க்க தனது பைக்கில் ஏற்றி
அழைத்துச் சென்றார்.
விட்டு விட்டு வெடிப்பது போல சத்தமிடும் புல்லட் மோட்டார் சைக்கிளில் நான் பின்னால் உட்கார்ந்து மேலப்பாளையத்தில் பல தெருக்களை கடந்து
அவன் வீட்டுக்குச் சென்றபோது எனக்கு பெரிய சாரட்டில் ஏறிச் செல்வது போல இருந்தது. எல்லா சம்பவங்களும் அப்படியே மறந்து
போனது.
அவனை வீட்டில் சந்தித்தபோது, "நேற்று உனக்கு அடி விழுந்ததா?" என்று கேட்டேன். அவன் இல்லையென்று சொன்னான். எனக்கு மிகவும்
சந்தோசமாக இருந்தது. அந்த வாரம் லீவு நாளில் அவனது வாப்பா, தங்கள் வீட்டு வில்வண்டியில் எங்களை ராயல் தியேட்டருக்கு அனுப்பி படம்
பார்க்க வைத்தார். இப்போது நினைத்தாலும் அவன் வாப்பாவின் குணம் என்னை திகைக்க வைக்கிறது.
அந்த சம்பவத்திற்கு பிறகு, நாங்கள் இருவரும் சந்திக்காத நாளே இல்லை என்று சொல்லலாம். அதிலிருந்து நாங்கள் எங்கு போனாலும்
ஒன்றாகத்தான் செல்வோம். வருவோம். கல்யாண வீட்டுக்குப் போனாலும் ஒரே கலத்துல தான் சாப்பாடு. ஏதாவது கூட்டத்துக்கு
போனாலும்ஒண்ணாத்தான் போவோம், வருவோம்.
"சங்காத்தீன்னா இவனுவள மாரி இருக்கணும்டா" என்று எத்தனையோ பேர் சொல்வதை நானே என் காதால் கேட்டிருக்கிறேன். எங்களது ஆழமான
நட்பில் இப்படியொரு சோகம் ஏற்படும் என்று இப்போதும் என் மனம் நம்ப மறுக்கிறது.
ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் வயிறு வலிப்பதாகச் சொன்னான். ஒன்றும் செய்யாது என்று இருந்தவனை வலி சுருட்டி எடுத்தது. படுக்க
வைத்து ஆட்டோவில் அழைத்துச் சென்றோம் உள்ளூர் மருத்துவரிடம். அவர் கொடுத்த மருந்தில் ஒரு வாரம் வரையில் வலியை தாங்க முடிந்தது.
பாளையங்கோட்டை சிறப்பு மருத்துவர் எல்லா பரிசோதனைகளும் செய்யச் சொன்னார். வயிற்றுக்குள் சிறுசதைப் பகுதியை எடுத்து சென்னைக்கு
அனுப்பினார். கடைசியில் முடிவைச் சொன்னபோது பகீர் என்றது.
எதையும் கேலியாக எடுத்துக் கொள்ளும் அவனின் செயல்பாடுகளிலும் சிறுமாறுதல் ஏற்பட்டது. அவன் குடும்பத்தை விட, என்னைப் பற்றியும் என்
குடும்பத்தைப் பற்றியும் அவனது கவலை அதிகமானது. பல தடவைகள் என்னிடம் பேசும் போது, "இனி என்னடா செய்யப்போகிறாய்?" என்று
கேட்பான். எனக்கு என்ன பதில் சொல்வதன்றே தெரியாமல் சோகமாய் "உனக்கு ஒன்றும் ஆகாதுடா... ஒண்ணுக்கும் கவலைப்படாதே" என்று
செய்கையாய் சொல்வேன்.
அவன் என்னை தேற்றுவது போல் கேலி பேசுவான். ஆனால் என்னிடம் புன்னகையை வரவழைக்க முயன்று தோற்றுப்போவான். திடீரென்று ஒருநாள்
என்னைக் காலையிலேயே வரச் சொல்லி ஆள் அனுப்பினான். நானும் என்னமோ, ஏதோ என்றெண்ணி பயந்து ஓடினேன். வீடு நிசப்தமாக இருந்தது.
இரும்பு கேட் கிறீச்சிடும் சப்தம் கேட்காத வகையில் திறந்தேன். அவன் அறைக்குள் நுழைந்தேன். படுக்கையில் படுத்திருந்தான். எனது நடையின்
தன்மையை அறிந்தவனாயிற்றே. மெதுவாக கண்ணை விழித்து படுக்கையை நிமிர்த்தச் சொன்னான். நான் லிவரைத் திருகி படுக்கையை
சாய்வாக்கினேன்.
பெல் அடித்து மனைவியை அழைத்தான். காபி போடு என்றான். வேண்டாமென்று மறுத்தேன். "இப்போதெல்லாம் நான் காபி சாப்பிடுவதில்லை"
என்றேன். "சும்மா இருடா. என்னையே காபி சாப்பிட வைத்தவன் நீ. காபி சாப்பிட மாட்டாயாக்கும்" என்று சொல்லியபடியே என்னைப் பார்த்து "ராஜ்
கபே காபி" என்று கண்ணை சிமிட்டினான். லாவகமாக பேசுவது என்பது அவனுக்கு கை வந்த கலை. அவனது கண்சிமிட்டல் எனக்கு பழைய
ஞாபகத்தை கிளறியது.
சுமார் 30 வருடங்கள் இருக்கலாம். ஜங்சன் ரயில் நிலையத்தில் யாரையோ வழியனுப்பி விட்டு ரயில்வே லைன் வழியாக வரும்பொழுது "ராஜ் கபே"
தெரிந்தது. நான் காபி சாப்பிடலாமா என்றதும், "எனக்கு வேண்டாம்ப்பா... கஷாயம் மாதிரி இருக்கும்" என்று மறுத்தான். எனக்கு காபி மீது பிரியம்
உண்டு என்பது அவனுக்குத் தெரியும். "நீ சாப்பிடு" என்று சொல்லி அழைத்துச் சென்றவன். அங்கு அன்றாடம் காபி குடிக்கும் வாடிக்கையாளர்களைப்
பார்த்து அதிசயித்தான். பக்கத்து டேபிளுக்கு நுரை பொங்க காபி வந்தது. அதன் மணம் அவனை ஏதோ செய்திருக்கிறது. சர்வரிடம் "இரண்டு காபி"
என்றான்.
நுரை ததும்ப டிகாஷன் காபி மேஜைக்கு வந்தது. நுரையை மட்டும் விழுங்கினான். வாய் முழுவதும் பரவிய நுரை புதுச் சுவையை உணர வைத்தது.
பின்பு கொஞ்சம் கொஞ்சமாக குடித்தவன். அதன் பின்பு ராஜ் கபே காபியின் ரசிகனாகிப் போனான். எப்போது சந்திப்பு வந்தாலும் ராஜ் கபே ஆஜர்
பட்டியலில் அவனிருப்பான்.
பின்பு முருகன் எட்வர்டு அண்ட் கோவில் காபி பவுடர் வாங்க ஆரம்பித்தவன் நரசுஸ் காபி என மாறி இப்போது ப்ரூ காபி என்று வரை வந்திருந்தான்.
ரஹ்மானின் மனைவியும் அருமையாக காபி போட பழகியிருந்தான். "காக்கா... இந்தாங்க காபி" என்று நீட்டினாள் அவனிடம். நீயும் நில்லு என்று
சைகை செய்தான் அவன்.
விருப்பமில்லாமல் அவன் முன்புக்கு நான் காபி அருந்திக் கொண்டிருந்த போது, அவன் பேச ஆரம்பித்தான்.
"டேய். நான் சொல்றத ஒழுங்காக் கேளு. சொல்லி முடிக்க வரைக்கும் எதுவும் பேசாதே" என்ற பீடிகையுடன் தொடங்கி, "எனக்கு பல நாட்களாக
ஒரு சிந்தனை ஓடிக்கிட்டேயிருக்கு. எம் வாழ்க்கையும் இப்படி ஆயிட்டு. இன்னிக்கோ, நாளைக்கோ... அது பற்றி கவலையை விடு. எனக்கு ஒரே
ஒரு ஆசை. என் ரெண்டாவது மொவனுக்கு உம் புள்ளைய கட்டி வச்சிடணும்னு ஆசை" என்று சொல்லிவிட்டு, "என்ன உனக்கும் சம்மதம் தானே"
என்று மனைவியைப் பார்த்தான். அவளும் பேசி முடிவு பண்ணி வைத்ததைப் போல "ஆமா" என்றாள்.
எனக்கு திடுக்கென்று ஆகிவிட்டது. இதற்குத்தான் இவன் என்னை காலையிலேயே வரவழைத்தானா என்று அவன்மேல் கோபம் வந்தது. நான்
அவனுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தேன்.
"ஏம்ப்பா... இந்தாப் பாரு தங்கச்சி. உங்க குடும்பத்துக்கும் எங் குடும்பத்துக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. நீங்கோ பரம்பரையா பணக்காரங்க. நாங்க
அன்றாடம் காய்ச்சி. எங்க ஊட்ல வந்து நீ சம்பந்தம் பேசினா உன்ன ஊர்க்காரன் காறித் துப்பிப் போடுவான். இனிமே இந்த பேச்ச எங்கிட்ட
வச்சிக்காதே. உம் புள்ளைக்கு கிடைக்காத இனமா. நான் பாக்குறேன் பெரிய இடத்துல. நான் என் புள்ளைக்கு ஏத்த இனமா பார்த்துகிறேன்".
நான் சொன்னதைக் கேட்டவனுக்கு கோபம் கோபமாக வந்தது. குடும்பத்தைப் பற்றி பேச வேண்டாம் எனவும், சம்மதம் சொல்லு. நானே நடத்திக்
கொள்கிறேன் என்று சொன்னான். எனக்கு உடன்பாடு ஏற்படவேயில்லை. எனக்கு பிரியமில்லாத விசயத்தை திரும்ப திரும்ப பேச மாட்டான். ஆனால்
வழக்கத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தினான். நான் வீட்டில் கேட்டுச் சொல்வதாகச் சொல்லி அன்று தப்பித்தேன்.
பின்பு அது குறித்து பல தடவைகள் கேட்டபோதும் நான் மறுத்துவிட்டேன். எனக்கு அவன் உடல் நிலை மீது தான் அக்கறை. ஆனால் உடல் நிலை
நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே இருந்தது. பேச்சு குறைந்தது. தனது மூத்த மகனை சென்னையிலிருந்து வரவழைத்தான். இனிமேல் நீ
எனக்கான காரியங்களை செய்ய ரெடியாக இரு என்று சொல்லி வைத்தான். மகன் அழுத போது, அழாதே, "மாமா இருக்கிறார். விடு" என்று
தேற்றினான்.
மெதுவாக அவனது ஆசையைச் சொல்லி என்னை சம்மதிக்க வைக்கச் சொல்லியிருக்கிறான். அவனது மூத்த மகன் ஹாரிஸ் மெதுவாக என்னிடம்
பேச்சை துவக்கினான். "மாமா கேளுங்க. வாப்பாவோட கடைசி ஆசை. நாங்க எதுவும் எதிர்பார்க்கல. சரின்னு சொல்லுங்க மாமா.."
என்றான்.
"என் மனம் ஒப்பவில்லை. விட்டுவிடு" என்று நான் சொன்ன போது அவன் என்னை வாப்பாவின் ஆசை என்று சொல்லிக் கட்டாயப்படுத்தினான். நான்
வேறு வழியின்றி கறாராக சொன்னேன்.
"வாப்பா நல்லா கேளுங்கோ... உங்க வாப்பாவுக்கு நான் சங்காத்தியா இருக்குறதே பெரிசு. சம்பந்தி ஆகுற தகுதி எனக்கில்ல". ஹாரிஸ் அதன்
பிறகு அது குறித்து பேசவில்லை.
இப்போது டாக்டர் வருவதையும் நிறுத்திக் கொண்டார். பேச முடியவில்லை. திரவ உணவு மட்டுமே ஆகாரம். அவ்வப்போது நர்ஸ் வந்து குளுக்கோஸ்
போட்டுச் சென்றாள். ஆனால் அவன் தெளிவாக சைகை மொழியில் பேசுவதை எல்லோரும் அறிய முடிந்தது.
உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து பார்த்துச் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். "எல்லாத்துக்கும் அல்லா இருக்கான். ஒண்ணும் வருத்தப்படவேண்டாம்"
என்று சைகையில் சொல்லி அவர்களை அமைதிப்படுத்தினான்.
என்னைப் பார்க்கும்போது அவன் கண்கள் கெஞ்சுவது போல இருக்கும். நான் இப்போதெல்லாம் அவன் கண்களைப் பார்ப்பதில்லை. பார்த்தால் அவனின்
எண்ணத்தை ஒப்புக் கொள்ள வேண்டி வரும்.
எனக்குத் தெரியாமல் என் மனைவியை அழைத்து ஒப்புதல் கேட்டிருக்கிறான். தனக்கு ஆட்சேபணை இல்லை என்று சொல்லியபோது அவனுக்கு சிறிது
ஆறுதலாக இருந்தது.
இளைய மகனை துபாயிலிருந்து வரச்சொல்லிவயாகிவிட்டது. வந்து சேரவே மூன்று நாட்கள் ஆகும். மெதுவாக பேச்சும் செயல்பாடும் குறைந்து
விட்டது. மூன்றாவது நாள் வந்த இளைய மகன் வாப்பாவை பார்த்து அழுதான். அம்மாவை கட்டிக் கொண்டு சத்தமாக அழுத போது, அழவேண்டாம்
என்று என்னிடம் சொல்லச் சொன்னான். அவனாகவே அழுகையை குறைத்தான்.
நான் வீட்டை விட்டு சென்ற பிறகு அவனிடம் ஒப்புதல் கேட்டிருக்கிறான். அவன், "என்னிடம் அம்மா சொல்லியாச்சு. நான் பத்து பவுண் நகையும்
வாங்கி வந்து விட்டேன்" சொல்லியிருக்கிறான். அவனுக்கு அது கடைசி நேர ஆறுதலாக இருந்தது.
இரண்டு நாள் கெடுவும் முடிந்து விட்டது. தொண்டைக்குழியில் "கரக் கரக்" என்று மூச்சு இழுத்துக் கொண்டிருந்தது. பேசுவதை தெளிவாக உணர்ந்து
சைகையில் பதில் சொல்ல முடிந்தது.
பால் மட்டும் இறங்கிக் கொண்டிருந்தது. அவன் மனைவி, "பாலைக் குடிங்க" என்று ஸ்பூனில் விட்டபோது குடித்தவன் நான் கொடுத்தபோது குடிக்க
மறுத்துவிட்டான். எனக்கு ஓ வென்று அழவேண்டும் போலிருந்தது.
என்னை மலங்க மலங்க பார்த்தான். நான் பாலை எடுத்தபோது வாயை மூடிக் கொண்டான். "எதுக்கப்பா பாலை குடிக்க மாட்டேங்கிற" என்று நான்
அழுத போது "அழாதே" என்று சைகை மூலம் தலையை ஆட்டி விட்டு தனது கையை மல்லாக்க விரித்து என்னை நோக்கி உயர்த்தினான்.
சுற்றி நின்ற அனைவரும் ஓ வென்று சத்தம் போட்டு அழுதார்கள். எல்லோரையும் அழவேண்டாம் என்று இரண்டு கைகளாலும் சைகை செய்தான்.
நாங்கள் அனைவரும் உள்ளுக்குள் அழுதோம்.
மீண்டும் தனது வலது கையை மல்லாக்க விரித்து என்னை நோக்கி உயர்த்தினான். தொண்டையிலிருந்து எழும் மூச்சு சத்தம் மேலும் சத்தமாக
வந்தது. அது அசாதாரணமாக இருந்தது.
"சம்மதம் சொல்லி கையை வையுங்க மாமா". துபாயிலிருந்து வந்தவனின் குரல் ஒடிந்து அழுதது. நான் எல்லோரையும் பார்த்தேன். சோகம்
கப்பியிருந்த அவர்களது முகம் என்னைக் கெஞ்சியது. "சம்மதம் சொல்லுங்க மாமா". மீண்டும் அதே குரல் என்னை கெஞ்சி அழுதது. என்
மனதிற்குள் ஏதோ அதிர்ச்சி மின்னலென எழுந்தது. இனிமேல் இந்த நிலை நீடிக்கக்கூடாது என்று என் மனம் உரத்துச் சொன்னது.
நான் மெதுவாக எனது வலதுகையை அவன் மேல் வைத்தேன். அந்த நேரத்திலும் அவன் கை என்னை இறுகப் பிடித்தது. சிறிய கரண்டி மூலமாக
அவன் மனைவி மெதுவாக பாலை வாயில் இறக்கினாள். இரண்டு முறை உள்ளே இறங்கிய பால், மூன்றாவதாக வாய்க்குள் இறங்கிய பால் உள்ளே
செல்லாமல் மெதுவாக கன்னத்தின் வழியாக வெளியே வழிந்தது.
எனது வலது கையை அழுத்திப் பிடித்திருந்த அவனது பிடி மட்டும் நெகிழவில்லை. அவன் கையிலிருந்து ஒரு அமானுஷ்ய சக்தி எனது உடல்
முழுவதும் பரவிய படியே இருந்தது. அவனாக தன் கையை நெகிழ்த்தும் வரை கைகளைப் பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள்ளும்
எழவேயில்லை. அந்த நேரத்தில் யாருக்கும் அழவும் தோன்றவில்லை. |