| |
ஆக்கம் எண் (ID #) 39 | | | திங்கள், செப்டம்பர் 14, 2015 | | சமர்...! முன்னாள் ஆசிரியர், இளந்தென்றல் / சமூக பார்வையாளர் |
| இந்த பக்கம் 3671 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய | |
நேற்றுத்தான் அவனைப் பார்த்தேன்
எலும்புகள் துருத்தும் கன்னம்
தழும்புகள் நிறைந்த வண்ணம்
சிரிக்க முயன்று - அல்லது
சிரிப்பதாய் நினைத்தபடி
கடந்து போனான்.
நகரத்து இன்றைய மரண அறிவிப்பில்
சிரித்தபடி செய்தியானான்.
ஒருக்கண்ணில் மணாளன்
ஒருக்கண்ணில் மக்கள்
பறவை போல் சிறகு பரப்பி
பாசத்தால் கட்டிய கூட்டை
பற்றிய புற்றுக் கொண்டு
பாதியிலேயே விட்டுப் போனாள்.
இவர்கள் மரணித்து விடுவார்கள் என்ற
எதிர்ப்பார்ப்பில் தான் - இங்கே
பல திருமணங்கள் நிச்சயிக்கபடுகின்றன.
எங்கள் ஊரின் - ஒவ்வொரு குடும்பத்திலும்
குறைந்த பட்சம்
ஒரு ஆலிம் - ஒரு ஆலிமா
ஒரு ஹாபிழ் - ஒரு ஹாபிழா
ஒரு எஞ்சினியர் - ஒரு வியாபாரி
ஒரு அயல் தேசத்து சபராளி
கூடவே
ஒரு புற்று நோயாளியும்...
இது சமர் –
சகோதரர்களே......!
அதிர் முரசின் அதிர்ச்சி அறிவிப்பின்றி
முப்படைகளின் முற்றுகையின்றி
ஒரு –
சிறு மக்கத்தின் மக்கள் மேல் திணிக்கப்பட்ட
அறிவிக்கப்படாத போர்.
சுவாசத்தை மாசுப்படுத்தும்
சப்தமின்றி ஒரு சந்ததிதியை
ஆக்சிஜென் இன்றி
அழித்து விடும் - இரசாயனப் போர் ...
மக்களே ...!
நம் இருப்பை நிச்சயப்படுத்த
நம் முன்னே
இரண்டு வழிகளே உள்ளன...
ஒன்று - சண்டையிடுவது
ஒன்று - சரணைடைவது ...
முன்னதற்கு - ஒற்றுமையில்லை
பின்னதற்கு - உத்தரவாதம் இல்லை ...
எனில்
கலிமா சொல்லி காற்றில் கரைந்திடுவோமா?
காயலின் அடையாளத்தை
இந்திய வரைப்படத்தில்
இரசாயன தீட்டாய் மாற்றிடுவோமா?
சந்ததிகளின் சாபத்திற்கு ஆளாகிப்போமோ?
கேள்வி சூழ் குழப்ப மனதில்
ஏனோ - வந்து போகின்றது
சபிக்கப்பட்ட அசோகரின் வாளும்
அலங்கரிக்கப்பட்ட அப்துல்கலாமின் ஆசனமும்...
அசோகர் மன்னிக்கப்பட்டதும்
அப்துல்கலாம் ஆதாரிக்கப்பட்டதும்
வாழ்வின் போதே அவர்கள்
வளர்த்த மரங்கள் கொண்டே ...
மனிதன் பெற்ற மகவு - விஷம் தூவி
பூமிப்பந்தை சிதைக்க
மரங்கள் பெற்ற மகவு - அக்சிஜென் பரப்பி
பூமிப்பந்தை புதுப்பித்தது.
ஒன்று நிச்சயம்
வரும் காலங்களில் - தருமம் என்பது
மரம் வளர்த்தல் என்பதேயாம்.
இனி,
தருமஸ்தன் - என்பதை
நட்ட மரங்களின் கூட்டுத்தொகை கொண்டே
வரலாறு பதிவு செய்யும்.
ஆதலின்
ஒரு மகவு பெறின்
இரு மரக்கன்று நடவேண்டும்
ஒரு மகளும் - மூன்று மரங்களும்
உள்ள வீட்டில் உறவு கொள்ளல் வேண்டும்.
மரங்களடர்ந்த தோட்டமும்
வீட்டின் எதிர்புறம் ஒரு மரமும்
அமைந்த வீடு வரம்
இதுவரை
பணம் கொண்டு விஷம் தூவிய
இயற்கை எதிரிகளை
மரம் கொண்டு - ஆக்சிஜென் தூவி அழிப்போம்.
--------------------------------
பி.கு.:
இதற்கான முன்னெடுப்புகள்
மார்க்க அறிஞர்களும், ஆசிரியர்களும்
இணைந்து
மதரசாக்களிலும், பள்ளிக்கூடங்களிலும்
இருந்து - தொடங்கினால்
ஜெயம் - நிச்சயம்.
முஸ்தாக் அஹ்மத்.
|
| |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|