வாப்பா! வண்டி எத்தன மணிக்குங்கோ வரும் என என் சின்ன தம்பி ஜியாத் டீ சர்ட்டை போட்டுக் கொண்டிருந்த வாப்பாவை நச்சரித்துக்
கொண்டிருந்தான்.
ஜைனா குட்டீ, வண்டிய பதினோரு மணிக்கு வர சொல்லியீக்குது. அது கரக்டா வந்துரும். அது வரய்க்கும் நீ வாசல்ல நிண்டுக்கோ என வாப்பா
ஜியாதின் தலையை தடவியபடியே சொன்னார்கள். வாப்பா ஜியாதை செல்லமாக ஜைனா குட்டீ என்றுதான் கூப்பிடுவார்கள்.
ஜைனா குட்டி உற்சாகம் தாங்காமல் வீடு முழுக்க ஓடிக்கொண்டிருந்தான். பின் வீட்டு - வாப்பிச்சாவிடம் போய் நாங்க வேற ஊருக்கு போறோமே
குரங்குலாம் பாப்போமே என பீற்றிக் கொண்டிருந்தான்.
உம்மா வீட்டின் எல்லா கதவுகளையும் அடைத்து விட்டு சாவியை பின் வீட்டு வாப்பிச்சாவிடம் கொடுக்க போக எதற்கும் தேவைப்படுமே என
முற்றத்தில் சிதறிக்கிடந்த பழைய நாளிதழ்களை நான் எடுத்து வைத்துக் கொண்டேன். பயணத்திற்கான துணிமணிகள், போர்வை, குடிநீர் கேன்,
உணவுப்பொதி என வீட்டின் ஜான்சில் மொத்தம் ஐந்து பைகள் இருந்தன. மொத்தம் இரண்டு நாள் பயணம்.
வெளியில சாப்பிட்டா ரூவா பேத்தனமா செலவாவும் . ஒரு நாள் சாப்பாட நாம் வீட்டிலேயே செஞ்சுருவோம். அடுத்த நாளைக்கு வேண்டா வெளியில
சாப்பிடுவோம் என வாப்பா வானிலை எச்சரிக்கை மாதிரி முந்தைய நாளே சொல்லியிருந்தபடியால் பயணத்திற்கான சாப்பாடு ஏற்பாடுகளில் உம்மா
மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்க கல்லூரி விட்டு வந்தவுடன் நானும் சமையலில் உதவினேன்.
நிறைய கோதுமை ரொட்டி, குதிரை வாலி அரிசியில் செய்த புளிச்சோறு, மாட்டுக்கறியை பொரித்தும், காரமில்லாமல் மிளகு ஆணத்துடன் கூடிய
அகனிக்கறியாகவும் ஆக்கியிருந்தோம். கூடவே கொறிக்க உதிரி பக்கோடா, காராபூந்தி, பிஸ்கட், ஜியாதிற்கான ஜெல்லி, புளிப்பு மிட்டாய்கள் என
சிறு மூட்டை கட்டியிருந்தோம்.
இரவு ஓட்டம் என்பதால் டிரைவர் கண் அசந்து விடாமல் இருக்க ஃபிளாஸ்கில் வெறுந்தேயிலையை (அதான் பிளைன் டீ) போட்டு எடுத்துக்
கொண்டோம்.
பிள்ளே, மூணாறுலே ரோஜா தோட்டோம், யான சவாரிலாம் இருக்குமாண்டி என சாச்சி என்னிடம் சிரித்துக்கொண்டே சொன்னாள். மூணாறுல நல்ல
குளிரா இருக்குமே தாங்குவியா என கேட்டதற்கு அதுலாம் சமாளிச்சிருவோம் என தலையை வலப்பக்கமாக மேல் நோக்கி அசைத்தாள்
சாச்சி.
மூத்த தம்பி ஸாஜிதுடன் இளையவன் ஜியாத் வண்டியின் முன் இருக்கையில் நான் தான் இருப்பேன் என முறைப்பாக சொல்ல இரண்டு பேரும்
முன்னக்கயே சண்டை போடாம இரிங்கோ என கண்ணும்மாவின் தலையீட்டில் மூளவிருந்த சகோதர யுத்தம் சமாதானமாக தீர்ந்தது.
விடுமுறை நாட்களில் வருடா வருடம் சென்னைக்கு எங்களை வாப்பா அழைத்துச் செல்வார்கள். நாங்கள் குடும்பத்தோட இது போன்று
மலைவாசஸ்தலங்களுக்கு சுற்றுலா சென்று ரொம்ப நாட்களாகி இருந்த படியால் மனதிற்குள் ஒரே மகிழ்ச்சியாக இருந்தது.
வாரம் முழுக்க இறுக்கமான சூழலுடைய கல்லூரி நெருக்கடியிலிருந்து இரண்டு நாட்களாவது விடுதலையாகி இருப்போம் என்ற எண்ணமே
குதூகலத்தை தந்தது. மூணாறு, தேக்கடி போய் வந்த தோழிகள் அனுபவங்களை அள்ளி விட்டிருந்தபடியால் அந்த இடங்களை என் மனம்
முன்னதாகவே கற்பனை செய்து உலா வந்து கொண்டிருந்தது. முக்கியமாக தேக்கடியின் பச்சை நிற நீர் நிலையில் படகு சவாரி சென்று
கொண்டிருப்பதாகவே என்னை நான் உணர்ந்தேன்.
என் தோழி ரூபாவிற்கும் பெருமா வீட்டு றாத்தா மகள் ஃபாத்திமாவிற்கும் வாங்க வேண்டிய கொண்டை குச்சி, கம்மல் போன்ற சின்ன சின்ன
பொருட்களின் பட்டியல் மனதிற்குள் அணிவகுத்தது. இன்னாங்கோ வண்டிய காணோமே, டிரைவருக்கு போன் அடிங்களேன். நீங்க அவன
நேர்த்தோடயே வரச்சொல்லியிருக்கணும் என வாப்பாவை குற்றம் சாட்டினாள் உம்மா. வாப்பா டிரைவரை செல் பேசியில் அழைக்க அவர் ரண்டு
நிமிஷத்தில வந்துர்ரேன் பாய் என்றார்.
ஹை வண்டி வந்தாச்சு, வண்டி வந்தாச்சு என ஜியாத் கூத்தாட ஒரு வழியாக வெள்ளை நிற டவேரா வண்டி இரவு 10:55 மணிக்கு வந்து சேர்ந்தது.
ஊரில் எத்தனையோ வாடகை வண்டிகள் இருந்தாலும் வாப்பா கபீருடைய வண்டியை பிடிப்பதற்கு காரணம் வண்டியின் சீட் அமைப்பு விசாலமானது.
டிரைவர் கபீர் பொறுமையான மனிதர். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருப்பார். சலிக்க மாட்டார்.
தெருவில் ஆள் நடமாட்டம் துப்புரவாக இல்லை. சிறிய பைகளை எல்லாம் இருக்கைகளுக்கு அடியில் திணித்தோம். பெரிய பொதிகளை வண்டிக்கு
மேலே வைத்து கட்டினார் டிரைவர். முன் சீட்டில் டிரைவருக்கு பக்கத்தில் ஜியாதும் ஸாஜிதும் ஓடிப்போய் ஏறிக்கொண்டிருந்தனர்.
உம்மா, கண்ணும்மா, சாச்சி ஆகியோர் நடு சீட்டிலும் பின் சீட்டில் நானும் வாப்பாவும் அமர்ந்தோம். வாப்பா துஆ ஓத வண்டி கிளம்பியது.
வண்டி வாடகையை கணக்கிடுவதற்காக ஸ்டியரிங்க் பக்கத்தில் உள்ள ஸ்பீடாமீட்டரின் ரீடிங்கை செல்போனில் வாப்பா பதிந்து
கொண்டார்கள்.
என்னப்பா கபீரு ! எப்படி நம்ம பயண பிளான் என்ற வாப்பாவின் கேள்விக்கு மொத நாளு நாமோ மூணாறு, அடுத்த நாளக்கி தேக்கடி போவோம்
என்றார் டிரைவர். மூணாறுக்கு எத்தன மணிக்கு போவோம்? என்ற வாப்பாவின் கேள்விக்கு காலய்ல ஏழர மணிக்கு போவும் என்றார் அவர்.
காக்கா நாமோ கேரளாக்கா போறோம் என்று ஜியாத் கண்களை அகல விரித்தபடியே ஸாஜிதிடம் கேட்க ஆமா என்று மௌனமாக தலையசைத்தான்
அவன்.
பைபாஸ் சாலை வழியாக தூத்துக்குடியை நோக்கி குலுக்கல் நிறைந்த பாதையில் வண்டி பயணித்தது. வழியில் கடந்து சென்ற ஊர்களெல்லாம்
உறக்கத்தின் பிடிக்குள் சென்று வெகு நேரமாகி விட்டிருந்தது.
தூத்துக்குடியிலிருந்து மதுரை செல்லும் புறவழிச்சாலைக்குள் நுழைந்ததும் வண்டி சீராக செல்ல தொடங்கியது. காரணம் அது நால்வழிச்சாலை.
அத்துடன் தூத்துக்குடி துறைமுகத்தை ஏனைய நகரங்களுடன் இணைக்கும் முக்கியமான வழித்தடமும் கூட.
உண்மையான பயணமே இப்போதுதான் தொடங்குவது போல இருந்தது. இரவின் நீண்ட கரிய கரம் போல இருந்த சாலையை வண்டி பெரும் பசிக்காரன்
போல அவசர அவசரமாக விழுங்கி சென்று கொண்டிருந்தது. திறந்திருந்த கண்ணாடி கதவுகளின் வாயிலாக பட படவென குளிர் காற்றானது வண்டியின்
உள்ளே வந்து நிறைந்து கொண்டிருந்தது.
எதிரே விர் விர் என வரும் வண்டிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே ஸாஜிதும் ஜியாதும் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து மெல்ல தூங்கி
விட்டிருந்தார்கள். டிரைவரிடம் வாப்பா வெறுந்தேயிலை குடிக்கிறியா கபீர் என கேட்க அவன் சரி என்றான். ஒரு பெட்ரோல் பங்கில் வண்டியை
ஓரங்கட்டி விட்டு எல்லாரும் டீயை குடித்தோம்.
தூங்கிக்கொண்டிருந்த இரண்டு தம்பிமாரையும் தூக்கி எங்கள் மடியில் கிடத்தினோம். வாப்பா போய் டிரைவர் பக்கமுள்ள முன் சீட்டில் ஏறிக்
கொண்டார்கள். வண்டி மீண்டும் புறப்பட்டது.
தம்பிமார் இருவரும் கண்ணும்மா, உம்மா, சாச்சியின் மடியில் நீட்டி நிமிர்ந்து தூங்க தொடங்கி விட்டார்கள். நான் தனியாக சன்னல் ஓரமாக
நிம்மதியாக தூங்கி விட்டேன். தம்பிமார் புரண்டு புரண்டு படுத்ததால் கண்ணும்மா, உம்மா , சாச்சி மூவரும் சரியாக தூங்க முடியவில்லை.
அதிகாலை நேரம். வண்டி கேரள எல்லைக்கு நுழையும் முன்னர் சோதனைச்சாவடியில் நின்றது. இரண்டு காவலர்கள் தூக்க கலக்கத்துடன்
அமர்ந்திருந்தார்கள். இந்த இடைவெளியில் காராபூந்தியை தின்று வெறுந்தேயிலையை குடித்தோம். கம்பம் நகர எல்லை முடிந்தவுடன் குமுளிக்கான
மலைப்பாதை தொடங்கியது.
தனது பணி முடித்து இரவானது பின்வாங்கி செல்ல அனுபவமிக்க படை வீரனை போல சூரியனின் முதல் கதிரானது மெல்ல தன் ஆதிக்கத்தை நிலை
நிறுத்த தொடங்கியிருந்தது. இரவின் அடர்ந்த இருளானது இளம் வெயிலில் மெல்லிய சாம்பல் படலம் போல கரைந்து ஓடத்தொடங்கியது.
குமுளி நகரை தாண்டியவுடன் அரிசி முறுக்கின் வளையம் போல வளைந்து வளைந்து சென்ற மூணாறுக்கான மலைப்பாதையில் மீண்டும் வண்டி
ஏறத்தொடங்கியது. தமிழகத்தின் வறட்சியான நிலப்பகுதி பார்வையில் இருந்து மறைந்தவுடன் பசுமையும் மலையும் மேகமும் சூரிய ஒளியும்
இணைந்து தங்களது மெல்லிய நடனத்தை தொடங்கியிருந்தனர். இரு மலைகளுக்கிடையேயான சமவெளியில் பெருக்கெடுத்த நதியானது பரப்பி
வைக்கப்பட்ட மாபெரும் கண்ணாடி வெளி போல தோற்றமளித்தது.
எங்களின் வண்டியானது டிரைவருடைய கைகளின் தேர்ந்த இயக்கத்தில் சிறிய உலோக ராட்டினம் போல சுழன்று ஆடி மலைப்பாதையில் சளைக்காமல்
ஏறிக் கொண்டிருந்தது. நல்ல தூக்கத்தில் இருந்த நான் வண்டியின் குலுக்கத்தில் கண் முழித்து பார்த்தபோது வாப்பா முகம் எட்டு கோணலாகி
இருந்தது. முன் சீட்டில் ஒன்றும் பேசாமல் துவண்டு போய் கிடந்தார்கள். வண்டியின் தொடர் சுழற்சியில் அதிகாலை தின்ற எண்ணை நிறைந்த
காராபூந்தியானது தன் வேலையை காட்ட தொடங்கியிருந்தது. குமட்டலும் தலை சுற்றலும் ஒன்று சேர நிலை கொள்ளாமல் தவித்தார்கள்.
பின் சீட்டில் திரும்பிபார்த்தால் சாச்சி, ஜியாத், முனவ்வர் ஆகியோருக்கும் அதே மலை ராட்டின கிறுகிறுப்புதான். தம்பிமார் இருவரையும் தூங்க
போட்டு ஒரு வழியாக சமாளித்தாகி விட்டது.
மெதுவாக சாச்சியின் பக்கம் திரும்பி சாச்சி என்ன ஆச்சு என கேட்டேன். அவள் ஒன்றும் பேசாமல் ஆட்காட்டி விரலை வளையம் போல சுற்றி காட்டி
தன் தலை சுற்றலை சாடையாக சொன்னாள். இரவின் தூக்கமின்மை, தொடர்ந்த வீசிய குளிர் காற்றின் தாக்கத்துடன் வளைந்த மலைப்பாதை
பயணமும் அவளை கசக்கி போட்டிருந்தது.
நான் அவளை உற்சாகமாக்கும் விதமாக சாச்சி ரோஜா தோட்டம், எக்கோ வேலி, படகு சவாரிலாம் போணுமே என்றேன். இதைக்கேட்டவுடன்
தொய்ந்து சரிந்து கிடந்து தன் தலையை நிமிர்த்தி போமா ஒன் மூணாறும் தேக்கடியும். நம்ம வீடுதாம நமக்கு சொகம் என்று அசதியாக
சொன்னாள்.
இன்ப சுற்றுலாவிற்காக கிளம்பும் பயணமாக இருந்தாலும் அதுவே நமது அன்றாட வீட்டு வாழ்க்கையின் அருமையை உணர்த்தும்போது நிரந்தரமாக
வீட்டை விட்டு பிரிக்கப்பட்டவர்கள், வீடில்லாதவர்களின் தினசரி வாழ்க்கையை பற்றிய நினைப்பானது ஒரு கணம் என் மனதிற்குள் எழுந்து நிறைந்து
சங்கடத்தை உண்டாக்கியது.
பிள்ள வாந்தி வர்ற மாதி ஈக்குது ஆனா வர மாட்டீக்குது கொஞ்சம் புளிப்பு முட்டாய் எடுத்து தாமா என வாப்பா என்னிடம் கேட்டார்கள்.
புளிப்பு மிட்டாய் பொட்டலத்தை தேடி பை ஒன்றில் கையை விட்டேன். அந்த காகித பொட்டலம் அவிழ்ந்து அதிலுள்ள மிட்டாய் ஒன்று வாப்பாவின்
துஆ கிதாபினுள் செருகி கிடந்தது.
அதை எடுப்பதற்காக அந்த கிதாபை பிரித்தபோது கீழ்க்கண்ட துஆ கண்ணில் பட்டது. அது ஒரு நாளின் இறுதியில் அதாவது உறங்குவதற்கு முன்
ஓதும் துஆக்களில் ஒன்று.
الحَمْدُ للهِ الَّذي أَطْعَمَنا وَسَقانا، وَكَفانا، وَآوانا، فَكَمْ مِمَّنْ لا كافِيَ لَهُ وَلا مُؤْوِيَ
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவனே நமக்கு உணவளித்தான். நமக்கு நீர் புகட்டினான். நமது தேவைகளை நிறைவு செய்தான். நமக்கு
{ஓய்வெடுக்க} இடமளித்தான். இத்தனைக்கும் தமக்கு உதவி செய்பவரோ அன்பு காட்டுபவரோ இல்லாமல் எத்தனையோ பேர் உலகில் இருந்து
கொண்டிருக்கின்றனர்.
பள்ளத்தை பார்க்கும்போதுதான் நாம் நிற்கும் மேட்டின் உயரம் தெரிய வருகின்றது. கண்ணீருடன் முன் சீட்டின் முகட்டில் என் நெற்றியை பதித்து
இறைவனுக்கு நன்றி செலுத்தினேன்.
|