நெய்விளக்கு ஏற்றவோ
நெஞ்சிருண்ட வேளையில்...
பொய்விலக்கி வாழவே
புனிதப் பாதைத் தேடினேன்
மெய்விலக்கம் கண்டபின்
மீண்டும் மீண்டும் பேதைநான்...
செய்வதென்ன பாவமா...?
செய்வதென் சுபாவமா...?
திரியிழந்த தீபமாய்
திரிந்துளைந்த என்னை நீ
நெறியிலே அமர்த்தினாய்
நினைவுகள் திருத்தினாய்
பொறியில் சிக்க வேகமாய்
போகும் பாவ ஜீவனாய்
அறிவிலாது போகிறேன்
ஆண்டவா நீ காத்தருள்...
சோதியில் நிறுத்தினாய்
சூன்யமாய் வழுக்கினேன்
நீதியால் நிமிர்த்தினாய்-அ
-நீதியில் தடுக்கினேன்
தூதினால் துலக்கினாய்
தூயதை விலக்கினேன்
ஆதியாதி ரட்சகா...
அடிமையென்னை ஏற்றருள்...
தறியில் நெய்யும் ஆடையை
தறி தரிக்க நேருமோ?
உரியில் தொங்கும் பானையின்
உரிமை வெண்ணை ஆகுமோ...
வெறிவளர்க்கும் வாழ்வினில்
வேட்டையாடும் வேட்கையில்
சரியில்லாமல் சரிகிறேன்...
சரிவை மாற்று ரட்சகா...
நன்றியாய்த் துதித்திடும்
நாவினை நீ தந்தருள்
தின்றென்னைச் செரித்திடும்
தீவினைகள் தீர்த்தருள்...
கன்றெனத் தவிக்கிறேன்
காவலா நீ காத்தருள்...
என்றும் ஏக நாயகா...
என்பிழைப் பொறுத்தருள்...
--------------------------------------------------------------
பேராசிரியர் முனைவர் ஹாஜா கனி சென்னை மேடவாக்கம் காயிதேமில்லத் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர், தமுமுக வின் மாநிலச்
செயலாளர், மக்கள் உரிமை வார இதழின் இணை ஆசிரியர்.
இவர் எழுதியுள்ள நூற்கள்:
கவிதை நூற்கள்:
--- சிறகு முளைத்த விரல்கள்
--- துப்பாக்கிகளுக்கு பதிலாக
மொழிபெயர்ப்பு நூல்:
--- இஸ்லாமும் இந்து சமயமும்
இசைப்பாடல் தொகுப்புகள்:
--- ஈராக்கின் ஓலம், ஈரம், ஏகம், எழுச்சி
முனைவர் பட்ட ஆய்வு:
--- தமிழ்ப்புதுக்கவிதைக்கு முஸ்லிம் கவிஞர்களின் பங்களிப்புகள் - ஓர் ஆய்வு
|